Published:Updated:

ஆபத்தில் தள்ளிய அதிக கடன்!

ஆபத்தில் தள்ளிய அதிக கடன்!

##~##

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் டாக்டர் பாலமுருகன் குடும்பத்தை நான் சந்தித்தேன். டாக்டர் பாலமுருகன், என் இணையதளத்தைப் பார்த்துவிட்டு தனிநபர் கடன் வாங்குவது தொடர்பான சந்தேகத்துக்குப் பதில் பெற என்னை சந்தித்தார். இவரது மனைவி சாந்தலட்சுமியும் ஒரு டாக்டர்தான். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் சாதனா, இளையவள் சுவேதா. கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து அன்றைய நிலையில் மாத வருமானம் 5.5 லட்சம் ரூபாய். அதாவது, வருடத்திற்கு 66 லட்சம் ரூபாய். அடேங்கப்பா, இவ்வளவு வருமானமா என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால், அதிர்ச்சியான தகவல் என்ன தெரியுமா, நான் இந்தக் குடும்பத்தைச் சந்தித்தபோது மோசமான கடன் தொல்லையால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தனர்.

‑கழுத்தை நெரித்த கடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒன்றல்ல, இரண்டல்ல, தன் பெயரில் தனிநபர் கடன் வாங்கியே புதுச்சேரியைச் சுற்றி ஆறு ப்ளாட்டுகளை வாங்கிப்போட்டிருந்தார். இதற்காக அவர் வாங்கிய கடன் 60 லட்சம் ரூபாய். இவ்வளவு பணத்துக்கு மாதமொன்றுக்கு 2.5 லட்சம் ரூபாய் இ.எம்.ஐ. கட்டி வந்தார். தவிர, வீட்டுக் கடனுக்காக வாங்கிய 25 லட்சத்திற்காக மாதம் 30,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டி வருகிறார். இதுதவிர, கார் கடன் வேறு. அதற்கு மாதம் 50,000 ரூபாய் கட்டி வந்தார். இதெல்லாம் போதாது என்று நினைத்து கிரெடிட் கார்டு கடனும் வாங்கி இருந்தார். அதற்கு மாதம் 25,000 ரூபாய் என ஆக மொத்தம் ஒரு மாதத்துக்கு 3.55 லட்சம் ரூபாய் கடனுக்கான பணத்தைத் திரும்பக் கட்டுவதிலேயே செலவானது.

ஆபத்தில் தள்ளிய அதிக கடன்!

ஒருவருடைய மாத வருமானத்தில் இவ்வளவு தொகை கடனைத் திரும்பச் செலுத்து வதிலேயே போவது எந்த விதிமுறையின் கீழும் ஒப்புக்கொள்ள முடியாது. எனவே, ஆளின் உயிரைக் காப்பாற்ற காலை வெட்டினாலும் பரவாயில்லை என்கிற தியரியின் அடிப்படையில் கடன் சுமையை உடனடியாக குறைக்க இன்றைய நிலையில் நல்ல விலைக்குப் போகும் இரண்டு மனைகளை விற்றுவிடலாம். ஏற்கெனவே கட்டியிருந்த தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ. 60 சதவிகிதம் போக மீதியுள்ள பணத்தை இந்த இரண்டு மனை விற்பதன் மூலம் அடைத்துவிடலாம் என அவரிடம் தெரிவித்தேன். கழுத்தை நெரிக்கும் கடனில் அவர் மாட்டித் தவித்ததாலோ என்னவோ, நான் செய்யச் சொன்ன விஷயத்தை டாக்டர் பாலமுருகன் அப்படியே செய்தார்.

முதலில் கடன், பிறகுதான் முதலீடு!

''முடிந்தவரை எல்லா கடன்களையும் முன்னதாக தயவு செய்து அடைத்துவிடுங்கள். கடன்களைக் குறைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் முதலீடுகளைத் தொடங்கி அதை முறையே கொண்டுசெல்ல முடியும்'' - இது நான் அவருக்கு கொடுத்த அட்வைஸ். இது அவருக்கு மட்டுமல்ல, தேவையில்லாத கடன்களை வைத்து கரையேறத் தெரியாமல் தத்தளிக்கும் அனைவருக்கும்தான்.

ஆபத்தில் தள்ளிய அதிக கடன்!

எதற்காக இவ்வளவு கடன் வாங்கினீர்கள்? அதிலும் அதிக வட்டி உள்ள தனிநபர் கடனை ஏன் வாங்கினீர்கள்? என்று டாக்டரிடம் நான் கேட்டேன். ''இ.எம்.ஐ. கட்டத்தான் வருமானம் இருக்கே! புறநகரில் மனை வாங்கிப் போட்டால் பலமடங்கு லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை வைத்து பிற்காலத்தில் சொந்தமாக கிளினிக் கட்டலாம் என்று ப்ளான் போட்டேன்'' என்றார்.

தவறான முதலீடுதான் காரணம்!

இவரது முதலீடு முழுக்க முழுக்க அசையாச் சொத்தாகவே இருந்தது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் மட்டுமே மனையின் மதிப்பு வேகமாகவும், புறநகரில் மனையின் மதிப்பு மெள்ளவும் உயரும். ஆனால், பாலமுருகன் வாங்கியுள்ள மனைகள் புறநகரிலேயே இருந்ததால் மெள்ள மெள்ளத்தான் வளர்ச்சி காண்பதாக இருந்தது. தவிர, நமக்கும், நம் தலைமுறையினருக்கும் வாழ்வதற்கு வீடு அத்தியாவசியம்தான். அதற்காக அனைத்து முதலீட்டையும் மனையில் மட்டுமே செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

'என்ன காரணத்திற்காக இவ்வளவு பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். ''குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்குத்தான். பிற்காலத்தில் மனையின் விலை நன்கு உயர்ந்தால், நல்ல லாபம் கிடைக்குமில்லையா?’ என்று கேட்டார் டாக்டர் பாலமுருகன். இவர் இப்படி நினைப்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானாலும் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்திற்கு இது பொருந்தி வருமா என்று பார்க்கவேண்டும். தவிர, மனையை நினைத்த நேரத்தில் விற்று பணமாக்கிவிட முடியாது.

முதலீட்டை பிரித்து செய்யவேண்டும்!

மனை வாங்க வாங்கிய கடனுக்காக மட்டும் 18 சதவிகிதம் வட்டி கட்டி வந்தார் பாலமுருகன்.  அவர் வாங்கிய மனையின் மதிப்போ வட்டிக்கு ஈடாகக்கூட உயரவில்லை. அவரது எண்ணம் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால், மனையில் மட்டுமே முதலீடு செய்யாமல் ரியல் எஸ்டேட், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் என பலவகையில் முதலீடு செய்திருந்தால், பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் பாதிப்பை எளிதில் சமாளிக்க முடியும். தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கான வெறும் மனை முதலீட்டை மட்டுமே நம்பி இருக்காமல் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வேறு முதலீட்டு வழிகளையும் பார்க்கச் சொன்னேன். காரணம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். வேண்டும்போது விற்று எளிதில் பணமாக்கிக்கொள்ளவும் முடியும்.

பாதுகாப்பில் அலட்சியம்!

நான் கண்டு அதிர்ந்த இன்னொரு விஷயம், ஆண்டுக்கு 66 லட்சம் சம்பாதிக்கும் குடும்பம் வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆயுள் காப்பீட்டை எடுத்து வைத்திருந்தார்கள். மற்றவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் தொழிலில் இருந்துகொண்டு தங்களுக்கான பாதுகாப்பைக் கோட்டை விட்டுவிட்டார்களே என்று நினைத்து வருந்தினேன். குடும்பத்தி னரின் பாதுகாப்புக்கும் கடன் பாதுகாப்புக்கும் சேர்த்து ஒரு கோடி ரூபாய்க்கு உடனடியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொன்னேன். அதற்கான அவசியத்தையும் சொல்லி புரிய வைத்தேன். இதனோடு ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு, முதலீட்டுத் திட்டங்களைப் போட்டுத் தந்தேன்.

இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது!

இந்த நிதித் திட்டமிடலை நான் சில மாதங்களில் முடித்து தந்துவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பொறுமையாக உட்கார்ந்துதான் செய்துதர முடிந்தது. ஆரம்பத்தில் நான் சொன்ன விஷயங் களை புரிந்துகொள்ளவே சிரமப்பட்டார் டாக்டர் பாலமுருகன். கடன் சுமையை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு இருந்ததால், என்னோடு ஒத்துழைத்து எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்தார். இன்று அத்தனை கடன்களையும் தீர்த்துவிட்டதோடு எதிர்காலத்துக்கும் நன்கு சேமித்து வருகிறார் என்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!