Published:Updated:

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

இரா.ரூபாவதி, படம்: எம்.உசேன்

பிரீமியம் ஸ்டோரி

டெக்னாலஜி

##~##

இத்தனை நாளும் பலருடன் அளவளாவ பயன்பட்ட நம் செல்போன், இனி பணப் பரிமாற்றத்துக்கும் பெரிய அளவில் பயன்படப் போகிறது. இனி செல்போன் என்பது பேசுவதற்கு மட்டுமல்ல, பணம் அனுப்பிப் பெறவும்தான் என்பதே லேட்டஸ்ட் வளர்ச்சி.

இதற்கு விலை உயர்ந்த செல்போன்கள் வைத்திருக்கவேண்டும் என்பதில்லை. சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் ஆண்ட்ராய்ட் போன், ஸ்மார்ட் போன், ஜாவா எனேபிள்டு போன் உங்களிடம் இருந்தாலே போதும். இந்த போன் இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ்  பேங்கிங் வசதி பெற்று கொள்ளலாம். இந்த போனில் இன்டர்நெட் வசதி இருந்தால், நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடியே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.

செல்போன் மூலம் பணம் அனுப்பும் சேவையை பல வங்கிகள் அளித்தாலும் எஸ்.பி.ஐ. வங்கி இந்த விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது. செல்போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் சேவை பற்றி அந்த வங்கியின் உதவிப் பொது மேலாளர், ஜி.தங்கப்பன் (மாற்று வழிமுறைகள் மற்றும் வழங்கல்.)  சொன்ன தகவல்கள் இதோ:

''இந்தச் சேவையை நீங்கள் எங்களிடமிருந்து பெற விரும்பினால், உங்கள் செல்போன் நம்பரை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் முதலில் பதிவு செய்யவேண்டும். இந்தச் சேவையைக் கேட்டு சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும். அல்லது ஏ.டி.எம்.-ல் உங்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதற்கு விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு உங்களுக்கு மொபைல் பின் நம்பர் வரும்.

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

உங்கள் விண்ணப்பம் அல்லது எஸ்.எம்.எஸ். வங்கிக்குக் கிடைத்த வுடன், மொபைல் பேங்கிங் சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்வதற்கான லிங்க்கை உங்களுக்கு வங்கி அனுப்பி வைக்கும். இதை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். பிறகு உங்களுக்குத் தனி பாஸ்வேர்டு மற்றும் பயனீட்டாளர் குறியீடு எஸ்.எம்.எஸ். மூலம் தரப்படும். இந்த பாஸ்வேர்டை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருமுறை பயன்படுத்தியபின் உடனடியாக அடுத்த பாஸ்வேர்டை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

ஒருவர் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என பல கணக்கு வைத்திருந்தாலும், ஒரு கணக்குக்கு மட்டும்தான் இந்தச் சேவையைப் பெறமுடியும். தனிநபர் பெயரில் வைத்திருக்கும்  நடப்புக் கணக்கிற்கு இந்தச் சேவையை பெறலாம். கம்பெனி பெயரில் இருக்கும் நடப்புக் கணக்கிற்கு  இந்தச் சேவையைப் பெறமுடியாது.

செல்போன் மூலம் பணத்தை அனுப்பும்போது பணம் பெறுகிறவர் ஆண்ட்ராய்ட், ஸ்மார்ட் போன் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் பணம் அனுப்ப நினைப்பவரின் வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் குறியீடு, ஐ.எஃப்.எஸ்.சி. (Indian Financial Service Code)குறியீடு, எம்.எம்.ஐடி. (Mobile Money Identifier) குறியீடு (ஏழு இலக்க எண்), எவ்வளவு பணம் அனுப்புகிறீர்கள் என்பதைப் பதிவு செய்து பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம்.

இப்படி பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய சில நிபந்தனைகளை வங்கிகள் வைத்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 50,000 ரூபாயும், மாதத்துக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையும் செல்போன் மூலம் மற்றவர்களுக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். இதில் பணம் டிரான்ஸ்ஃபர் செய்பவரின் பெயர்களை பதிவு செய்வது அவசியம். ஒருமுறை ஐந்து நபர்களை மட்டும்தான் பதிவு செய்ய முடியும். இவர்களுக்கு மட்டும்தான் பண டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். ஒரு சிலருக்கு ஒரு முறை மட்டும்தான் பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்போம். எனவே, அவர்களின் பெயரை நீக்கிவிட்டு, புதிய நபரை சேர்த்துக்கொள்ளலாம் என்பதால், யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்போன் மூலம் பணம் அனுப்ப முடியும். இதனால் சின்னச் சின்னதாக யாருக்காவது பணம் தரவேண்டுமெனில் வங்கிக்குச் செல்லாமல், செல்போன் மூலமே அனுப்பிவிடலாம். கடைகளில் வாங்கும் மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கும், சின்னக் கடைகளிலும் பில் செலுத்துவதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் நம் நேரமும் நிறைய மிச்சமாகும்.

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

பணப் பரிமாற்றம் செய்வதோடு, செல்போன் டாப்அப், கிரெடிட் கார்டு பில், டி.டி.ஹெச்., இன்ஷூரன்ஸ் பிரீமியம், போன் பில் கட்ட, ஆன்லைனில் பொருட்களை வாங்க, டீமேட் கணக்கைப் பராமரிக்க என பல விஷயங்களையும் செல்போன் மூலம் செய்துகொண்டுவிட முடியும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே கணக்கு வைத்திருப்பவர்கள், மற்ற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும்  பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம். இதற்கு எம்.எம்.ஐடி. குறியீடு தேவை. பணம் டிரான்ஸ்ஃபர் ஆனவுடன் இருவருக்கும் எஸ்.எம்.எஸ். வந்துவிடும்'' என்றார்.  

இனி செல்போன் மூலம் பணம் அனுப்பி நேரத்தை மிச்சப்படுத்துவோம்!

 செல்போன் மூலம் ஆட்டோவுக்குப் பணம்!

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

ஊரிலிருந்து வீட்டுக்கு வேகமாக ஆட்டோ ஏறுகிறீர்கள். கையில் சில்லறை இல்லையா?

நோ ப்ராப்ளம். இனி செல்போன் மூலம் பணத்தை எளிதாக டிரான்ஸ்ஃபர் செய்து விடலாம்.

ஆட்டோ டிரைவர்களை கவரும் விதத்தில் இந்தச் சேவையை பெடரல் வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

''இதில் பெயர், எம்.எம்.ஐடி. எண், செல்போன் நம்பர் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் தந்தால் போதும். வாடிக்கையாளர்கள் தங்களின் எம்.எம்.ஐடி. எண் மூலமாகப் பணத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு மாற்ற முடியும்.

100 ரூபாய் 50 பைசா என்றால்கூட அந்தத் தொகையைத் துல்லியமாக இதன்மூலம் தரமுடியும்'' என்கிறார் பெடரல் வங்கித் தலைவர் எம்.மனோகரன். (சென்னை மண்டலம்)

 சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை..!

செல்போன் மணி டிரான்ஸ்ஃபர்... இனி இல்லை அலைச்சல்!

தனியார் நிறுவனமான ஒய் பே கேஷ் (Y PAY CASH) செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியை எல்லோருக்கும் அளித்து வருகிறது. நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவி ஜெகநாதனுடன் அது பற்றி பேசினோம்.  

''நாங்கள் அளிக்கும் இந்தச் சேவையை சின்னக் கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும்  பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு கேமிரா மற்றும் இன்டர்நெட் வசதிகொண்ட செல்போன்கள் இருந்தால் போதும்.

இதற்கென தனியாக சாஃப்ட்வேர் வைத்திருக்கிறோம். இதனை டவுன்லோடு செய்து, உங்களின் பெயர், செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்துகொண்டால் போதும். இதில் பணத்தைப் பரிமாற்றம் செய்வதோடு, செல்போன் பில், மளிகைப் பொருட்களின் பில் என பல கட்டணங்களை இதில் செலுத்த முடியும்.

இருபது ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை ஒரு நாளைக்குப் பணபரிவர்த்தனை செய்யலாம். பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 2% கட்டணம் உண்டு. இதற்கு வங்கிக் கணக்கு இருக்கவேண்டியது இல்லை. செல்போன் டாப்அப் செய்வதுபோல, முதலில் எங்களிடம் பணத்தைத் தந்துவிட வேண்டும். பிறகு தேவைப்படுகிறபோது யாருக்குவேண்டுமானாலும் உங்கள் செல்போன் மூலம் அனுப்பலாம்.  

யாருக்கு பணப் பரிமாற்றம் செய்ய நினைக்கிறீர்களோ, அவரது செல்போன் எண், பரிமாற்றம் செய்யவேண்டிய தொகையைப் பதிவு செய்தால், ஒரு க்யூ.ஆர். குறியீடு உருவாகும். இந்தக் குறியீடு பணம் பெறுபவரின் செல்போனுக்குச் சென்றுவிடும். இந்தப் பணத்தை நீங்கள் எடுக்க முடியாது. வேறு கடைகளில் அல்லது வேறு யாருக்காவது பணப் பரிமாற்றம் மட்டுமே செய்ய முடியும்'' என்றார் ரவி ஜெகநாதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு