Published:Updated:

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

Published:Updated:
##~##

மறுபடியும் நாகப்பாம்பு விஷத்தைக் கக்கிடுச்சுங்க. அதுதாங்க கோப்ரா போஸ்ட்! நாட்டுல இருக்கிற கறுப்புப் பணத்தைக் கணக்குல கொண்டுவருவதப் பத்தி தகவல் திரட்டி ஒரு போடு போட்டதுல பல அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களும் துடியாய்த் துடிச்சுக்கிட்டு இருக்குங்க.

'ஏன் ஏகாம்பரம், தனியார் வங்கிகளிலேதான் இன்சென்டிவ் இருக்குது. அதனாலதான் அவங்க போட்டிபோட்டுகிட்டு கறுப்போ, வெள்ளையோ நாங்க அதை பாதுகாப்பா மாத்தித்தரோமுன்னு பாயுறாங்கன்னு சொன்னியே! இப்ப அரசுடைமை வங்கியே சிக்கிக்கிச்சே! இவங்களுக்கு இன்சென்டிவ் கிடையாதே!’ன்னு நண்பரு ஒருத்தரு விஷயம் வெளிவந்த பத்தாவது நிமிஷமே எனக்குப் போனைப் போட்டுட்டாருங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கறுப்புப் பணத்தைக் காப்பாத்த எங்களை அணுகவுமுன்னு இனி விளம்பரமே போட்டாலும் போட்டுடுவாங்கபோல இருக்குது. அவ்வளவு ஓட்டைகள் இருக்குது பேங்கிங் சிஸ்டத்துல. இன்ஷூரன்ஸை பத்திப் பேசவேவேண்டாம். கறுப்புப் பணம் சைலன்டா பதுங்குறதுக்கு சரியான இடம் இதுபோலதான் தெரியுது.

என் சிற்றறிவுக்கு கறுப்புப் பணம் ரியல் எஸ்டேட்டுலதான் புகுந்து விளையாடுதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேங்க. கடந்த பத்து வருஷத்துல நிலத்தோட விலை கன்னா பின்னான்னு ஏறுனதுக்குக் காரணமே இந்தக் கறுப்புப் பணம்தானுங்கிற கொள்கையில இருந்தேன். இங்க ரொம்பி வழிஞ்சு பேங்கு, இன்ஷூரன்ஸுன்னு எல்லா பக்கமும் ஆறா ஓடியிருக்குதுங்க கறுப்புப் பணம்.

கறுப்புப் பணம் ரொம்ப டேஞ்சரானது. நாட்டோட உற்பத்திக்கு எந்தவிதத்திலேயும் உதவாதுன்னு சொல்றதுனாலதான் பேங்கு லேயும், இன்ஷூரன்ஸிலேயும் போட்டு, இனி யாரும் எங்களை இப்படி குறை சொல்லப்படாதுன்னு கறுப்புப் பணம் வச்சிருக்கிறவங்க சொல்றாங்களோன்னு தோணுதுங்க.

எங்க ஆபீஸுல ஒரு வயசான வாட்ச்மேன் சம்பளத்துல சிறுகச் சிறுக சேர்த்து 60,000 ரூபாய் வச்சிருந்தாருங்க. ஊருல திடீர் தேவைன்னு சொல்லி டிராப்ட் எடுக்கப் போனா, பான் நம்பர் இருக்கா, அக்கவுன்ட் இருக்கான்னு மிரட்டி திருப்பி அனுப்பிச்சுட்டாங்க. அவர் எங்கிட்ட வந்து புலம்பு புலம்புன்னு புலம்பினாரு. ஆனா, இப்ப வந்திருக்கிற கோப்ரா போஸ்ட்டைப் பார்த்தா, நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோமுன்னு வழிவகை பண்ணித் தர்றதுக்கு அதே வங்கிகள் ரெடியா இருக்கிறாங்க.

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

ஆங்! இன்சென்டிவ் பத்திப் பேசினோமே! அரசுடைமை வங்கிகளில இன்சென்டிவ் இல்லாட்டியும்கூட டார்கெட்டை ஃபில்லப் பண்றதுக்கு இந்தக் கூத்தையெல்லாம் அடிக்கிறாங்கன்னு தோணுது. கே.ஒய்.சி. கழுதை, குதிரையெல்லாம் தூக்கி ஓரமா வீசிடுங்க. கேஷைக் கொடுங்க பாஸ்! நாங்க பார்த்துக்கிறோமுன்னு டார்கெட்டை முடிக்க முடியாத அதிகாரிங்க கறுப்புப் பணத்தை நோக்கி ஓடுறாங்கன்னு நினைக்கிறேன். அதுக்காக வங்கிகளுக்கு டார்கெட் வைக்கக் கூடாதுன்னு சொல்லலீங்க. அப்படி டார்கெட் வைக்கலேன்னா, சம்பளத்தை வாங்கிகிட்டு கொர்ருன்னு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. சட்ட திட்டங்கள் கடுமையாகணும். அரசாங்கமும் சரி, ரெகுலேட்டர்களும் சரி பிட்டுபீஸா ரூல்களைக் கொண்டுவந்து போடறாங்களே தவிர, உருப்படியா ஒண்ணும் செய்றதில்லை.

எடக்கு மடக்கு - நாகப்பாம்பை ஃப்ரீயா விடுங்க !

பிளாக்குல பாதிப்பணம் அரசியல்ல இருக்கற வங்களோடதுதானேன்னு நீங்க முணுமுணுக்கிறது என் காதுல விழுதுங்க. அரசியல்வாதியோடதோ, ஆர்டினரி சிட்டிசனோடதோ, கறுப்புப் பணம் அப்படீங்கிறது நாட்டைப் புடிச்சிருக்கிற கேன்சர். இதை அடியோட ஒழிக்கிறதுக்குண்டான வேலையை அரசாங்கம் உடனடியாச் செய்யணும். கறுப்புப் பணத்தை வச்சிருக்கிறவங்களைவிட கறுப்புப் பணத்தை வெள்ளையா மாத்த உதவுறேன்னு பேங்கரு, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மாதிரி திரியறவங்களுக்கு அதிகப்படியான தண்டனைன்னு சட்டம் வந்தாத்தான் கறுப்புல சம்பாதிச்சு வெளுப்பா மாத்திக்கலாமுங்கற நம்பிக்கையில, கறுப்புல சம்பாதிக்க முயற்சி எடுக்கமாட்டாங்க.

டெபாசிட்டோ, இன்ஷூரன்ஸோ இருக்கிறது கறுப்புப் பணமுன்னு கண்டுபிடிச்சா அந்தத் தொகை மாதிரி ஐம்பது மடங்கு அரசாங்கத்துக்கு அந்த பேங்கும், இன்ஷூரன்ஸ் கம்பெனியும் ஃபைன் கட்டணுமுன்னு சட்டம் கொண்டுவந்தா, ஏதாவது பேங்கோ, இன்ஷூரன்ஸோ இவ்விடம் கறுப்புப் பணம் வெளுத்து தரப்படுமுன்னு போர்டு வைக்கற ரேஞ்சுக்குப் போகமாட்டாங்க. கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்படுதுன்னு துப்பு கொடுத்தா, 25 பெர்சென்ட் இன்சென்டிவ்னு சொன்னா பக்கத்து சீட்டுக்காரரும், பக்கத்து வீட்டுக்காரருமே போட்டுக் கொடுத்துடமாட்டாரா என்ன?

அடுத்தபடியா கறுப்புப் பணம் உருவாகுற ஊத்துகளை அடைக்கணும். லஞ்சம், ரியல் எஸ்டேட்டுங்கிறது இதுல மிக முக்கியமான அங்கம் வகிக்குது. ரியல் எஸ்டேட்டுக்கு ரியல் விலையைக் கண்டுபிடிச்சு அதுக்கு ஸ்டாம்ப் டூட்டி ரொம்ப சீப்பா போடணும். கறுப்புப் பணம் புகுந்து ரியல் எஸ்டேட்டை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்கிறதாலதான் என்னைய மாதிரியும் உங்களை மாதிரியும் ஆளுங்க வீடுவாசல் இல்லாம முழிபிதுங்கிகிட்டு இருக்கிறோம்.

இன்னும் தெளிவாச் சொல்லணும்னா, கறுப்புப் பணம் மாதிரியான குற்றங்களை நடக்கவிட்டு பிடிக்கிறதுக்குப் பதிலா, நடக்காம தடுக்கிறதுதான் சிறந்தது. சுதந்திர காலத்து சட்டங்களை டிங்கரிங் பெயின்டிங் பண்ணாம, புதுசா நல்லா வேகமா யோசிச்சு சட்டம் கொண்டுவரணும்.

உடனே அயல்நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன்னு டூர் போகப்படாது. அங்க நடைமுறையில இருக்கற விஷயங்கள் பல இங்கே இல்லை. பிறந்த உடனே பேரைச் சொல்லு ஐடி கார்டு கொடுக்கணுமுங்கற அமெரிக்காவில போயி கறுப்புப் பணத்தை எப்படி ஹேண்டில் பண்றாங்கன்னு பார்த்துட்டு வந்தா, பிறந்து அஞ்சு வருஷத்துக்குக்கூட பேர் வைக்காமயும், 100 வயசாகி சாகுற வரைக்கும் அட்ரஸ் ப்ரூப் இல்லாமயும் மனுசன் வாழுற இந்த ஊருல அந்த அனுபவம் உதவவே உதவாது.

பப்ளிக்கோ, பிரைவேட்டோ எந்த நிறுவனமானாலும் கறுப்பை வெளுப்பாக்கிற முயற்சியில இறங்குனா பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு ரெகுலேட்டர் சொல்லணும். பார்க்குறோம், பரிசீலிக்கிறோம், கமிட்டி போட்டிருக்கிறோமுன்னு சொல்லாம இதுதான் நடவடிக்கைன்னு சட்டுன்னு எடுக்கணும்.

அதைவிட்டுட்டு எங்கிட்ட பவரு இல்லே! எல்லாரையும் ஒண்ணாச் சேர்த்து ஒரு ரெகுலேட்டர் வரணுமுன்னு பேசிக்கிட்டி ருக்கிறதுல அர்த்தம் இல்லை. ஒருபக்கம், பசி பஞ்சமுன்னு அலையற கூட்டம்; இன்னொரு பக்கம், வரியைக் கட்டாம ஏய்ச்சுக்கிட்டிருக்கிற கூட்டமுன்னு இருந்தா நாடு முன்னேறாதுங்க. நல்லாப் புரிஞ்சுக்கிடுங்க.

என்னையக் கேட்டா, நாகப்பாம்பை (கோப்ரா போஸ்ட்) ஃப்ரீயா விட்டா, அது கறுப்புப் பண முதலைகளை வெட்டவெளிச்சமாக்கியிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism