Published:Updated:

எடக்கு மடக்கு - கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா?

எடக்கு மடக்கு - கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

என் காலேஜில படிச்ச கிளாஸ்மேட் ஒருத்தரோட அப்பா துணிக்கடை வச்சிருந்தாரு. சின்ன ஊரானாலும் எங்க ஊரிலேயே பெரிய கடை அதுதான். பதினெட்டுப் பட்டிக்கும் பேமஸான கடைங்க அது. படிச்சு முடிச்சுட்டு கல்லாவுல போய் உட்கார்ந்தான் என் நண்பன். நாளாக ஆக ஊரும் வளர்ந்துச்சு. புதுசு புதுசா சென்ட்ரலைஸ்டு ஏசி, நியான் சைன் போட்ட கடைன்னு பல டிசைன்கள்ல பல கடைகள் வந்துடுச்சு. என்ன இருந்தாலும் ஊரில் பழைய கடை என் நண்பனோடதுதான்.

அந்த ஊர்ல ஒவ்வொரு புதுக்கடை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும் கடையை ஆரம்பிக்கிறவங்க நண்பருக்கு தூதுவிடுவாங்க, எங்களை பார்ட்னரா சேர்த்துக்குங்க! இல்லை ஒட்டுமொத்தமா வித்துடுங்கன்னு. ஒருதடவை இவரு கேட்ட தொகையைவிட ஐம்பது சதவிகிதம் அதிகமாத் தர்றேன்னு பார்ட்டி வந்தப்பகூட விக்கிறதுக்கான சான்ஸே இல்லைன்னுட்டாரு நண்பரோட அப்பா.  

ஆறேழு வருஷம் ஓடிப்போச்சு. கொஞ்சம் கொஞ்சமா ஜனங்களோட டேஸ்ட் மாறுச்சு. பெரும்பாலான ஜனங்க கடையை மார்டனா மாத்த ஆரம்பிச்சபிறகு  நண்பரோட அப்பாகிட்ட இல்லாத வாக்குவாதமெல்லாம் செஞ்சி, கடையோட அவுட்லுக்கை மாத்த சம்மதிச்சாரு.

விலைவாசி ஏத்தத்துல கடையை மொத்தமா மாத்தியமைக்க கொள்ளைக் காசாகிடுச்சு. கடனை உடனை வாங்கி மாத்தினப்புறமும் ஜனங்க வரமாட்டேங்கிறாங்க. கடன் கழுத்துக்கு வந்ததால தவிச்சுப் போன நண்பரு, யாராவது புதுசா கடை ஆரம்பிக்க நினைக்கிறவுங்களையும், போட்டிக் கடை வச்சிருக்கிறங்களையும் சந்திச்சு எங்க கடையை வாங்கிக்கிங்கன்னு சொன்னா, அவங்க யோசிப்போமுன்னு சொல்றாங்க. இல்லாட்டி, தரை ரேட்டுக்கு கேட்குறாங்க. எப்படி இருந்த கடையோட நிலைமை எப்படி ஆயிடுச்சு பாருங்க?

உங்க நண்பருக்கு எங்க ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனா, அந்தக் கதை இப்ப ஏன் இவ்வளவு நீளமா சொல்றே ஏகாம்பரம்னு நீங்க கேக்குறீங்க இல்லையா? கிட்டத்தட்ட நம்ம நாட்டோட கதையும் இப்படித்தான் இருக்குதுங்க. 2006-2007ல ஃபாரின் முதலீடுகள் பல துறைகளில போட்டி போட்டுக்கிட்டு நாட்டுக்குள்ள வர்றதுக்கு துடியாத் துடிச்சுது. நாட்டை ஆளறவங்க அதெல்லாம்  முடியாதுப்பான்னு சொல்லலே; முடியுமுன்னும் சொல்லலே! முடிவெடுக்கிறதுல ஜவ்வு மாதிரி இழுத்தாங்க.

இப்ப டாலர் வானத்துல பறக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் அதைப் புடிச்சு நிறுத்தறதுக்கு இதுல முதலீடு பண்ணலாம், அதுல முதலீடு பண்ணலாமுன்னு எஃப்.டி.ஐ.க்கு கம்பளம் விரிக்கிறாங்க. இந்த ஆறேழு வருஷத்துல ரீடெயில் மாதிரி பல முக்கிய தொழில்கள் என் நண்பரைப் போலவே கடனை வாங்கிக் குவிச்சுடுச்சு. இப்ப ஆற அமர யோசிச்சு அந்நிய முதலீட்டை அதிகரிக்க அனுமதிங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

எடக்கு மடக்கு - கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா?

ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். நண்பரோட கடை இருக்கிற இடத்துல ரோட்டை அகலப்படுத்தி மேம்பாலம் கட்டப் போறாங்க. கடை வாசலில பத்தடி உயரத்துக்கு மேலே மேம்பாலம் போகுது. அவரோட அப்பாவும் தவறிட்டாரு. அண்ணன் - தம்பி சேர்ந்து ஆரம்பிச்ச தொழிலு எனக்கும் பங்கிருக்குன்னு கடைசி சித்தப்பா பையன் வேற கேஸைப் போட்டுட்டு உட்கார்ந்துட்டான்.

மறுபடியும் ஏம்பா டீடெயிலுக்குள்ள போறேன்னு கேக்குறீங்களா? கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்க, நாட்டு நிலைமையை! நான் வர்றேன், நீ வர்றேன்னு சொன்னப்ப எஃப்.டி.ஐ.யை வரவிடலே. பல தொழில்கள் மூச்சு வாங்கி கடனில முழுகிக் கிடக்கிறப்ப வெல்கம் எஃப்.டி.ஐ.-ங்கிறீங்க. ரீடெயில் மாதிரி ஸ்டேட் சப்ஜெக்ட்ல மாநில அரசுங்க பண்ற பங்காளிங்க தகராறுக்குப் பயந்து வரலாமுன்னு சொன்னதுக்கப்புறமும் எஃப்.டி.ஐ. வர்றதுக்கு தயங்குது. பல தொழில்களில இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரச்னை தலைவிரிச்சு ஆடுது.

தொழிலைப் பொறுத்தவரை, காலாகாலத்துல எடுக்கவேண்டிய முடிவை எடுத்துப்புடணும்.  டெலிகாம் ஊழல் பிரச்னையில சிக்கி பாதி நாள் பாழாகிப் போச்சு. இப்ப அந்தத் துறையே கடனில மூழ்கி இருக்கு. இப்ப 100 சதவிகிதம் எஃப்.டி.ஐ. வரலாமுன்னு சொன்னா பணம் வந்துடுமா? இல்லை, அப்படி வந்தாலும் இந்தியாவுல இருந்து தொழிலை விக்கறவங்களுக்கு நல்ல விலைதான் கிடைச்சுடுமா?

டெலிகாமுன்னு மட்டும் இல்லீங்க, இன்ஷூரன்ஸில ஆரம்பிச்சு பல துறைகளிலேயும் இதே நிலைதான். தொழிலுக்கு பணம் தேவைப்படுறப்ப அனுமதிக்காம விட்டுட்டு ரூபாயோட மதிப்பு குறையும்போது அதைச் சரிபண்றதுக்காக இப்படி அந்நிய முதலீட்டை அனுமதிக்கிறேன் பேர்வழின்னு கிளம்புனா என்னங்க செய்யறது? கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் பண்ணனும்னு கிளம்புறதுல என்ன பிரயோஜனம் சொல்லுங்க!

அதுவுமில்லாம தொழில் செய்யறதுக்குத் தேவையான நிலத்தை ஒதுக்கித் தர்றது, அரசாங்க அனுமதி கிடைக்கிறது, சுற்றுப்புற சூழல் அனுமதி கிடைக்கிறதுன்னு பல விஷயத்திலேயும் ரொம்ப குளறுபடி இருக்குது. அதையெல்லாம் சரி பண்ணிட்டு உலக முதலீட்டாளர்களே இந்தியாவுக்கு வாங்கன்னு சொல்லாம, வெறுமனே லிமிட்டை மட்டும் அதிகரிச்சா வந்துடுவாங்களா?

பிரச்னை உங்க அனுமதியில இருந்தது ஒரு காலமுங்க. இப்ப பிரச்னை உங்க நடவடிக்கை களில இருக்குது. கிடப்புல இருக்கிற விஷயங்களை எல்லாம் தூசுதட்டி எடுத்து சரிபண்ணினா தானா பணம் இந்தியாவுக்குள்ள வரும். அதை மறந்துட்டு அனுமதியை மட்டும் கொடுத்திட்டு இருந்திட்டீங்கன்னா ரெண்டு நாளைக்கு அதைப்பத்தி பரபரப்பா பேசிட்டு அப்புறம் இந்தியாவை மறந்துடுவாங்க.

ஏன் தெரியுமா? முதலீட்டைப் பெறுவதில நாட்டுக்கு நாடு போட்டி சும்மா எக்குத்தப்பா இருக்குதுன்னுல்ல சொல்றாங்க. அத்தனை பேரும் மறக்கறதுக்கு முன்னாடியும் மத்தவங்க முதலீட்டை வளைச்சுப் போடறதுக்கு முன்னாடியும் எதையாவது உருப்படியா பண்ணுங்கண்ணா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு