Published:Updated:

ஜாலியா ஊர் சுத்தணுமா?

உடம்பைக் கவனியுங்க! இரா.ரூபாவதி.

ஜாலியா ஊர் சுத்தணுமா?

உடம்பைக் கவனியுங்க! இரா.ரூபாவதி.

Published:Updated:

 மெடிக்கல் டிப்ஸ்

##~##

வெளியூருக்கு ஆசை ஆசையாக சுற்றுலாச் செல்வார்கள் பலர். போன இடத்தில் சாப்பாடு மற்றும்  தண்ணீரால் உடல்நிலை சரியில்லாமல் போய் ஏன்தான் சுற்றுலா வந்தோமோ என்று நினைக்கிற அளவுக்கு மோசமான அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். சுற்றுலா போன இடத்தில் நம் உடல்நலத்தை நல்லபடியாக வைத்திருந்தால், மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இருக்காது. டூர் போன சமயத்தில் நம் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சொல்கிறார் பொது மருத்துவரும் சர்க்கரை நோய் நிபுணருமான ஆர்.கருணாநிதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்போதுமே ஆரோக்கியமாக இருப்பது தான் நம்முடைய வாழ்க்கையைச் சிறப்பாக வைத்துக்கொள்ள உதவும். டூர் செல்லும்போது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு கூடுதல் கவனம் அவசியம். ஆஸ்துமா, சர்க்கரை, பி.பி. உள்ளவர்கள் அதற்கென இருக்கும் மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது. மேலும், இவர்கள் டூர் செல்வதற்கு முன்பு முறையான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம்.  அந்த அறிக்கையை கையில் வைத்தி ருப்பது நல்லது. மருத்துவரின் தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மருந்துகளின் ஒரிஜினல் பாட்டில்களை எடுத்துச் செல்வது நல்லது. ஏனெனில், மருந்தின் வேதிப்பொருள் ஒன்றாக இருக்கும். ஆனால், அதனுடைய பிராண்ட் பெயர் வேறாக இருக்கும். இங்கு கிடைக்கும் பிராண்ட் மற்ற இடங்களில் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

ஜாலியா ஊர் சுத்தணுமா?

ஒவ்வொரு ஊரின் தட்பவெப்பநிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதை நம் உடல் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது. தண்ணீரும், உணவும் மாறும்போது நம் உடலுக்கு சில பாதிப்பு ஏற்படும். எப்போதுமே டூர் செல்லும்முன் உங்கள் மருத்துவரை அணுகி நீங்கள் எங்கு டூர் செல்கிறீர்கள், அந்த இடத்தின் தட்பவெப்பநிலை எப்படி இருக்கும், அந்த ஊரில் எந்தெந்த நோய்கள் எளிதில் பரவும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப முதல் உதவிக்குத் தகுந்த மாத்திரை, மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை தடுப்பூசி போடவேண்டியிருந்தால் அதையும் சுற்றுலாவுக்கு கிளம்பும் முன்பே போட்டுக்கொள்வது நல்லது.

ஜாலியா ஊர் சுத்தணுமா?

வெளியூர் செல்லும்போது நம் உடலுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுவது உணவுகள் தான். நம் உடல் ஒருவிதமான உணவுமுறைக்கு பழக்கப்பட்டிருக்கும். அதே உணவு எல்லா இடத்திலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. புதிய உணவுகளை நம் உடல் உடனடியாக ஏற்றுக்கொள்ளுமா என்பதும்  தெரியாது. எனவே, புதிய உணவுகளை  அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது கூடாது.  

தண்ணீரை எல்லா இடத்திலும் காய்ச்சி குடிப்பது நல்லது. தற்போது குறைந்த விலையில் தண்ணீர் கொதிப்பான்கள் கிடைக்கின்றன. இதை எடுத்துச்செல்வதும் சுலபம்.

தண்ணீர் மற்றும் உணவினால் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். இதனால் அதிகமான நீர் உடலிலிருந்து வெளியேறும். அந்தச் சமயங்களில் ஓ.ஆர்.டி. பாக்கெட்டுகள் நல்ல தீர்வாக இருக்கும். இவை நீர்ப்போக்கை கட்டுப்படுத்தி, உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். இவற்றின் விலையும் குறைவே. இதுபோன்ற சமயங்களில் திடஉணவைத் தவிர்த்து திரவ உணவை  உட்கொள்வது நல்லது.  

வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் வகையில் கையில் எப்போதும் மருந்துகளை கைவசம் வைத்திருங்கள். Rifaximin மாத்திரை வயிற்றுப்போக்கை சிறப்பாக கட்டுப்படுத்தும். அதோடு இந்த மாத்திரை குடல்பகுதியில் மட்டும்தான் வேலை செய்யும். எனவே, இதனால் பெரிதாக பின்விளைவுகள் ஏற்படாது. மேலும், Racecadotril மாத்திரையும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

எப்போதும் டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் எந்தவிதமான கவரேஜ் கிடைக்கும்?, உங்கள் ஓட்டலுக்கு பக்கத்தில் மருத்துவமனை உள்ளதா என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். அவசரத்துக்குப் பயன்படும் என்பதால் வலி நிவாரணி, காயத்திற்கு போடும் கிரீம், பஞ்சு போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்'' என்று முடித்தார் டாக்டர் கருணாநிதி. உடல்நலம் பற்றி முன்ஜாக்கிரதையோடு நடந்துகொண்டால், சுற்றுலாவை ஜோராக அனுபவிக்கலாமே!     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism