##~## |
'நான் வசதியாக வாழ்பவன்’ என்று தன்னை காட்டிக்கொள்வதில் ரவிக்கு எப்போதும் அலாதி ஆர்வம் உண்டு. இதனால் எப்போதும் கடன் வாங்குவார். நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி முடித்து, வங்கிகள் தரும் பெர்சனல் லோனையும் வாங்க ஆரம்பித்தார். இப்போது வங்கியில் வாங்கிய கடனுக்கான இ.எம்.ஐ.-யைக் கட்ட முடியாமல் அவஸ்தைப்படுகிறார். தெரிந்தோ, தெரியாமலோ இன்று பலரும் இந்தக் கடனை வாங்கி தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தனிநபர் கடனில் இருக்கும் பல்வேறு கட்டணங்களைப் பற்றியும், அதை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் பற்றியும் பேங்க் பஜார் டாட் காமின் சி.இ.ஓ. அதில்ஷெட்டி யிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''அதிகமான மக்கள் தனிநபர் கடனை தேடி செல்வதற்கு முக்கிய காரணம், இந்தக் கடனுக்கு எந்தவிதமான செக்யூரிட்டியும் வங்கிகள் கேட்பதில்லை. வங்கி அதிகாரிகள் மனது வைத்தால் நிச்சயம் கிடைக்கும் என்பதால், பலரும் இந்த கடன் கிடைக்காதா என ஏங்கித் தவிக்கிறார்கள்.
ஆனால், ஒரே ஒரு விஷயத்தை இந்த கடன் வாங்குபவர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். தனிநபர் கடனுக்கான வட்டி என்பது வங்கிகள் தரும் மற்ற கடன்களுக்கான வட்டியைவிட மிக அதிகம். தனிநபர் கடனில் அதிக வட்டியுடன் பலவிதமான கட்டணங்களை நமக்குத் தெரியாமல் சேர்த்து வசூலித்துவிடுகிறார்கள் என்பதும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய நிஜம். கடன் வாங்குவதற்கு முன் எதற்கு, எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம்.
செயல்பாட்டுக் கட்டணம்:

அனைத்துவிதமான கடன்களுக்கும் செயல்பாட்டுக் கட்டணம் இருக்கும். ஆனால், மற்ற கடன்களுக்கெல்லாம் 0.5 சதவிகிதம் செயல்பாட்டுக் கட்டணமாக இருக்கும். தனிநபர் கடன்களுக்குப் பெரும்பாலான வங்கிகள் 1 - 2 சதவிகிதம் செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கின்றன. சில வங்கிகள் ஃபிக்ஸட்-ஆக குறிப்பிட்ட தொகையை வாங்குகின்றன.
முன்கூட்டியே செலுத்தினால்..!
பெர்சனல் லோன் வாங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, வேறு ஏதோ ஒருவகையில் நமக்கு பணம் கிடைத்து, நாம் வாங்கிய பெர்சனல் லோனை முழுவதுமாக அடைக்க முயற்சித்தால், உங்கள் மீது வங்கியானது அபராதம் விதிக்கவே செய்யும். இந்த அபராதமானது, நீங்கள் வாங்கியுள்ள மொத்தக் கடன் தொகையில் 2 - 5 சதவிகிதம் வரை இருக்கும்.

தாமதமாக இ.எம்.ஐ. கட்டினால்..!
இ.எம்.ஐ. காலதாமதமாகச் செலுத்தினால் அதற்கு அபராதம் உண்டு. இந்த அபராதம் 2 - 3 சதவிகிதம் வரை இருக்கும்.
பணம் இல்லாத காசோலைகள்:
கடன் வாங்கும்போது உங்களிடமிருந்து பின்தேதியிட்ட காசோலைகளை வாங்கி யிருப்பார்கள். இந்த காசோலைகள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்கும் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் 250-500 ரூபாய் வரை இருக்கும்.
கடன் வாங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பதற்கு உங்களிட மிருந்து 500-லிருந்து 1,000 ரூபாய் வரை வங்கிக் கட்டணமாக வாங்கப்படும்.
இனி, என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும் என்று பார்ப்போம்.
வட்டி விகிதம்:

வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கியிலும் மாறுபடும். அதுவும் உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப்பொறுத்து வட்டி இருக்கும். அதாவது, ஒரே வங்கியில் மூன்று நபர்கள் ஒரே நேரத்தில் கடன் வாங்கினாலும், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப்பொறுத்து ஒவ்வொருவருக்கும் வட்டி மாறுபடும். மேலும், ஏற்கெனவே வேறு கடன் வாங்கி அதை திரும்பச் செலுத்தாமல் இருந்தால் உங்களின் பெயர் சிபிலில் இருக்கும். இப்படி சிபில் பட்டியலில் பெயர் உள்ளவர் களுக்கு கடன் கொடுக்கும்போது அதிக வட்டியை வங்கி வசூலிக்கும்.
தனிநபர் கடன் வாங்கும்போது வட்டியை மட்டும் பார்த்து கடன் வாங்கக் கூடாது. இதனுடன் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் என்னென்ன, எதற்கெல்லாம் அபராதம் உண்டு என்பதையும் முன்பே தெரிந்துகொள்வது முக்கியம்.
உங்களின் தேவை என்ன என்பதைத் தெரிந்து, அதற்கு ஏற்ப கடன் வாங்குவது நல்லது. கடன் கிடைக்கிறது என்பதற்காக
20 ஆயிரம் ரூபாய் தேவைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கக்கூடாது.
கடனின் கால அளவு:
தனிநபர் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகளுக்குள் அந்தக் கடனை திரும்பக் கட்டி முடித்துவிடவேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள். குறுகியகாலத்தில் அடைக்க விரும்பினால், உங்களின் இ.எம்.ஐ. தொகை அதிகமாக இருக்கும். அதே நீங்கள் நீண்ட காலத்தில் கடனை அடைத்தால் இ.எம்.ஐ. குறைவாக இருக்கும். எது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பார்த்து இ.எம்.ஐ. தொகையை முடிவு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
தனிநபர் கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு வருமான வரிச் சலுகை கிடையாது. எனவே, தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் உங்களுக்கு வேறு வகையில் வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதைப் பார்த்து கடன் வாங்குவது நல்லது. வேறு வழியே இல்லை; இந்த கடனை வாங்கினால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றால் மட்டும் தனிநபர் கடனை வாங்குவது நல்லது'' என்றார்.
பெர்சனல் லோன் வேண்டுமா என தினமும் இரண்டு தொலைபேசிகள் நமக்கு வரும் காலமிது. இந்த வலையில் சிக்கவேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள்தான்!