Published:Updated:

பட்டா வாங்காவிட்டால் சிக்கல் வருமா..?

பட்டா வாங்காவிட்டால் சிக்கல் வருமா..?

பிரீமியம் ஸ்டோரி

கேள்வி-பதில்

##~##

[?]வீட்டு வசதி வாரியம் கட்டி விற்பனை செய்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 15 வருடங் களாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு அமைந்துள்ள இடத்துக்கு இதுவரை பட்டா வாங்கவில்லை. இதனால் பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுமா?

- ரா.துரைசுவாமி. சென்னை.

ஜெ.ஃபிராங்க்ளின், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''பட்டா வாங்கவில்லை என்பதால், எந்த வகையிலும் அந்த இடத்தின் மீது உங்களது உரிமை பாதிக்கப்படாது. பட்டா என்பது வருவாய்த் துறை ஆவணங்களின்படி, குறிப்பிட்ட இடம் உங்கள் பெயரில் உள்ளது என்பதை உறுதி செய்யும் ஆவணம்தான். வீட்டுவசதி வாரியம் ஏற்படுத்தித் தந்த குடியிருப்பு என்பதால் எந்த வகையிலும் விதிமீறல் இருக்காது என நம்பலாம். எனவே, பட்டா இல்லை என்பதால் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.''

பட்டா வாங்காவிட்டால் சிக்கல் வருமா..?

[?]நானும், எனது மனைவியும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; எனது மனைவிக்கு இதய வால்வு (ணீஸீரீவீஷீரீக்ஷீணீனீ) சிகிச்சை செய்திருக்கிறோம். எங்கள் இருவருக்கும் தனித் தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுக்க முடியுமா?  

- எஸ்.கணபதி, சென்னை.

சுந்தரராஜன், வெல்த் அட்வைஸர். ஐ.என்.ஜி.வைஸ்யா.

பட்டா வாங்காவிட்டால் சிக்கல் வருமா..?

''60 வயதான பிறகு புதிதாக மருத்துவக் காப்பீடு எடுப்பதென்பது காலம் கடந்த யோசனை. பொதுவாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு சில நிறுவனங்களே பாலிசி வழங்குகின்றன. மருத்துவ அறிக்கை அடிப்படையில் தரப்படும் இந்த பாலிசிக்கு பிரீமியம் அதிகம். தவிர, ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு பாலிசி எடுத்து நான்கு வருடங்களுக்குப் பிறகே க்ளைம் செய்யமுடியும்''.

[?]கூட்டுறவு வங்கியில் எனது நகைகளை என் தந்தையின் மூலம் அடமானம் வைத்தோம். இந்நிலையில் கடந்த ஆண்டு என் தந்தை காலமானார். நகைக் கடன் மொத்தத்தையும் கட்டி முடித்துவிட்டு, தந்தையின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் கொடுத்தும் நகைகளைத் தர மறுக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். வாரிசுச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள அனைவரும் நேரில் வரவேண்டும் என்கிறார்கள். இது சரியா? எனது சகோதரர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் நேரில் வரமுடியாது. என் நகைகளை திரும்பப் பெற என்ன வழி?

- எம்.ஜோதி பாத்திமாபீவி, நெய்வேலி.

ஆர்.கணேசன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.

''கடன்தாரர் உயிருடன் இல்லாதபட்சத்தில் வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் நகையை ஒப்படைப்பது என்பது வழக்கமான நடைமுறையே. ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அனைவரும் நகைகளை உரிமை கோர வாய்ப்புள்ளது என்பதாலும் அல்லது குறிப்பிட்ட ஒரு நபரிடம் நகைகளை ஒப்படைக்க மற்றவர்கள் ஆட்சேபிக்கலாம் என்பதற்காக எல்லா வாரிசுகளும் நேரில் வரவேண்டும் என வங்கி அதிகாரிகள் சொல்லி இருக்கலாம்.  அடமானம் வைத்துள்ள  நகைகளை நீங்கள் திரும்ப வாங்குகிற மாதிரி உங்கள் சகோதரர்களிடமிருந்து பவர் வாங்கி அதை வங்கியிடம் கொடுங்கள். வெளிநாட்டில் உள்ள தூதரகம் மூலம் இந்த அதிகாரத்தை நீங்கள் பெற  முடியும். இப்படி செய்யும்பட்சத்தில் உங்கள் நகைகள் திரும்பக் கிடைக்கலாம்!''  

பட்டா வாங்காவிட்டால் சிக்கல் வருமா..?

[?]சுமார் 500 ரூபாய்க்கும் விலை குறைவான நல்ல பங்குகளைச் சொல்ல முடியுமா?

- டி.பி.சம்பந்தம். மயிலாடுதுறை.

சேகர், சி.இ.ஓ. இந்தியா ஃபைனான்ஸ் பஜார்.

''ரூ.500-க்கும் விலை குறைவான  தனியார் துறை வங்கிப் பங்குகள், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவை தலைமையிடமாகக்கொண்ட கரூர் வைஸ்யா  வங்கிப் பங்கில் முதலீடு செய்யலாம். அல்லது எஃப்.எம்.சி.ஜி. துறை சார்ந்த ஐ.டி.சி. நிறுவனப் பங்கைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இரு பங்குகளும் நீண்டகால நோக்கில் நல்ல பலன் தரும்.''

[?]எனது வயது 37, மாத வருமானம் 50,000 ரூபாய். ஆறு மாதங்களுக்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தேன். மூன்று வயதிலும், ஒன்றரை வயதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. எனது எதிர்காலச் சேமிப்புக்கு ஏற்ப திட்டமிடுவது எப்படி?

- எஸ்.கணேசன், தருமபுரி.

சங்கர், நிதி ஆலோசகர்.

''முதலில் உங்கள் ஆண்டு வருமானத்தைப் போல 15 மடங்கு அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியம். அடுத்ததாக குழந்தைகளின் படிப்பு மற்றும் கல்வி தேவைகளுக்கான முதலீடு. இதற்கு ஈக்விட்டி டைவர்சிஃபைட் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யவும். இதுதவிர, உங்களது ஓய்வுக்கால முதலீடு. இதற்கு ரிட்டையர்மென்ட் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அரசு ஊழியர் என்பதால் அலுவலகம் மூலம் மருத்துவக் காப்பீடு தரப்பட்டிருக்கும்.

மேற்கொண்டு தேவையெனில் இதற்கும் திட்டமிடலாம். குறிப்பாக, டேர்ம் இன்ஷூரன்ஸ், குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், உங்களது ஓய்வுக்காலம் இதற்கேற்ப முதலீட்டைப் பிரித்து திட்டமிடவேண்டும். தற்போதைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப மாதம் 50 சதவிகிதத்திற்கும் குறையாமல் இதற்கு ஒதுக்கவும். அதாவது, தற்போதைய வருமானத்திலிருந்து மாதம் 25,000 ரூபாய் வரை இதற்கு ஒதுக்குவது நல்லது.''

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-2.
nav@vikatan.com

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 04466802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு