ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

என்ன செய்ய வேண்டும் மாணவர்கள்? வா.கார்த்திகேயன்.

##~##

இந்தியாவின் மக்கள்தொகையில் 65 வயதுக்குமேல் இருப்பவர்கள் எண்ணிக்கை 5.6 சதவிகிதம்தான். 55 வயதில் இருந்து 64 வயதுக்குள் இருப்பவர்கள் 6.8 சதவிகிதம்தான். மீதமிருப்பவர்கள் அனைவரும் அதாவது, 88 சதவிகித இந்தியர்கள் 55 வயதுக்குள் இருப்பவர்கள்.

இதிலும்கூட 14 வயதுக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை 29 சதவிகிதம். 15 முதல் 24 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 18 சதவிகிதம். மொத்தமாகப் பார்த்தால், இந்தியர்களின் சராசரி வயது 26. உலகத்தின் சராசரி வயதுகூட 29.  சீனாவின் சராசரி வயது35. அமெரிக்காவின் சராசரி 37, இங்கிலாந்தின் சராசரி 40, ஜெர்மனி மற்றும் ஜப்பானின் சராசரி 45. நம்மைவிட சராசரி வயது குறைவாக இருக்கும் நாடுகள் எனில் ஆப்பிரிக்க நாடுகள்தான்.

இந்தப் புள்ளிவிவரத்தை பார்க்கும்போதும் நமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே பயத்தையும் தருகிறது. காரணம்,  வேலைக்குச் சேரும் வயதில் நம் நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்! ஆனால், அவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தியின்படி, எஸ்.பி.ஐ. வங்கியின் புரபேஷனரி ஆபீஸர் பதவிக்கு 1,500 காலி இடங்களுக்கு சுமார் 17 லட்சம் விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றன. அதாவது, ஒரு காலி இடத்துக்கு சுமார் 1,133 விண்ணப்பங்கள். முன்னணி பிஸினஸ் ஸ்கூலில் படித்தவர்கள்கூட இன்று வங்கி வேலைக்கு க்யூவில் நிற்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவே இருக்கிறது.  

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

சமீபகாலம் வரை இந்திய இளைஞர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வேலையையும் கைநிறைய பணத்தையும் அள்ளித் தந்தது ஐ.டி. துறை. பெரிய நிறுவனங்களில் இருந்து சின்ன நிறுவனங்கள் வரை எல்லா கல்லூரிகளுக்கும் சென்று கேம்பஸ் இன்டர்வியூ நடத்தின ஐ.டி. நிறுவனங்கள். ஆனால், இந்த ஆண்டு..?

பல ஐ.டி. நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதையே நிறுத்தி வைத்திருக்கின்றன.  ஓராண்டுக்கு முன்பு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி, வேலைக்குத் தேர்வு செய்தவர்களுக்குக்கூட இன்னும் வேலை தரவில்லை சில முன்னணி ஐ.டி. நிறுவனங்கள். பெங்களூரில் இருக்கும் ஹெச்.சி.எல். டெக்னாலஜி நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வானவர்களுக்கு இதுவரை வேலை தராததால், மாணவர்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்னை சென்றிருக்கிறது.

நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவை குறைத்துக்கொள்ள என்ன காரணம்? இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இந்த இக்கட்டானச் சூழலிலிருந்து தப்பித்து, தங்களுக்கான வேலையைப் பெறுவது எப்படி? ஒவ்வொரு கேள்விகளாகப் பார்ப்போம்.

நம்பிக்கை இழந்த ஐ.டி.!

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

''ஐ.டி. நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதைப் படிப்படியாக குறைக்க பல காரணங்கள் இருக்கிறது'' என்று ஆரம்பித்தார் ஒரு மிகப் பெரிய ஐ.டி. நிறுவனத்தின் தலைவர் ஒருவர்.

''ஐ.டி. துறையே வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வேலை வாய்ப்பை நம்பியே இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரச் சூழ்நிலை சரியில்லை. அவை முழுமையாகச் சரியாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஐ.டி. நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதைப் பெரிய அளவில் குறைத்து வருகின்றன.

இரண்டாவது முக்கியமான காரணம், இந்திய இளைஞர்களின் கல்வித்தரம் குறைந்து வருவது. இப்போது இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களில் பலர் டிப்ளமோ படிப்புக்கான அறிவுடன்தான் இருக்கிறார்கள். தரமான ஆசிரியர்கள் கல்லூரிகளில் இல்லை. இதனால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி தரப்படுவ தில்லை. இந்தியாவில் ஐ.டி. துறை வளர்ந்ததற்கு முக்கியமான காரணம், ஓரளவுக்கு டெக்னாலஜி தெரிந்த, ஆங்கிலம் பேசக்கூடிய, குறைவான சம்பளமே போதும் என்று நினைத்த ஓர் இளைஞர் கூட்டம் இருந்ததால்தான். அதனால்தான் ஐ.டி. துறையில் முதலீடுகள் எக்கச்சக்கமாக வந்தது. ஆனால், இன்றைக்கு நம்மைவிட தரமாக, நம்மைவிட குறைந்த சம்பளத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் தயாராக இருக்கும்போது, நமக்குக் கிடைக்கவேண்டிய வேலை அந்த நாட்டுக்குப் போகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்திருக்கிறது இந்தியா'' என்கிற அதிர்ச்சியான தகவலைச் சொல்லி முடித்தார் அவர்.

இதனால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் இரண்டாம்கட்ட நகரங்களில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.டி. பார்க்குகள் இன்னும் முழுமையடையவில்லை. கடந்த வாரம் மதுரையில் இருக்கும் ஐ.டி. பூங்காவில் வாடகை குறைக்கப்பட்டிருக்கிறது. மற்ற ஊர்களில் உள்ள பார்க்குகளிலும் நிறுவனங்கள் வராமல் காத்தாடவே செய்கின்றன. இந்த நிலைமையில் ஐ.டி. நிறுவனங்கள் எப்படி கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும்?

எப்படித் தப்பிக்கலாம்?

ஐ.டி. நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ வருவது குறைந்துவிட்டது என்று தெரிந்தபிறகும் அதையே நம்பி இருக்காமல், இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என சில நிபுணர்களைச் சந்தித்துக் கேட்டோம்.

''இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, புதிய வேலைகளை பெரிய அளவில் உருவாக்குவதுதான்'' என்று ஆரம்பித்தார் ரான்ஸ்டட் இந்தியாவின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ.-வான பாலாஜி. அவரே தொடர்ந்து பேசினார்.

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

''சீனா தொடர்ந்து முப்பது வருடங்களாக இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்தது. அதற்கு முன்பு ஜப்பானும் சிலபல ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியதே. ஆனால், நாம் உற்பத்தித் துறையை தள்ளிவைத்துவிட்டு சேவைத் துறையில் கவனம் செலுத்தினோம். அங்கு 5,000 பணியாளர்கள் இருக்கும் பல நிறுவனங்களை சாதாரணமாகப் பார்க்க முடியும். ஆனால், இங்கு அப்படி சாத்தியமில்லை. இங்கு தொழிலாளர் சட்டங்கள் மிகவும் பலமாக இருக்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணியாளர்கள் இருக்கும்பட்சத்தில் வேலை செய்பவர்களுக்கு பி.எஃப். தரவேண்டும்; குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணியாளர் கள் இருக்கும்பட்சத்தில், ஊழியர்களை நீக்கவேண்டும் என்றால் முன்அனுமதி வாங்கவேண்டும் என்ற பல விதிமுறைகள் இருக்கிறது. இதனாலே பல நிறுவனங்கள் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள விரும்புவதில்லை.

ஆனால், சீனாவில் இந்தப் பிரச்னை ஏதும் இல்லை. அங்கு இருப்பது ஃப்ரீ லேபர் மார்க்கெட். திடீரென ஒரு வேலை ஆரம்பிக்கவேண்டும் என்றால் ஆயிரம்பேரை எடுப்பார்கள்; அந்தத் திட்டம் முடிவடைந்துவிட்டால், இன்னொரு திட்டத்தில் வேலை கிடைக்கும். அந்த வேலையில் மும்முரமாக ஈடுபட்டுவிடுவார்கள். அங்கு வேலை போச்சே என்று போராட்டம் எதுவும் செய்ய முடியாது.

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

ஆனால், நாம் கன்ஸர்வேட்டிவ்வாக ஒரே வேலை என்பதையே மனதில் வைத்திருக்கிறோம். நாம் வாய்ப்புகளைத் தேடாமல், பாதுகாப்பையே தேடுகிறோம். லேபர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரும்பட்சத்தில், உற்பத்தித் துறையில் நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த முடியும். அப்போது இங்கு இன்னும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்'' என்றார் பாலாஜி.

ஐ.டி. துறையில் வேலை வாய்ப்பு குறைந்து வருவது பற்றி நாஸ்காம் புருஷோத்தமனுடன் பேசினோம். ''ஐ.டி.யில் 12 முக்கிய நிறுவனங்களே அதிக பணியாளர்களை எடுத்து வந்தது. இப்போது அந்த நிறுவனங்களும் ஆட்கள் எடுப்பதை நிறுத்தி விட்டது, எல்லோரையும் மிரள வைத்திருக்கிறது. முன்பெல்லாம் ஐ.டி. என்றாலே பி.எஃப்.எஸ்.ஐ. (Banking, Financial Services and Insurance) என்றுதான் இருந்தது. ஆனால், இப்போது ஐ.டி. துறை சோஷியல், மொபைல், அனலிடிக் மற்றும் கிளவுட் (social,

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

mobile, analytics and cloud) போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.  வருங்காலத்தில் இதன்மூலமே அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உதாரணமாக ஒரு நிறுவனம்,  விளம்பரத்துக்கு செலவு செய்யும் தொகையைவிட அனலிடிக்ஸ்க்கு அதிகம் செலவு செய்யத் தயாராக இருக்கிறது. ஒரு ஷாப்பிங் மாலுக்கு ஒரு நாளைக்கு எத்தனைபேர் வருகிறார்கள், எந்தச் சமயத்தில் வருகிறார்கள், எந்தக் கடைக்குச் செல்கிறார்கள், எதைப் பார்க்கிறார்கள் என்பதைப் போன்ற பல விஷயங்களை அனலிடிக்ஸ் மூலம் ஆராய்ந்து விற்பனையை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேலும், இங்கு திறமைக் (ஸ்கில்) குறைபாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கொரு தீர்வாக மத்திய அரசு தேசிய திறன் வளர்ப்பு வாரியத்தை (National Skill Development Corporation) உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பு ஐ.டி. மட்டுமல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளிலும் நிறுவனங்களுக்கு என்னென்ன 'ஸ்கில்’ தேவை என்பதையும், அந்த ஸ்கிலை எப்படி வளர்ப்பது என்பதையும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று சொல்லித் தருகிறது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி தந்துள்ளோம். இதுதவிர, '10,000 ஸ்டார்ட் அப்’ என்ற திட்டம் மூலம் ஐ.டி. துறையில் 10,000 தொழில்முனைவோர்களை உருவாக்கும் முயற்சி செய்து வருகிறோம். இதன்மூலம் இப்போது சுமார் 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐ.டி. துறை 2020-ம் ஆண்டில் 200 பில்லியன் டாலராக மாறும், அப்போது அதற்கேற்ற வேலை வாய்ப்பு உருவாகும்'' என்றார்.

குறையும் கேம்பஸ் பிளேஸ்மென்ட்!

கேம்பஸ் இன்டர்வியூ குறைந்துவரும் சூழ்நிலையில், அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது நடக்காத விஷயம். 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 50 கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தாலே பெரிய விஷயம். இந்த இக்கட்டான சூழலில் வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும்? என கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயனிடம் கேட்டோம்.

''கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு செய்தித்தாள், இணையம் உள்ளிட்டவற்றில் ரெஸ்யூமை அனுப்பிவைத்து காத்திருப்பது பொதுவான நடைமுறை. அப்படி செய்வதைவிட கல்லூரி முடித்தவுடனேயே கூடுதலாக ஒரு ஸ்கில்லை வளர்த்துக்கொள்வது நல்லது. இரண்டாவது, இன்டென்ஷிப். சம்பளம் கொடுக்காமல், அதேசமயம் இன்டென்ஷிப் வாய்ப்பினை நிறைய முன்னணி நிறுவனங்கள் கொடுக்க தயாராக இருக்கின்றன. நான்கு வருட படிப்பு கொடுக்காத அறிவினை நான்கு மாத இன்டென்ஷிப் பயிற்சி கொடுக்கும். ஆனால், நம் மாணவர்கள் எடுத்தவுடனே எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கேட்கிறார்கள். இப்படி எதிர்பார்ப்பதில் தவறில்லை என்றாலும், ஆரம்பத்தில் வேலை கற்றுக்கொள்ள சில மாதங்கள் சம்பளம் இல்லாமல் இருப்பதிலும் தவறில்லை. நீங்கள் பயிற்சியில் நன்றாகச் செயல்பட்டால், அந்த நிறுவனமே உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தபிறகு இன்டென்ஷிப் என்று யோசிக்காமல், படிக்கும்போதே இன்டென்ஷிப் செய்ய முடியுமா?, எந்த நிறுவனத்தில் இதை செய்யலாம் என்று யோசிப்பது நல்லது. எனக்கு தெரிந்து நிறைய நிறுவனங்களுக்கு இப்போது ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் திறமை உங்களிடம் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்'' என்று நம்பிக்கையுடன் முடித்தார் கார்த்திகேயன்.

உள்ளதைச் சொல்லிவிட்டோம். இனி, வேலை கிடைக்க உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் வேலை!

 என்ன செய்யவேண்டும் மாணவர்கள்?

படிக்கும்போது சீனியர்களிடம் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள். படித்து முடித்தபிறகு, வேலைவாய்ப்புச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் உங்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

சந்தை உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொண்டு அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வேலை வாய்ப்புக்காக நடத்தப்படும் இணைய தளங்களில் உங்களது ரெஸ்யூமை அப்டேட் செய்துவையுங்கள். மேலும் செய்தித்தாள்களையும் கவனமாக பாருங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களில் வருங்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் வரவிருக்கிறது. அந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

linkedin உள்ளிட்ட சமூக வலைதளங் களையும் வேலை தேடுவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.