Published:Updated:

ஏறும் விலைவாசி... எப்படி சமாளிக்கலாம்?

ஏறும் விலைவாசி... எப்படி சமாளிக்கலாம்?

ஏறும் விலைவாசி... எப்படி சமாளிக்கலாம்?

ஏறும் விலைவாசி... எப்படி சமாளிக்கலாம்?

Published:Updated:
##~##

'மாதச் சம்பளம் ஆண்டுக்கு ஐநூறு ரூபாய் உயர்ந்தால், அரிசி, பருப்பு விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் எகிறுகிறதே’ - நடுத்தர மற்றும் ஏழை மக்கள் புலம்பித் தீர்க்கும் வார்த்தைகள் இவை. இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே குதிரைப் பாய்ச்சலில் இருந்த விலைவாசியேற்றம் கடந்த ஆண்டில் அசூரப் பாய்ச்சல் கண்டுவிட்டது. இரண்டு ரூபாய்க்கு விற்ற ஒரு கோழி முட்டை இன்று நான்கு ரூபாய். 120 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் நல்லெண்ணெய் இன்று 240 ரூபாய்.

24 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ அரிசி, இன்று 40 ரூபாய்க்கு மேல். விலைவாசி இப்படி தாறுமாறாக ஏற என்னதான் காரணம்? மக்கள் இதை எப்படி சமாளிக்கிறார்கள்? ஒவ்வொரு விஷயமாகப் பார்ப்போம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன காரணம் ?

விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன என்று கேட்டால், ஒன்றிரண்டு காரணங்களை மட்டும் சொல்லி நிறுத்திவிட முடியாது. நரகத்திற்கு பல கதவுகள் என்கிற மாதிரி விலைவாசியேற்றத்துக்கு பல காரணங்கள்.

ஏறும்  விலைவாசி... எப்படி  சமாளிக்கலாம்?

முக்கியமான காரணம், கடந்த சில ஆண்டுகளாக தவறிவரும் மழை. அதிலும் இந்த ஆண்டு மழையே இல்லை. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை. நெல்வயல்கள் காய்ந்ததால், பயிர்கள் கருகி, வைக்கோலாகிவிட்டது. கொஞ்சநஞ்சம் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. உணவுப் பொருட்கள் உற்பத்தி வெகுவாகக் குறைந் திருப்பதால், அவற்றைப் பதுக்கி வைத்து விற்கும் வேலை ஜரூராக நடந்து வருகிறது.

இச்சமயத்தில், எரிகிற நெருப்பில் நெய் ஊற்றுகிற மாதிரி ஆகிவிட்டது சமீபத்தில் வந்த டீசல் விலை உயர்வு. சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாளைக்கு பல மணி நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தைக்கூட ஒரு காரணமாகக் காட்டி, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள்.

ஆனால், இத்துறையில் பல ஆண்டு காலம் அனுபவம் பெற்ற வியாபாரிகள் சொல்லும் காரணங்கள் வேறு மாதிரியானவை. தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சொரூபனுடன் பேசியபோது அது நமக்கு தெளிவாகத் தெரிந்தது.

அண்டை மாநில அரிசி !

''தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் அண்டை மாநிலங்களைத்தான் சார்ந்திருக்கவேண்டி இருக்கிறது. தமிழகத்தில் அதிக அளவில் அரிசியும், மிளகாயும் விளைந்தது ஒரு காலம். முன்பெல்லாம் அரிசி கொள்முதல் செய்வதற்காக அதிகபட்சம் தஞ்சாவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு  போன்ற மாவட்டங் களுக்குப் போவார்கள். ஆனால், இப்போது அங்கெல்லாம் அரிசி கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும்தான் போகவேண்டியிருக்கிறது.

ஏறும்  விலைவாசி... எப்படி  சமாளிக்கலாம்?

பச்சரிசி முழுவதும் ஆந்திரா, கர்நாடகா விலிருந்துதான் கொண்டுவரவேண்டி உள்ளது. ஆந்திராவில் 2 ரூபாய் அரிசித் திட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி வருவது அரிதாகிவிட்டது. முன்பு கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து ஒரு நாளைக்கு 500-லிருந்து 700 லாரிகளில் அரிசி வந்துகொண்டிருந்தது. இப்போது ஒரு நாளைக்கு வெறும் 50 லாரிகளில்தான் அரிசி வருகிறது. இதையும் ஆங்காங்கே நிற்கும் செக் போஸ்ட் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துதான் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

ஆனால், சிலர் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்வதாகச் சொல்லி அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி, புழுங்கல் அரிசியை ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறார்கள். அரிசி வியாபாரத்திற்கு இப்போது லைசென்ஸும் தேவையில்லை. கையிருப்பு பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதால் விலை அமோக மாக உயர்கிறது!'' என்று அரிசி பற்றி நீண்ட நேரம் பேசியவர், அடுத்து பருப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

பருப்புக்கும் வழியில்லை !

ஏறும்  விலைவாசி... எப்படி  சமாளிக்கலாம்?

''ஆப்பிரிக்காவிலிருந்துதான் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது. கென்யாவிலிருந்து துவரம் பருப்பையும், பர்மாவிலிருந்து உளுந்தையும் இறக்குமதி செய்கிறார்கள். வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு அதிக மானியத்துடன் கூடிய உரம், விதை என அனைத்தையும் கொடுத்து உற்பத்தியை அதிகப்படுத்துகிறார்கள். இங்கு இருப்பதுபோல அங்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு என்பது முற்றிலும் கிடையாது. தவிர, ரேஷனில் குறைந்த விலையில் பருப்புகளை தருவ தாலும் அதன் விலை உயருகிறது. பருப்பு கொள்முதல் செய்யும் அதிகாரிகள் முதல்ரக விலைக்கு இரண்டாம் ரக பருப்பையே கொள்முதல் செய்கிறார்கள். இதை யாரும் கேட்பதில்லை.

எண்ணெய்யும் இறக்குமதிதான் !

தமிழகத்தில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்படுவது முற்றிலும் குறைந்து விட்டது. பாமாயில் மரங்களை யாரும் வளர்க்க விரும்புவதில்லை. சூரியகாந்தி செடி பயிரிடுவதும் மிகக் குறைவு. தமிழகத்தின் எண்ணெய் தேவையில் 75 சதவிகிதம் வெளிமாநிலங்களில்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு செக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்த கலாசாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. வேர்கடலை உற்பத்தியும் வேகமாகக் குறைந்து வருகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய், இப்போது கிலோ 100 ரூபாயைத் தாண்டி விற்கிறது.

ஏறும்  விலைவாசி... எப்படி  சமாளிக்கலாம்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை இனிவரும் நாட்களில் கொஞ்சம் குறைந்தாலும் இன்னும் அதிகமாகவே செய்யும் என்பது உறுதி. உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கும் அதேவேளையில், அவற்றை யாரும் பதுக்காமல் இருக்க கறாரான பல விதிமுறைகளை உருவாக்கி, விலையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே விலைவாசி ஏற்றத்தை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும்'' என்கிற எச்சரிக்கையோடு முடித்தார் சொரூபன்.

அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதே என்பதற்காக மக்கள் அதை வாங்காமல் விட்டுவிடுவதில்லை. விலைவாசியேற்றத்தை சாதாரண நடுத்தர மக்கள் என்ன செய்து சமாளிக்கிறார்கள் என்பதை அறிய தமிழகம் முழுக்க பலருடனும் பேசிப் பார்த்தோம். சமயோசிதமாக அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் பிராக்டிக்கலாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தன.

தேவைக்கு வாங்குகிறேன் !

''போன வருடம் ரூ.1,500-க்கு வாங்கின மளிகைச் சாமான்கள், இப்ப 3,500 ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்கும் என்கிற நிலை. முன்பு அவசியமான பொருட்களைத் தவிர, எப்போதாவது தேவைப்படும் பொருட்களைகூட வாங்கி ஸ்டாக் செய்வேன். ஆனால், இப்போது தேவைப்படும் பொருளை தேவைப்படுகிற அளவுக்கு மட்டுமே வாங்குகிறேன். முன்பு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்று வாங்கினேன். இப்போது மொத்த விலை கடைகளைத் தேடியே போகிறேன்'' என்றார் மதுரையைச் சேர்ந்த குடும்பத் தலைவி கலைச்செல்வி.

மிச்சம் பிடிக்கிறேன் !

''காபி-யிலிருந்து டீ-க்கு மாறுனதால மாசம் 300 ரூபா மிச்சம்; கர்நாடக பொன்னி அரிசியில இருந்து சாதாரண அரிசிக்கு மாறுனதால மாசம் 750 ரூபா மிச்சம். மதியம் சாம்பார், ரசம்னு இருந்ததை மாத்தி, இப்ப ஒண்ணே ஒண்ணு மட்டும் வைக்கிறதால மாசம் 200 ரூபா மிச்சம்; வாரத்துக்கு இரண்டு முறை இருந்த அசைவத்தை இப்ப மாசத்துக்கு 4 முறையா மாத்துனதால, மாசம் 400 ரூபா மிச்சம் பண்ணி சமாளிச்சிக்கிட்டிருக்கோம்'' என்று புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார் மயிலாடுதுறை சந்திரமோகன்.

ஏறும்  விலைவாசி... எப்படி  சமாளிக்கலாம்?

வீட்டுத் தோட்டம் உதவுது !

மொட்டை மாடியில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளைத் தோட்டம் போட்டு வளர்த்து வருவதாகச்  சொல்கிறார் குழித்துறையைச் சேர்ந்த இல்லத்தரசி பாலதங்கம். ''பாலுக்குப் பதிலாக முட்டை பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறேன். கூடவே சுக்கு காப்பி, பருத்தி பால் என்று தினம் ஒரு ஆரோக்கிய பானத்தை எடுத்துக்கொள்வதால் காசும் மிச்சம், டாக்டர் செலவும் மிச்சம்''.

பாமாயிலே போதும் !

''பால், தயிர், மோருக்காக தினசரி அரை லிட்டர் பாலை முன்பு வாங்குவேன். இப்ப அதை கட் பண்ணிட்டேன். சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்தபிறகு இப்ப பாமாயிலையே பயன்படுத்துகிறேன். பாமாயில் லிட்டருக்கு 54 ரூபாய்தான். எனக்கு அதுவே போதும். ரேஷன் அரிசியை வாங்கி அதில் வத்தல் போட்டுவிடுவதால், ஒரு பொறியல் செலவு மிச்சம். கேஸ் விலை உயர்ந்திருப்பதால், சமையலுக்குத் தேவையான எல்லாவற்றையும் தயாராக  வைத்துக்கொண்டு, சமைப்பேன். கேஸ் அடுப்பில் பாத்திரங்களை மூடி வைப்பேன். இதனால் சீக்கிரமாக சமையல் முடிவதோடு, கேஸும் மிச்சமாகும்!'' என்றார் சின்னாளப்பட்டி பாக்கியலெட்சுமி.

கேஸ் கட்டுப்பாடு!

தஞ்சாவூரைச் சேர்ந்த தேன்மொழி,  ''இரண்டு வேளைக்குத் தேவையான சுடுதண்ணீர், காபி ஒரே வேளையில் போட்டு ஃப்ளாஸ்க்ல ஊத்தி வச்சிக்கிறோம். அதேமாதிரி, ஆத்திர அவசரத்துக்கு மட்டும்தான் மிக்ஸி. மத்தபடி வீட்ல அம்மிகல்லுதான் எல்லா வேலைக்கும் பயன்படுத்துறேன்'' என்றார்.

கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தலைவி சொன்ன தகவல் நம்மை மலைக்க வைத்தது. ''காபி, டீ மட்டுமில்ல, ரசம், சாம்பாரைக்கூட ஃப்ளாஸ்க்ல ஊத்தி வச்சுடறதால கேஸ் செலவு வகையா மிச்சமாகுது'' என்று சொன்னார். கேஸுக்குப் பதிலாக மின் அடுப்பை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

என்ன சொல்கிறார்கள் கடைக்காரர்கள்?

அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு, இதர பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்ப்பதாகச் சொல்கிறார் திருச்சி அண்ணாநகரில் மளிகைக் கடை வைத்திருக்கும் ரெங்கராஜன். ''நடுத்தர  வகுப்பினர் பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப் மேக்கர், மக்ரோனி வகைகளை வாங்குவதைக் குறைத்துவிட்டனர். எப்போதும் முதல் தர பாசுமதி அரிசி வாங்குபவர்கள்கூட, இப்போது பொன்னி அரிசிக்கு மாறிவிட்டார்கள். முன்பு மாதாமாதம் புது பிரஷ் வாங்கியவர்கள் இப்போது இரண்டு மாதத்துக்கு ஒரு பிரஷ் என்று மாற்ற ஆரம்பித்துவிட்டனர்'' என்றார்.

குறிப்பிட்ட பிராண்ட்தான் வேண்டும் என கேட்டு வாங்கிச் செல்பவர்கள்கூட இப்போது எந்த பிராண்ட் குறைவான விலையில் உள்ளது என்று கேட்டு வாங்குகிறார்களாம். அரிசி விலை ஏகத்துக்கு உயர்ந்ததால், கோதுமையின் விற்பனை அதிகரித்திருக்கிறது. அயோடின் உப்பின் விலை அதிகரித் திருப்பதால், சாதாரண உப்பை வாங்கு கிறார்களாம் மக்கள்.

''முன்பு ஒரு லட்ச ரூபாய் முதலீடு போட்டால் இருபது சதவிகிதம் லாபம் கிடைக்கும். இப்ப வெறும் 5 சத விகிதம்தான் கிடைக்குது'' என்று புலம்பினார் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளர் என்.தேவராஜ்.

விலைவாசி உயர்வை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை என்றாலும், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சமயோசிதமாகச் செய்து முடிப்பது தானே புத்திசாலித்தனம்!

நீரை.மகேந்திரன், இரா.ரூபாவதி, என்.சுவாமிநாதன், மா.நந்தினி.

படங்கள்: வீ.நாகமணி, ச.வெங்கடேசன், ஆ.முத்துக்குமார், வீ.சிவக்குமார், ரா.ராம்குமார், செ.சிவபாலன்,  தே.தீட்சித் மற்றும் மாணவ பத்திரிகையாளர் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism