ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

மீண்டும் ஒரு தில்லாலங்கடி!

பானுமதி அருணாசலம்,படங்கள்: சாய்தர்மராஜ்.

 மோசடி

##~##
ஈமு கோழி, ஃபைன் ஃப்யூச்சர்ஸ் என தொடர் மோசடிகளுக்கு நடுவே லேட்டஸ்ட்டாகக் கிளம்பியிருக்கிறது பங்குச் சந்தை மோசடி. காரைக்குடியைச் சேர்ந்த அல்மைட்டி கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முத்துராமலிங்கம், அவரது மனைவி மங்கையர்கரசி இருவரும் மோசடி செய்திருப்பதாக காவல் நிலையத்துக்கு புகார் போக, கணவனும் மனைவியும் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.  

செய்தி வந்ததும் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

''தூத்துக்குடியைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். முத்துராமலிங்கம் பொதுத்துறை வங்கி ஒன்றில் வேலை பார்த்தவர். சில எம்.எல்.எம். நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு களையும் வகித்திருக்கிறார். இவரது மனைவி, பி.ஜே.பி. மாவட்ட மகளிர் அணித் தலைவியாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அல்மைட்டி கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். இதன் துணை நிறுவனத்தை அல்மைட்டி இன்வெஸ்ட்மென்ட் சொல்யூஷன் என்ற பெயரில் காரைக்குடியில் திறந்தார்கள்.  

'எங்களிடம் 25,000 ரூபாயைக் கொடுத்தால் அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து 2,150 ரூபாயை ஒவ்வொரு மாதமும் தருவோம்’ என்று கூறியுள்ளனர். இதை நம்பி பலரும் பணத்தைத் தர, சொன்ன மாதிரி பணத்தைத் தரவும் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்து, மேலும் பலர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்துள்ளனர். இப்படி பணம் தந்தவர்களில் தஞ்சாவூர், அறந்தாங்கி, கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

மீண்டும் ஒரு தில்லாலங்கடி!

ஒருகட்டத்தில் மாதந்தோறும் வரவேண்டிய வருமானம் வராமல் போகவே, போன் மூலமும், நேரடியாகவும் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி பலரும் கேட்க, ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவனத்தைப் பூட்டிவிட்டு, எங்கோ தலைமறைவாகிவிட்டனர்'' என்று சொன்னார்கள் காரைக்குடியில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் வசிப்பவர்கள்.

மீண்டும் ஒரு தில்லாலங்கடி!

தங்கள் மோசடி நிறுவனத்தை திறமையாக நடத்த முக்கிய நகரங்களில் ஏஜென்ட்களை நியமித்து பணம் வசூல் செய்திருக் கிறார்கள் கில்லாடி தம்பதிகள். ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்தால், 25,000 ரூபாயை ஏஜென்ட்க்கு கமிஷன் தந்திருக்கிறார்கள். சில தனிப்பட்ட நபர்கள் 2, 3 கோடிகூட இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்களாம். ஆசிரியர் களும், அரசு ஊழியர்களும்கூட 5,000, 10,000 தந்து ஏமாந்திருக்கிறார்கள்.  

இந்த நிறுவனத்தில் பணம் தந்து ஏமாந்த காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடன் பேசினோம். ''அல்மைட்டி கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்திடம் நான் 26 லட்சம் ரூபாய் தந்தேன். அவர்கள் சொன்னதுபோல எந்தவித வருமானமும் தரவில்லை. நான் இரண்டு வருடமாகப் பலமுறை அலைந்தும் பணம் கிடைக்கவில்லை. என்னைப்போல பலரும் ஏமாந்து பணத்தை இழந்திருக்கிறார்கள்'' என்றார்.

பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டோம். ''பொதுவாக, வட்டி வருமானம் மிக அதிகமாகக் கொடுக்கிறோம் எனச் சொல்லும் எந்த நிறுவனமும் அல்லது தனிப்பட்ட நபரும் சட்டத்திற்கு புறம்பான வகையில்தான் சம்பாதிப்பார்கள். இதுபோன்ற மோசடி செய்ய நினைக்கும் நிறுவனங்கள் முதலில் சுமார் ஒரு வருட காலத்திற்கு தங்கள் நிறுவனம் நல்ல நிறுவனம் என்று பெயர் வாங்க வருமானத்தைச் சரியாகத் தருவார்கள். குறிப்பட்ட அளவுக்குப் பணம் குவிந்ததும் கம்பி நீட்டிவிடுவார்கள்.

மீண்டும் ஒரு தில்லாலங்கடி!

இந்நிறுவனம், 25,000 ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2,150 ரூபாய் கொடுப்பதாகக் கூறியுள்ளது. இதைக் கணக்கிட்டால் ஆண்டுக்கு  சுமார் 100 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தருவதாகச் சொல்லி இருக்கிறது. இந்த அளவுக்கு அதிக வருமானத்தை ஒரு நிறுவனத்தால் எப்படி தரமுடியும் என்று யோசித்து இருந்தாலே மோசடியில் சிக்காமல் தப்பி இருக்கமுடியும்'' என்றவர், சற்று நிறுத்தி, ''பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எனில், நீங்கள் உங்கள் பெயரில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். பங்குச் சந்தையில் பதிவுபெற்ற அங்கீகரிக்கப்பட்ட புரோக்கரேஜ் நிறுவனங்களா என்பதைத் தெளிவாக அறிந்து, தங்கள் பெயரிலேயே  வர்த்தக கணக்கு, டீமெட் கணக்கைத் தொடங்கி முதலீடு செய்வது முக்கியம். உங்களிடமிருந்து பணம் வாங்கி, அவர்கள் பெயரில் முதலீடு செய்து லாபம் தருகிறோம் என்று சொன்னால், அது நிச்சயம் மோசடிதான். அப்படிச் சொல்பவர்களை நம்பவே நம்பாதீர்கள்'' என்றார்.

இனியாவது கொஞ்சம் நிதானமாக அலசி ஆராய்ந்து நம் முதலீட்டை மேற்கொள்வோமா?