Published:Updated:

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

Published:Updated:
##~##

டந்த சில ஆண்டுகளாக உச்சபட்ச வருமானத்தில் உள்ளவர்களிடம் டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்ஸ்

 (Tax-free bonds)  மிகவும் பாப்புலராகி வருகின்றது. இந்த பாண்டுகள் 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ.30,000 கோடி வரை வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிட அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது. அதுவே, நடப்பு நிதி ஆண்டு (2012-13) பட்ஜெட்டில் இரண்டு மடங்காக - அதாவது ரூ.60,000 கோடிக்கு வெளியிட அரசாங்கம் அனுமதித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் அரசு நிறுவனங் களால் நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு  வெளியிடப்படுவதால், அரசாங்கம் அதற்கு வரி விலக்கு அளிக்கிறது. அதாவது, இந்த பாண்டுகளில் முதலீடு செய்தால், கிடைக்கும் வட்டிக்கு வருமான வரிச் செலுத்தவேண்டியதில்லை. (இதில் முதலீடு செய்யும் தொகைக்கு (அசலிற்கு) வருமான வரி விலக்கு கிடையாது!)  

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

யாருக்கு உகந்தது?

உச்ச வருமான வரி வரம்பில் இருந்து நிலையான வருமானத்தைத் தேடுபவர்களுக்கு, கம்பெனிகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்களுக்கு, வரிக்குப் பின் அதிக யீல்டை நாடுபவர்களுக்கு, ஓய்வுக்காலத்தில் உச்ச வருமான வரம்பில் இருந்து ரிஸ்க் இல்லாத நிலையான வருமானத்தைத் தேடுபவர்களுக்கு, பெரிய தொகைகளை கவலை இல்லாமல் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்து  அதிக வருமானத்தைத் (வரிக்குப் பின்) தேடுபவர்கள் போன்ற அனைவருக்கும் இந்த பாண்ட் முதலீடு மிகவும் ஏற்றது.

யாருக்கு உகந்ததல்ல?

வருட வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, வரி சேமிப்பிற்கு வேறு வாய்ப்புள்ளவர்களுக்கு, வரிச் சேமிப்பு ஒரு பெரிய பொருட்டாக இல்லாதவர்களுக்கு, கேஷ் ஃப்ளோ அதிகம் தேவைப்படுபவர்களுக்கு, ரிஸ்க் இல்லாமல் ஆண்டிற்கு 11.13 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைப்பவர்கள் போன்ற அனைவருக்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு, என்.ஆர்.இ டெபாசிட்டிலிருந்து வரும் வட்டிக்குத் தற்சமயம் வரி ஏதும் இல்லை. மேலும், வட்டி விகிதமும் இந்த பாண்டுகளைவிட அதிகம். ஆகவே, இந்த பாண்டுகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவ்வளவு உகந்ததல்ல.

பாசிட்டிவ் பாயின்டுகள்!  

பொதுவாக, இந்த பாண்டுகள் அனைத்தும் வருடா வருடம் வட்டியைத் தந்துவிடுகின்றன. இதில்

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு முழு வருமான வரி விலக்கு உண்டு. பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். மூலத்தில் வரிப் பிடித்தம் இல்லை. லாக்-இன் காலம் கிடையாது. உச்சபட்சமாக, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். செல்வ வரி கிடையாது.

இந்த பாண்டுகளை வெளியிடும் நிறுவனங்கள் அனைத்தும் அரசு நிறுவனங்கள் என்பதால் அச்சமின்றி முதலீடு செய்யலாம். டீமேட் கணக்கு மூலம் வைத்துக்கொள்ளலாம் அல்லது சர்ட்டிஃபிகேட்-ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.  

என்ன தேவை?

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு இருக்கவேண்டும். அது இருக்கும்பட்சத்தில், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து காசோலையுடன் தந்தால் போதுமானது. டீமேட் கணக்கு இல்லாதவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முதலீட்டுத் தொகைக்கான காசோலை, கேன்சல் செய்யப்பட்ட காசோலை, பான் கார்டு நகல்,  அட்ரஸ் புரூஃப் ஆகியவற்றுடன் சமர்ப்பித்தால் போதும்.

நெகட்டிவ் பாயின்டுகள்!

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகளில் முதலீடு செய்யும் போது, நாம் விண்ணப்பித்த முழுஅளவுக்கும் கிடைக்காமல்போக வாய்ப்புண்டு. மேலும், முதலில் வந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.10 லட்சமே என்ற உச்சவரம்பு உள்ளது. இதனால், வேண்டிய அளவிற்கு முதலீடு செய்ய இயலாமல் போவது உண்டு.

டீமேட் கணக்கு இல்லாதவர்கள், சர்ட்டிஃபிகேட் வடிவில் வாங்கும்போது சந்தையில் விற்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். மேலும், ரீடெயில் முதலீட்டாளர்களுக்கென்று சற்று அதிக வட்டி (0.5%) வழங்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு வாங்கிய ரீடெயில் முதலீட்டாளர்கள் சந்தையில் விற்கும்போது இரண்டாவதாக வாங்கிய நபருக்கு அந்த அதிக வட்டி (0.5%) கிடைக்காது.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் சில நிறுவன வெளியீடுகளில் முதலீடு செய்யலாம் - அதுவும் என்.ஆர்.ஓ (NRO – Non Resident Ordinary) கணக்கு மூலம்தான். வெகு சில நிறுவனங்கள் மட்டுமே என்.ஆர்.இ கணக்கு மூலமும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்கின்றன. சில நிறுவனங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விண்ணப்பிக்கவே முடியாது.

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

என்ன ரிஸ்க்?

இந்த பாண்டுகளை வெளியிடும் நிறுவனங்கள் அரசைச் சார்ந்தவை என்பதால், பெரும்பாலான ரிஸ்க் குறைந்துவிடுகிறது.   பல நிறுவனங்கள் AAA ரேட்டிங் கொண்டவை. இன்னும் சில AA ரேட்டிங்

டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்!

உடையவை. மொத்தத்தில் இந்த முதலீட்டில் ரிஸ்க் மிக மிகக் குறைவு.

பாண்டுகளை வாங்கி, முதிர்வு வரை வைத்திருப்பவர்களுக்கு சந்தை ரிஸ்க் ஏதும் இல்லை. அதேசமயத்தில், தங்களது தேவைகளுக்காக, முதிர்வுத் தேதிக்கு முன்பு சந்தையில் விற்கச் செல்லும்போது அன்றைய வட்டி விகிதத்தைப் பொறுத்து விலையில் ஏற்றஇறக்கம் இருக்கும்.

இதுபோன்ற உபகரணங்களில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக சந்தையில் விற்க வரமாட்டார்கள். எனவே,  சந்தையில் குறைந்த அளவே வர்த்தகம் ஆக வாய்ப்புண்டு. இதனால் லிக்விடிட்டி ரிஸ்க் ஏற்படலாம்.  

கவனிக்கவேண்டியவை!

இந்த பாண்டுகளை வெளியிடும் நிறுவனங்கள் பலவும் தரமானவை என்பதால், தாராளமாக முதலீடு செய்யலாம். முதலீட்டை மேற்கொள்ளும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்:  

1. நீண்டநாள் தொழிலில் உள்ள நிறுவனங்களாக இருப்பது நல்லது!

2. கடந்த ஐந்து வருடங்களாக லாபத்தில் ஓடும் நிறுவனங்களாக இருத்தல்வேண்டும்!

3. AA மற்றும் அதற்கும் மேலாக கிரெடிட் ரேட்டிங் இருந்தால் நல்லது!

4. நல்ல மேலாண்மையையும், நிர்வாகத்தையும்கொண்ட நிறுவனங்களாக இருத்தல்வேண்டும்!

எவ்வளவு வருமானம்?

தற்போது நடப்பில் இருக்கும் வெளியீடுகளில் ரீடெயில் முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 6.88 சதவிகிதத்திலிருந்து 7.69 சதவிகிதம் வரை எதிர்பார்க்கலாம். (10 மற்றும் 15 ஆண்டுகளில் இந்த பாண்டுகள் தரும் வட்டி விகிதங்களையும் வரிக்கு முந்தைய வட்டி விகிதக் கணக்கையும் எதிர்ப்பக்கத்தில் பார்க்க!)  

எந்த ஆப்ஷன் சரி?

பொதுவாக, பாண்டுகளில் 10, 15 மற்றும் 20 வருட ஆப்ஷன்கள் உள்ளன. வயதானவர்கள் குறைந்தகால ஆப்ஷனையும், இளைஞர்கள் நீண்டகால ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம். AAA கி  ரேட்டிங் உள்ள பாண்டுகள் சற்று குறைவான வருமானத்தைத் தரும். AA ரேட்டிங் உள்ள பாண்டுகள் சற்று அதிக வருமானத்தைத் தரும்.

எதிர்ப்பக்கத்தில் நாம் தந்துள்ள டேபிளில் ஹட்கோ பாண்டுகள் மட்டுமே AA ரேட்டிங் உடையது. ஆகவே, அதனுடைய வருமானமும் பிற பாண்டுகளைவிட சற்று அதிகமாக இருப்பதைக் காணலாம்.

சற்று ரிஸ்க் எடுக்கும் திறனுடையவர்கள் AA கி ரேட்டிங் உடைய பாண்டுகளை நாடிச் செல்லலாம். சந்தேகம் இருக்கும்பட்சத்தில் உங்களது நிதி ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள்.

மொத்தத்தில், உச்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு, மத்திய அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்படும் இந்த பாண்டுகள் ஓர் அரிய முதலீட்டு உபகரணமாகும். அரசாங்க நிறுவன பாண்டுகள் முதலீடு செய்யாமல் விட்டால், வேறு எதில் ஆண்டிற்கு (வருமான வரிக்கு முன்) 10.68 சதவிகிதத்திலிருந்து 11.13 சதவிகிதம் வரை கிடைக்கும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism