Published:Updated:

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

நீரை.மகேந்திரன்

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

நீரை.மகேந்திரன்

Published:Updated:

திட்டமிடல்

##~##

நண்பர் முகிலனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை;   திருமணம் முடித்த சில மாதங்களிலேயே சென்னையில் ஒரு வீட்டையும் வாங்கிவிடலாம் என திட்டமிட்டவர் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.டி. கம்பெனி என்பதால் கைநிறைய சம்பளம்தான். தவிர, மனைவிக்கும் ஐ.டி. நிறுவனத்திலேயே வேலை என்பதால், இரண்டு சம்பளத்தையும் திட்டமிட்டு நல்ல வசதியான டபுள் பெட்ரூம் ஃப்ளாட் வாங்கி விட்டார். ஏற்கெனவே வாங்கி இருந்த கல்யாணக் கடன் ஒருபக்கம் இழுத்தாலும், சம்பள உயர்வு வரவர, அடுத்தடுத்த வருடங்களில் கடனைத் தீர்த்துவிடலாம் என்பதுதான் முகிலனின் திட்டம்.

இரண்டு வருடங்கள் அவர் திட்டம் போட்டபடியே எல்லாம் சுமுகமாகத்தான் சென்றது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஐ.டி. கம்பெனிகள் ஆட்டம் கண்டன. முகிலனின் வேலை போகவில்லை என்றாலும், வருடாந்திர சம்பள உயர்வில் விழுந்தது அடி. 15-20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு எதிர்பார்த்தவருக்கு 10 சதவிகிதம்கூட கிடைக்கவில்லை.

இந்த சமயத்தில் முகிலனுக்கு குழந்தையும் பிறக்க, மனைவியின் வருமானம் தடைபட்டது. ஒரு சம்பளமும் கட், எதிர்பார்த்த சம்பள உயர்வும் கட் என இரண்டு சிக்கலில் சிக்கி, வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.- யைக் கட்ட முடியாமல் திக்குமுக்காட, கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த வீட்டை விற்கவேண்டிய நிலைக்குப் போனார் முகிலன். சரியான திட்டமிடல் இல்லாமல் கடனை வாங்கியதால் இந்த நிலைமை என்பதைப் பிறகு புரிந்துகொண்டார்.

இதில் முக்கியமான விஷயம், இப்போதைய வருமானத்தின் அடிப்படையில் திட்டமிடுவதை விட, எதிர்கால வருமான உயர்வை எதிர்பார்த்து, அதற்கேற்ப திட்டமிட்டதுதான் முகிலன் செய்த பெரிய தவறு. முகிலன்  மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் செய்யும் தவறு இது.  

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

பொதுவாக, சம்பள உயர்வு ஆண்டுக்காண்டு உயர்ந்துவரும் என்றாலும், கடந்த சில வருடங்களாக ஊதிய உயர்வின் சதவிகிதம் என்பது குறைந்துகொண்டே வருகிறது. 2007-ல் 13.8 சதவிகிதமாக இருந்த சம்பள உயர்வு, 2008-ல் 11.4 சதவிகிதமாகவும், 2009-ல் 11.2%, 2010-ல் 10.4%, 2011-12/13-களில் 9.4 சதவிகிதமாகவும் குறைந்திருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். ஆனால், பணவீக்க விகிதமோ தொடர்ந்து உயர்ந்துகொண்டேதான் போகிறது. இந்த இரண்டு விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எக்கச்சக்கமாக கடனை வாங்கி, கஷ்டப்படுகின்றனர் இன்றைய இளைஞர்கள்.  

இன்றைய நிலையில் எதிர்காலத் திட்டமிடல் எப்படி இருக்கவேண்டும், எவற்றை உள்ளபடி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், சம்பள உயர்வை எதிர்பார்த்து செய்துகொள்ள வேண்டிய திட்டங்கள் என்னென்ன என நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

''தேவை எது, அத்தியாவசிய தேவை எது என பிரித்து அறிந்துகொள்ளாமல் சகட்டுமேனிக்கு செலவு செய்கின்றனர் இன்றைய இளைஞர்கள். இ.எம்.ஐ. வசதியும் தாராளமாகக் கிடைப்பதால் செலவு செய்வதும் எளிதாகிவிட்டது. அதேபோல, முன்பு கடன் வாங்கவே பலரும் யோசிப்பார்கள். இன்று, பெர்சனல் லோன் முதல் ஹவுஸிங் லோன் வரை கொஞ்சம்கூட யோசிக்காமல் வாங்குகிறார்கள். கடன் வாங்குவது சரிதான். அப்படி வாங்குகிறபோது தற்போதைய வருவாய் எவ்வளவு, குடும்ப செலவு என்ன, எவ்வளவு தொகை வரை கடன் வாங்கும் தகுதி நமக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு வாங்கவேண்டும். அப்போதுகூட, எதிர்கால வருமானத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படை யில் கடன் வாங்கக்கூடாது'' என்றவர், எதிர்கால வருமானத்தை வைத்து திட்டமிடும்போது கவனிக்கவேண்டிய சில விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

தேவை / அவசியத் தேவை!

''இந்த இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவையைக் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், அவசியத் தேவை என்பதைக் குறைத்துக்கொள்ள முடியாது. ஒரு போன் தேவை என்றால் உங்கள் பயன்பாடு என்ன என்பதற்கு ஏற்ப வாங்கலாம். அதிக விலை தந்து வாங்கி, அதில் பல அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதுபோல திட்டமிடக்கூடாது.  

  லைஃப் ஸ்டைல் செலவுகள்!

நமது வருமானம் உயருகிறதோ இல்லையோ, தற்போதைய வருமானத்தில் நாம் செய்கின்ற செலவு என்ன வகையாக பிரதிபலிக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வீடு, வீட்டுமனை, தங்க நகைகள் வாங்குவது போன்ற செலவுகள் நமக்கு சொத்தாக மாறுகிறது. நாளடைவில் இது வளர்ச்சி அடையவும் செய்யும். ஆனால், இதர லைஃப் ஸ்டைல் செலவுகள், குறிப்பாக, ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங்மெஷின், எல்.சி.டி. என ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பது கைமீறிய செலவுகள்தான். இவற்றை கவனித்து ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.  

சேமிப்பு / நீண்டகால முதலீடுகள்!  

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

சம்பள உயர்வு இல்லை என்றாலும், நமது வழக்கமான செலவுகளைக் குறைக்க முடியாது என்று சேமிப்பிலோ அல்லது நீண்டகால நோக்க முதலீடுகளிலோ கைவைக்கக் கூடாது. ஓய்வுக்கால சேமிப்பு, குழந்தைகள் எதிர்கால சேமிப்பு, காப்பீடு செலவுகள் போன்றவற்றை குறைத்துக்கொள்வதோ அல்லது தவிர்க்கவோ கூடாது. வருமானம் அதிகரித்தால் இவற்றை அதிகரித்துக்கொள்ள வேண்டுமே தவிர, குறைத்துக்கொள்வதோ; முழுமையாக நிறுத்திக்கொள்வதோ கூடாது.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது!

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கக்கூடாது என்றாலும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் செலவுகள், சுற்றுலா போன்றவற்றுக்கு செலவு செய்யத் திட்டமிடலாம். எதிர்கால வருமானத்தைக் கணக்கிட்டு வீட்டுக் கடனை வாங்கக்கூடாது. மேலும், ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக நமது செலவினங்களும் அதிகரிக்கும் என்பதால், எதிர்பார்த்த சம்பள உயர்வு இல்லையென்றால் நெருக்கடி ஆகிவிடும்.

வேலை மாறுவது!

சம்பள உயர்வுக்கு ஏற்ப வேலை மாறுவது என்பது இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. அதுபோல, வேலையின் தன்மைக்கு ஏற்ப வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொள்வது என செலவு செய்யும் போக்கு உள்ளது. எந்த நோக்கத்திற்காக வேலை மாறினோமோ, அது நிறைவேறுவது கிடையாது. உடனடியாக கார் லோன் போன்றவற்றை வாங்கிவிடுவார்கள். சம்பளத்துக்கு ஏற்ப வேலை மாறினாலும் அந்த வருமான உயர்வை வைத்து சேமிப்பு/முதலீட்டுக்குத் திட்டமிடுங்கள். ஏற்கெனவே

சம்பள உயர்வை எதிர்பார்த்து கடன் வாங்கலாமா?

10 சதவிகித சேமிப்பு என்றால், அதை 20 சத விகிதமாக உயர்த்தவும்.

பிராண்டட் பொருட்கள்!

சில தவிர்க்க முடியாத காலகட்டங்களில் செலவை குறைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்யலாம். குறிப்பாக, பிராண்ட் வேல்யூவிற்காக செலவு செய்வதைவிட, அதே தரத்தில் கிடைக்கக்கூடிய பிற பொருட்களைப் பயன்படுத்துவது. இது உங்களது தரத்தையும் குறைக்காது, பொருளாதாரத்தையும் பாதிக்காது.

இ.எம்.ஐ. காலம் நீட்டிப்பு!

எதிர்பார்த்த அளவு சம்பள உயர்வு இல்லை, செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக கடன் கட்டுவதில் நெருக்கடி ஆகலாம். வீட்டுக் கடன் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப இ.எம்.ஐ. காலத்தை அதிகரித்து கேட்கலாம். இதன்மூலம் தற்போது கட்டிவரும் இ.எம்.ஐ. தொகை குறைவதால் உடனடியாக சமாளித்துக்கொள்ளலாம்.

ஆக, லைஃப் ஸ்டைல் தொடர்பான விஷயங்களுக்கு வேண்டுமானாலும் சம்பள உயர்வை ஓரளவுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நீண்டகால கடன்களை வாங்கும் போது சம்பள உயர்வை நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது'' என்று முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.  

இல்லாததை வைத்து திட்டமிடுவதைவிட, இருப்பதை வைத்து திட்டமிட்டால் கஷ்டப்படாமல் வாழலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism