Published:Updated:

கேள்வி-பதில்

வீட்டுக் கடனுக்கு ஜாமீன்: என்ன சிக்கல்?

கேள்வி-பதில்

வீட்டுக் கடனுக்கு ஜாமீன்: என்ன சிக்கல்?

Published:Updated:
##~##

[?]எனது நண்பர் வாங்கிய வீட்டுக் கடனுக்காக நான் ஜாமீன் கையெழுத்துப் போட்டிருந்தேன். தற்போது நான் வீட்டுக் கடன் வாங்க உள்ளேன். இந்நிலையில் நண்பருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பதால், எனக்கு கடன் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்குமா?

- ரகோத்தமன், திருச்சிராப்பள்ளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பத்மநாபன், கிளை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

''நண்பர் வாங்கிய வீட்டுக் கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டிருப்பதால், உங்களது கடன் வாங்கும் திறனில் எந்தச் சிக்கல்களும் வராது. உங்களது கடன் வாங்கும் திறனுக்கு ஏற்ப வங்கிகள் கடன் வழங்கும். ஆனால், உங்களது நண்பர் அவரது கடனை முறையாக கட்டி முடிக்காத பட்சத்தில் வங்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கும். அப்போது அவருக்கு ஜாமீன்தாரர் நீங்கள் என்கிற அடிப்படையில் உங்கள் மீதும் வழக்குத் தொடுக்கும். அதுதவிர, அவரது கடனுக்காக சொத்துக்களை கையகப்படுத்துவது என்கிற நடவடிக்கை எடுத்தால், அதில் உங்கள் சொத்துக்களை சேர்த்து கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், உங்கள் நண்பர் வங்கிக் கடனை சரியாக திருப்பிச் செலுத்தும்பட்சத்தில் உங்களுக்கு எந்தச் சிக்கல்களும் வரவாய்ப்பில்லை.''  

கேள்வி-பதில்

[?]என்.எஸ்.டி.எல். நிறுவனத்தின் பணி என்ன? அது மத்திய அரசின் அமைப்பா? அல்லது தனியார் அமைப்பா?

- குமரகுரு, தஞ்சாவூர்.

ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்.

''என்.எஸ்.டி.எல். என்பது தேசிய பங்குச் சந்தை, ஐ.டி.பி.ஐ. மற்றும் யூ.டி.ஐ போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனம். பங்குச் சந்தை வர்த்தகத்தின் டீமேட் கணக்கு பரிவர்த்தனைகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. அதாவது, முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், பங்குச் சந்தை இவற்றுக்கு இடையில் என்.எஸ்.டி.எல் ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது. இதுதவிர, மத்திய அரசுக்கு வருமான வரி வசூல் செய்து தருவது, பான் எண் விநியோகம் போன்றவற்றில் வருமான வரித் துறைக்கு உதவுவது போன்ற வேலைகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது. இது மத்திய அரசின் மேற்பார்வையிலுள்ள ஒரு நிறுவனம்''.  

கேள்வி-பதில்

[?]உரிமைப் பங்குகள் (ரைட்ஸ் இஸ்யூ) வழங்குவதால் என்ன பயன்? அப்போது பங்குகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளதா?

- ரியாஸ் முகமது, சென்னை.

எஸ்.ரமேஷ், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் அண்ட் ஷேர்ஸ்.

''உரிமைப் பங்குகள் வழங்குவதால் பங்கு களின் விலை குறையவே செய்யும். என்றாலும், முதலீட்டாளர்களுக்கு இது எந்த வகையிலும் பாதிப்பில்லை. லாபமாகவே இருக்கும். நிறுவனம் கூடுதல் முதலீடு திரட்டும் நோக்கில், ஏற்கெனவே உள்ள முதலீட்டாளர்களுக்கு உரிமைப் பங்குகள் வெளியிடுகிறது. பங்குகளின் கடந்த ஆறு மாத சராசரி மதிப்பில் உரிமைப் பங்குகளின் விலை நிர்ணயம் செய்யப்படும். நிறுவனம் உரிமைப் பங்குகள் வெளியிட உள்ளது என்னும்பட்சத்தில், அந்தப் பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமாகும். இதன் மூலம் பழைய முதலீட்டாளர்களுக்கு லாபம் அதிகரிக்கச் செய்யும். உரிமைப் பங்குகள் வெளியிட்ட பிறகு அந்தப் பங்குகளின் சந்தை மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதிய முதலீட்டாளர்கள் குறைந்த விலைக்கு அந்தப் பங்குகளை வாங்க முடியும்.''

[?]இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் இருந்து ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள முடியுமா?

- கிஷோர், பொள்ளாச்சி.

அழகப்பன், நிர்வாக இயக்குநர், அசெட் கிரியேட்டர்ஸ்.

''இ.எல்.எஸ்.எஸ். திட்டத்திலிருந்து ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், இ.எல்.எஸ்.எஸ். திட்டம் தொடங்கி முதலீட்டு இருப்புக் காலமான மூன்றாண்டுகளுக்குப் பிறகே இப்படி செய்ய முடியும். ஈக்விட்டி டைவர்சிஃபைட் திட்டத்துக்கு மாறுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்கிற யோசனையில் மாற வேண்டாம். ஏனென்றால், இரண்டு திட்டங்களின் மூலமும் கிடைக்கும் வருமானத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப நீண்டகால நோக்கில் இந்தத் திட்டங்களின் மூலம் 15 சதவிகிதம் அளவிற்கு வருமானத்தை எதிர்பார்க்கலாம். எனவே, இ.எல்.எஸ்.எஸ். திட்டத்திலேயே தொடரலாம் அல்லது வெளி யேறும் நேரத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு, அதற்கேற்ப முடிவு செய்துகொள்ளலாம்!''

கேள்வி-பதில்

[?]ஒரே மனைப் பிரிவில் ஒரு இடம் வழிகாட்டி மதிப்பிலும், மற்றொரு இடம் சந்தை மதிப்பிலும் பத்திரப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த மனைப் பிரிவில் வேறொரு இடம் வாங்கி பதிவு செய்வது என்றால், எந்த மதிப்பில் பதிவு செய்வது?  

- இரா.கண்ணன், துடியலூர்.

ஜீவா, வழக்கறிஞர்.

''குறிப்பிட்ட சர்வே எண்ணில் அந்தப் பகுதிகளில் கடைசியாக எந்த மதிப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ, அந்த மதிப்பில்தான் அடுத்து மனை வாங்குபவர்களும் பதிவு செய்ய முடியும். அதாவது, சந்தை மதிப்பு அல்லது வழிகாட்டி மதிப்பு இரண்டையும் ஒப்பிட்டு இதில் எந்த மதிப்பு அதிகமாக உள்ளதோ, அந்த மதிப்பில்தான் பதிவு செய்வார்கள். எனவே, நீங்கள் வாங்க உள்ள இடத்தில் கடைசியாக எந்த மதிப்பிற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த மதிப்பில்தான் பதிவு செய்ய முடியும்.''

கேள்வி-பதில்

[?]எனது மனைவியை உரிமையாளராகக் கொண்டு பழைய வீடு வாங்கி யுள்ளேன். அதற்கான பணம் எனது வங்கிக் கணக்கிலிருந்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில், நான் வருமான வரிச் சலுகை பெற முடியுமா?

- கணேசன், திருப்போரூர்.

ஜி.ஆர்.ஹரி, ஆடிட்டர்.

'' சொந்தப் பணத்தைக்கொண்டு, வீடு வாங்கியிருந்தால், வருமான வரிச் சலுகை பெறமுடியாது. ஆனால்,  வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வசதி நிறுவனங்கள் மூலமாக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதற்காக திருப்பிச் செலுத்தும் அசலுக்கும், வட்டிக்கும் வரிச் சலுகை பெற முடியும். அதேவேளையில், அந்தச் சொத்தை இருவரது பெயரிலும் இணைந்து வாங்கினால் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வரிச் சலுகை இருவரும் பெற முடியும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism