Published:Updated:

எடக்கு மடக்கு - இறக்குமதி அயிட்டம் வேணாமே !

எடக்கு மடக்கு - இறக்குமதி அயிட்டம் வேணாமே !

எடக்கு மடக்கு - இறக்குமதி அயிட்டம் வேணாமே !

எடக்கு மடக்கு - இறக்குமதி அயிட்டம் வேணாமே !

Published:Updated:
##~##

புதுசா ஒரு ஐ-பேடை வாங்குனவுடனே, ''என்ன ஏகாம்பரம், ஐ-பேட் வாங்கிட்டே போலிருக்கே! டாலர் ஆகாசத்துல பறக்குறதுக்கு உன்னைய மாதிரி ஆளுங்கதான்யா காரணம்''னு சொல்லி என்னை கொஞ்ச நேரம் டபாய்ச்சுட்டுப் போனாரு என் நண்பரு.  

என்னடா, இந்தாளு இப்படி சொல்றானேன்னு நெனைச்சுகிட்டு, ஐ-பேடில் வெப்சைட்டுகளில நியூஸ் அயிட்டங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல, அந்தாளு சொன்னது நெசந்தான்னு புரிஞ்சது. தாராளமயமாக்கல், உலகமயமாக்கலுங்கிற கொள்கையில உலகத்தில இருக்கிற மூலைமுடுக்குல இருக்கற சாமானை எல்லாம் நாம இறக்குமதி பண்ணி வாங்கிக் குவிச்சுக்கிட்டு இருக்குறோம். போன வருஷம் கிட்டத்தட்ட 32 பில்லியன் டாலருக்கு இந்த மாதிரி நாம வாங்கிக் குவிச்சிருக்கோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாட்டுல இருக்கற ஜனங்க அந்நிய நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யணும்னா டாலரிலதான் பணம் தரணும். அதுக்கான டாலர் ஏற்றுமதி மூலமா கிடைச்சா பிரச்னையே இல்லை. அதை செய்யாம இறக்குமதியில கொட்டிக் குடுத்துக்கிட்டிருந்தா  நம்ம கதை கந்தலாயிடும்.

இந்த செல்போனையே எடுத்துக்குங்களேன். நோக்கியா செல்போன்னாலும் அது ஃபின்லாந்துல செஞ்சதான்னு பார்த்துதானே வாங்குறோம். மேட் இன் சிங்கப்பூர், மேட் இன் ஜெர்மனின்னு போட்டிருந்தாலே நாம எந்த பொருளையும் விழுந்தடுச்சு வாங்கிடுவோமே!

எடக்கு மடக்கு -  இறக்குமதி அயிட்டம் வேணாமே !

சின்ன சின்ன பொருளா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆடி, பி.எம்.டபிள்யூ.-ன்னு விலையுயர்ந்த காரையில்ல எக்கச்சக்கமா இறக்கிட்டு இருக்கோம். தவிர, கடந்த பதினைஞ்சு வருஷத்துல உள்ளூரிலயே எக்கச்சக்கமா காரும் மோட்டார் சைக்கிளும் பெருகினதால பெட்ரோல் இறக்குமதியும் அளவுக்கு அதிகமா ஆயிடுச்சு.

இதையெல்லாம் பத்தி நாம ஏன் கவலைப்படணும் ஏகாம்பரம். அரசாங்கமில்ல கவலைப்படணும்னு நீங்க கேக்கலாம். அரசாங்கத்துக்கு இதையெல்லாம் கவலைப்பட நேரமிருந்தாத்தானே! அவங்க பிரச்னையைத் தீர்க்குறதுக்கே அவங்களுக்கு நேரமில்லாமல்ல திரிஞ்சுட்டு இருக்காங்க.

காலத்துல கடமையைச் செய்யாமப் போனா, பின்னால வருத்தம்தான் மிஞ்சுமுன்னு சொல்வாங்க. இதுல கடமையைச் செய்யாமப் போனது அரசாங்கம். வருத்தப்படப் போறது மக்கள். இப்ப காலம் போன காலத்துல வந்து ரீடெயில் எஃப்.டி.ஐ.யில மாறுதல்கள் கொண்டு வர்றேன். இன்னும் நிறைய சீர்திருத்தம் வருதுன்னு அறிக்கை விட்டுக்கிட்டு இருக்காங்க.

உதாரணத்துக்கு, இப்ப ரீடெயில்ல நிறைய கண்டிஷன்களைத் தளர்த்தியிருக்காங்க. ஆனாலும், வெளிநாட்டு கம்பெனிங்க வர்றதுக்கு பயப்படுது. ஏன்னா அஞ்சு வருஷத்தை முழுசா தொலைச்சுட்டு ஆட்டம் குளோஸாகுற நேரத்துல இந்தமாதிரி முடிவுகளை எடுத்தா என்ன அர்த்தம்? இதை நம்பி அவங்க தயாராக, அடுத்த அரசாங்கம் எதிர்மறையா எதையாவது செஞ்சா என்னாகும்னு யோசிக்கத்தானே செய்வாங்க முதலீடு போடறவங்க.

அதனால இதுவெல்லாம் நாளைக்கே டாலரைக் கொண்டுவந்து இந்தியாவுக்குள்ள கொட்டீராது. மெள்ள மெள்ளத்தான் கொண்டுவரும். அப்படியே வந்தாலும் அது எந்த அளவுக்கு அந்நிய செலாவணி பிரச்னையைத் தீர்க்க உதவுமுன்னு தெரியாது.  

ஏற்றுமதியை வளர்க்கறதுக்குத் தேவையான விஷயங்களைப் போர்க்கால அடிப்படையில எடுக்கணும்.  அப்படீன்னா என்னன்னு அரசாங்கத்துக்கும் புரியல. அதிகாரிங்களுக்கும் புரியல. 1990-க்கு போன மாதிரியிருக்குன்னு சொல்றாங்க பலபேரு. எனக்கென்னவோ 1980-க்கே போன மாதிரி இருக்கு. அப்பவாவது லைசென்ஸ் ராஜ்னு வெளிப்படையா தெரிஞ்சுது. இப்ப லைசென்ஸ் ராஜ் இல்ல. ஆனா அதைவிட மோசமான நிலைமையிலதான் நடப்பு இருக்குது. தொழில் பண்றவங்க பலபேரு இன்ட்ரெஸ்ட் இல்லாம இருக்கறாங்க. ஏன்னா, அரசாங்கத்தோட மோதி மோதி சோர்ந்து போயிட்டாங்க அவங்க. இப்போதைக்கு எதுவும் சரியாகாதுன்னு தொழிலதிபர்களும் ஏன் சின்ன சின்னத் தொழில் பண்றவங்களும் நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

மனுஷன் எதை வேணுமுன்னாலும் இழக்கலாமுங்க. நம்பிக்கையை இழந்திடக்கூடாது. அதிலும், தொழில் பண்றவங்க நம்பிக்கையை இழந்தா, பொருளாதாரம் படுத்துக்கும். அரசாங்கம் பெருமுயற்சி பண்ணி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்க மத்தியில நம்பிக்கையிங்குறது எள்ளளவும் இல்லாம பண்ணீட்டு நிக்குது.

அதேசமயம், என்னைய மாதிரி ஆளுங்க புத்தியில்லாம இறக்குமதி சாமானுங்களை வாங்கிக் குவிக்கிறதை நிறுத்தணும். அரசாங்கம் செய்யாததை நாமளாவது செய்வோமே. 1980-களில, இந்தியனாய் இரு, இந்தியப் பொருளையே வாங்குன்னு ஒரு வாசகத்தை படிச்சிருக்கேங்க. அதுதாங்க நமக்கு இப்ப தேவை. முதல்ல ஏற்றுமதி செய்வோம், பிறகு இறக்குமதி செய்வோம்! என்ன நான் சொல்றது, சரிதானே!