ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் : கஷ்டமில்லாமல் கட்டுவது எப்படி ?
##~## |
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை அதிகமான குழந்தைகள் அரசாங்கப் பள்ளிகளில் படித்தார்கள். ஆண்டுக்கு ஸ்பெஷல் ஃபீஸ் ரூ.10 கட்டினால் போதும் - ஓராண்டு படிப்பே முடிந்துவிடும். ஆனால், இன்றோ நாளுக்குநாள் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகள் கல்வி பயில்வதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். பள்ளிக் கட்டணங்களும் பல ஆயிரங்களாக மாறிவிட்டன. தனியார் பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு, குறைந்தது ஆண்டிற்கு ரூ.25,000-மும் அதிகபட்சமாக ரூ.1,00,000-மும் செலவாகிறது.
உயர்கல்விச் செலவுகளும் கட்டுக் கடங்காமல் போய்விட்டன. ஆண்டு தோறும் கட்டும் கட்டணங்கள் தவிர, பள்ளி/கல்லூரியில் சேர்க்க டொனேஷன் (?) வேறு தரவேண்டியுள்ளது. இதுதவிர, அவ்வப்போது கல்விச் சுற்றுலா செல்வதற்கு, புராஜக்ட் வேலைக்கு, கலை நிகழ்வுகளுக்கு என்று வேறு பல செலவுகளுக்கு பள்ளியில் இருந்து குழந்தையின் டயரி மூலம் குறிப்பு வந்துவிடும். மேலும், பள்ளி வாகனக் கட்டணம், டியூஷன், கோச்சிங் வகுப்புகள் என்றெல்லாம் தனித்தனியான செலவுகள்!
இவ்வளவு செலவுகளையும் நினைத்துப் பார்த்தால், திருமணமாகாத இளைஞர்கள், திருமணம் செய்துகொள்ள யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். சமீபத் தில் திருமணமான தம்பதியர்கள் என்றால், குழந்தைகள் பெறுவதற்குக்கூட யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால், சரியாகத் திட்டமிட்டால், நீங்கள் யோசிக்கவே வேண்டாம்! கடைசி நிமிட பரபரப்பும் இருக்காது; கைமாற்று பெறத் தேவையும் இருக்காது!

திட்டமிடுவதற்குமுன் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள பல நாடுகளில் அரசாங்கப் பள்ளிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் 90 சதவிகித குழந்தைகள் அரசாங்கப் பள்ளிகளிலேயே பயின்று வருகிறார்கள். வளர்ந்த நாடுகளில் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர் களின் சதவிகிதம் மிக மிகக் குறைவே! அரசாங்கப் பள்ளிகளின் தரம் அந்த அளவிற்கு உயர்வாக உள்ளது என்பதுதான் உண்மை! நமது அரசாங்க பள்ளிகளின் தரம் உயரும் வரை, கல்விச் செலவு களுக்காக நாம் திட்டமிட்டு சேமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இதற்கு என்ன செய்யலாம்? ஊரைப் பொறுத்து, பள்ளியைப் பொறுத்து ஒரு குழந்தைக்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ.24,000 முதல் ரூ.72,000 வரை செலவாகிறது. அப்படி என்றால் இரண்டு குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.48,000 முதல் ரூ.1,44,000 வரை செலவாகும். எல்.கே.ஜி வகுப்பில் ஆரம்பிக்கும் குழந்தைக்கு அடுத்த 14 வருடங்களுக்கு இதுபோன்ற கல்விச் செலவு இருக்கும் என்பதுதான் உண்மை.

பணம் பெருவாரியாக இருப்பவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால், பெரும்பாலான மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஆகும் கல்விச் செலவிற்காக பணத்தைச் சேகரிப்பது என்பது ஒரு பெரிய விஷயம்தான். பொதுவாக, பள்ளிகள் வருடத்திற்கு மூன்று முறையாக கட்டணத்தை வசூல் செய்கின்றன - வகுப்புகள் ஆரம்பிக்கும்போது, பிறகு ஃபர்ஸ்ட் டேர்ம் மற்றும் செகண்ட் டேர்ம் என்று. ஆனால், நமது வருமானமோ மாதா மாதம் வருகிறது. ஆக, மாதா மாதம் நாம் சேமித்து வைத்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் எடுத்து, பள்ளிக் கட்டணத்தைக் கட்டிவிடலாம் இல்லையா?
குறைந்தபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு வருடத்திற்கு செலவாகும் ரூ.48,000-த்தை, மாதத்திற்கு ரூ.4,000-மாகச் சேமிக்கலாம் அல்லவா? உங்களின் இரண்டு குழந்தைகளின் வருடாந்திரப் பள்ளிச் செலவு ரூ.1,44,000 என்றால், மாத சேமிப்பு ரூ.12,000-ஆக இருக்கவேண்டும்.
உங்களுக்கு ஒரு குழந்தைதான் என்றால், நாம் மேலே கூறிய தொகையில் நீங்கள் சேமிக்கவேண்டியது பாதிதான். எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பது முடிவாகிவிட்டது. இனி எவ்வாறு சேமிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஈஸியான வழி, வங்கிச் சேமிப்புக் கணக்குதான் அல்லது பணமாக அலமாரியில்/ உண்டியலில் சேர்த்து வைப்பதுதான். ஆனால், பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்கிற்கு ஆண்டிற்கு கிடைக்கும் வட்டி வெறும் 4 சதவிகிதம்தான்! உண்டியலில் போட்டால் அதுவும் கிடைக்காது. ஆர்.டி போடலாம் - ஆனால், பள்ளிக் கட்டணம் கட்ட அவசரமாகப் பணம் தேவைப்படும்போது, அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. இருப்பதிலேயே பெஸ்ட் எது என்று பார்த்தால், சந்தேகமே இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள்தான்!
கீழே சில ஃபண்டுகளின் பெயரைத் தந்துள்ளேன். அந்த ஃபண்டுகளில் ஏதாவது ஒன்றில் எஸ்.ஐ.பி. மூலம் மாதாமாதம் உங்களுக்குத் தேவையான தொகையைச் சேமித்து வாருங்கள் - உங்கள் குழந்தையின் பள்ளிக் கல்விக்கு ஆகும் செலவிற்கு பிரச்னையே இருக்காது!
1. ரிலையன்ஸ் மணி மேனேஜர் ஃபண்ட்,
2. கோட்டக் ஃப்ளோட்டர் - எல்.டி.பி.,
3. டி.எஸ்.பி-பி.ஆர். மணி மேனேஜர்,
4. ஹெச்.டி.எஃப்.சி. கேஷ் மேனேஜ்மென்ட் ஃபண்ட் - டிரஸரி அட்வான்டேஜ் ப்ளான்,
5. பிர்லா சன் லைஃப் கேஷ் மேனேஜர்.

குழந்தைகளின் பள்ளிச் செலவிற்கு வழி செய்தாகிவிட்டது. இந்தச் செலவு உங்களின் அன்றாடச் வாழ்க்கைச் செலவில் ஒரு அங்கமாகி விடும். ஆனால், குழந்தைகளின் கல்லூரி படிப்புச் செலவும் இன்றைய இந்தியாவில் ஒரு பெரிய செலவுதான். பள்ளி படிப்புச் செலவிற்கும், கல்லூரி படிப்புச் செலவிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பள்ளி படிப்புச் செலவிற்காக வங்கிகளில் கடன் வாங்க முடியாது; ஆனால், கல்லூரி படிப்புச் செலவிற்காக வங்கிகளில் கடன் பெறலாம்!
மாதச் செலவுகள் போக பணம் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்லூரி செலவுகளுக்காக, நல்ல டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி. மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம் - குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் காலம் இருக்கும்பட்சத்தில்! செலவுக்குப் போக பணம் இல்லாத பெற்றோர்கள், வருமானம் அதிகரித்து, கூடுதலான பணம் கிடைக்கும்போது சேமிக்க ஆரம்பிக்கலாம். அல்லது இருக்கவே இருக்கிறது கல்விக் கடன். ஜமாய்ங்கள் பெற்றோர்களே!