Published:Updated:

எடக்கு மடக்கு !

வெவசாயி வவுத்துல அடிச்சுட்டீங்களேய்யா !

எடக்கு மடக்கு !

வெவசாயி வவுத்துல அடிச்சுட்டீங்களேய்யா !

Published:Updated:
##~##

போன எலெக்ஷனுக்கு முன்னாடி வந்த பட்ஜெட்டில விவசாயக் கடன்களை பெரிய அளவுல தள்ளுபடி பண்ணி னாங்க. இது என்ன அநியாயம்? யார் வீட்டு காசை எடுத்து யாருக்குக் குடுக்குறதுன்னு எல்லோரும் ஒப்பாரி வச்சாங்க.

ஆனா, எல்லா விஷயத்துலயும் எடக்கு மடக்கா நான் பேசினாலும், இந்த விஷயத்துல நான் அப்படி நெனைக்கலை. கஷ்டப்பட்ற வெவசாயிங்களுக்கு அரசாங்கம் உதவிதானே செஞ்சிருக்கு. இயற்கையோட சதி, வெள்ளம், வறட்சின்னு பல்வேறு காரணங்களால நஷ்டப்பட்டு, வாங்கின கடனை வெவசாயிகளால திருப்பிச் செலுத்த முடியாமப் போயிருக்கும். அதனால, அரசாங்கமாப் பாத்து தள்ளுபடி பண்றதைக் குத்தம் சொல்றாங்களேன்னு நெனச்சேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுக்கப்புறம் அந்தப் பிரச்னையை நான் மறந்தே போயிட்டேங்க. போன வருஷம் விவசாயக் கருத்தரங்கத்துக்குப் போயிருந்தேன். அப்ப ஒரு மெத்தப் படிச்ச மேதாவி, 'கடன் தள்ளுபடி பண்ணுனதால ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. அந்தக் கடனுக்காக, ஈடாக் கொடுத்திருந்தச் சொத்துகளை மீட்டு உடனடியா மறுஅடகு வச்சு கடனை வாங்கிட்டாங்க.  அத்தோட ஒழுங்கா கட்டறவங்களுக்கும் கட்டாதவங்களுக்கும் அடிக்கடி தள்ளுபடி பண்ணினா, ஏன் நாம கட்டணுமின்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க’ன்னு சொன்னாரு.

அப்பவும் எனக்கு கோபம்தான் வந்துச்சு. சிறு விவசாயிங்க பெரிய லாபம் பார்க்க முடியாத நெலமையில இருக்காங்க. அவங்களுக்கு அடிக்கடி பணம் தேவைப்படத்தான் செய்யுது. இதுக்கு நிரந்தரத் தீர்வு காண்றது எப்படின்னு யோசிக்காம, இப்படி பேசுறீங்களே’ன்னு அவரை திட்டித் தீர்த்துட்டேன். பெரிய தொழில்களுக்கு கடனைத் தந்துட்டு அம்போன்னு நிக்கிறதுக்குப் பதிலா நாட்டுக்குப் பாடுபடற விவசாயிக்குக் கடன் தந்து அதுல கொஞ்சம் முன்னேபின்னே இருந்தா அட்ஜஸ்ட் பண்றதுல என்ன தப்பு?  

ஆனா, இப்ப வந்த நியூஸைப் படிச்சு பார்த்தப்ப ஒரே வயித்தெரிச்சல் ஆயிடுச்சு. அரசாங்கம் பெரிய மனசு பண்ணி தள்ளுபடி செஞ்சதை பொய்க்கணக்கு காண்பிச்சு கொஞ்சம் பேர் லவட்டிக்கிட்டுப் போயிட்டாங்களாம். படுபாவிங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு கொஞ்சம் டீடெயிலாச் சொல்றேன், கேளுங்க.

கவர்மென்டு கிட்டத்தட்ட 52,000 கோடி ரூபாய் தள்ளுபடி பண்ணிச்சு. அரசாங்கம் அந்தப் பணத்துக்குப் பொறுப்பேத்துக்குச்சு. அரசாங்கம் பணம் தந்தா சிஏஜி ஆடிட் பண்ணுவாங்கல்ல. அப்படிப் பண்றப்ப ஒரு சாம்பிளுக்கு எழுநூறு கிளைகள்ல இருக்கிற ஒரு லட்சம் கணக்கை செக் பண்ணினாங்களாம். அந்த ஒரு லட்சம் கணக்கில மட்டும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் தள்ளுபடி ஆகியிருக்காம். அதுல 150 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருக்காம். மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிங்க பல

எடக்கு மடக்கு !

விவசாயியோட கடன் பத்தின எந்த டீடெயிலும் தராம பணத்தைக்கொண்டுபோயிட்டாங்களாம்.

அப்படீன்னா என்ன அர்த்தமுன்னு சின்னப் புள்ளக்கணக்காக் கேட்காதீங்க. அரசாங்கம் கடன் தள்ளுபடி செஞ்ச தகவல் வந்தவுடனேயே மைக்ரோ ஃபைனான்ஸ்காரங்க, நாங்களும் நிறைய கடன் தந்திருக்கோம். எங்களுக்கும் நிறைய வாராக்கடன் இருக்குதுன்னு சொல்லி, தராத கடனைக்கூட வராத கடனாக் காட்டி பணத்தைச் சுருட்டிட்டுப் போயிருக்காங்களாம்.

கவர்மென்டுல பணத்தை அப்படி என்ன சுளுவா தந்துடுவாங்களான்னு நீங்க கேக்கலாம். தள்ளவேண்டியதைத் தள்ளினா கெடைக்கவேண்டியது கெடைச்சுட்டுப் போகுதுங்கிறதுதானே இன்னைக்கு நாடறிஞ்ச நடைமுறையா இருக்கு! கடன் தள்ளுபடில மட்டும் வேற மாதிரி இருக்குமா என்ன!?  

இந்தமாதிரி பணம் போறதுக்கு ஏதாவது ஓட்டை இருக்குமுன்னு அரசாங்கத்துக்குத் தெரியாதா? நாலஞ்சு வருஷத்துக்கப்புறம் சிஏஜி கண்டுபிடிச்சதுக்கப்புறம் எல்லா பேங்கையும் ஆடிட் பண்ணி, பணத்தை அள்ளித் தந்த அதிகாரிங்களையும், அள்ளிக்கிட்டுப்போன மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களையும் போலீஸ் பிடிச்சு எஃப்.ஐ.ஆர். போடணுமா?

இந்த விஷயத்துல இதுவரைக்கும் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியாவது அவசரப்படமா இந்த விஷயத்தை விசாரிங்கய்யா. ரெண்டு, மூணு வருஷம் ஆனாலும் இந்த விஷயத்தை ஆரஅமர விசாரிச்சு நடவடிக்கை எடுங்க. இதுல களவுபோன தொகை எவ்வளவு?, லஞ்சம் எவ்வளவு கைமாறியிருக்கு?ங்கிறதை எல்லாம் பாக்கணும். அரசாங்கம் தர்ற  பணத்துக்கே இந்தக் கதின்னா, பேங்குல இருக்கற டெபாசிட்டிற்கு என்ன கதியோ? நினைச்சுப் பார்த்தாலே பயமாகுதுங்க.

இதை இன்னொரு ஆங்கிள்ல யோசிச்சுப் பாருங்க. அரசாங்கம் தள்ளுபடி செஞ்ச தொகையிலே ஒரு பங்கு இப்படி அநியாயத்துக்குத் திருடப்பட்டிருந்தா, யாரோ ஒருத்தருக்குக் கடன் தள்ளுபடியாகாமத்தானே போயிருக்கும்? வாயைக் கட்டி வயித்தைக் கட்டி வாழ்ற விவசாயியோட கடன் தள்ளுபடியாகலேன்னா, அந்த மானஸ்தன் உசுரை விட்டுட்டா யாரு அந்த உசிரைத் திருப்பித் தருவாங்க?

திருடறதுக்கு உங்களுக்கு வேற எடம் கிடைக்கலையா? வயிறார சாப்பிடறதுக்கு வழிபண்றவங்களோட வயித்துல அடிக்கலாமா? யாரு பணத்துல கையை வைக்கிறோமுன்னு

கொஞ்சமாவது யோசிக்கிறதில்லையா? ஊர் எரியுறப்ப கொள்ளை அடிக்கிற இவங்க, இன்னும் என்ன தப்பு வேணுமுன்னாலும் செய்வாங்களே!

இந்த நேரத்துல அரசாங்க நிதி அமைச்சருக்கு இந்த ஏகாம்பரத்தோட தாழ்மையான வேண்டுகோள் இது! அடுத்தத் தடவை இந்த மாதிரி தள்ளுபடி பண்றதுக்கு முன்னாடியாவது யாரும் லவட்டிக்கிட்டு போகமுடியாத மாதிரி செக் பாயின்ட்களை வச்சுகிட்டு பண்ணுங்க. இல்லாட்டி ருசிகண்ட பூனைகள் எலெக்ஷன் வருதுன்னவுடனே வாலை ஆட்டிக்கிட்டு கிளம்பினாலும் கிளம்பிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism