Published:Updated:

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

வா.கார்த்திகேயன்.

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

வா.கார்த்திகேயன்.

Published:Updated:

அலசல்

##~##

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் கார் ஒன்றினை வாங்கவேண்டும் என்றால் ஆறு மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்து காத்திருக்கவேண்டும். கேட்ட கலர் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு..? அதே காரை கேட்டவுடனே கிடைக்கிறது; விரும்பிய கலரில், அதுவும் தள்ளுபடியோடு. காரணம், கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை வெகுவாகக் குறைந்து வருவதுதான். ஏதாவது ஒரு பிரிவு என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக அனைத்து வாகனங்களின் விற்பனையும் சரிந்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த பன்னிரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு சிறிய வகை கார்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் குறைந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரியைவிட இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாகனங்களின் விற்பனை சுமார் 25 சதவிகிதம் குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக (அனைத்து பிரிவுகளையும் சேர்த்து) பார்த்தாலும், கடந்த பிப்ரவரியைவிட இந்த பிப்ரவரியில் விற்பனை 5.4 சதவிகிதம் சரிவடைந்திருக்கிறது.

என்ன காரணம் ?

ஆட்டோ துறையின் விற்பனை குறைய பல காரணங்கள் இருக்கிறது. அவை இனி:

* மக்களின் சேமிப்பு குறைந்துகொண்டே வருகிறது. பணவீக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக அத்தியாவசியத் தேவைகளுக்கே அதிக செலவு செய்யவேண்டி இருப்பதால் சேமிக்க முடியவில்லை. சேமிக்க முடியாததால் இதர விஷயங்களில் கவனம்செலுத்த முடியவில்லை.

* பணவீக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்திகொண்டே வந்தது. பெரும்பாலான வாகனங்களின் விற்பனை, அதற்கு கிடைக்கும் கடன்களைப் பொறுத்துதான் இருக்கும். அதிக வட்டி கொடுத்து வாகனங்களை வாங்க இப்போது யாரும் நினைப்பதில்லை.

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

* அடிக்கடி உயரும் பெட்ரோல், டீசல் விலை; பட்ஜெட்டில் கார்களுக்கு அதிக வரி விதித்தது உள்ளிட்ட சில காரணங்களால் புதிதாக வாகனம் வாங்கவேண்டும் என்று நினைப்பவர்களைகூட யோசிக்க வைத்திருக்கலாம்.

இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும், இனி விற்பனை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லை, ஆட்டோமொபைல் துறை ஓர் உச்சத்தை அடைந்துவிட்டதா என்ற கேள்விகளோடு ஹுண்டாய் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் சேதுராமனிடம் பேசினோம். பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''ஆட்டோமொபைல் துறை இன்னும் உச்சத்தை அடையவில்லை. இப்போது இருப்பது ஒரு தேக்கநிலைதான். ஆனால், இப்போதுகூட அதிக விலை உள்ள கார்களின் விற்பனையில் பெரிய பாதிப்பு இல்லை. இந்திய கார் சந்தை என்பது சிறிய கார்களின் சந்தைதான். ஓர் உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமானால், 1,000 இந்தியர்களில் 10-க்கும் குறைவானவர்களே கார் வைத்திருக்கிறார்கள். ஆனால், உலகின் வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். அதனால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு சில விஷயங்களை அரசிட மிருந்து எதிர்பார்க்கிறோம். அப்படி செய்யும்போது கார்களுக்கான டிமாண்ட் உயரும்.

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

சில நாட்களுக்கு முன்பு வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது கூட போதாது. இன்னும் கொஞ்சம் வட்டியைக் குறைத்தால்தான் பலர் கார் வாங்க வருவார்கள். மேலும், இப்போதைக்கு இந்தியாவில் ஓடும் கார்களில் சுமார் 40 சத விகிதமானவை பத்து வருடங்களுக்கு மேல் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பவை.  அதிகம் பயன்படுத்தப்பட்ட கார்களால் பாதுகாப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. அதிக எரிபொருள் செலவு,  காற்று மாசுபடுவது போன்ற பிரச்னைகளும் வரும். அதனால் பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் கார்களை மாற்றுவதற்கு ஒரு புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்கி சில சலுகைகள் தரும்பட்சத்தில் கார்களுக்கான டிமாண்ட் உயரும். உதாரணத்துக்கு எக்ஸைஸ் வரி மற்றும் வாட் வரியில் சில சலுகைகளை கொடுக்கும்போது கார்களுக்கான தேவை

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

அதிகரிக்கும்.

மற்ற நாடுகளில் கார்களை மாற்றுவதற்கும், கார்களை ஸ்கிராப்பாக மாற்றுவதற்கும் கொள்கைகள் இருக்கிறது. அதுமாதிரியான கொள்கை எதுவும் நம் நாட்டில் இல்லை. வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை தருவதுபோல கார் கடன்களுக்கும் வரிச் சலுகை தரும்பட்சத்தில் கார்களின் விற்பனை அதிகரிக்கும். வீடு என்பது எல்லோருக்கும் அத்தியாவசியம். ஆனால், கார் என்றால் அப்படியில்லையே என சிலர் கேட்கிறார்கள். காரை சொகுசுப் பொருளாக நினைத்த காலம் மாறி வருகிறது. கார் என்பது இப்போது ஓர் அத்தியாவசிய தேவையாக மாறிவருகிறது.

நகரமயமாக்கல் காரணமாக நகரங்களின் எல்லைகள் விரிவடைந்துகொண்டே இருப்பதால், பொதுப் போக்குவரத்தினை நம்பி இருக்க முடியாது என்றே பலரும் நினைக்கின்றனர். முன்பு தாம்பரம் என்பது புறநகர். இப்போது அங்கிருந்து பல கிலோ மீட்டர் நகரம் சென்றுவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஆடம்பரப் பொருளாக இருந்த டி.வி., குளிர்சாதனப் பெட்டி, செல்போன் போன்றவை இன்று அத்தியாவசியமாக மாறியிருப்பதுபோல, கார்களும் அத்தியாவசியமாக மாறும் காலம் வந்துவிட்டது'' என்றார்.

ஆட்டோமொபைல் துறையின் வேகம் குறைந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், வேகம் இன்னும் குறையுமா, இல்லை கூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்போம்.

ஆட்டோ பங்குகள்: வாங்கலாமா?

ஆட்டோ துறை...உஷார், வேகம் குறைகிறது!

விற்பனைச் சரிவு காரணமாக ஆட்டோமொபைல் துறை பங்குகள் கடுமையாகச் சரிந்திருக்கிறது. இச்சூழ்நிலையில் ஆட்டோ துறை பங்குகளில் முதலீடு செய்யலாமா என்பது குறித்து சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்டின் செயல் இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

''மற்ற துறைகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை இருக்கும். மேலும், பணவீக்கம், வட்டி அதிகம் போன்றவை காரணமாக இந்தத் துறை நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பருவமழையின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இந்தத் துறையின் எதிர்காலத்தைச் சொல்ல முடியும். மழை நன்றாக இருக்கும்போது, உணவுப்பொருட்களின் விலை குறையும். பணவீக்கம் குறையும். வட்டி விகிதம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அப்போதுதான் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை அதிகரிக்கும். அதனால் பருவமழை எப்படி இருக்கிறது என்பது தெரியாதவரை ஆட்டோ துறையின் பங்குகளைத் தவிர்ப்பதே நல்லது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism