Published:Updated:

இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ்: நீளும் திவால் பட்டியல்..!

வா.கார்த்திகேயன்

இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ்: நீளும் திவால் பட்டியல்..!

வா.கார்த்திகேயன்

Published:Updated:

பிரச்னை

##~##

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகள் திவால் நிலையில் இருக்கும்போது, அந்தப் பட்டியலில் மேலும் ஒரு நாடு சேர்ந்து உலகப் பொருளாதாரத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்த நாடு, சைப்ரஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 11 லட்சம் மக்கள் வாழும் ஒரு நாடு; 25 பில்லியன் டாலர் அளவு மட்டுமே இருக்கும் ஒரு பொருளாதாரம்; ஐரோப்பிய யூனியனில் 0.2 சதவிகிதமே இருக்கும் இந்நாடு இப்போது திவாலிலிருந்து தப்பிக்கவேண்டு மெனில், இப்போது 10 பில்லியன் யூரோ தேவை.

2008-க்கு முன்பு, சைப்ரஸ் நல்ல வளர்ச்சி விகிதத்தில்தான் இருந்தது. (எல்லா நாடுகளுமே அப்போது அப்படி ஒரு தோற்றம் தந்தது என்பது வேறு விஷயம்!). கிரீஸில் பிரச்னை ஏற்பட்டபோது, சைப்ரஸ் நாட்டின் இரண்டு வங்கிகள் பெருமளவு கடன் தந்தன. இந்தப் பணம் இப்போது திரும்பி வரவில்லை. அப்படித் தந்த பணம் சைப்ரஸின் ஜி.டி.பி.யில் 160 சதவிகிதம். இவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று சைப்ரஸ் பார்த்த போதுதான், வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து வைத்திருந்தப் பணம் கண்ணில்பட்டது. அதாவது, 20,000 யூரோ - ஒரு லட்சம் யூரோ வரை வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் களுக்கு 6.75 சதவிகித வரியும், 1 லட்சம் யூரோவுக்கு மேல் இருக்கும் டெபாசிட்களுக்கு 9.9 சதவிகிதம் வரியும் விதித்தது சைப்ரஸ் அரசாங்கம். இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ்: நீளும் திவால் பட்டியல்..!

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு இதைவிட பெரிய அதிர்ச்சி ஏதாவது இருக்க முடியுமா? ஏற்கெனவே வரி கட்டிய பிறகுதான் பணத்தை டெபாசிட் செய்திருப்பார்கள். அந்தத் தொகைக்கும் வரி கட்டவேண்டும் என்றவுடன் சைப்ரஸ் மக்கள் அனைவரும் அடுத்த நிமிடமே ஏ.டி.எம். வாசலில் குவிந்து, பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கமோ 400 யூரோவுக்கு மேல் பணம் எடுக்கமுடியாது என திடீர் உத்தரவு பிறப்பித்தது. அப்படி இருந்தும்கூட சில மணி நேரத்தில் வங்கியில் இருக்கும் பணம் தீர்ந்துபோனது. இதனால் கடுப்பான மக்கள் ஏ.டி.எம். மெஷினைப் போட்டு உடைத்தனர். இதனால் உருவான களேபரத்தைத் தவிர்க்க, கடந்த வெள்ளிக்கிழமை வரை எல்லா வங்கிகளுக்கும் அவசர விடுமுறை விட்டது சைப்ரஸ் அரசாங்கம்.

இப்போதைக்கு அந்நாட்டின் கடன்-ஜி.டி.பி. விகிதம் 127 சதவிகிதமாக இருக்கிறது. (நம் நாட்டில் இந்த விகிதம் 65 சதவிகிதம் இருக்கும் போதே முழிபிதுங்கித் தவிக்கிறோம்!) இந்த விகிதத்தை இந்த வருட இறுதிக்குள் 100 சதவிகிதமாக குறைக்க முடிவெடுத்துதான் சைப்ரஸ் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியதாகச்  சொல்லப்படுகிறது.

பல்வேறு வழிகளில் பணத்தைத் திரட்ட வழி இருக்கும்போது, ஏன் டெபாசிட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.

அதற்கும் காரணம் இருக்கிறது. மொரிஷியஸ் போல, சைப்ரஸ் நாடு ஒரு 'டாக்ஸ் ஹெவன்’ நாடு. (கறுப்புப் பணத்தை இங்கு கொண்டுபோய் அங்கிருந்து வெள்ளையாக்கி நம்மூருக்குக் கொண்டுவந்து விடலாம்!) பல நாடுகளுடன் இந்நாட்டுக்கு வரி விலக்கு ஒப்பந்தம் இருக்கிறது. இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்களுக்குகூட சைப்ரஸ் நாட்டில் இருந்து முதலீடு வந்திருக்கிறது.

இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ்: நீளும் திவால் பட்டியல்..!

சைப்ரஸ் நாட்டில் முதலீடு செய்யும்போது வரிச் சலுகை இருப்பதினால் அதிகளவு முதலீடு சைப்ரஸ் நாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவில் இருந்து மட்டும் 30 பில்லியன் டாலர் மு தலீடு வந்திருக்கிறது. தவிர, மற்ற நாடுகளின் முதலீடுகளும் இருக்கிறது. அதனால் டெபாசிட் களுக்கு வரி விதிக்கும்போது 5.8 பில்லியன் யூரோவை வசூலிக்க முடியும். இந்தச் செய்தி கேள்விபட்டவுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சைப்ரஸின் இந்த நடவடிக்கையைக் கண்டித்ததோடு, இது நீதிக்குப் புறம்பானது என்று விமர்சித்தார்.

ஆனால், அரசின் இந்நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தியபோது அது தோல்வியில்  முடிந்தது. அதனால் இப்போதைக்கு வங்கி டெபாசிட்களுக்குப் பாதிப்பு இல்லை. இந்தப் பிரச்னை பற்றி மும்பையில் இருக்கும் அனலிஸ்ட்களிடம் பேசியபோது, இந்தப் பிரச்னை பெரிய அளவில் பாதிக்காது என்று அவர்கள் சொன்னாலும், இரண்டு விஷயங்களைக் கவனிக்கவேண்டியிருக்கிறது என்றார்கள்.

முதலாவது, ஐரோப்பிய யூனியன் பிரச்னை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இரண்டாவது, வங்கி டெபாசிட்களில் கைவைப்பது என்பது கொஞ்சம் அதிர்ச்சியான, அதேசமயம் ஒரு மோசமான முன்மாதிரி முடிவாக அமைந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்றார்கள்.

அதேசமயம், வங்கி டெபாசிட் களுக்கு வரி விதிப்பதை ஜெர்மனி ஒப்புக்கொண்டிருக்கிறது. சைப்ரஸ் பிரச்னைக்கு அந்நாட்டு வங்கித் துறை முன்வரவேண்டும் என்று கூறியுள்ளது. ரஷ்யாவையும் ஒப்புக்கொள்ள வைக்கும்விதமாக அதனோடு பேசி வருகிறது. ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடனுக்கான (2.5 பில்லியன் யூரோ) காலத்தை நீட்டித்து கேட்டிருப்பதோடு, வட்டியையும் குறைக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன் என்கிற சிந்துபாத் கதை எப்போது, எப்படி முடியுமோ தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism