Published:Updated:

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

வா.கார்த்திகேயன்.

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

லேசாக பணவீக்கம் குறைந்ததை அடுத்து, வட்டி விகிதத்தை லேசாக குறைத்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது முக்கியமான விஷயம்.

கடந்த சில மாதங்களாகப் பணவீக்கம் குறைந்து வருவதையட்டி வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். குறிப்பாக, நிதி அமைச்சர், வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஆர்.பி.ஐ. எப்போதுதான் வட்டி விகிதங்களைக் குறைக்குமோ என்று காத்திருந்தனர். ஒருவழியாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ரெபோ வட்டி விகிதத்தை (ரிசர்வ் வங்கி யிடமிருந்து கமர்ஷியல் வங்கிகள் வாங்கும் தொகைக்குச் செலுத்தவேண்டிய வட்டி விகிதம்) 0.25 சதவிகிதம் ரிசர்வ் வங்கி குறைத்தது. மேலும், ரிவர்ஸ் ரெபோ விகிதத்தையும் (வங்கிகள், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகிதம்) 0.25 சதவிகிதம் குறைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெபோ, ரிவர்ஸ் ரெபோ விகிதத்தை மட்டுமல்லாமல் ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் (சி.ஆர்.ஆர்.- வங்கி களில் வாங்கும் டெபாசிட்டில், ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய தொகை) குறைத்திருக் கிறது. சி.ஆர்.ஆர். 0.25 சதவிகிதக் குறைப்பின் காரணமாக 18,000 கோடி ரூபாய் அளவுக்கு சந்தையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த வட்டி விகிதக் குறைப்பின் காரணமாக மேலும் என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கும் என்று பார்ப்போம்.

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

பங்குச் சந்தை!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வட்டி குறைப்பு அறிவிப்பு வந்தவுடன் சந்தை அதிகரித்தது. ஆனாலும், வர்த்தகத்தின் முடிவில் சந்தை சரியவே செய்தது. ஆனாலும், வட்டி விகிதக் குறைப்பு இனிவரும் காலத்தில் பலவிதமான மாற்றங்களைக் கொண்டுவரலாம். அதேபோல வட்டிக் குறைப்பும் பங்குச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன்காரணமாக சில துறை பங்குகள் உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

வங்கிப் பங்குகள், ரியல் எஸ்டேட் பங்குகள், ஆட்டோமொபைல் துறை பங்குகள், கேப்பிட்டல் கூட்ஸ் போன்ற துறையின் பங்குகள் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த உயர்வுக்கு 0.25 வட்டி குறைப்பு போதாது. வருங்காலத்தில் வட்டி விகிதம் குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஒவ்வொருமுறை வட்டி குறைக்கப்படும்போதும் இந்தத் துறை பங்குகள் நல்ல லாபம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக, வங்கித் துறையில் சி.ஆர்.ஆர். விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. சி.ஆர்.ஆராக இருக்கும் தொகைக்கு வட்டி கிடையாது. இப்போது 0.25 சதவிகிதம் வெளியே வரும்போது அந்தத் தொகையை வங்கிகள் கடனாகத் தந்து லாபம் ஈட்ட முடியும் என்பதால் வங்கிகளின் லாபம் சிறிதளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு வருவதற்கு முன்பே வங்கிப் பங்குகளின் விலை விறுவிறுவென உயரத் தொடங்கியதற்கான காரணம் இதுதான் என்று விளக்கினார் முன்னணி புரோக்கர் ஒருவர்.

மியூச்சுவல் ஃபண்ட்!

இந்த வட்டி குறைப்பு காரணமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் பெரிய மாற்றம் நடக்க வாய்ப்பில்லை. இந்த வட்டி குறைப்பு சில துறை பங்குகளுக்குச் சாதகமாக இருப்பதால் அந்தத் துறை ஃபண்டுகளில் கொஞ்சம் வருமானம் அதிகரிக்கலாம். ஆனால், கடன் ஃபண்டுகளில் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, புதிய கடன் பத்திரங்களுக்கு வட்டி குறைவாக கிடைக்கும். அதனால் சந்தையில் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் கடன் பத்திரங்களின் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் அந்தந்த பத்திரங்களின் தேவை அதிகரிக்கும். அது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் எதிரொலிக்கும்.

வங்கி டெபாசிட்!

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

வட்டி குறைப்பு சில இடங்களில் சாதகமாக இருந்தாலும், வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்பவர்களுக்கு சிறிய இழப்பு ஏற்படவே செய்யும். குறையும் வட்டி விகிதம் என்பது வாங்கும் கடனுக்கு மட்டுமல்லாமல், வங்கிகள் தரும் டெபாசிட்க்கும் சேர்த்துதான். இதனால் புதிய டெபாசிட்க்கு வட்டி விகிதம் குறைவாகக் கிடைக்கலாம். ஆனால், இது வங்கிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்தது.

ஆர்.பி.ஐ. வட்டி விகிதத்தைக் குறைத்தபிறகு சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உடனடியாக குறைத்தன. இந்நிலையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என இரு முக்கியமான வங்கிகளின் சி.இ.ஓ.களிடம் கேட்டோம். நாம் முதலில் பேசியது சிட்டி யூனியன் வங்கியின் சி.இ.ஓ. காமகோடியிடம்.  

''நாங்கள் உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற வங்கிகள் என்ன முடிவு எடுக்கின்றன, என்பதைப் பார்த்த பிறகு, எங்கள் வங்கியின் நிதி நிலைமை ஆகியவற்றை பொறுத்துதான் வட்டி குறைப்பு முடிவு இருக்கும். பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவோம். சி.ஆர்.ஆர். அதிகரிப்பு காரணமாக லாபம் அதிகரிக்க வாய்ப்பு மிகவும் குறைவு. வட்டி குறைக்கப்படும்போது ஏற்கெனவே தந்திருக்கும் கடன்களுக்குகூட வட்டியைக் குறைத்தாக வேண்டும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்க்கு வட்டியைக் குறைக்கும்போது, இனி தரப்போகும் டெபாசிட்க்கு மட்டுமே வட்டியைக் குறைக்க முடியும். ஏற்கெனவே வாங்கி இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்க்கு தந்த வாக்குறுதியைக் காப்பாற்றியாக வேண்டும். எனவே, லாப வரம்பு அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது'' என்றார்.

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

நாம் அடுத்து பேசியது, கரூர் வைஸ்யா பேங்கின் சி.இ.ஓ. கே.வெங்கட்ராமனிடம். ''அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்திருக்கிறோம். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்க்கான வட்டி விகிதத்தை இப்போதைக்கு குறைக்கும் எண்ணமில்லை. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இதில் முடிவு எடுக்க முடியும். ஆனால், உடனடியாக அடுத்த வட்டி குறைப்புக்கு வாய்ப்பு இருப்பதுபோல தெரியவில்லை. இப்போதே ஒருவிதமான நெருக்கடியில்தான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இன்னும் சில மாதங்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படாது என்றே நினைக்கிறோம்'' என்றார் அவர்.

இந்த வட்டி குறைப்பினால் பாசிட்டிவ்-ஆகவும் நெகட்டிவ்-ஆகவும் நடக்கப்போகும் மாற்றங்களை நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதுதான் சிறந்த வழி!

 வீட்டுக் கடன் வட்டியும் குறைகிறது..!

ஆர்.பி.ஐ. வட்டி விகிதங்களைக் குறைத்தி ருப்பதால் மாறுபடும் வட்டியில் (ஃப்ளோட்டிங் ரேட்) வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு சந்தோஷம். காரணம், அவர்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

ஆர்.பி.ஐ. வட்டியைக் குறைத்த சில மணி நேரங்களில் பொதுத் துறை வங்கியான ஐ.டி.பி.ஐ. வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.25% குறைத்து, 10.25 சதவிகிதமாக அறிவித்தது. இந்திய வீட்டு வசதி நிறுவனங்களை நெறிப்படுத்தும் தேசிய வீட்டு வசதி வங்கி அதன் பிரதான வட்டி விகிதத்தை 10 சதவிகிதத்திலிருந்து 9.75 சத விகிதமாகக் குறைத்துள்ளது.

ஆர்.பி.ஐ. ரேட் கட்... கடன் வட்டி குறையுமா?

சில வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைக்காதபோதும் கடனுக்கான வட்டியைக் குறைத்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ஃபெடரல் பேங்க், ஐ.டி.பி.ஐ. பேங்க், ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை இந்த வகையில் வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.05% குறைத்திருக்கிறது.

வீட்டுக் கடன் வட்டி 0.25 குறைந்தால் என்ன லாபம் கிடைக்கும்?

ஒருவர் 20 லட்ச ரூபாய் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக 11 சதவிகிதத்தில் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான வட்டி 10.75 சதவிகிதமாகக் குறைந்தால் அவருடைய மாதத் தவணை 340 ரூபாய் குறையும். இதுவே கடன் தொகை 50 லட்சம் ரூபாய் என்றால் மாதத் தவணையில் 850 ரூபாய் குறையும்.

இ.எம்.ஐ. தொகை குறைந்துள்ளது என்பதற்காக நீங்கள் அந்த அளவு தொகையைக் குறைத்து கட்டாமல், வழக்கமான தொகையைக் கட்டினால், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே உங்கள் வீட்டுக் கடன் முடியும்; வட்டிக்குச் செல்லும் தொகையும் குறையும்.

- சேனா சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism