Published:Updated:

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

Published:Updated:
##~##

என் ஃப்ரண்டு ஒருத்தன் நேத்திக்கு நைட் போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்னான். அவன் வீட்ல சமையல் சூப்பரா இருக்கும். ஆஹா, அருமையான வாய்ப்புன்னு நெனைச்சு, அவன் வீட்டுக்குப் போனேன் பாருங்க, வசமா மாட்டிக்கிட்டேன். ஃப்ரண்டோட அம்மாவும் பொண்டாட்டியும் சேர்ந்து, தங்கத்தைப் பத்தி பல கேள்வி கேட்டு என்னை தொளைச்செடுத்துட்டாங்க.

''தங்கம் விலை இறங்குதே, இப்ப வாங்கலாமா, கூடாதா? அமெரிக்கால இருக்கற பெரிய சித்தப்பா வாங்கச் சொல்றாரு. சிங்கப்பூருல இருக்கற லட்டு சித்தி (அவர் பிரமாதமாக லட்டு செய்வாராம்!) வாங்கச் சொல்றாங்க. பட்டிவீரன்பட்டியில இருக்கிற பெரியப்பா பையனும் அதையே சொல்றான். நீ என்ன சொல்றே?''ன்னு கேட்டுது அம்மா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அம்மா, உங்க குடும்பம் இந்தியா மாதிரி. பி.பி.எல். (வறுமைக்கோட்டுக்கு கீழே) லெவல்லே இருந்து அல்ட்ரா ஹெச்.என்.ஐ. வரைக்கும் ஆள் இருக்கு. ஒருத்தருக்குச் சொல்ற ஐடியா இன்னொருத்தருக்குப் பொருந்தாதே''ன்னு நான் சொன்னேன்.

''அதெப்படி ஏகாம்பரம். பணமுங்கிறது எல்லோருக்கும் ஒண்ணுதானே!''ன்னு சொன்னது மருமக. ''பணம் ஒண்ணுதான். ஆனா, நோக்கம் வேறவேறயாச்சே! உதாரணமா, நீங்க எப்படி தங்கம் வாங்குறீங்க?''ன்னேன் மருமகளிடம். ''அப்பப்ப சேக்குற பணத்தை வச்சு வாங்குவேன். இவருக்கு போனஸ், இன்சென்டிவ்வுன்னு வர்ற பணத்துல பாதியை தங்கம் வாங்கிப்போடுவேன். ரெண்டு பொம்பளைப் பிள்ளையல்ல பெத்துவச்சிருக்கேன்'' என்றார் அவர்.

''அப்ப நீங்க வாங்குறது எதிர்கால கன்ஸம்ஷனுக்காக. உங்களுக்கு என்ன குறிக்கோள்? மக கல்யாண நேரத்துல ஒட்டுமொத்தமா வாங்குறதுக்கு பதிலா இப்பவே கொஞ்சம் கொஞ்சமா வாங்கிச் சேக்குறீங்க இல்லையா'' என்றேன். ஆமாமா என்று தலையை உருட்டினார் மருமகள்.

''சிங்கப்பூருல இருக்குற லட்டு சித்தி எதற்காக தங்கம் வாங்குறாங்க?'' என்றேன். ''அவளுக்கென்ன இரண்டும் பையனுங்க. இறங்குனா வாங்கிப் போட்டுட்டு, ஏறுனா விக்கிறதேதான் அவளோட வேலை'' என்று கழுத்தை பட்டென வெட்டினார் மாமியார்.

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

''பட்டிவீரன்பட்டிக்காரர் எதுக்கு தங்கம் வாங்கறாரு?'' என்றேன். ''அவன் லவ் மேரேஜ் பண்ணிட்டான். அவங்க அப்பா சொத்துல ஒரு பைசா கிடையாதுன்னு துரத்தி விட்டுட்டாரு. இதப் பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு சாக்கா வச்சிக்கிட்டு,  சீர்செனத்தி ஏதும் செய்யாம விட்டுட்டாங்க. அவன் பெண்டாட்டிக்கு ஒவ்வொரு குந்துமணியா தங்கம் வாங்கிப் போட்டு அழகு பாக்குறான்'' என்றார் மாமியார்.  

''உங்க வீட்டுக்குள்ளேயே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்துக்கு தங்கம் வாங்குறாங்க. லட்டு சித்தி ஒரு ஸ்டாக் இன் டிரேட் (வியாபாரப் பொருளாக) தங்கத்தைப் பாக்குறாங்க. நீங்க (மருமகள்) மகள்களோட திருமணத்துக்காக வாங்கறீங்க. பட்டிவீரன்பட்டிகாரரு தன் மனைவியோட அந்தஸ்தை சகபெண்களுக்கு நடுவே கூட்டுறதுக்காக தங்கம் வாங்கறாரு. நீங்க இவங்களையெல்லாம் கூப்பிட்டு, தங்கம் ஏறுமா இறங்குமான்னு கேட்டா ஆளுக்கொரு கருத்தைத்தானே சொல்வாங்க?'' என்றேன்.  

''ஏகாம்பரம், பிரச்னையை டைவர்ட் பண்ணாதே, தெளிவாச் சொல்லு. தங்கம் ஏறுமா, இறங்குமா? இப்ப வாங்கலாமா, இன்னும் வெயிட் பண்ணலாமா? இல்லை, கையில இருக்கிற தங்கத்தையும் வித்துட்டு பின்னாடி வாங்கலாமா?''ன்னு கண்டிஷனாக் கேட்டாங்க நண்பரின் அம்மா.

''இது உங்க தனிப்பட்ட கேள்வியா? இல்லே நான் சொன்னதை உங்க ஒட்டுமொத்த ஃபேமிலிக்கும் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா?''ன்னு கேட்டேன். ''எல்லாருக்கும்தான் சொல்வோம்''ன்னாங்க அம்மா.

''அம்மா நல்லாப் புரிஞ்சுக்குங்க. லட்டு சித்தி தங்கம் வாங்கி விக்கலாம்; வித்து வாங்கலாம். ஏன்னா அது வியாபாரத்துல அவங்களுக்கு ஸ்டாக்-இன்-டிரேட். இறங்குனா வாங்கி ஏறுனா விக்குறதும், ஏறுனா வித்து இறங்குனா வாங்கித் தர்றதிலும் இருக்கறது வியாபார நோக்கம். அன்னாடம் விலையப் பாத்துக்கிட்டு இருந்தேயாகனும்.

பட்டிவீரன்பட்டிகாரருக்கு தங்கம்ங்கிறது ஒரு பிரஸ்டீஜ் மேட்டர். நான் உன்னை நம்பி வந்தப்புறம் ஒரு குந்துமணித் தங்கமாவது வாங்கித் தந்தியான்னு டி.வி. சீரியல் ரேஞ்சுக்கு கேட்டுட்டா என்ன செய்றதுன்னு நினைச்சு பயந்து வாங்குறவரு. தங்கம் விலை இறங்குனா சந்தோஷமா வாங்கிக் குடுத்துடுறாரு.  

எடக்கு மடக்கு - தங்கத்தை வாங்கிப் போடுங்க !

நீங்க மகளுக்குச் சேர்க்கறீங்க. விலை இறங்கிச்சுன்னா கடன் வாங்கியாவது வாங்கியிட்றீங்க. ஏறுச்சுன்னா கையில இருக்கிறத விக்கவும் மாட்டீங்க. கையில காசு சேரும்போதோ, இல்லை நகைக்காக சிறுகச் சிறுக சீட்டு மாதிரி எதையாவது சேர்த்தோ கொஞ்சம் கொஞ்சமா வாங்கிப் போடுவீங்க. ரெண்டு பொண்ணு இருக்குதே! இத்தனை பவுனு வேணுமேன்னு ஒரு கணக்குதான் மனசிலே ஓடுமே தவிர, என்ன விலைக்கு வாங்கினோமுன்னு கணக்குப் போடத்தோனாது, இல்லியா?'' என்றேன்.

மருமகளும், மாமியாரும் ஒரேமாதிரி தலையாட்டினார்கள்.

''அப்புறம் எதுக்கு ஊரில இருக்கறவங்களை எல்லாம் ஒப்பீனியன் கேக்குறீங்க. எண்ணத்தைச் செயலாக்க என்ன வேண்டுமோ, அதைச் செய்யுங்க'' என்றேன். ''சரி, நான் வேற மாதிரி கேக்குறேன். தங்கத்துக்கும் பணத்துக்கும் உள்ள உறவைப் பத்தியாவது கொஞ்சம் சொல்லேன்'' என்றார்.

''அம்மா, பணம்ங்கிறதோட குணம் அதோட மதிப்பு மாறமா இருக்கிறதுதான். பணத்துக்கும் தங்கத்துக்கும் இடையில ஒரு கம்பேரிஸன் பண்ணுணீங்கன்னா, தங்கம் இயல்பாவே தன்னோட மதிப்பை பாதுகாத்துக்கொள்ளும் தன்மைகொண்டது. ஏன்னா சர்க்குலேஷனுல இருக்கிற டாலரை வச்சுத்தான் அதோட மதிப்பு வரும். நோட்டடிக்கிற பவரோ ஒவ்வொரு நாட்டிலும் அரசியல்வாதிங்ககிட்டதான் இருக்குது. முதலாளித்துவம் அரசியல்வாதியை மயக்குது. அரசியல்வாதியை நம்பறதைவிட தங்கத்தோட இயல்புக் குணத்தை நிச்சயமா நம்பலாம். அது ஒரு நாளும் உங்களைக் காலைவாரி விடாது. அதனால, எப்பவுமே உங்கள் வோட்டு தங்கத்துக்குத்தான் இருக்கணும்'' என்றேன்.

''ஏகாம்பரம், புரியாத மாதிரி ஏதாவது சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைக்காதே!'' என்றார் மருமகள். ''இதுல புரியறதுக்கு என்ன கஷ்டம். தங்கம் விலை ஏத்த இறக்கத்தைப் பாக்காதீங்க. தங்கத்தோட மதிப்பு எப்பவுமே தங்கம்தான். உங்க நோக்கத்தைப் பாருங்க. கொஞ்சம் கொஞ்சமா வாங்கலாம். தேவையானப்ப அடகு வைக்கலாம். காசுப் புழக்கம். கொஞ்சம் எசகுபிசகான நேரத்துல சுலபமா விக்கக்கூடச் செய்யலாம். நோட்டுப் புழக்கம் அதிகமானா விலை ஏற்றத்தையும்,

குறைஞ்சா விலை இறக்கத்தையும் சந்திக்கிற தங்கம் இன்ப்ளேஷனுக்கு எதிரான சிறந்த சாதனம்.

இத்தனை வசதியையும் கொடுக்கிற தங்கத்தை அவங்க அவங்க தேவைக்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல கொஞ்சம்

கொஞ்சமா வாங்கிப்போட்டுக்கிட்டே போகணுமே தவிர, சிங்கப்பூரு லட்டு சித்திக் கிட்டேயும், பட்டிவீரன்பட்டிக்காரரிட்டேயும் வீணா ஆலோசிச்சுக்கிட்டு இருக்கப்படாது'' என்றேன்.

''நீ சொல்றதும் சரிதான்'' என்றார் நண்பரின் அம்மா! விட்டாப் போதுண்டா சாமி என்று அலறியடித்து விடை பெற்றேன் நான்.

தங்கம் என்னவாகும்? நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன், பாப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism