Published:Updated:

எடக்கு மடக்கு !

இந்தோனேஷியா மாதிரி இந்தியா ஆயிடுமா?

எடக்கு மடக்கு !

இந்தோனேஷியா மாதிரி இந்தியா ஆயிடுமா?

Published:Updated:
##~##

பதினெட்டு வருஷத்துக்கு முன்னால, நான் வேலைக்குச் சேர்ந்த புதுசுல எங்க கம்பெனி இருந்த ஃப்ளோரில இன்னொரு கம்பெனியை ஆரம்பிச்சாங்க. ஆபீஸ்னா இதுதான்டா ஆபீஸ்னு சொல்ற மாதிரி கண்ணாடி கதவு என்ன, ஆபீஸ் முழுக்க கார்ப்பெட் என்ன, சென்ட்ரலைஸ்டு ஏசி என்னன்னு பொறாமையைக் கிளப்பிட்டாங்க.

சரியா ஒரு வருஷம்கூட ஆகலை, சேர்ந்தாப்ல ஒரு வாரம் அந்த கம்பெனியோட கதவு திறக்காம பூட்டியே கெடந்தது. என்னாச்சுன்னு விசாரிச்சா, அது இந்தோனேஷியா கம்பெனியாம். அங்க ஏதோ கரன்சி பிரச்னையாம். அதனால ஏகப்பட்ட கம்பெனிங்க திவாலாயிடுச்சாம். அதுல இதுவும் ஒண்ணுன்னாரு நான் வேலை பார்த்த கம்பெனியோட பாஸு.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதெப்படிங்க கரன்சி பிராப்ளத்துல கம்பெனி திவாலாகும்? ஏதும் கள்ளநோட்டு அடிச்சாங்களான்னு துடுக்குத்தனமா கேள்வி கேட்டா, பாஸ் வேலையைவிட்டு துரத்திடுவாருன்னு கம்முன்னு இருந்துட்டேன். என் பாஸ் அமெரிக்காவுல எம்.பி.ஏ. படிச்ச வருங்க! இந்தோனேஷியா கரன்சி பிரச்னைன்னா என்னன்னு அவருகிட்ட கேட்க முடியுமா?  அதனால நானே கொஞ்சம் கொஞ்சமாப் படிச்சு புரிஞ்சுகிட்டேன்.

இந்தோனேஷியாவோட கரன்சி ருப்யா. 1997-ல ஒரு டாலர் வாங்கணுமின்னா, 2,380 ருப்யா தரணும். 1998-ல ஒரு டாலர் வாங்கணுமின்னா, 14,150 ருப்யா தரணும். அந்த அளவுக்கு ருப்யா மதிப்பை இழந்துச்சு. இதுக்கு 'ஏசியன் கிரைசிஸ்’ன்னு (இந்தோனேஷியாவோட சேர்ந்து வேறு சில ஆசிய நாடுகள் சிக்கிக்கிடுச்சுல்ல; அதனால இந்தப் பேரு) சொல்வாங்க.

எடக்கு மடக்கு !

ஏன் இது நடந்தது, இதுக்கு யார் காரணம்னு கொஞ்சநஞ்சம் உலக விஷயம் தெரிஞ்ச என் ஃப்ரெண்ட் ஒருத்தன்கிட்டே கேட்டேன். ''ஏகாம்பரம், எல்லாம் அமெரிக்கா பண்ற வேலை. அது பாட்டுக்கு டாலரை அடிச்சுவிட்டுடுச்சு. அது அப்படியே உலகம் பூரா ஊர் ஊரா வருஷக்கணக்கா ஊர்வலம் போச்சு. டாலருல கடனை வாங்கி அந்த டாலரை வித்து ருப்யாவா மாத்தி தொழிலுக்கு போட்டாங்க. கொறைஞ்ச வட்டியில டாலருல பணம் கிடைக்குதுன்னு பணம் இல்லாத பயலுவெல்லாம் கணக்குவழக்கில்லாம கடனை வாங்கி தொழில் நடத்துனாங்க.

கொஞ்சநாள் போனப்பிறகு, திடீருன்னு  டாலர் சர்க்குலேஷனை குறைப்பேன்னு அமெரிக்கா சொல்லிச்சு. உடனே அந்த நிமிஷமே பணம் அமெரிக்காவுக்கு திரும்புச்சு. பலரும் ருப்யாயை வித்து டாலரை வாங்கினாங்க.  அஞ்சாரு வருஷத்துல வந்த டாலரெல்லாம் கூட்டங்கூட்டமா திரும்புனா என்னாகும்? டாலர் மதிப்பு மேலே பறந்துச்சு. குறைஞ்ச வட்டின்னு கடன் வாங்குனவன் கண்ணுல ரத்தம்தான் வந்தது மிச்சம்''ன்னு என் நண்பன் சிம்பிளா சொன்னானுங்க.

''சரிப்பா, கம்பெனிதானே கடன் வாங்கிச்சு. இதை ஏசியன் கம்பெனி கிரைசிஸின்னு சொல்லாம, ஏசியன் கிரைசிஸ்ன்னு ஏன் சொல்றாங்க?''ன்னேன்.  

''ஏகாம்பரம், கடனை கம்பெனி வாங்குனா என்ன, கவர்ன்மென்ட் வாங்குனா என்ன? ஃபாரின் கரன்சி மதிப்பு படுவேகமா உயர்ந்தா அது நாட்டுக்கே கேடுடா''ன்னான்.

அன்னைக்கி இந்தோனேஷியா ருப்யாவுக்கு நடந்தது இன்னைக்கு நம்ம ரூபாய்க்கு நடந்துடுமோன்னு நினைச்சா பயம்மா இருக்குங்க.

ஏன் ஏகாம்பரம் உனக்கு இந்த வேண்டாத விபரீத கற்பனைன்னு கேக்குறீங்களா? காரணம் இருக்கு. இந்தோனேஷிவோட பணத்தோட பேரு ருப்யா, நம்ம பணத்தோட பேரு ரூபாய், என்ன ஒரு பெயர் ஒத்துமைப் பார்த்தீங்களா? நாட்டோட பேருலேயும் அந்த ஒத்துமை இருக்கே. இதனாலயே அன்னைக்கு அவங்களுக்கு வந்த பிரச்னை நமக்கும் வந்துடுமோன்னு பயப்பட்றேன்!  

இன்னைக்கு நம்ம ரூபாயோட மதிப்பு 60-ங்கிறது நிரந்தரமா ஆயிடுமோன்னு கவலையா இருக்கு. நாமளும் 9 சதவிகிதம் வளர்ச்சின்னு பிரமாதப்படுத்தினோம். ஃபாரின் பணம் துள்ளி விளையாடுச்சு. ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடின்னு பிராப்பர்ட்டி விலை பறந்துச்சு. ஷேர் விலை பறந்துச்சு. டிவிஎஸ்50-ல போன என் ரூம்மேட் ஸ்விப்ட் டிசையர் வாங்குனான். இப்ப ஷேர் விலை கவுறுது. பிராபர்ட்டி மார்க்கெட் தத்தளிக்குது. டாலர் பறக்குது.

ஏன் இப்படி நடக்குதுன்னு கேட்டா, 1991-ல

15 மாதத்துக்குத் தேவையான அந்நிய செலாவணி இருந்தப்பதான் நாம் தங்கத்தைக் கொண்டுபோய் அடகுவச்சு காசு வாங்கி செலவழிச்சோம். 2008-ல கிரைசிஸ் வந்தப்ப, நம்மகிட்ட 15 மாதத்துக்கான அந்நியச் செலாவணி இருந்தது. இப்ப கிட்டத்தட்ட ஆறு மாத செலவுக்கு மட்டும்தான் அந்நிய செலாவணி இருக்குன்னு சொல்றாங்க.

அரசாங்கமோ எதைப் பத்தியுமே கவலைப் படுற மாதிரி தெரியலே! டெம்பரவரியா அன்னன்னைக்கு தீர்வு செய்யற மாதிரி முயற்சி களையே தொடர்ந்து எடுக்கறாங்க. இன்னமும் ஃபாரின் பணத்தை எப்படி சுலபமா உள்ளே கொண்டு வர்றதுங்கறதுக்குத்தான் வழியைத் தேடுறாங்க. ஊழல் பண்றதுலேயும் அதனால வந்த பிரச்னையிலேயே கவனம் போனதனால இப்ப எல்லாமே கையை மீறி போனமாதிரி தெரியுது. அடுத்த வருஷம் எலெக்ஷனைத் தவிர, வேற எதுலேயும் அரசாங்கத்துக்கு கவனம் இல்லாத மாதிரி தெரியுது. தொழில்ல லாபம் இல்லே. வளர்ச்சி இல்லே. இது 1991-ஐ விட மோசமான சிச்சுவேஷன்லேயில்ல கொண்டுபோய் விட்டுடும்போல இருக்கு. ஆள்றவங்களுக்கு இதைப்பத்தி கவலைப்பட நேரமிருப்பதுபோலத் தெரியல. அடுத்தமுறை பதவியைப் பிடிப்பது எப்படின்னு மட்டுமே யோசிச்சுக்கிட்டு இருக்காங்கபோல!

வெளிக்கடன் ஓவராய் போயிட்டிருக்குன்னு இன்டர்நெட்டுல படிச்சேங்க. இன்னைக்கே பணத்தைத் திருப்பித்தான்னு சொன்னா, நாம ஒவ்வொரு மூணு டாலருக்கு இரண்டு டாலர் சொச்சத்தைத்தான் திருப்பித்தர முடியுமுன்னு படிச்சேங்க. இந்த லட்சணத்துல பெரும்பான்மையான கடன்கள் நாம அடுத்த வருஷம் திருப்பித் தரமாதிரி இருக்குதாம். இப்ப புரியுதா ஏன் டாலர் உயர உயர பறக்குதுன்னு.

ஓண்ணு மட்டும் நல்லாத் தெரியுதுங்க. நம்ம அரசாங்கம் வாழற வாழ்க்கை சரியில்லை. தகுதிக்கு மீறி வாழறதைப்போலத் தெரியுது. எல்லாம் ஓட்டு பாலிடிக்ஸ்தான் போங்க.

பொருளாதார வளர்ச்சி குறைஞ்சா இளைஞர்கள் நிறைஞ்ச நாட்டுல என்ன நடக்கும். பிஞ்சு நெஞ்சுக கருகிடாதா? நானும் நீங்களும் கவலைப்பட்டு என்ன ஆகப்போகுதுங்கிறீங்களா? பிரச்னையைக் கொண்டுவர்றதும், துரத்திவிடுறதும் இன்னைக்கு இல்லாட்டியும் ஒருநாள் நம்ம கையிலதானேங்க இருக்கு!

இப்ப சொல்லுங்க, நான் பயப்பட்றதுல அர்த்தம் இருக்கா, இல்லையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism