ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

எடக்கு மடக்கு - போஸ்ட் ஆபீஸை ஒழிச்சுக் கட்டியிராதீங்க !

எடக்கு மடக்கு - போஸ்ட் ஆபீஸை ஒழிச்சுக் கட்டியிராதீங்க !

##~##

கோடை விடுமுறை வந்தாச்சுங்க. இந்தக் காலத்து குழந்தைங்க லீவுல வீடியோ கேமே கதின்னு கெடக்குது. நான் சின்னப்பயலா இருந்தப்ப கிரவுண்டுலதான் விளையாடுவேன். ஆனா, பகல் 12 மணியானா வீட்டுக்கு வந்துடுவேன். அதிகபட்சம் போஸ்ட்மேன் வந்துபோறதுக்குள்ளயாவது வந்துடணும். இல்லாட்டி மரியாதைக் கெட்டுடும்.

அதெப்படி உங்க வீட்டுக்குத் தினமும் போஸ்ட்மேன் வருவாருங்கிறீங்களா! லெட்டர் வந்தாத்தான் போஸ்ட்மேன் வரணுமுன்னு இல்லீங்களே! அன்னாடம் அந்த ரோட்டுல வர்றப்ப எங்க வீட்டுக்கு வந்துட்டுத்தான் போவாருங்க. வராண்டால உட்கார்ந்திருக்கிற தாத்தாகிட்ட, 'என்ன தாத்தா, நல்லா இருக்கீங்களா?’ன்னு  பேசாமப் போகமாட்டாரு. 'நாளைக்கு வரமாட்டேன்’னு போஸ்ட் மாஸ்ட்டருக்கிட்ட லீவு சொல்றாரோ இல்லியோ, தாத்தாகிட்ட சொல்லிடுவாரு. ஏன்னா, 12.30 மணியாச்சுன்னா, போஸ்ட்மேனைக் காணோமுன்னு தாத்தா தவிச்சுப் போயிடுவாரேங்கற பாசம்தான்.

அட, தந்திகூட போஸ்ட் ஆபீஸ் வழியாத்தான் வந்து போயிட்டு இருந்துச்சு. அண்ணனுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைச்சுடுச்சுன்னப்ப சந்தோஷமான தந்தி டெலிவரி, ஊரில மாமா செத்துப்போயிட்டாருன்ன மெசேஜ் வந்தப்ப சோகமான தந்தி டெலிவரின்னு மெசேஜைக் கொண்டுவர தூதுவரோட முகத்தை வைச்சே மெசேஜோட சாராம்சத்தைக் கண்டுபுடிச்சிடலாம்.

பையன் வேலைக்குப் போயிட்டா மணியார்டர் வருமான்னு ஆவலாக் காத்திருக்கிற தாய்/தகப்பனுக்கு இன்னைக்கு வரல; நாளைக்கு வந்துடுமுன்னு நம்பிக்கை கொடுத்துச் செல்லும் தூதரும் அவருதான்.

'என்ன ஏகாம்பரம், ஒரே பழைய ஞாபகத்துல மூழ்கிட்டியே!’ன்னு கேக்குறீங்களா? ஆமாங்க, போஸ்ட் ஆபீஸை பேங்கா மாற்றப்போறோமுன்னு கிளம்பி யிருக்காங்களே, அதனாலதாங்க இந்தப் பழைய நினைப்பு. பாசக்கார டிப்பார்ட்மென்ட் ஆச்சுங்களே! நெனைச்சுப் பார்க்காம இருக்க முடியுமா?

எடக்கு மடக்கு - போஸ்ட் ஆபீஸை ஒழிச்சுக் கட்டியிராதீங்க !

போஸ்ட் ஆபீஸுங்கிறது எவ்வளவு பெரிய நெட்வொர்க். நாட்டோட இண்டுஇடுக்கு சந்துபொந்துலெல்லாம் ஆபீஸ் வச்சு, ரோடுரோடா கலெக்ஷனுக்கு பாக்ஸ் வச்சு இருக்குற நிறுவனம். அப்படி பரந்துவிரிஞ்சு இருந்ததாலத்தான் ஜனங்களோட வாழ்க்கையில பின்னிப்பிணைஞ்ச ஒரு முக்கிய அங்கமாத் திகழ்ந்துச்சு.

போஸ்ட் அண்ட் டெலிகிராப்ஸ் டிபார்ட்மென்ட் அப்படீன்னு பேரு அதுக்கு. கொரியர் சர்வீஸ் ஆரம்பிச்சவுடனேயே போஸ்ட் ஆபீஸோட மகிமை கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது. அப்புறமா பேஜர், இ மெயில், செல்போன், எஸ்.எம்.எஸ்.ன்னு வந்தவுடனே பல பேருக்கு போஸ்ட் ஆபீஸுன்னு ஒண்ணு இருக்கறதே மறந்துடுச்சு. இன்னைக்கு கோர்ட் கேஸ் தபாலு, வக்கீல் நோட்டீஸுன்னு சில தவிர்க்க முடியாத அரசு அத்தாட்சிக்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுற விஷயமா ஆயிடுச்சு இந்த போஸ்ட் ஆபீஸ்.

எடக்கு மடக்கு - போஸ்ட் ஆபீஸை ஒழிச்சுக் கட்டியிராதீங்க !

இந்த மாறுதலெல்லாம் என்ன ஒரே நாளிலயா நடந்துச்சு? கிட்டத்தட்ட முப்பது வருஷ காலத்துல நடந்த மாறுதல் இது. கொரியர் வந்து, பேஜர் வந்து, இன்டர்நெட் பேஸ்டு

இ மெயில் வந்து, செல்போன் வந்து, மெசேஜிங் பாப்புலராய் மாறி, சட்டைப் பைக்குள்ள இன்டர்நெட் கனெக்ஷன் வந்துன்னு பல காலகட்டத்துல நடந்த விஷயங்கள் இது.

இந்த முப்பது வருஷமா போஸ்ட் ஆபீஸ் பிஸினஸ் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வந்துச்சு. ஒரு பிஸினஸ் டெக்னாலஜி மாறுதலால குறையுதுன்னா, அதை நடத்துறவங்க என்ன செய்யணும்? ஒண்ணு, உடனடியா டெக்னாலஜிக்கு ஏத்தாப்போல அதை மாத்தி அமைக்க முயற்சிக்கணும். அதுமாதிரி செய்ய முடியலைன்னா, அந்த லைன் ஆஃப் பிஸினஸையே படிப்படியா குறைச்சு முடிச்சுடணும்.

'ஏகாம்பரம், போஸ்ட் ஆபீஸ்ல நிறையபேர் வேலை பாக்குறாங்க. அதுக்குப் பெரிய நெட்வொர்க் இருக்கு. அதை எப்படியாவது பயன்படுத்திக்கணுமே ஒழிய, எடுத்தோம் கவுத்தோமுன்னு மூட முடியாதுல்லே’ன்னு நீங்க கோபப்பட்டுக் கேட்குறது எனக்குத் தெரியுது.

வாஸ்தவம்தான், நீங்கச் சொல்றது. நெட்வொர்க் பெருசு. நிறையபேர் வேலை செய்றாங்க. சின்னச் சின்ன ஊரில எல்லாம் யாரு இருக்கா, யாரு இல்ல, யாருக்கு யாரு சொந்தக்காரங்க, பிறப்பு, இறப்பு, நல்லது கெட்டதுன்னு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிற நடமாடும் டேட்டா பேங்குன்னா அது போஸ்ட் ஆபீஸுல இருக்கறவங்கதானே!

அவங்களுக்கு என்ன மாதிரி வேலை கொடுத்தா, திறமையாச் செய்வாங்கன்னு யோசிச்சு அதுக்கு ஏத்த மாதிரி கொடுக்கணும். அதைவிட்டுட்டு வெளிநாட்டுல எல்லாம் போஸ்ட் ஆபீஸுங்க பேங்கா மாறியிருக்கு. அதனால நம்ம நாட்டிலேயும் செஞ்சிடலாம்னு கௌம்புனா, குருவி தலையில ஆர்.டி.எக்ஸ்.  குண்டை வைக்கிற மாதிரி ஆயிடுங்க.  

பேங்க் நடத்தறது என்ன அவ்வளவு சுலபமான விஷயங்களா? இதுவரைக்கும் சேமிப்புத் திட்டதுக்குப் பணத்தை வசூல் பண்ணி அரசாங்கத்துக்கிட்ட குடுத்துச்சுங்க போஸ்ட் ஆபீஸ். அரசாங்கம் வட்டியோட திருப்பி டாண் டாண்ணு கொடுத்துக்கிட்டிருக்கு. பேங்க்கா மாறினா, அரசாங்கத்துக்கு மட்டுமா தரவேண்டியிருக்கும்? அல்வா கொடுக்கற நிறுவனங்களுக்குமில்ல தரவேண்டியிருக்கும்!

பரம்பரை பரம்பரையா பேங்க் நடத்துற எஸ்.பி.ஐ. மாதிரி பேங்கருங்ககிட்டயே டகால்டி வேலையைக் காட்ற தனியார் நிறுவனங் கள், பாசக்கார போஸ்ட் ஆபீஸ் பேங்கா மாறிடுச்சுன்னா, கிடைச்சுட்டாண்டா ஒரு பாசக்கார அடிமைன்னு புகுந்து புறப்பட்டு கடனை வாங்கிட்டு பை பை-ன்னு சொல்லிட்டா என்னவாகுறதுங்க? இடமும் ஆளும் இருக்குதுங்கறதுக்காக எல்லாரும் பேங்க் ஆரம்பிச்சுட முடியாதுங்க. அப்புறம் எதுக்கு பேங்க் லைசென்ஸ் கொடுக்க எக்கச்சக்கமா ரிசர்வ் பேங்க் கண்டிஷன் போடுது?

பேங்கிங்ன்றது ஒரு ரிஸ்க் புடிச்ச வியாபாரம். போஸ்ட்ங்கிறது ஒரு ரிஸ்க்கேயில்லாத சர்வீஸை கொடுக்கிற நிறுவனம். அதுல வேலை பார்க்குறவங்களைக் கொண்டுபோய் ரிஸ்க் அதிகமுள்ள தொழிலில தள்ளிவிட்டா எப்படிங்க? அவங்க பயந்துபோய் யாருக்குமே கடனே தராம டெபாசிட்க்கு வட்டி மட்டும் தந்தா நஷ்டம்தான் வரும். பயமே இல்லாம, எல்லாருக்கும் பணத்தை அள்ளி கடனா தந்து,  அது அத்தனையும் வாராக்கடனா மாறினாலும்  நஷ்டம்தான் வரும்.

எந்த வகையில நஷ்டம் வந்தாலும் நஷ்டப்படப் போறதென்னவோ வரி கட்டுற ஜனங்கதானே! அதனால பேங்க் ஐடியாவையெல்லாம் வுட்டுடுங்க. போஸ்ட் ஆபீஸ் பலவிதத்துல ஸ்பெஷல் தன்மையான குணம்கொண்டது. அதுல எது அரசாங்கத்துக்கு மிகவும் தேவைப்படுதோ அல்லது அதுல எது மக்களுக்குத் தேவைப்படுதோ அதை விரிவாக்கி ரிஸ்க் குறைவான தொழில் பக்கம் அதை திருப்பி விடுங்க. அதை விட்டுட்டு எம்டன்ககிட்டயே ஆட்டையப்போடுற அளவுக்கு ரிஸ்க் இருக்குற பேங்கிங் தொழிலுக்குப் போகச் சொல்றீங்களே, அது ரொம்பத் தப்பு. வள்ளுவரு சொல்லியிருக்காருங்களே! அதனை அவன் கண் விடலுன்னு. உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா. பட்ஜெட் பேச்சுல அவரு சொன்னதைச் சொல்லித்தானே முடிக்கிறீங்க! முன்னேத்தம் கொண்டுவர முடியல்லேன் னாலும் பரவாயில்லை, போஸ்ட் ஆபீஸை ஒழிச்சுக்கட்டியிராதீங்க!

படம் : ஆ.முத்துக்குமார்

 திருத்தம்; உங்கள் சரியான மார்க்...

கடந்த இதழில் பிரசுரமான நீங்கள் செலவாளியா, சேமிப்பவரா? உங்களை உஷார் படுத்தும் டெஸ்ட்... கட்டுரையில் பக்கம் 10-ல் உள்ள 'உங்கள் மார்க்...’ பத்தியில் மதிப்பெண் - முடிவு வரிசை தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. 20-க்கும் கீழே இருந்தால் கருமி,  21 - 30 எனில் கஞ்சன்,  31 - 40 எனில் சேமிப்பவர், 41 - 50 எனில் தாராளமனமுடையவர், 51 - 60 எனில் செலவாளி,  61 - 70 ஷோக்குப் பேர்வழி, 71 - 80 எனில் ஊதாரி என திருத்தி உங்களை மதிப்பிட்டுக்கொள்ளவும். நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர்.