ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

சொக்கலிங்கம் பழனியப்பன்

தானம்

##~##

இன்றைய பிஸினஸ் உலகம் ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறது. அது, இத்தனைநாளும் இந்தச் சமுதாயத்தை வைத்து சம்பாதித்த நாம், இனி அதற்கு என்ன திருப்பித் தரப் போகிறோம் என்பதே. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்ல, தனிமனிதர்களும் தம்மை வளர்த்த சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்ய நினைப்பது பாசிட்டிவ்-ஆன டிரெண்ட்.

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது என்றால் என்ன? இது கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் பணக்காரர் களுக்கு மட்டுமானதா? இல்லை, சாதாரண மனிதர்களும் தம்மை வளர்த்து ஆளாக்கிய சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்ய முடியுமா? என்கிற கேள்விகள் பலர் மனதிலும் இருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கு இனி விடை காண்போம்.

நாம் ஒவ்வொருவரும் இன்று மனிதனாக வாழ்வதற்கு, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும், அமைப்புகளும், அரசாங்கங்களும், சூழ்நிலைகளும் ஏதோ ஒருவகையில் உதவியாக இருந்திருக்கிறது. இதற்கு ஒரு கைமாறாக  இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்வதுதான் இது.

நம் முன்னோர்கள் இதை தான தர்மம் என்றார்கள். தான தர்மம் நமக்குப் புதிதல்ல, அன்னதானம் வழங்குவதிலிருந்து, சுமைதாங்கிக் கல் வைப்பது, ஊரணி/குளம் மற்றும் கோயில் கட்டுவது வரை, கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பது வரை நம்மவர்கள் செய்த தான தர்மம் எவ்வளவோ. அது இன்றைக்கும் தொடர்ந்தாலும், அதையும் தாண்டி நாம் சமுதாயத்திற்கு செய்யவேண்டியது நிறையவே இருக்கிறது.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் சமுதாயத்திற்கு பெரிய அளவில் திருப்பித் தருவது என்பது இன்றைய தேதியில் குறைவுதான். மாறாக சமுதாயத்திற்கு திருப்பித் தருகிறோம் என்று சொல்லி, டிரஸ்ட்களை நிறுவி அதன்மூலம் (வருமான வரி கூடச் செலுத்தாமல்) பணம் சம்பாதிப்பது நமது சமுதாயத்தில் சிலருக்கு வழக்கமாகிவிட்டது. வெகு சில தனியார் கல்லூரிகள் உண்மையான டிரஸ்ட்களாகச் செயல்பட்டாலும், பல தனியார் கல்லூரிகள் தங்கள் சொந்த லாபத்திற்கே இதை பயன்படுத்துகின்றன.)

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

நம் நாட்டில், தான் சம்பாதித்தச் சொத்து அனைத்தும் தங்கள் குழந்தைகளுக்கே போய்ச் சேரவேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதில் தவறு ஏதுமில்லை என்றாலும், பணம் படைத்தப் பெரும் பணக்காரர்கள் அதையும் தாண்டி யோசித்துச் செயல்படவேண்டும். இந்தச் சமூகம் இல்லாமல் அவர்களால் அவ்வளவு செல்வத்தை ஈட்டியிருக்க முடியாது. ஆகவே, அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு திருப்பித் தர கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர் களில் சிலர் இதற்காக முன்வந்துள்ளார்கள். அஸீம் பிரேம்ஜி, சிவ்நாடார் மற்றும் டாடா குழுமத்தை இதற்கொரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். (பார்க்க பெட்டிச் செய்தி!) இவர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்கள் சமுதாயத்திற்கு நிறையவே திருப்பித் தரலாம். ஆனால், நடுத்தர வர்க்கத்து மக்களாகிய நாங்கள் இந்தச் சமுதாயத்திற்கு எப்படி திருப்பித் தருவது என்று கேட்கிறீர்களா? அதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு/ உயிர் காப்பீடு எடுத்துக்கொள்வது இந்தச் சமுதாயத்திற்கு உதவி செய்வதாக இருக்கும். நமக்குத் தேவைப்படாதபோது, பிறருக்கு அந்தப் பணம் பெரிய உதவியாக இருக்கும்.  மேலும், பலர் காப்பீடு எடுப்பதால் காப்பீட்டு பிரீமியமும் குறைகிறது.

அரசாங்கத்திற்கு வருமானம், வரியை வைத்துதான். ஒளிவுமறைவு இல்லாமல் நாம் ஒவ்வொருவரும் வரியைச் செலுத்தினால் அது இந்நாட்டின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். உரிய வரியைச் செலுத்துவதன் மூலம் இந்தச் சமுதாயத்திற்கு நீங்கள் பெற்றதில் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை.

பல பொதுஇடங்களில்/ நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் கடமை/தொண்டு உணர்வுடன் செயல்பட்டு லஞ்சம் வாங்காமல் செயல்பட்டால், அதுவே நம் சமுதாயமும் நாடும் வளர்வதற்கு பெரிய உறுதுணையாக இருக்கும்.

அதேபோல் தரமான சேவையை நியாயமான விலையில் அல்லது குறைந்த லாபம் வைத்து செயல்படுத்தும்போது உங்களின் தொழில் மூலமே நீங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்கிறீர்கள். நாராயண ஹிருதாலயா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இச்செய்கைக்கு உலகளவில் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

பணம் அல்லது பொருள் கொடுத்தால்தான் சமுதாயத்திற்கு நாம் கொடுப்பதுபோல் ஆகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதைவிட முக்கியம் நேரம்தான். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியாததைச் சொல்லிக் கொடுப்பது, கல்வி கற்றுத் தருவது, வயதானவர்களிடம்/ நோய்வாய்ப்பட்டவர்களிடம் அன்பு செலுத் துவது, வேலை தேடுபவர்களுக்கு வேலை இருக்கும் இடத்தில் தொடர்பு ஏற்படுத்திக்கொடுப்பது, வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு வழியைச் சொல்வது, தமது அறிவை பிறரிடம் பகிர்ந்துகொள்வது போன்ற அனைத்தும் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுப்பதில் அடக்கம்.

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

நேரமும் விஷயஞானமும் உண்டு என்கிறவர்கள் தரமான தொண்டு நிறுவனங்களோடு கைகோத்து இந்தச் சமுதாயத்திற்கு உதவலாம். இதற்கு நல்லதொரு உதாரணம், நந்தன் நிலகேனி (இன்போஃசிஸ் நிறுவனர்களில் ஒருவர்). பணம் இருந்தபோதும், அதனாலேயே அனைத்து நல்ல காரியங்களையும் செய்துவிட முடியாது என்று நினைத்து, ஆதார் அட்டையை விநியோகிப் பதற்காக யூ.ஐ.டி.ஏ.ஐ-வின் தலைவராகச் செயல்பட்டு, இந்தச் சமுதாயத்திற்கு திருப்பித் தந்து வருகிறார்.

இப்படி இன்னும் எத்தனையோ வழிகளில் இந்தச் சமுதாயத்திற்கு நீங்கள் உதவ முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்களை ஆளாக்கிய சமுதாயத்திற்கு எப்படி உதவலாம் என்பது உங்களுக்கே புரியும்.

 டாடா முதல் பிரேம்ஜி வரை !

டாடா டிரஸ்ட்கள்;

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

140 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நியாயமான முறையில் தொழில் செய்துவரும் டாடா நிறுவனங்கள் அனைத்திற்கும் ஹோல்டிங் கம்பெனியாக இருப்பது டாடா சன்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பாகம்(66%) பங்குகளுக்குச் சொந்தக்காரர் டாடா டிரஸ்ட்கள் ஆகும். டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து தங்களுக்குக் கிடைக்கும் பங்கு லாபத்தை கல்வி, மருத்துவம், கிராமப்புற வசதிகள், ஆராய்ச்சி மற்றும் பல தொண்டுகளுக்காகத் தொடர்ந்து செலவிடுகின்றனர். உலகளவில் இதுபோன்ற ஒர் அமைப்பைப் பார்ப்பது அரிது. நாம் விலைக்கு வாங்கும் டாடா உப்பில், டாடா குழுமத்திற்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி நமக்கே (சமுதாயத்திற்கு) திருப்பி வருகிறது என்பதை நினைக்கும்போது நமக்குப் பெருமையாக இருக்கிறது.

சிவ்நாடார்;

ஹெச்.சி.எல். நிறுவனரான சிவ்நாடார் உலகளவில் 182-வது பணக்காரர். அவரது சொத்து மதிப்பு ரூ.35,000 கோடி. சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என். டிரஸ்ட் (சிவ சுப்ரமணிய நாடார் டிரஸ்ட்) உண்மையிலேயே உயரிய நோக்கத்துடன் நடத்தப்படும் டிரஸ்ட் ஆகும். இதுவரை ரூ.1,800 கோடி ரூபாய் டிரஸ்ட்டிற்காகத் தந்துள்ளார். தற்போது மிகப் பெரிய அளவில் சிவ்நாடார் பல்கலைக்கழகத்தை டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் (உத்தரப்பிரதேசம்) நிறுவி உள்ளார். 2010-ம் ஆண்டு ஒரு பில்லியன் டாலர் (ரூ.5,400 கோடி) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கல்விக்காக நன்கொடை செய்வதாக உறுதியளித்துள்ளார். அந்த நன்கொடைக்குள் பல்கலைக்கழகமும் அடக்கம்.

அஸீம் பிரேம்ஜி;

ஐ.டி. நிறுவனமான விப்ரோவின் தலைவரான இவர், உலக அளவில் 91-வது பணக்காரர். இவரது சொத்து மதிப்பு ரூ.60,000 கோடி. இந்தியாவில், ஏன் ஆசியாவிலேயே அதிகளவு கொடை கொடுத்துள்ளார். இவர் அஸீம் பிரேம்ஜி பவுண்டேஷன் என்ற அமைப்பை நிறுவி, பல்கலைக்கழத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் முக்கிய அம்சம் கல்வி. தவிர, சமுதாயத்திற்கு தேவையான சுகாதாரம், சுற்றுப்புறச்சூழல், சத்துணவு போன்ற துறைகளிலும் தனது கவனத்தைச் செலுத்துகிறது.

இந்த அமைப்பைத் தொடங்கும்போது விப்ரோ நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான ரூ.675 கோடி (இன்றைய மதிப்பில்) பங்குகளைத் தந்தார். மூன்று வருடத்திற்கு முன்பு கிட்டத்தட்ட ரூ.10,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பங்குகளை அமைப்பிற்கு கொடையாக மாற்றினார். கடந்த பிப்ரவரியில் ரூ.12,000 கோடி மதிப்பிற்கான தனது பங்குகளை அமைப்பிற்கு மாற்றுவதாக கூறியுள்ளார்.

 திருப்பித் தரும் அமெரிக்கர்கள்!

பில்கேட்ஸ்;

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தின் சொந்தக்காரரான பில்கேட்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,61,000 கோடி. 2006-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து வெளியேறி, பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்தை நடத்துவதை தனது முழுநேர பொறுப்பாக எடுத்துக்கொண்டார். உழைப்போடு தங்கள் செல்வத்தில் பாதியைத் தர முன்வந்துள்ளனர். இந்த அமைப்பு உலகளவில் வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

வாரன் பஃபெட்;

சமுதாயத்திற்கு திருப்பித் தருவது: நீங்களும் செய்யலாம் !

சர்வதேச முதலீட்டு சூப்பர் ஸ்டாரும் உலகின் நான்காவது பெரிய பணக்காரரும் ஆன வாரன் பஃபெட், தனது 2.89 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பில் ரூ.1,67,000 கோடி மதிப்புள்ள பங்குகளை பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்துக்குத் தானமாகத் தந்துள்ளார்.  இவரே சமுதாயத்திற்கு நேரடியாகத் திருப்பித் தராமல் பில் அண்ட் மெலின்டா கேட்ஸுடன் கைகோத்து செயல்பட்டு வருகிறார். பெரும் பணக்காரர்கள் தங்களால் முடிந்ததை இந்தச் சமுதாயத்திற்கு திருப்பித் தரவேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறார்.