Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே !

பெயின்ட்டிங்... பிரின்ட்டிங்... மெஹந்தி... மேரேஜ் மேக்கப்... ஸ்கூல் புராஜெக்ட் வொர்க்... கலைத்தொழிலில் கலக்கும் புவனேஸ்வரி !மு.செய்யது முகம்மது ஆசாத்

உன்னால் முடியும் பெண்ணே!

##~##

அந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியைக் கண்டவர்களின் வாழ்த்துக்கள், அதை அமைத்திருந்த புவனேஸ்வரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கச் செய்தன. அம்மா சாந்தா, மகளின் வெற்றியில் நெகிழ்வுடன் நிற்க, தம்பி ஜெகன் பாலாஜி கைகுலுக்கி தனது சந்தோஷத்தைப் பகிர... நெகிழவைப்பதாக இருந்தது அந்தக் காட்சி!

'சிறந்த கைவினைக் கலைஞர் என்பதை நிரூபிக்க வேண்டும், தனியாக ஒரு கண்காட்சி நடத்த வேண்டும்' என்கிற தன் கனவு நனவான பூரிப்பில் இருந்த புவனேஸ்வரியிடம் பேசியபோது... இதற்காக கடந்து வந்த மெனக்கெடல்கள், பயிற்சிகள், முயற்சிகள், கஷ்டங்கள் என அனைத்தும் பகிர்ந்தார்!

''எங்கப்பா நரசிம்மலு ராஜா, கும்பகோணத்துலதான் இருந்தார். லாரி பாடி கட்டுறது, தையல் தொழில், நிலத்தரகுனு கிடைக்கற வேலைகளைப் பார்த்துட்டு இருந்தார். நான், ரெண்டு தம்பிங்கனு வீட்டுல மூணு பிள்ளைங்க. நான் ஒன்பதாம் வகுப்புப் படிச்சப்போ, தமிழ் வார இதழ் ஒண்ணுல ஓவியர் லதா வரைஞ்சிருந்த ஓவியத்தைப் பார்த்து, தத்ரூபமா வரைஞ்சேன். அப்பாவும் அம்மாவும் பாராட்டினாங்க. 'ஓவியத்தை அலங்காரம் பண்ணினா... இன்னும் அழகா இருக்குமே'னு அப்பா ஐடியா கொடுக்க, அதுதான் என்னோட கைவினைப் பொருட்கள் ஆர்வத்துக்கான பிள்ளையார் சுழி!

உன்னால் முடியும் பெண்ணே !

இந்த நேரத்துல அப்பாவுக்கு சென்னையில வேலை கிடைக்க, எல்லாரும் இடம் பெயர்ந்துட்டோம். இங்க என்னோட கலைத்திறன்களை வளர்க்கறதுக்கான வாய்ப்புகள் நிறைய கிடைச்சுது. கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஓவியக் கண்காட்சினு என்னை கூட்டிட்டுப் போனார் அப்பா. பயிற்சி முகாம்கள் கலந்துக்கிட்டு, டி.வி. ஷோக்கள பார்த்து... ஆர்ட் அண்ட் கிராஃப்ட் கத்துக்கிட்டேன். 'பொம்பளப் புள்ள லீவு நாள்ல வீட்டு வேலையை கத்துக்காம, இப்படி குச்சி, ஊசி, பாசினு உட் கார்ந்துடறியே’னு அம்மா ஒரு நாளும் என்னை கடிஞ்சுகிட்டதில்ல. கூடுதல் ஆதரவா.. ரொம்பவே ரசிப்பாங்க.

இப்படியே... ஃபேப்ரிக் பெயின்ட்டிங், ஒன் ஸ்ட்ரோக் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்ட்டிங், மியூரல் பெயின்ட்டிங், பாட் பெயின்ட்டிங், செராமிக் பெயின்ட்டிங், டெக்ஸ்டைல் பிரின்ட்டிங், ஃப்ளவர் மேக்கிங், பேப்பர் பேக் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங், கிரீட்டிங் கார்டு மேக்கிங், ஃபேஸ் மாஸ்க் மேக்கிங்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். உடைஞ்ச கண்ணாடி வளையல்ல ஆரம்பிச்சு... தேங்காய் சிரட்டை வரை பயன்படுத்தி 'ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட்’ பொருட்களையும் செய்ய கத்துக்கிட்டேன்''

- புவனேஸ்வரி சற்று பிரேக் கொடுக்க... அந்தக் கண்காட்சியிலிருந்த பொருட்களில் பார்வையை ஓட விட்டோம்.

சணல் சுற்றிய கொட்டாங்குச்சியில் பொக்கே, தேங்காய் நாரில் குருவிகளின் கூடு, வேஸ்ட் பேப்பர் ரோலில் பென் ஸ்டாண்ட், உடைந்த வளையல் துண்டுகளை ஒருங்கிணைத்து சேவல், உபயோகமற்ற சி.டி-களைப் பயன்படுத்தி வாசல் தோரணங்கள், தஞ்சாவூர் பாணியில் கண்ணைப் பறிக்கும் அலங்காரத்துடனான ஓவியங்கள், விதவிதமான ஆரத்தி தட்டுகள், பேப்பரில் உருவான அணிகலன்கள், வண்ணத்துப்பூச்சி வாழ்த்து அட்டைகள் என... நூற்றுக்கும் மேலான படைப்புகள்.

''ப்ளஸ் டூ முடிச்சதும் குரோம்பேட்டையில ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். சாயந்திரம் 7 மணி தொடங்கி, காலையில 7 மணி வரைக்கும் நைட் ஷிப்ட் வேலை. அதனால மத்தியானம் கம்ப்யூட்டர் கிளாஸும், அஞ்சல் வழியில் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனும் படிக்கத் தொடங்கினேன். இப்போ அடையாறுல வேலை பார்க்குறேன்.

ஆர்ட் பொருட்களுக்கு ஆகும் செலவை அப்பாதான் பார்த்துக்குவார். சொந்தக்காரங்ககூட, 'பொம் பளப் புள்ளைய கட்டிக் கொடுக்க வழி பார்க்காம, எதுக்கு அவ பொழுதுபோக்க இவ்வளவு செலவு பண்றீங்க..?’னு கேட்டிருக்காங்க. 'இது பொழுதுபோக்கு இல்ல... அவளோட வாழ்க்கைக்கான கைத்தொழில். நிச்சயம் எல்லாரும் பாராட்டுறபடி அவ வளர்வா’னு விட்டுக்கொடுக்காம அப்பா சொல்லும்போது, எனக்கும் உத்வேகம் வரும்.

உன்னால் முடியும் பெண்ணே !

இடையில் அப்பாவுக்கு மூளையில் ரத்தம் பிளாக் ஆகி, கை, கால் செயல் இழந்து படுத்த படுக்கையாயிட்டார். ஒரு கட்டத்தில் அப்பா எங்களை விட்டுப் பிரிஞ்சுபோக, குடும்பப் பொறுப்பு எங்கிட்டயும் தம்பிகிட்டயும் வந்துச்சு. அப்பா என் மேல் வெச்சிருந்த நம்பிக்கையைக் காப்பாத்தணும்கிற பாஸிட்டிவ் எனர்ஜி, நான் தளராம பார்த்துக்கிச்சு'' என்றவர், அதன் பிறகு இந்தக் களத்தில் இன்னும் ஆழமாக இறங்கியிருக்கிறார்.

''ஸ்கூல்ல படிச்சப்பவும் சரி, வேலைக்குப் போனபோதும் சரி... ஓய்வு நேரங்கள்லதான் கலைப்பொருட்கள் பண்ணினேன். நான் வேலை பார்த்த அலுவலகத்திலும், தேவைஇல்லாத பொருட்கள் டிஸ்போஸ் பண்றதுக்கு முன்ன, என் படைப்புகளுக்கு உதவுறதை எடுத்துக்க சொல்வாங்க. ஒரு கட்டத்தில், 'புவனேஸ்வரிஸ் கிரியேட்டிவ் வேர்ல்டு’ங்கற பெயர்ல கலைத்திறனை மத்தவங் களுக்கு கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சியும் தந்துட்டிருக்கேன்.

மணப்பெண் அலங்காரம், மெஹந்தி, பண்டிகை அலங்காரங்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கான புராஜெக்ட் வொர்க் இப்படி எல்லாமே செய்து கொடுக்கிறேன். சில சேனல்கள்ல 'ஆர்ட் ஷோ’-வும் செய்திருக்கேன். இந்த வருமானம் எல்லாம்தான் குடும்பச் செலவுகளைத் தாங்குது. எங்கப்பா சொன்ன மாதிரி, இந்த கைத்தொழில் எனக்கு கை கொடுத்தது. இன்னொரு பக்கம், வேலைக்கும் போறேன். கண்காட்சி நடத்தணும்கிற நெடுநாள் ஆசையும் இப்போ நிறைவேறியிருக்கு. அப்பா இருந்து பார்க்காததுதான் வருத்தம்...''

உன்னால் முடியும் பெண்ணே !

- தாயின் கை பிடித்துக் கொண்ட புவனேஸ்வரி, ''ஆர்ட் ஏரியாவில் எனக்குனு ஒரு நிலைத்த இடத்தை அடையணும். முயற்சிகள் தொடரும்!'' என்று புன்னகை பூத்தார்!