கேள்வி-பதில்
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- மேகமலை, மதுரை.
மோகன்ராஜ், கிளை மேலாளர், ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ், கரூர்.
''மியூச்சுவல் ஃபண்டில் குறிப்பிட்ட ஃபண்டின் வளர்ச்சிக்கு ஏற்ப டிவிடெண்ட் தரப்படும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தரப்படுவது போல, இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு டிவிடெண்ட் தரமாட்டார்கள். ஆனால், எண்டோவ்மென்ட் பாலிசிகளில் முதிர்வுத் தொகையோடு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் போனஸ் சேர்த்து தரப்படும். சில மணிபேக் திட்டங்களில், திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட காலஇடைவெளியில் நீங்கள் கட்டியுள்ள பிரீமியத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவிகித பணம் திருப்பி வழங்கப்படும். பாலிசியின் முதிர்வின்போது மீதித் தொகையும், போனஸும் வழங்கப்படும். இதுகூட போனஸ் என்று குறிப்பிடப்படுமே தவிர, டிவிடெண்ட் என்று சொல்ல முடியாது.''

?கடன் பத்திரம், பங்குப் பத்திரம் - இவை இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?
- குமரகுரு, பொள்ளாச்சி.
செந்தில், இயக்குநர், விஷ்ஷா அட்வைஸரி சர்வீஸஸ்.

''ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீடுகளை கடன் பத்திரம், பங்குப் பத்திரம் என இரு வழிகளில் திரட்டுகிறது. அந்த வகையில் பங்கு வெளியிட்டு திரட்டப்படும் முதலீட்டின் மீது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப லாபம் டிவிடெண்டாகப் பகிர்ந்து அளிக்கப்படும். நிறுவனம் லாபம் ஈட்டாதபட்சத்தில் முதலீட்டிலிருந்து வருமானம் கிடைக்காது. மேலும், பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்ப முதலீட்டின் வளர்ச்சி கூடுதலாகவோ அல்லது குறைவா கவோ இருக்கும். கடன் பத்திரங்கள் என்பது குறிப்பிட்ட காலஇடைவெளியில் உங்களுக்கு இத்தனை சதவிகித வட்டியுடன் பணம் திரும்பத் தரப்படும் என்கிற உத்தரவாதத்துடன் திரட்டப்படுவது. நிறுவனம் நல்ல லாபம் கண்டாலும் இதற்கு குறிப்பிட்ட சதவிகித வட்டி மட்டுமே தரப்படும். கடன் பத்திரங்களை வெளியிடுவதிலும் பங்குகளாக மாறும் கடன் பத்திரம், பங்குகளாக மாறாத கடன் பத்திரம் என இரு வகைகளில் வெளியிடப்படும்.''
?என் வயது 55. எனக்கென்று தனியாக குடும்பம் இல்லை. என் சகோதரி, அவரது குடும்பம், குழந்தைகளையும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ள முடியுமா?
- ஒரு வாசகர், இ மெயில் மூலம்.
ரவி, வெல்த் அட்வைஸர், பஜாஜ் கேப்பிட்டல்.
''உங்களுக்கு என்று தனியாக குடும்பம் இருந்தால் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியும். உங்கள் சகோதரி குடும்பத்தைச் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியாது. உங்களுக்கு என்று தனியாக ஒரு பாலிசியும், உங்கள் சகோதரி குடும்பத்திற்கு என்று தனியாக வேறு ஒரு பாலிசியும் எடுத்துக்கொள்ளலாம். தவிர, உங்கள் வயதை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் தனியாக பாலிசி எடுப்பதே சிறந்தது.''
?நிறுவனங்கள் அவற் றின் பங்குகளை குறிப்பிட்ட அளவு திரும்ப (பைபேக்) வாங்குவதால் அந் நிறுவனங்களுக்கு என்ன லாபம்?
- சுந்தரசேனன், திருச்சி.
எம்.சேகர், இயக்குநர், தோஹா புரோக்கரேஜ் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீஸஸ்.
''நிறுவனங்கள் தங்கள் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்ப வாங்குவதன் மூலம் முதலீட்டாளர்கள் தொடர்பான நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் நிறுவனத்தின் செலவு குறைந்து, லாபம் அதிகரிப்பது என்பது நேரடிப் பயன். மறைமுகமான ஆதாயம்

என்ன என்றால், நிறுவனத்தின் நம்பகத்தன்மை அதிகரிப்பது. நிறுவனம் உபரியாகப் பணத்தை வைத்திருக்கும்போதுதான் பங்குகளை திரும்ப பெறும் நடவடிக்கையை எடுக்கும். நிறுவனம் நல்ல நிலையில் இருக்கும்போது அதன் பங்கு மதிப்பு மேலும் உயர வாய்ப்பு அதிகம். தவிர, பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பைவிட கூடுதலான மதிப்பிற்கு பங்குகள் திரும்பப் பெறப்படும் என்பதால் இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கும் லாபம் என்று சொல்லலாம்''.
?நான் ஒரு இடம் வாங்குவதற்காக அதன் மதிப்பிற்கு ஏற்ப ரூ.25,000-த்துக்கு முத்திரைத்தாள் வாங்கி எழுதினேன். ஆனால், சில காரணங் களால் கடைசி நேரத்தில் அந்த இடம் வாங்குவதைத் தவிர்த்துவிட்டேன். இந்நிலையில் எழுதிவிட்ட முத்திரைத்தாளுக்கு செலுத்திய கட்டணத்தை திரும்ப பெறமுடியுமா?
- ஜே.முகம்மது பரூக், காரைக்கால்.
விஜய் தர்மகண், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
''முத்திரைத்தாளில் எழுதியபிறகு அது பதிவு செய்யப் படவில்லை என்றால் அந்த முத்திரைத்தாள் கட்டணத்தைத் திரும்ப பெறமுடியும். முதலில், முத்திரைத்தாளை உங்களுக்கு விற்பனை செய்த முத்திரைத்தாள் விற்பனை முகவரிடமிருந்து, அந்த முத்திரைத்தாள்கள் உங்களுக்கு தான் விற்கப்பட்டது என்று ஒரு விற்பனைச் சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த விற்பனைச் சான்றிதழ் அடிப்படையில், நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தாசில்தாருக்கு அந்த முத்திரைத்தாள்களை இணைத்து விண்ணப்பம் அளிக்கவேண்டும்.
அவர் உங்கள் விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட முத்திரைத்தாள் விற்பனை முகவருக்கு அனுப்பி பெறும் ஒப்புதல் அடிப்படையில் மாவட்ட கருவூலத்திற்கு பணத்தை திரும்பத் தருவதற்கு ஒப்புதல் தருவார். இதற்குரிய கட்டணமாக முத்திரைத்தாள் மதிப்பில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்பட்டு மீதித் தொகை உங்களுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறைகளுக்கு குறைந்தபட்சம் 30 வேலை நாட்கள் ஆகலாம்''.
?எனக்கு வயது 25. அனைத்துப் பிடித்தங்களும் போக மாதம் 18,500 ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறேன். நான் கடந்த ஐந்து மாதங்களாக ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்டில் மாதம் 2,000 வீதம் முதலீடு செய்து வருகிறேன். இது போதுமா அல்லது வேறு முதலீடுகளுக்கு மாறலாமா?
- எம்.ராஜராஜேஸ்வரி, நாமக்கல்.
முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.
''பொதுவாக வருமானத்தில் 30 சதவிகிதம் வரை சேமிப்பது என்பது பழக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் மாதம் ரூபாய் 5,000 வரை சேமிக்கவேண்டும். மேலும், உங்களது வருமானம் அதிகரிக்க, முதலீட்டுத் தொகையும் அதிகரிக்கும்பட்சத்தில் ஓய்வுக்காலத்தில் உங்களுக்கு பெருந்தொகை சேர்ந்து இருக்கும். தற்போது மேற்கொண்டுவரும் ஃபண்ட் முதலீட்டைத் தொடரவும். மேலும், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமாபிளஸ் ஃபண்டில் மாதம் 3,000 ரூபாய் வீதம் எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்து வரவும். மேலும், உங்களது ஓய்வுக்காலத்துக்கு ஏற்ப முதலீட்டைத் திட்டமிட ஒரு நிதி ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது''.
