Published:Updated:

எடக்கு மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

எடக்கு மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

எடக்கு மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

எடக்கு மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

Published:Updated:
##~##

போன வாரம் நாணயம் கல்வி சிறப்பிதழ் வந்தாலும் வந்துச்சு, சுத்திமுத்தி இருக்கிறவங்க என்கிட்ட பல கேள்விகளைக் கேட்டு தொளைச்சு எடுத்திட்டாங்க. ஏகாம்பரம், என் பையனோட படிப்புக்கு எவ்வளவு செலவழிக்கலாம்? இப்படி கட்டணங்கள் ஏறுதே, இது சரியா? என் மகனை இங்கிலீஷ் மீடியத்துல சேர்க்கலாமா? இன்டர்நேஷனல் ஸ்கூல்ல சேர்க்கலாமா? ஸ்கூலோட குவாலிட்டியை எப்படி தெரிஞ்சுக்கிறது?

தனியார் கல்லூரியில படிக்கப் போனா, கூசாம டொனேஷன் கேட்குறாங்களே, இது சரியா? அப்படி காசு கொடுத்து படிச்சதுக்கப்புறம் வர்ற வருமானம் வட்டிக்காவது கட்டுமா? போட்ட முதலீட்டை எடுக்கறதுக்கு எத்தனை வருஷமாகும்? பி.இ. படிச்சுட்டு கேம்பஸ் ப்ளேஸ்மென்டுல வேலை கிடைக்கலை! மேற்கொண்டு படிக்கலாமா, கூடாதா? காலேஜ் கேம்பஸ் ப்ளேஸ்மென்டுல செலக்ட் ஆனவங்களுக்கு இப்ப வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க. வெளியே சொற்ப சம்பளத்துக்கு வேலைக்குப் போலாமா? இப்படி பலரும் பல கேள்வி கேட்டு என்னை திக்குமுக்காட வச்சுட்டாங்க!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லாருக்கும் பொறுமையாப் பதில் சொன்னேன். அந்தப் பதிலை இப்ப உங்களுக்கும் சொல்றேன். ஆனா, ஒரு கண்டிஷன். என் பதிலைக் கேட்டுப்புட்டு சண்டைக்கு வரப்படாது. ஓகே-யா?

முதல்ல எல்.கே.ஜி. சம்பந்தமான கேள்வி. 'ஏகாம்பரம், வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல ஆறாயிரம் ஃபீஸ் ஆகுது. பத்து கிலோ மீட்டர் தள்ளியிருக்கற ஸ்கூல்ல அறுபதாயிரம் ஆகுது. வீட்டுல எல்லோரும் அங்கதான் பொண்ணை அனுப்பனும்னு ஒத்தைக்கால்ல நிக்கிறாங்க!’ என்றார். 

எடக்கு  மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

'ஆண்டவன் படைப்புல எல்லாக் குழந்தையும் ஒண்ணுதான்யா. எல்.கே.ஜி. குழந்தையை எங்க சேர்த்தாலும் நல்லா படிக்கும். இப்ப உன் பிரச்னை ஆறாயிரமா, அறுபதாயிரமாங்கிறது. இதுல இரண்டு விஷயத்தைப் பார்க்கணும். அறுபதாயிரம் வாங்குற ஸ்கூல்ல அதுக்கு ஏத்தமாதிரி வசதி வாய்ப்பு இருக்கா, ஒழுங்கா  சொல்லித் தர்றாங்களா, இல்லை ஆறாயிரம் வாங்குற ஸ்கூலைவிட குறைச்சலான விஷயங்களைப் பண்ணிட்டு அதிக பணத்தை மட்டும்தான் கேட்குறாங்களான்னு பார்க்கணுமுங்கன்னேன். தவிர, ஒனக்கு இப்ப ரெண்டாவது குழந்தையும் பொறக்கப் போகுது. அந்தக் குழந்தையையும் இதே ஸ்கூல்ல சேர்த்து ரெண்டு அறுபதாயிரம் ரூபா உன்னால கட்ட முடியுமா? அதனால எல்.கே.ஜி. ஃபீஸை மட்டும் மனசுல வச்சுக்காதே. வகுப்பு ஏற ஏற ஃபீஸும் ஏறும். அதை யோசிச்சு முடிவெடு’ன்னேன்.

'என்ன அநியாயம். ஃபீஸை இப்படிப் போட்டுக் கொல்றானுங்க. எல்லோருக்கும் அத்தியாவசியமான தரமான கல்வி நியாயமான விலையில கிடைக்கணுமா வேணாமா?’ன்னு என்னை உலுப்ப ஆரம்பிச்சுட்டாரு. 'அய்யா சாமி,  பணம் கட்ட வசதியிருந்தா ஆசைப்படுற ஸ்கூல்ல சேர்த்துவிடு. இல்லாட்டி, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற  ஸ்கூல்ல சேர்த்துவிட்டுடு’ன்னு கறாரா சொல்லிட்டேன்.

''ஏகாம்பரம், நீ வரவர சரியில்லை''ன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாரு நண்பரு. ''நண்பா எனக்கு காருல போகணுமின்னு ஆசைதான். ஆனா, 1998-ல வாங்குன டூ வீலரை ரிப்பேர் பாத்து பெயின்ட் அடிச்சு எஃப்.சி. பண்ண மட்டும்தான் எங்கிட்ட காசு இருக்கு. மாசம் நல்ல வருமானம் வந்தாலும் அதுக்கேத்த செலவு இருக்கு. கார் கம்பெனிக்காரன் ஒரு ரூபாய் கட்டி காரை எடுத்துக்கங்கிறான். அதப்பார்த்து நான் டூ வீலரை வித்துட்டு, கார் வாங்கினா தினமும் நான் போற ஐம்பது கிலோ மீட்டருக்கு பெட்ரோல் யார் போடுவா? மாசா மாசம் ட்யூ யார் கட்டுவா? அதேமாதிரிதான் குழந்தைங்க கல்வியும். ப்ரிகேஜி ஃபீஸுலேயிருந்து ப்ளஸ்டூ வரைக்கும் ஃபீஸ் ஏறிக்கிட்டே போகும். நம்ம வீட்டுல இருக்கிற குழந்தைங்க ஒண்ணா, ரெண்டான்னு பார்த்து நம்ம வருமானத்துக்கு எந்த ஸ்கூல் சரின்னு பார்த்துதான் சேர்க்கணும்.  அடிப்படைக் கல்விதான் ஆணிவேரு. அதுதான் ஆயுசு முழுவதும் ஒரு மனுஷன் எப்படி வாழப் போறான்கிறதை முடிவு பண்றது. இதுல கல்வியின் தரத்தைப் பார்க்கணும்; நம்மளால இயலுமான்னு பார்க்கணும். வெறும் ஊர் கவுரவத்துக்கு நாம் பலியாகக்கூடாது’ன்னவுடன், நண்பரு தெளிவாயிட்டாரு.

அடுத்தபடியா பல பேரு இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ். சேர்க்கறதுக்கான கேள்வியைப் போட்டாங்க. 'எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கேப்பிடேஷன் தர்றது தப்புன்னு சட்டம் இருக்கு. ஆனா, வாங்கிக்கிட்டுத்தான் இருக்கிறாங்க’ன்னு ஒருத்தரு என்னையப் போட்டுத் தாக்கினாரு. ''அண்ணே கோவிச்சுக்காதீங்க. ரசீது இல்லாமப் பணம் கொடுக்க உங்களை மாதிரி துணிஞ்சவுங்க இருக்கிறதால வாங்கிறவுங்க வாங்கிக்கிட்டு இருக்கிறாங்க. ஒரு அஞ்சு வருஷம் பணம் தராம யாரும் சேராம இருக்கட்டும் இந்த காலேஜ் கதியெல்லாம் என்னவாகுதுன்னு பாருங்க’ன்னதும் அவரு சைலன்ட் ஆயிட்டாரு.

இன்ஜினீயரிங் கேள்வி கேட்ட நண்பருங் கதாங்க தமாஸோட உச்சக்கட்டம். அதுல இரண்டு பேரு, 'என் பையன் ப்ளஸ்டூ-ல ஜஸ்ட் பாஸ் பண்ணியிருக்கான். எப்படியாவது இன்ஜினீயரிங் காலேஜுல சேர்த்துடணும். அவன் இன்ஜினீயரிங்கில சூப்பரா வருவான்’னு சொன்னாரு. எனக்கு கடுப்பாயிடுச்சு. ''ஏன்யா, பள்ளிக்கூடத்துல பதினைஞ்சு வருஷம் படிச்சதுல ஜஸ்ட் பாஸ் பண்ணுனவன், அடுத்த நாலு வருஷத்துல எப்படிய்யா சூப்பரா வந்துடுவான்?''னு வாய்தவறி கேட்டுட்டேன். மனுஷன் கொந்தளிச்சு, என் மேல கோபத் தீயை கக்க ஆரம்பிச்சாரு. ''அய்யா, கோபப்படாதீங்க. கணக்குல ஜஸ்ட் பாஸ் பண்ணுனவனை காசைத் தந்து இன்ஜினீயரிங் சேர்த்து அப்புறம் அவனுக்கு வேலை கிடைக்கலேன்னு சலிச்சுக்கிறதுல அர்த்தமில்லீங்க. உயர்கல்வியோட ஃபீஸும் ஏறிக்கிட்டே போகுது. கையில இருக்கிற காசையெல்லாம் கேப்பிட்டேஷனா கொடுத்து பேங்கில லோன் தர்றாங்கன்னு வாங்கி இவங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் இன்ஜினீயரிங் சேர்த்தா, அவனுக்கு சரியான வேலை  கிடைக்காது. இதைப் புரிஞ்சுக்கப்பா மொதல்ல'' என்றதும், ''ஏகாம்பரம், நீ சொல்றதும் நியாயமாத்தான் படுது''ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.

கடைசியா,  பையனை எம்.பி.ஏ. படிக்க வைக்க ஆசைப்படுறதா ரெண்டு, மூணு பேரு கேட்டாங்க. ''அப்படி என்னய்யா திடீர்னு எல்லாரும் எம்.பி.ஏ.ன்னு கௌம்பிட்டீங்க?''ன்னு காரணம் கேட்டேன். ''அண்ணே, என் பையன் இந்த வருஷம்தான் இன்ஜினீயரிங் முடிச்சான். கேம்பஸில வேலை கிடைக்கலே. அதனால தொடர்ந்து படிக்கட்டுமுன்னு நெனைக்கிறேன். பேசாம, எம்.பி.ஏ.வுல சேர்த்துவிட்டுடவா?'' என்று கேட்டாரு ஒருத்தரு. இன்னொருத்தரு, ''படிக்கிற காலத்துலேயே ஒரு பி.ஜி. குவாலிபிகேஷன்

எடக்கு  மடக்கு : கல்வி வியாபாரமானது யார் குத்தம் ?

படிச்சு வச்சுக்கிறது நல்லது. எம்.ஏ. படிக்கிறதைவிட எம்.பி.ஏ. படிச்சா, இன்னும் பந்தாவா இருக்கும்ல'' என்றார். இதையும் தாண்டி இன்னொருத்தரு, ''என் பொண்ணு இன்ஜினீயரிங் முடிச்சுட்டா. அடுத்த வருஷம்தான் குருபலன் வருது. வீட்டுல இருந்தா அக்கா, தங்கச்சி சண்டையைத் தீர்க்க முடியாது. அதுக்காக எம்.பி.ஏ. சேர்த்துடலா?''முன்னு இருக்கேன்.

இப்படி எல்லாம் கேக்குறதைப் பார்த்தா, என் ரத்தம்தாங்க கொதிக்குது. ''எம்.பி.ஏ. இந்த மாதிரி விஷயங்களுக்காகப் படிக்கிற படிப்பில்லேங்க. மனசுலேயும் கண்ணுலேயும் தீயை வச்சுக்கிட்டு படிக்கவேண்டிய படிப்பு. சாதிக்கணுமின்னு நினைக்கவேண்டியவங்க படிக்கவேண்டிய படிப்பு. சாக்குபோக்குக்காக படிக்கவேண்டிய படிப்பில்லை''ன்னு பட்டுன்னு சொல்லிப்புட்டேன். அப்புறம் என்ன அடிவாங்காத குறைதான்.

''இப்படி பலபேரு பல ஐடியாவோட கல்விச்சாலைகளை நோக்கி வர்றதாலதான் வியாபார நோக்கம் பெருகுது. காசை வாங்கிப் போட்டுட்டு கார்பேஜ் இன்-கார்பேஜ் அவுட்டுங்கிற கான்செப்ட் போயிட்டிருக்கு. கல்வி வியாபாரமாயிடுச்சு. இதை மொத்தமா மாத்தணும் ஏகாம்பரம்''ன்னு கடைசியா ஒருத்தரு வந்து எங்கிட்ட சாமியாடீனாருங்க. நானும் எவ்வளவுதான் பொறுத்துக்கிட்டிருக்கிறது. அவரை நான் புரட்டி எடுத்துட்டேங்க.

''ப்ளஸ் டூ ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே க்யூவுல நின்னு கேப்பிட்டேஷனை கேஷா கொடுத்து துண்டு சீட்டு வாங்கிறது யார் குத்தம்? கணக்கே வராதவனை இன்ஜினீயரிங் சேர்க்க ஆசைப்படுறீங்களே இது யார் குத்தம்? மளிகைக்கடையில சாமான் வாங்கிகிட்டு மீதி சில்லறையை கணக்குப்பாத்து சரியா வாங்கீட்டு வர முடியாதவனை எப்படியாவது எம்பிஏ சேர்த்துடனுமுன்னு நினைக்கிறீங்களே! இது யார் குத்தம்? 80 சதவிகிதத்துக்கு கீழே கட்டாஃப் வாங்குன மகன்/மகளை இன்ஜினீயரிங் சேர்த்தா பிரயோஜனம் இல்லேன்னு ஜனங்களை அஞ்சு வருஷம் நினைக்கச் சொல்லுங்கப் பார்ப்போம். இன்னைக்கு இருக்கிறதுல 75 சதவிகித காலேஜ் காலியா போயிடும்.

தேவையும் தகுதியும் அறிஞ்சு செயல்படணும். ஒரு படிப்புல சேர்க்கிறப்பவே அந்தப் படிப்புக்கு அவன் லாயக்குப்படுவானான்னு பார்க்கணும். அதைவிட்டுட்டு உலகத்தைத் திருத்தணுமுன்னு பேசிக்கிட்டு திரியப்படாது''ன்னு போட்டேன் ஒரு போடு. ஒரு மொறை மொறைச்சுட்டு போயிட்டாரு.

ஃப்ரண்ட்ஷிப் கட்டாயிடுமடா ஏகாம்பர முன்னு என் மைண்ட் வாய்ஸ் சொல்லுச்சு. இருந்தாலும் நல்லதைத்தானே சொன்னேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism