Published:Updated:

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

- நீரை.மகேந்திரன்.

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

- நீரை.மகேந்திரன்.

Published:Updated:

கவர் ஸ்டோரி

##~##

காப்பீட்டுத் துறை கடந்த இருபதாண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது. இன்றைக்கு நகர்ப்புறங்களில் பலரும் தேடி வந்து காப்பீட்டுத் திட்டங்களைப் பெறுவது ஆரோக்கியமான விஷயம்தான். இது ஒருபக்கமிருந்தாலும், திடீரென லட்சக்கணக்கில் பாலிசிகள் காலாவதி ஆகி அதிர்ச்சி அளிப்பது இன்னொரு பக்கம். 2011-12-ல் மட்டும் கிட்டத்தட்ட 1.9 லட்சம் கோடி ரூபாய் கவரேஜ் தொகைகொண்ட பாலிசிகள் புதுப்பிக்கப்படாமலேயே காலாவதி ஆகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விஷயத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்தில் காலாவதி ஆகும் பாலிசிகளின் அளவு 4-5 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. 2011-12 புள்ளிவிவரங்களின்படி, பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 51 சதவிகித டிரெடிஷனல் (யூலிப் அல்லாத) பாலிசிகள் ரினிவல் செய்யப்படவில்லை. சிறிய நிறுவனமான ஃப்யூச்சர் ஜெனரலி நிறுவனத்திற்கு இந்த விகிதம் 49 சதவிகிதமாக உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல், ரிலையன்ஸ், பார்தி ஆக்ஸா ஆகிய நிறுவனங்களில் முறையே 42, 38, 36 சதவிகித பாலிசிகள் காலாவதி ஆகியுள்ளன.

இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நாமும் ஆய்வு மேற்கொண்டோம். நமது ஆய்வும் இந்தப் புள்ளிவிவரங்களை உறுதிபடுத்துவதுபோலத்தான் இருந்தது. பாலிசிகள் எடுத்த பலரும் அதைத் தொடர்ந்து கட்டாமல் விட்டுள்ளனர். 'ஏஜென்ட் இனிக்க இனிக்கப் பேசினார், அதனால் எடுத்தேன்.’ என்கின்றனர். இன்னும் சிலர்  ஏஜென்டுகள் கொடுத்த தவறான உத்தரவாதம் மற்றும் வாக்குறுதி காரணமாக அந்த பாலிசிகளைத் தொடரவில்லை. ஆனால், பாலிசியைத் தொடராமல் விட்டவர்கள் மாற்றாக எந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தையும் எடுக்கவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி.

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

இதற்கு என்ன காரணம்? இதைத் தடுப்பது எப்படி? என்கிற கேள்விகளை இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவரும், காப்பீட்டு ஆலோசகருமான வி.கிருஷ்ணதாசனிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

''இன்ஷூரன்ஸ் பாலிசிகள் தொடர்ந்து கட்டப்படாமல் இடையிலேயே நிறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், ஏஜென்டுகள் தரும் தவறான வாக்குறுதிகள்தான். சில பாலிசிகளை எடுத்தால் அளவுக்கதிமான லாபம் கிடைக்கும் என்று ஆசைகாட்டிவிடுகிறார்கள். இதனை அப்படியே உண்மை என்று நம்பும் பாலிசிதாரர்கள், பிற்பாடு ஏமாறவே செய்கிறார்கள். இதனால் பாலிசிக்கான பிரீமியத்தைத் தொடர்ந்து கட்டாமல், அந்த பாலிசி காலாவதியாக விட்டு, நஷ்டம் அடைகிறார்கள்.

ஆனால், பாலிசிகள் காலாவதி ஆவதற்கு இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகளை மட்டுமே குறை சொல்ல முடியாது. இன்ஷூரன்ஸ் பற்றி மக்கள் பல தவறான அபிப்ராயங்களையும் புரிதல்களையும் வைத்திருக்கின்றனர். இன்ஷூரன்ஸை சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே, எதிர்காலத்தில் பாலிசிகள் காலாவதி ஆவதைத் தடுக்க முடியும்'' என்ற கிருஷ்ணதாசன், அதற்கான வழிகளையும் சொன்னார்.

முதலீடல்ல, பாதுகாப்பு!

காப்பீட்டுக்கு பிரீமியம் கட்டினால், பாலிசி முடிவின்போது எவ்வளவு பணம் நமக்குக் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துதான் இன்றைக்கு பலரும் இன்ஷூரன்ஸ் எடுக்கின்றனர். இன்றைக்கு பணம் தந்துவிட்டு, அதற்கான ரிட்டர்னை எதிர்பார்க்க, இன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல. இன்ஷூரன்ஸ் என்பது ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில், அவரை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இதை செய்யும் போது முதலீடு செய்கிறோம் அல்லது சேமிக்கிறோம் என்று நினைக்காமல், எதிர்காலத்தில் நம் குடும்பத்திற்கான பாதுகாப்பை மேற்கொள்கிறோம் என்கிற நோக்கத்தில் பாலிசி எடுத்தால், அது காலாவதி ஆகவே ஆகாது.

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்!

ஏஜென்டுகள் தரும் வாக்குறுதி களையும் ஆலோசனைகளையும் அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர்கள் சொல்லும் இன்ஷூரன்ஸ் திட்டம் நமக்கு ஏற்றதுதானா, அதிலுள்ள சிறப்புகள் என்னென்ன, பாதகங்கள் என்னென்ன என பல விஷயங்களை அவர்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அல்லது அவர்கள் தரும் ஆவணங்களை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்கள் புரியவில்லை எனில், விஷயம் தெரிந்த ஒருவரின் உதவியை நாடுவதில் தவறில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்து கொண்டபிறகே அந்த பாலிசியை எடுக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யவேண்டும்.

தொடர்ந்து செல்லுங்கள்!

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

உங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்று முடிவு செய்தபிறகு, கவரேஜ் தொகை எவ்வளவு, பாலிசி பிரீமியம் எவ்வளவு, பிரீமியம் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கும் கால அளவு எவ்வளவு என்பது பற்றி தெளிவாக அறிந்து வைத்திருக்கவேண்டும். தவிர, பிரீமியம் பணத்தை எப்படி சேமித்து, தவறாமல் கட்டுவது என்பதற்கு நம்மிடம் திட்டம் இருக்கவேண்டும். அப்போதுதான், எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தைத் தவறாமல் கட்ட முடியும்.

வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸா?

வருமான வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் நிறையவே காணப்படுகிறது. வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மிகப் பெரிய தவறு. ஆரம்பத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிக்காக சில நூறு ரூபாய் வரிச் சலுகை பெறுவோம். பிற்பாடு வீட்டுக் கடன் வாங்கும்போது சில ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும். அப்போது பாலிசி மூலம் கிடைக்கும் வரிச் சலுகையை உபயோகப்படுத்த முடியாமல் கூட போகலாம். எனவே, பாலிசிக்கான பணத்தைத் தொடர்ந்து கட்டாமல் விட்டால் என்ன என்றுகூட நினைக்கத் தோன்றும். வரிச் சலுகைக்காக பாலிசி எடுக்கவில்லை; குடும்பத்தின் பாதுகாப்புக்காகத்தான் எடுக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் பாலிசியை காலாவதி ஆகவிடமாட்டோம்.

மூன்று முக்கிய திட்டங்கள்!

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் மூன்று முக்கிய வகைகள் உண்டு. இந்த மூன்று வகை பாலிசிகளில் நமக்கேற்றது எது என்பதை ஆரம்பத்திலேயே ஆராய்ந்து தேர்ந்தெடுத்தால், பிற்பாடு பிரச்னையே வராது. அதற்கு அந்த மூன்று வகை பாலிசிகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்:

ஒப்பீட்டளவில் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி திட்டங்கள். இதில் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது. உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை குடும்ப உறுப்பினர் களுக்கு கிடைக்கும். ஒருவர் தனது ஆண்டு வருமானத்தைப்போல 10 - 15 மடங்கு கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க வேண்டும்.

எண்டோவ்மென்ட்:

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

கட்டிய பணமும் திரும்ப வரவேண்டும், இன்ஷூரன்ஸ் கவரேஜும் வேண்டும் என்று நினைக்கும் நம் மக்களுக்கு ஏற்ற திட்டமிது. ஆனால், இத்திட்டத்தின் மூலம் குறைவான இன்ஷூரன்ஸ் கவரேஜ் மட்டுமே கிடைக்கும். தவிர, கட்டும் பணத்திற்கு கிடைக்கும் வருமானமும் 5-6 சதவிகிதம் என்கிற அளவில் மட்டுமே இருக்கும். இதில் கட்டப்படும் பிரீமியம் அதிகமாக இருக்கும். தொடர்ந்து பீரீமியம் தொகை கட்டமுடியும் என்கிறபட்சத்தில் எண்டோவ்மென்ட் எடுக்கலாம். பாலிசியைத் தொடர முடியவில்லை என்றால் முதிர்வுக் காலத்திற்கு முன்பே சரண்டர் செய்யலாம். ஆனால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பிரீமியம் கட்டினால்தான் பாலிசியை சரண்டர் செய்யமுடியும். எத்தனை வருடம் பணம் கட்டியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே சரண்டர் வேல்யூவும் அமையும். ஆனால், பாலிசியை இடையில் நிறுத்தினால் நஷ்டம் என்பது மட்டும் நிச்சயம்.

யூலிப்:

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

இன்ஷூரன்ஸ் கவரேஜ், முதலீடு என்கிற இரு அம்சங்களைக்கொண்ட திட்டம் இது. முதலீட்டு நோக்கில் எதனையும் அணுகுகிறவர்களுக்கு இத்திட்டம் ஏற்றது. இத்திட்டம் மூலம் கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம் சந்தையின் போக்குக்கு ஏற்ப அமையும். இத்திட்டத்தின் மூலம் இன்ஷூரன்ஸுக்கு ஒதுக்கப்படும் தொகையும் குறைவுதான். குறைவான வருவாய் கொண்டவர்கள் இத்திட்டத்தை எடுக்கக்கூடாது. நல்ல பொருளாதார பின்புலமும், சந்தை இறங்கியுள்ள சமயம் மீண்டும் முதலீடு செய்யக்கூடிய அளவு பணவசதியும் கொண்டவர்களே இத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம். 45 வயதுக்கு

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

மேற்பட்டவர்கள் ரிஸ்க் மிகுந்த இத்திட்டத்தை எடுக்க வேண்டாம்.

எது பெஸ்ட்?

குறைவான பிரீமியத்தில் அதிக காப்பீடு தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம்தான் பெஸ்ட். எல்லோரும் இத்திட்டத்தைக் கட்டாயம் எடுத்தாக வேண்டும். கட்டிய பணம் கட்டாயம் திரும்பவர வேண்டும் என்பவர்கள் எண்டோவ்மென்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஆனால், இதில் குறைந்த அளவு கவரேஜ்தான் கிடைக்கும்.

ஆக, நமக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எது, கவரேஜ் எவ்வளவு இருக்க வேண்டும், அதற்கான பிரீமியத்தை நம்மால் கட்டமுடியுமா என்கிற கேள்விகளுக்கு முன்பே பதில் கண்டுவிட்டால், நம்முடைய இன்ஷூரன்ஸ் பாலிசி எப்படி காலாவதி ஆகும்?'' என்கிற கேள்வியோடு முடித்தார் கிருஷ்ணதாசன்.

பாதியில் உயிர்விடும் பாலிசிகள்...

இனியாவது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது இவர் சொல்வதை மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism