ஆசிரியர் பக்கம்
Published:Updated:

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?

கேள்வி-பதில்

##~##
சில வருடங்களுக்கு முன்பு ஒரு வீட்டை வாங்கி பத்திரம் பதிந்தோம். இதற்கான தாய்ப் பத்திரத்தின் அசலை தராமல் இழுத்தடிக்கின்றனர் வீட்டை விற்றவர்கள். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியுமா?

திருமலை, செய்யார்.

சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''உங்களுக்கு வீட்டை விற்றவர் சில காரணங் களால் தாய்ப் பத்திரத்தை வழங்காமல் வைத்திருக் கலாம். குறிப்பாக, வீடு அமைந்துள்ள சர்வே எண்ணில் உள்ள மொத்தச் சொத்தையும் உங்களுக்கு விற்காமல் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்து விற்பனை செய்திருந்தால் தாய்ப் பத்திரத்தை உங்களிடம் கொடுக்க முடியாது. உங்களுக்கு  வீட்டை விற்ற நபர், வேறொருவரிடமிருந்து அந்தச் சொத்தை பகுதியாகப் பிரித்து வாங்கியிருந்தாலும் தாய்ப் பத்திரம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பத்திரப்பதிவு அலுலகத்தில் குறிப்பிட்ட சொத்தின் அல்லது அந்த வீடு அமைந்துள்ள இடத்தின் சான்றிடப்பட்ட நகல் ஆவணங்களைக் கேட்டு பெறமுடியும்.

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?

இதை அந்த வீட்டை விற்றவர் உங்களுக்கு வாங்கித்தர வேண்டும். மேலும், தாய்ப் பத்திரம் இல்லை, தொலைந்துவிட்டது என்றால் அந்த விவரத்தை பத்திரம் எழுதும்போது குறிப்பிட்டு, அந்தச் சொத்து யார் யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிற விவரங்களோடும் பதிவு செய்தால் பிற்காலத்தில் சிக்கல் இருக்காது. தாய்ப் பத்திரம் தரப்படாததற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், இந்த வழிகளில் ஆவணங்களை வாங்க முயற்சிக்கவும்.''

கமாடிட்டி ஃப்யூச்சர் மார்க்கெட்டுக்கும், ஸ்பாட் மார்க்கெட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ரமேஷ், கோவை.

டி.ஜி.செந்தில்வேலன், தலைவர் தென்மண்டலம். எம்.சி.எஃக்ஸ்.

''குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் ஒரு பொருள் தேவைப்படும் என்றால், அதை இன்றைய விலையில் புக் செய்து வைப்பதுதான் ஃப்யூச்சர் மார்க்கெட். இதற்கு மொத்தப் பணத்தையும் கட்டத் தேவையில்லை. புக்கிங் தொகை மட்டும் செலுத்தினால் போதும். இந்த ஒப்பந்தக் காலத்திற்குள் பொருட்கள் விலை ஏறினால் இந்த புக்கிங் செய்துள்ளதை விற்கவும் செய்யலாம். அல்லது ஒப்பந்தக் காலத்திற்குள் பொருட்களை டெலிவரி எடுக்கவோ அல்லது ஒப்பந்தத்தை நீட்டிக்கவோ செய்யலாம். ஸ்பாட் மார்க்கெட் என்பது இன்றைய தேதியில் புக் செய்து இன்றே டெலிவரி எடுக்கவேண்டும். தேவைக்கேற்ப கமாடிட்டி டிரேடிங் எளிதாக இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இந்த ஏற்பாடு.''  

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?

நான் ஒரு பொதுத் துறை வங்கியின் பங்குகளை வைத்துள்ளேன். பங்குப் பத்திரங்கள் தொலைந்துவிட்டன. அதற்குரிய டிவிடெண்ட் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. பங்குப் பத்திரங்கள் இல்லாமல் அந்தப் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியுமா?

தர்மன், சிதம்பரம்.

லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''பங்கு ஆவணம் இல்லாமல் டீமேட் கணக்கிற்கு பங்குகளை கொண்டுவர முடியாது. அதனால் அந்தப் பங்குகளுக்கான நகல் ஆவணங்களை வாங்கியபின் அதன் அடிப்படையில் டீமேட் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். அல்லது நகல் ஆவணத்திற்கு விண்ணப்பிக்கும்போதே பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்றித்தரும்படி அந்நிறுவனத்திடம் கோரலாம். உங்களது பங்குகளின் போலியோ எண் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பித்து இதை மேற்கொள்ளவும்.''

என்னுடைய பான் கார்டில் இருக்கும் பெயர் என்.எஸ்.டி.எல். இணையதளத்தில் மாறி உள்ளது. இதனால் சிக்கல்கள் ஏற்படுமா? இதை மாற்றுவது எப்படி ?

திருக்குமரன், புதுச்சேரி.

ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளானர்.

''பான் கார்டில் இருப்பதுதான் சரியான பெயர் என்றால் என்.எஸ்.டி.எல். அமைப்பின் கவனத்துக்கு இதை உடனடியாக கொண்டு வரவும். உங்களது பான் கார்டு மற்றும் அடையாள விவரங்கள் இவற்றை இணைத்து என்.எஸ்.டி.எல்.-க்கு கடிதம் எழுதினால் இது சரிசெய்யப்படும். இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பான் கார்டில் உள்ளது தவறான பெயர் என்றால், திருத்தத்துக்கு  விண்ணப்பித்துதான் மாற்றிக்கொள்ள முடியும். இதுதவிர, பான் கார்டில் உங்கள் பெயரில் இன்ஷியலும், என்.எஸ்.டி.எல். இணையதளத்தில் இன்ஷியலுக்குப் பதிலாக அப்பா பெயரும் சேர்ந்து வருகிறது என்றால் அதனால் சிக்கல்கள் கிடையாது. ஆனால், என்.எஸ்.டி.எல். இணையதளத்தில் என்ன பெயர் இருக்கிறதோ, அதன்படிதான் உங்கள் வருமான வரி கணக்குகளிலும் பெயர் குறிப்பிடப்படும் என்பது ஞாபகமிருக்கட்டும்.''

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?

எனது அப்பா, அம்மா இருவரும் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். எங்களுடைய பூர்வீக குடும்பச் சொத்தை 9 வருடங்களுக்கு முன்பு பாகம் பிரித்தபோது எனது அப்பாவின் சகோதரர்கள் (சித்தப்பா) பிரித்துக்கொண்டனர். எனது அப்பாவின் பாகத்திற்காக எனக்கும் எனது சகோதரிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், சொன்னபடி தரவில்லை. எனவே, அந்தப் பாகப்பிரிவினையை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியுமா? நானும் எனது சகோதரிகளும் சொத்தில் பங்கு பெற என்ன வழி?

ஒரு வாசகி, திண்டிவனம்.

ஜெ.ஃபிராங்க்ளின், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''குடும்பப் பாகப்பிரிவினை பிரிக்கப்பட்ட போது, உங்களது முழு சம்மதத்துடன் விருப்பத்தின்பேரில் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், அந்தப் பாகப்பிரிவினையை நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்ட பின்னர் அந்தப் பாகப்பிரிவினையை செல்லாது என எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது. உங்கள் தந்தையாரின் பாகத்துக்கு ஈடாக தருவதாகச் சொல்லப்பட்ட தொகையை தராமல் இருந்தால் அதற்காக மட்டுமே நீங்கள் நீதிமன்றம் செல்லமுடியும். பாகப்பிரிவினைக்கு ஈடாக பேசிய பணப்பலன் பாகப்பிரிவினை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அல்லது வாய்மொழியாகச் சொல்லியிருந்தால் அதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மேலும், உங்களுக்கு பணப்பலன் சேராதபட்சத்தில் இத்தனை வருடங்களாக கோராமல் இருந்ததற்கான காரணம், மற்றும் இப்போது கோருவதற்கான நியாயமான காரணத்தை நீதிமன்றத்தில் விளக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது. இதனடிப்படையில் நீதிமன்றம் தகுந்த பரிகாரம் வழங்கும்.''

தாய்ப் பத்திரம் தர மறுத்தால்?