ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

சிங்கிள் பிரீமியம், ரெகுலர் பிரீமியம் ... எது பெஸ்ட்?

இரா.ரூபாவதி, படம். எம்.உசேன்.

##~##

வாழ்க்கையில் நிகழும் அசம்பாவிதங் களிலிருந்து காத்துக்கொள்ளத்தான் இன்ஷூரன்ஸ் பாலிசியை  நாம் எடுக்கிறோம். இந்த பாலிசிகளுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை நம் வசதிக்குத் தகுந்தாற்போல ரெகுலர் பிரீமியம் மற்றும் சிங்கிள் பிரீமியம் என இரு வகையில் பிரீமியத்தைக் கட்டி வரலாம். ரெகுலர் பிரீமியத்தில் மாதந்தோறும்,  3 மாதம், 6 மாதம், ஓராண்டு என்பதுபோல் பிரீமியம் கட்ட முடியும். சிங்கிள் பிரீமியம் என்கிறபோது பாலிசி எடுக்கும்போதே காப்பீட்டுக்கான மொத்தப் பிரீமியத்தையும் கட்டிவிடவேண்டும். இதில் எது லாபமாக இருக்கும், யாருக்கு எந்தவிதமான பிரீமியம் பொருந்தும் என்று பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு மேலாளர் (சென்னை) சுதா ஸ்ரீதர் விளக்கிச் சொன்னார்.

சிங்கிள் பிரீமியம்..!

ரெகுலர் பிரீமியத்தைவிட சிங்கிள் பிரீமியம் குறைவாக இருக்கும். பாலிசி காலம் முழுக்கச் செலுத்தவேண்டிய பிரீமியத்தை ஒரேமுறை செலுத்துவதுதான் சிங்கிள் பிரீமியம். சுய தொழில் செய்பவர்கள், பணம் எப்போது வரும் என்று தெரியாதவர்கள் இந்த வகையைத் தேர்வு செய்யலாம். பிஸினஸ் செய்பவர்கள், சொத்து விற்று பணம் வைத்திருப்பவர்கள் இப்படி செய்யலாம். கவரேஜ் என்பது ரெகுலர் பிரீமிய பாலிசிக்கு உள்ளதுபோல்தான் இருக்கும். பொதுவாக பிரீமியத் தொகையைப்போல் பத்து மடங்கு கவரேஜ் கிடைக்கும். பெரும்பாலும் யூலிப் மற்றும் டேர்ம் ப்ளான்களில் சிங்கிள் பிரீமிய வசதி உண்டு. எண்டோவ்மென்ட் பாலிசிகளில் இந்த வசதி இல்லை.

சிங்கிள் பிரீமியம், ரெகுலர் பிரீமியம் ... எது பெஸ்ட்?

ரெகுலர் பிரீமியம்..!

ரெகுலர் பிரீமியத்தில் பாலிசி காலம் முழுவதும் பணத்தைச் செலுத்தவேண்டி இருக்கும். மாத வருமானக்காரர்களுக்கு இந்தவகை ஏற்றதாக இருக்கும். அப்போதுதான் பாலிசிதாரர்களுக்கு நிதிச் சார்ந்த ஒழுக்கம் என்பது வரும். அத்துடன் கொஞ்சம், கொஞ்சமாக பிரீமியம் கட்டும்போது சுமை தெரியாது. இளம் வயதில் இருப்பவர்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கலாம். பாலிசி எடுத்த சில மாதங்கள் அல்லது வருடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் பாலிசியின் முழு கவரேஜ் பெறலாம். ஆனால், ரெகுலர் பிரீமியத்தில் பிரீமியம் கட்டத் தவறினால் பாலிசி காலாவதி  ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெரும்பாலும் சிங்கிள் பிரீமியத்தை விரும்புவதில்லை. ஏனெனில், அதில் கமிஷன் மற்றும் கட்டணங்களாகச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அதாவது, ரெகுலர்

சிங்கிள் பிரீமியம், ரெகுலர் பிரீமியம் ... எது பெஸ்ட்?

பிரீமியம் கட்டும்போது ஒவ்வொருமுறையும் நிர்வாகக் கட்டணம் என பல கட்டணங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கின்றன'' என்றார்.  

சிங்கிள் மற்றும் ரெகுலர் பிரீமியத்தில் எந்த அளவுக்கு வேறுபாடு இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

உதாரணமாக, எல்.ஐ.சி.-யின் அமுல்யா ஜீவன் பாலிசியில் 30 வயதுடைய ஒருவர்,

25 வருடம், 20 லட்ச ரூபாய் கவரேஜ் என்றால், அவருக்கு சிங்கிள் பிரீமியம் என்பது 92,980 ரூபாய். அதே ரெகுலர் பிரீமியம் என்றால், அவர் வருடத்திற்கு 7,643 ரூபாய் பிரீமியம் செலுத்தவேண்டியிருக்கும்.

பாலிசி எடுத்த ஓரிரு வருடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், ரெகுலர் பிரீமிய பாலிசியில் குறைவான தொகை கட்டியவருக்கும், சிங்கிள் பிரீமியத்தில் அதிக பிரீமியம் கட்டியவரின் குடும்பத்துக்கும் ஒரே தொகைதான் இழப்பீடு கிடைக்கும். அந்தவகையில், சிங்கிள் பிரீமிய பாலிசி இழப்பாகத் தோன்றும். ஆனால், ரெகுலர் பிரீமியத்தில் ஆண்டுக்கு 7,643 ரூபாய் வீதம் 25 வருடத்திற்கு மொத்தம் 1,91,075 ரூபாய் கட்டவேண்டியிருக்கும். அந்த வகையில் கையில் மொத்தமாகப் பணம் இருக்கும்பட்சத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் நினைவு வைத்து பிரீமியம் கட்ட இயலாதவர்கள் சிங்கிள் பிரீமியத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பண வரத்து அதிகம் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.  ஆக, உங்களின் வருமான வரத்து, வாய்ப்பு வசதியைப் பொறுத்து ரெகுலர் பிரீமியமா அல்லது சிங்கிள் பிரீமியமா என்பதைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.