Published:Updated:

எடக்கு மடக்கு - வங்கிகளே பிளாக்கை ஒயிட்டா மாத்தலாமா?

எடக்கு மடக்கு - வங்கிகளே பிளாக்கை ஒயிட்டா மாத்தலாமா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

இரண்டு நாளைக்கு முன்னாடி ரோட்டில போய்க்கிட்டு இருக்கிறப்ப ஒரு விளம்பரத்தைப் பார்த்தேங்க. 'எங்களுக்குத் தெரியும். நீங்கள் முப்பது லட்சத்துக்கு மேல் வீடு போன்ற அசையாதச் சொத்துக்களை வாங்கினால், அடிக்கடி ஃபாரின் போனால், இரண்டு லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டில் செலவு செய்தால், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஷேர்களில் முதலீடு செய்தால் எங்களுக்குத் தெரியும்’ன்னு ஒரு விளம்பரம் பார்த்தேன்.

ரொம்பவும் சந்தோஷப்பட்டேங்க. கம்ப்யூட்டரால எவ்வளவு முன்னேற்றம். எல்லாத்தையும் அரசாங்கத்தால ஒருங்கிணைச்சு கண்காணிக்க முடியுதே! நாடு சுபிட்சமாயிடுமுன்னு நம்பிக்கைப் பிறக்குதேன்னு நினைச்சு நெஞ்சை நிமிர்த்திகிட்டு இரண்டுநாள் நடந்தேங்க.

நிமிர்த்தின நெஞ்சு வலிக்கிற மாதிரி இன்னைக்கு ஒரு தகவல் வந்திடுச்சுங்க. 'எங்களுக்குத் தெரியும். அவங்க கண்ணுல படாம பதுக்கி வைக்கிறது எப்படீன்னு எங்களுக்குத் தெரியும்’ன்னு இன்னொரு செய்தி. யாருக்குத் தெரியாம எதை பதுக்கி வைக்கப் போறாங்கன்னுப் பார்த்தா, வருமான வரித் துறையோட கண்ணுல படாம, கறுப்புப் பணத்தை எங்க, எப்பிடி போட்டு வைக்கிறதுங்கிறதுக்கு நாங்க ஐடியா தர்றோம். எங்ககிட்ட வாங்க’ன்னு அழைச்சிருந்தாங்க. இப்பிடி அழைச்சது யாரோ ஒருத்தரு இல்லீங்க; இந்த சமூகத்துக்கு ரோல்மாடலா இருக்கவேண்டிய வங்கிங்கதான். கோப்ராபோஸ்ட் என்ற இணையதளம் நாட்டின் மூணு பெரிய வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஆக்ஸிஸ் வங்கிகளில் வேவு பார்த்து இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கு.

நியாயமாவோ/அநியாயமாவோ காசு சம்பாதிக்கிற சில பேரு கொஞ்சம் வரிக் கட்டாம ஏமாத்தலாமுன்னு டபாய்க்கத்தான் செய்வாங்க. ஆனா, வங்கிங்க அந்த மாதிரி டபாய்க்கலாமா? அப்பிடி டபாய்க்கிறதுக்கான வழிமுறைகளை போஸ்டர் அடிச்சு சொல்லித் தரலாமா? ஏதோ ஓர் ஊரில ஒரு  மேனேஜரு இப்பிடி செஞ்சிருந்தா, மன்னிச்சு விட்டுடலாம். ஒரு பேங்கில ஒன்பது இடத்திலேயும், மற்றொரு பேங்கில பத்தொன்பது இடத்துலேயும், இன்னொண்ணுல இருபது இடத்துலேயும் இந்த மாதிரி தில்லாலங்கடி ஐடியா கொடுக்கிறாங்கன்னா என்னங்க அர்த்தம்?. எங்கேயோ பிரச்னை சீழ் பிடிச்சுப் போயிருக்குன்னுதானே அர்த்தம். இந்த மாதிரி ஏமாத்தறவங்களுக்கு யாரு பேங்கில வேலை கொடுத்தது?

எடக்கு மடக்கு - வங்கிகளே பிளாக்கை ஒயிட்டா மாத்தலாமா?

இந்தத் தகவலுக்கு பேங்க் சைடுல இருந்து இதுவரைக்கும் பெரிசா மறுப்பு எதுவும் வரலீங்க. ஏதோ சில பேரு சில்லித்தனமாப் பேசிட்டாங்க. அதை பெரிசுப்படுத்தாதீங்கன்னு சொல்லிக்கூட பேங்குங்கத் தப்பிச்சிக்கலாம். அப்பவும் ஒரே கேள்விதாங்க கேக்கத் தோணுது. அதெப்படீங்க சில்லித்தனமானப் பேச்சு இந்தியா பூராவும் உங்க ஆளுங்கப் பேசுறாங்க. அட, ஒரு கிளார்க்கு, பியூனு பேசுனாருன்னா போய்த் தொலையராருன்னு நெனைச்சு விட்டுடலாம். லிஸ்டைப் பார்த்தா, பெரிய அதிகாரிங்கக்கூட இப்படி சில்லித்தனமாப் பேசியிருக்க மாதிரி தெரியுது. இவங்களை நம்பி நாங்க எப்படிங்க பேங்குல பணத்தைப் போடுறது?

மகராசனுங்க நல்லவேளையா புது பேங்க் லைசென்ஸ் கொடுக்கறதுக்கு முன்னாடியே  மேட்டரைப் போட்டு உடைச்சுட்டாங்க. இப்ப ரிசர்வ் வங்கி தெளிவா யோசிக்க ஆரம்பிச்சுடுமில்லீங்க. வெறும் பேங்கிங்கை மட்டுமே தொழிலாப் பண்ற தனியார் முன்னணி பேங்குகளே இப்படி இறங்குச்சுன்னா இண்டஸ்ட்ரியல் குரூப்புங்க பேங்கை ஆரம்பிச்சா இன்னும் என்னென்ன நடக்குமோன்னு ரிசர்வ் பேங்க் யோசிக்க வாய்ப்பிருக்கில்லீங்க!  அப்படி என்ன இந்த பேங்கருங்களுக்கு துடுக்குத்தனமுங்கறேன். எல்லாம் இந்த லாபம் காண்பிக்கிறதுல இருக்கற போட்டிதாங்க. 'நீ இந்த குவார்ட்டருல என்ன சம்பாதிச்சே. நான் இந்த குவார்ட்டருல என்ன சம்பாதிச்சே!''ன்னு போட்டி போட்டுச் சம்பாதிச்சாத்தான் நல்ல இன்சென்டிவ் கிடைக்குமுன்னு நினைச்சு கெட்ட கெட்ட வழியிலெல்லாம் இறங்கிடறாங்க பேங்கருங்க. பல அத்தியாவசியத் துறைகளில இந்த பெர்ஃபார்மென்ஸ் பேஸ்டு இன்சென்டிவ்வை ஒழிச்சுக்கட்ட சட்டம்  கொண்டுவரணுங்க. இப்படியே போனா கலெக்ஷனுக்கு இன்சென்டிவ் இருக்குதுன்னு சொல்லி தலைதெறிக்க பஸ்ஸை ஓட்டுற பிரைவேட் வண்டி டிரைவர் மாதிரி எல்லோரும் நாட்டையே அதிவேகத்தில கொண்டுபோய் ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க போலிருக்குங்க.

நம்ம நிதி அமைச்சரு நிறுத்தி நிதானமா இரண்டு தடவை 42,800 பேருங்கதான் ஒரு கோடிக்கு மேல் வருஷ வருமானம் இருக்கறவங்கன்னு பட்ஜெட்டுல சொன்னாருங்க. பேங்குகளோட இந்தப் போக்கைப் பார்த்தப் பின்னாடி இரண்டு மூணு சைபர் போடுற அளவுக்கு ஆள் இருக்கும் போலிருக்கே! இவ்விடம் பணம் சுத்தமாகத் துவைத்து சலவை செய்து தரப்படுமுன்னுல்ல சொல்லிவச்சமாதிரி எல்லோரும் சொல்லியிருக்காங்க. இப்படிச் செய்யறதால கருப்புப் பணம் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், நிலம், இன்ஷூரன்ஸுன்னு எல்லாவிதமான அசெட்டுலேயும் முதலீடு செய்யப்பட்டிருக்கு. எப்படியோ பணம் வெளிய வந்து புழங்குதேங்கிறீங்களா? அது ரொம்பத் தப்புங்க.

எடக்கு மடக்கு - வங்கிகளே பிளாக்கை ஒயிட்டா மாத்தலாமா?

வங்கிங்க ஃபைனான்ஷியல் சிஸ்டத்தின் முதுகெலும்பு மாதிரி. அந்த முதுகெலும்பு வளைஞ்சு கொடுக்க ஆரம்பிச்சா கூன் விழுந்து பொருளாதாரம் தரை தட்டிடும். ஒயிட்டோ, பிளாக்கோ தங்கத்துல போடறதுல மட்டும் குறைவேயில்லீங்க. நிறையப் பணத்தை சின்ன மெட்டல் பார் மாதிரி மாத்திக்க முடியறதாலோ என்னவோ எல்லோரும் தங்கத்திலவேற முதலீடு பண்ணி அதை அதே பேங்கில லாக்கர் வாடகைக்கு எடுத்து பத்திரமா வைச்சிடறாங்க. நாம லாக்கர் கேட்டாத்தான் ஏதாவது காலியானாச் சொல்றேங்கிறாங்க. கேட்க வேண்டியவங்க கேட்டா எப்பவுமே காலியாத்தாங்க இருக்குது.

ஆனா ஒண்ணுங்க, வியாபாரத்துல பேங்குங்க கெட்டிதாங்க. ஏன்னா இந்தக் கறுப்பு வியாபாரத்திலேயும் நிறைய கமிஷன் கிடைக்கிற இன்ஷூரன்ஸ் பாலிசியை விக்கத்தான் முயற்சி பண்ணியிருக்காங்களே தவிர, குறைஞ்ச கமிஷனைத் தருகிற மியூச்சுவல் ஃபண்டை விற்க பெரிய முயற்சி ஏதும் பண்ணலே. ஒரு பேங்கர் உங்களுக்கு உகந்த மாதிரி ஒரு தொழில் மற்றும் வருமான விஷயங்களை நாங்களே ஜோடனை பண்ணித்தரோமுன்னு சொன்னாங்களாம். இன்னொரு பேங்கில அதுக்கு மேலே போய் வாடகைக்கு அக்கவுன்ட் பிடிச்சு அதுல உங்க பணத்தைப் போட்டு அதிலேயிருந்து முதலீடு பண்ணலாமுன்னாங்களாம்.

பேங்க் அக்கவுன்டை வாடகைக்கு விடறது நல்ல திட்டமா இருக்குங்களே! இன்க்ளூசிவ் பேங்கிங் அப்படீங்கிறதை ஒருத்தரோட கணக்குக்குள்ள இன்னொருத்தரோட பணத்தைப் போட்டுவைக்குறதுன்னு தப்பாப்

புரிஞ்சுக்கிட்டாங்களோன்னு கேட்கறீங்களா! ஏதாவது பேங்குல கணக்கைத் துவங்கிட்டு ஆபரேட் பண்ணாம இருந்தீங்கன்னா போய் உடனே பாருங்க. யாராவது பணத்தைக் கொண்டு வந்து போட்டு உருட்டி விளையாண்டுட்டாங்கன்னா கடைசியா நீங்கதான் மாட்டுவீங்க. பணத்தை உள்ளே கொண்டுவந்து வெளியே நேக்கா கொண்டுபோயிடுவாங்க. மணி லாண்டரிங்ல துணை போனதுக்காக நீங்க கோர்ட் கேஸுன்னு அலையவேண்டியிருக்கும்.

பி.எம்.எல்.ஏ. சட்டப்படி பணம் ஒருத்தருக்கு எங்கேயிருந்து வருது. சரியான சோர்ஸ் இருக்கா! சந்தேகப்படும்படி பணம் வருதான்னெல்லாம் பார்த்து அரசாங்கத்துக்குச் சொல்றதுக்கு பேங்க் கடமைப்பட்டிருக்கு. இப்படி பேங்குல இருக்கற ஆபீஸரே பணத்தை ஒளிச்சு வைக்க துணை போனா எங்களுக்குத் தெரியுமுன்னு விளம்பரம் போட்டுகிட்டு எதுவுமே தெரியாமல்ல இருந்துடுவாங்க.

பேங்குன்னாலே பயபக்தியோட நாமெல்லாம் செயல்படுவோமுங்க. காட்டுன இடத்துல எல்லாம் கண்ணை மூடிட்டு கையெழுத்தும் போட்டிடுவோங்க. அதெல்லாம் அந்தக் காலம். இப்ப எல்லாத்தையும் பார்த்து ஆராஞ்சு செய்யறதுதான் சிறந்ததா இருக்குது. லாபநோக்கு என்ற ஒன்றை மட்டுமே வச்சு பேங்குங்கச் செயல்படும்போதுதான் இப்படி மணி லாண்டரிங்-க்கு துணை போறது, வராதுன்னு தெரிஞ்சே கடன் கொடுக்கிறதுன்னு பல கோளாறுங்க நடக்குது. லாப நோக்கை குறைக்கிறதுக்கு அரசாங்கம் ஏதாவது

செஞ்சாப் பரவாயில்லீங்க. இல்லாட்டி வீட்டுல வந்து பணத்தை வாங்கிக்கிறோம். கவுன்டிங் மெஷினோட வர்றோமுன்னுகூட விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாங்க.

நிஜமான பேச்சோ, சில்லித்தனமான பேச்சோ பணம் புழங்குற இடத்துல அதிகாரிங்க இப்படிப் பேசுனா, ஏன் நினைச்சாக்கூட அது முதலுக்கே மோசமாயிடாதுங்களா? என்னவோ போங்க! மொத்தத்துல புது பேங்கு எதுவும் இப்போதைக்கு வரப்போறதில்லைங்கிறது மட்டும் தெளிவாத் தெரியுது. இல்லீங்களா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு