Published:Updated:

ஷேருச்சாமி - எறக்கத்துல வாங்கு...ஏத்தத்துல வித்திடு !

ஷேருச்சாமி - எறக்கத்துல வாங்கு...ஏத்தத்துல வித்திடு !

##~##

''அறிவு, சென்செக்ஸ் 526 புள்ளி காலியாயிடுச்சே!'' - அறிவழகனுக்கு போன் செய்து அலறினான் செல்வம். ''செல்லு, நானும் அதைப் பாத்துட்டுதான் பதறிப் போயி உக்காந்திருக்கேன்'' - பதிலுக்குப் புலம்பினான் செல்வம். ''சரி, சாமியைப் போயி பார்க்கலாம், வர்றியா? அவரோட பேசினாத்தான் ஒரு தெளிவு கிடைக்கும்'' என்று அறிவு அழைக்க, இருவரும் சாமிக்கு போன் செய்தார்கள். ''தெரியும்யா நீங்க ரெண்டு பேரும் போன் பண்ணுவீங்கன்னு. நாளைக்கு சாயங்காலம் என் பங்களாவுக்கு வந்துடுங்க!'' என்றார். அவர் சொன்ன நேரத்துக்கு பங்களாவுக்குள் நுழைய, புல்தரையில் சேரில் உக்காந்து அவர் ஹாயாக காத்து வாங்க, அறிவும் செல்லும் பக்கத்தில் போய் உக்காந்துகொண்டார்கள்.  

''சாமி, நீங்க போன ஜனவரியிலயே சொன்னீங்க. இந்த வருஷம் பூராவுமே சந்தை வாலட்டைலா இருக்குமுன்னு. டார்கெட் வந்தா லாபத்தை புக் பண்ணிடுன்னும் சொன்னீங்க. நீங்க சொன்னதைக் கேட்காம கொஞ்சம் பேராசையில பொசிஷனை எடுத்தேன். இப்ப சிக்கல்ல மாட்டித் தவிக்கிறேன். ஒருபக்கம் ஸ்டாக் மார்க்கெட் இறங்குது, தங்கம் இறங்குது. ஆனா, டாலர் மட்டும் ஏத்தமா இருக்கே! தவிர, இந்த க்யூ.இ., க்யூ.இ-ங்கிறாங்களே அது என்ன? இந்தியாவுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்'' என்று கோரஸாக கேட்டனர் அறிவும் செல்லும்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சிம்பிளா நீங்க புரிஞ்சுக்கிற மாதிரி சொல்றேன். 2008-ல அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு தேக்கநிலைக்கு வந்தது உங்களுக்குத் தெரியும். தேக்கநிலை வர்றப்ப எப்பவுமே பணத்தைக் கொஞ்சம் அதிகமா புழக்கத்துலவிட்டா ஜனங்க ஜாமான்செட்டுன்னு வாங்கி பொருளாதாரத்தை ஒரு ஓட்டத்துல வைச்சுப்பாங்கங்குறது ஒரு பொருளாதார ரீதியான நம்பிக்கை.

இப்படி ஜனங்க பொருட்களை வாங்கினா, தொழில் வளரும்; தொழில் வளர்ந்தா, வேலை வாய்ப்பு பெருகும். லாபமும் பெருகும். பொருளாதாரச் சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா நகர ஆரம்பிச்சு பிக்அப் ஆயிக்குமுங்கிறதுதான் தியரி. அதனால, அப்ப அரசாங்கம் நிறைய பணத்தை அச்சடிச்சு வெளியே விட்டது.

எப்பவுமே ஓர் அரசாங்கம் வரவுக்கு மீறின செலவுக்கு கடன் வாங்கும். சில சமயம், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நோட்டை அடிச்சு சர்க்குலேஷனில விட்டுடும். 2008 பிரச்னை ரொம்ப பூதாகாரமா இருந்ததாலே அமெரிக்க அரசாங்கம் கரன்சியை அடிச்சு சர்க்குலேஷனில விட்டுச்சு. கரன்சியை சர்க்குலேஷனுல விடறதுக்கு ஃபெடரல் வங்கி (அமெரிக்க ரிசர்வ் வங்கி) என்ன செஞ்சதுன்னா, ஏற்கெனவே அது பணத்தை வாங்கிகிட்டு வெளியிட்ட கடன் பத்திரங்களைத் திருப்பி வாங்கிச்சு. இதனால மக்கள்கிட்ட காசு புழங்கிச்சு. எக்கச்சக்கமான காசு புழங்கினதால கொறைஞ்ச வட்டியில கடன் கிடைச்சுது. கடனுக்கான வட்டி குறைவா இருந்ததால, டெபாசிட் வட்டியும் குறைஞ்சுது. இதனால, இந்தியா மாதிரி சந்தைகளில் முதலீடு செய்ற மாதிரி அமெரிக்க டாலர் வந்துச்சு. 2008-ல 2500 லெவல்ல இருந்த நிஃப்டி, 2013-ல 6200 லெவல் வரைக்கும் போச்சு. அதுக்குப் பிறகு என்ன ஆச்சு? என்று கேட்டார் சாமி.

''சாமீ, கேள்வி கேக்காதீங்க. நாங்க ஏற்கெனவே மண்டை காய்ஞ்சு போயி உக்காந்திருக்கோம்!'' என்று கொஞ்சம் விசனப்பட்டான் செல்.

ஷேருச்சாமி - எறக்கத்துல வாங்கு...ஏத்தத்துல வித்திடு !

''ஓகே நானே சொல்றேன், அமெரிக்காவுல எந்த அளவுக்கு பொருளாதாரம் உருள ஆரம்பிக்கணும்னு நினைச்சோமோ, அந்த அளவுக்கு உருள ஆரம்பிச்சுடுச்சு. அதனால சர்க்குலேஷனில விட்ட பணத்த அடுத்த வருஷம் நடுவுல இருந்து திரும்ப வாங்கிக்கப் போறோம்னு ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் போன புதன்கிழமை அன்னைக்கு சொன்னாரு. பணம் சர்க்குலேஷனில இருந்து வெளிய போகணுமுன்னா ஃபெடரல் ரிசர்வ் பத்திரங்களை வாங்குறதைக் குறைக்கும். அப்ப என்னவாகும்? ஜனங்களிடம் இருந்து பணம் போய் பத்திரம் கையில வரும். புழக்கத்தில பணம் குறையறதால வட்டி அதிகமாகும். வட்டி அதிகமான இந்தியா மாதிரி நாட்டுக்கு பணத்தைக் கொண்டுவந்து முதலீடு செய்யறதைவிட அங்கேயே முதலீடு செய்ய வாய்ப்பு வரும். அதனாலதான் இங்கே இருக்கிற பணத்தை எடுத்து அமெரிக்காவுக்கு வேகவேகமா எடுத்துட்டுப் போறாங்க. இதனாலதான் சந்தை தடாலடியா இறங்கிடுச்சு'' என்று சாமி சொல்ல, ''அடடா, இப்பதான் புரியுது விஷயம்'' என்றான் அறிவு.

''அது இருக்கட்டும் சாமி. ரூபாய் மதிப்பு அநியாயத்துக்கு இறங்கிக் கெடக்குதே! அதுக்கு என்ன காரணம்?'' என்று கேட்டான் செல்.

''சிம்பிள்பா! எக்கச்சக்கமான டாலரை அமெரிக்க அரசாங்கம் வெளிவிட்டப்ப அது நம்ம மார்க்கெட்டுக்கு வந்துச்சுல்ல! அதை திரும்ப எடுத்துட்டுப் போறப்ப, ரூபாயா எடுத்துட்டுப் போக முடியாது. டாலரா மாத்தணும். பலரும் டாலர் வாங்க வர்றப்ப அதனோட மதிப்பு உயர்ந்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையத்தானே செய்யும்! அதான் இப்ப நடந்திருக்கு!'' என்று சாமி விளக்கம் தர,  வேலைக்காரர் சுடச்சுட இஞ்சி டீ தந்தார்.  

''சாமி, இனி மார்க்கெட் எப்படி போகும்?'' - டீ குடித்து முடித்தபிறகு கேட்டான் செல்.

''அடுத்த இரண்டு வருஷத்துக்கு வாலட்டைலிட்டி தொடரவே செய்யும். அடுத்த வருஷம்தான் பணத்தை வித்ட்ரா பண்றேன்னு சொல்லியிருக்காரு பென் பெர்னான்கி. ஆனா, அதுக்குள்ளே பதறியடிச்சு விக்கிறாங்க. நீ பணம் வச்சிருந்தா இந்த மாதிரி பதற்றமான இறக்கம் வர்றப்ப நல்ல ஷேரா பார்த்து வாங்கிப்போடு'' என்று அட்வைஸ் தந்தார் சாமி.  

''இது டிரேடர்களுக்கான ஸ்ராட்டஜியா  இருக்கே?'' என்று அதிர்ந்தான் செல்.

''லாங் டைம் முதலீடுங்கிற பேச்சே இப்ப எடுக்கப்படாது. இந்தியாவுல எலெக்ஷன் வேற வருது. அதனால இறக்கத்தில் வாங்கி டார்கெட் வந்தா வித்துட்டு போயிட்டே இருக்கணும். நீண்டகால முதலீட்டுக்கு இப்ப மிகக் குறைஞ்ச வாய்ப்புதான் இருக்கு!'' என்றார் சாமி.

''என்ன சாமி, போன ஜனவரியில சொன்னதையே சொல்றீங்க?'' என்றான் அறிவு.

''நான் என்ன செய்ய, நிலைமை அப்படி இருக்கு. டிரேடர்களுக்கு கொண்டாட்டமான இந்த நேரத்துல முதலீட்டாளர்கள் கவனமா செயல்படணும். உஷாரா இருந்தா, மொதலுக்கு நஷ்டமில்லை'' என்ற சாமி, ''ஒரு மீட்டிங்கிற்கு போறேன். இன்னொரு நாளைக்கு போன் பண்ணிட்டு வாங்க!'' என்று விடை தந்தார்.