Published:Updated:

கட்டுமானப் பொருட்கள்...

மணல், செங்கல்...மாற்று என்ன ?

கட்டுமானப் பொருட்கள்...

மணல், செங்கல்...மாற்று என்ன ?

Published:Updated:
##~##

செங்கல் எனில் செக்கச் செவேல் என சிவப்பாக இருக்க வேண்டும்...

மணல் எனில் நயம் ஆற்று மணலாக இருக்க வேண்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜல்லி எனில் கறுகறுவென  இருக்க வேண்டும்...

வீடு கட்ட நினைக்கும் பலரும் இப்படித்தான் கான்ட்ராக்டர்களிடம் சொல்வார்கள்.

ஆனால், இந்த மாடர்ன் தொழில்நுட்ப யுகத்தில் செங்கல் உள்பட பல கட்டுமானப் பொருட்களுக்கும் மாற்று வந்துவிட்டது. இவற்றின் விலை குறைவு என்பதோடு, உறுதிமிக்கவை.  ஆனால், காலத்தால் நவீனமானவை என்பதால் நம்மில் பலரும் இதைப் பயன்படுத்தவே தயங்குகிறோம். உள்ளபடி இந்த மாற்று பொருட்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா, இதைப் பயன்படுத்தி வீடு கட்டுவதால் கட்டடத்தின் உறுதிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம்.  

''செங்கல், மணல், ஜல்லி, கம்பி, மரப்பொருட்கள் என அனைத்திற்கும் மாற்று பொருட்கள் வந்துவிட்டன. இதனைப் பயன்படுத்தி வீடு கட்டுவதால், பழைய முறைப்படி கட்டும் கட்டடங்களைவிடவும் அதிக உறுதிகொண்டதாக இருக்கிறது. என்றாலும், நாம் நம்பத் தயாராக இல்லை. ஆனால், இந்த மாற்று பொருட்கள்தான் சுற்றுச்சூழலுக்கும் பொருத்தமானது'' என்றார் தமிழ்நாடு அரசின் ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன்.

கட்டுமானப் பொருட்கள்...

''எதிர்காலத்தில் இந்த மாற்று பொருட்கள்தான் கட்டுமானத் துறையை ஆளப் போகின்றன. இப்போது மேலைநாடுகளில் இந்த மாற்று பொருட்களைக்கொண்டுதான் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவற்றின் எடை தாங்கும் தன்மை, உறுதி போன்றவற்றிலும் இந்த மாற்று பொருட்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்களை விடவும் விஞ்சி நிற்கின்றன'' என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏ.ஆர்.சாந்தகுமார்.

கட்டடத்திற்கான மாற்று பொருட்கள் இந்த அளவுக்கு பாராட்டைப் பெறும்போது அதுபற்றி நாம் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளவேண்டாமா? மாற்று பொருள் பற்றி  பல  விஷயங்கள் இனி உங்களுக்காக.  

செங்கல்!

செங்கல்களை விடவும் தரத்தில் மேம்பட்டதாகவும், கட்டுமானத்திற்கு உறுதி தரக்கூடியதுமாக எரி சாம்பல் கற்கள் எனப்படும் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் கற்கள் உள்ளன. பொதுவாக செங்கல்களின் விலை ஊருக்கு ஊர் வேறுபடுவதோடு, மழைக் காலங்களில் உற்பத்தியும் குறையும். அதனால் தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர, செங்கல்களை ஏற்றி இறக்கும்போது ஏற்படும் சேதாரங்கள் அதிகம். எல்லா பக்கஅளவுகளும் சரியாக இருக்காது. நீர் உறிஞ்சி ஓதம் ஏற்படுத்துகிற பிரச்னையையும் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக விலையும் அதிகம்.

கட்டுமானப் பொருட்கள்...

ஆனால், ஃப்ளை ஆஷ் கற்களை பயன்படுத்தினால் செங்கல்களைவிட கூடுதலான தாங்குதிறன் கிடைக்கும். சரியான பக்க அளவுகள், தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைப்பது, குறைந்த சேதாரம், குறைவான தண்ணீரை உள்ளிழுப்பது, பூச்சுக் கலவை குறைவு, விரைவான தரமான கட்டுமானம், கட்டுமான செலவு குறைவது காரணமாக இந்த வகை கற்கள் சிறந்த மாற்றாக இருக்கும்.

இவை செங்கல்களைவிட விலை குறைவானது, வலிமையானது என்பதால் அடித்தளம், இடைக்கட்டுமானம் மற்றும் மேல்கட்டுமானங்களிலும் தயக்கமின்றி நம்பிக்கையோடு பயன்படுத்தாலாம். இதுதவிர, அலுமினியம் பயன்படுத்தி ஏரோகான் பிரிக்ஸ் கற்களும் நவீன மாற்று பொருளாக கிடைக்கின்றன.

கட்டுமானப் பொருட்கள்...

குவாரி டஸ்ட்!

அதிகரித்துவரும் கட்டுமான வேலைகளின் காரணமாக ஆற்றுமணலின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இதனால் நமது ஆறுகள் பெருமளவிலான மணலை இழந்து, அதனால் சுற்றுச்சுழலுக்கு பெரும் பாதகம் ஏற்பட்டுள்ளது. ஆற்று மணலுக்கு ஒரு சிறந்த மாற்றாக மலைமாவு என்று சொல்லப்படும் குவாரி டஸ்ட் மாவுகளைப் பயன்படுத்தலாம். சாதாரணமாக கருங்கல் ஜல்லிகள் உடைக்கும்போது கிடைக்கும் வேஸ்ட்களை அரைத்து இந்த வகை மலைமாவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொதுவாக, ஆற்றுமணலில் தூசி, தும்புகள், களிமண் என கலந்துதான் கிடைக்கும். இதை சலித்தபிறகுதான் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வகை மலைமாவில் அந்த சிக்கல் இல்லை. கட்டுமான வேலை தவிர, சுவர்ப்பூச்சு வேலைகளுக்கும் இதைப் பயன்படுத்த முடியும்.

அடித்தளத்தில் மட்டம் சரிசெய்யவும் சாதாரண கான்கிரீட் கலவையிலும், செங்கல் கட்டுமான வேலைக்கும், தரையிலிருந்து தளமட்டம் வரை நிரப்பு பொருளாகவும், மணலுக்கு பகுதி மாற்றாகவும், எல்லா வகையான கான்கிரீட்டிலும் 50  முதல் 100 சதவிகிதம் வரையிலும் இந்த மலைமாவைப் பயன்படுத்தலாம். இதுதவிர, கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணலுடன் 35 சதவிகிதம் அளவிற்கு கலந்து பயன்படுத்தலாம். குவாரி டஸ்ட் பயன்படுத்தி கட்டும் வீடுகளின் உறுதித்தன்மையில் எந்த வித்தியா சமும் இருக்காது.

செயற்கை மணல்!

பூச்சு வேலைகளுக்கு ஆற்று மணலைவிட செயற்கை மணல்கள் சிறப்பான மாற்றாக இருக்கும். பூச்சு மணலுக்கு என்றே இந்த வகை செயற்கை மணல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குவாரி டஸ்ட் மற்றும் கருங்கல் ஜல்லிகளை இயந்திரங்கள் மூலமாக அரைத்து அதை சீரான அளவில் சலித்து கழுவப்பட்டு மூட்டைகளில் அடைக்கப்படுகின்றன. இந்த செயற்கை மணலுடன் ஆற்று மணலை 15 சதவிகிதம் அளவிற்கு கலந்து சூப்பர் ப்ளாஸ்டிஸர் (பேஸ்ட் போன்றது) கலந்து பூச்சு வேலைகள் செய்யலாம். சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இந்த வகை செயற்கை மணல்களே முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு பகுதிகளிலும் மற்றும் கேரளாவிலும் இந்த வகை செயற்கை மணல்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.  

கட்டுமானப் பொருட்கள்...

ஜல்லிகள்!

கட்டுமானப் பொருட்கள்...

கருங்கல் ஜல்லிகளுக்கு மாற்றாக கான்கிரீட் கழிவுகளை பயன்படுத்த முடியும். ஆனால், இடிக்கப்பட்ட கட்டடத்தின் கழிவுகளை அப்படியே பயன்படுத்தும்போது எடை தாங்கும் தன்மை குறையலாம்.

குறிப்பாக, கான்கிரீட் கழிவுகளை மட்டும் எடுத்து சீரான அளவில் இயந்திரங்களில் அரைத்து அதை கருங்கல் ஜல்லிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும். சிறிய அளவில் இதை செய்ய முடியாது. பெரிய பில்டர்கள் இந்த வகை மாற்று ஜல்லிகளை உற்பத்தி செய்யலாம். இதுபோன்ற ஜல்லிகள் விரைவில் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. கான்கிரீட் தரத்தில், வலிமையில் எந்த வேறுபாடுகளும் இருக்காது.

மரப்பொருட்கள்!

கதவு நிலைகள் மற்றும் உள்அலங்கார வேலைகளுக்கு மரப் பொருட்களைத் தவிர பிறவற்றை விரும்புவதில்லை நமது மக்கள். இதைத் தாண்டி தற்போது பிளைவுட், பிளாஸ்டிக், இரும்பு என

கட்டுமானப் பொருட்கள்...

பல வகைகளில் கதவுகள் வந்துவிட்டன. மரப்பொருட்கள் விலை அதிகம், உழைக்கும் காலம் குறைவு, பராமரிப்பு செலவுகள் அதிகம் என்பதால் இந்த மாற்று பொருட்கள் சிக்கலில்லாத தீர்வாக இருக்கும்.

அதேசமயத்தில் பிளாஸ்டிக், பிளைவுட் பொருட்களைத் தாண்டி நீண்ட காலம் உழைக்கக்கூடியதும், பாதுகாப்பானதுமான ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக் (Fibre Reinforced Plastic) மூலம் உருவாக்கப்பட்ட கதவு நிலைகளை பயன்படுத்தலாம். இதற்கான பராமரிப்பு செலவுகளும் குறைவு.

மேலும், ஜன்னல்களுக்கு அலுமினியச் சட்டம் மற்றும் கெட்டிக் கண்ணாடிப் பொருட்களை  (Sliding aluminium glazed windows) பயன்படுத்தலாம். இதற்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாது.

மாடிப்படி கைப்பிடிகளுக்கு மரத்திலான கைப்பிடிகளுக்கு பதில் அலுமினியம் பயன்படுத்தலாம். நீடித்து உழைப்பதோடு, இதைப் பராமரிப்பதும் எளிது.  

சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இந்த  மாற்று பொருட்களைப் பயன்படுத்தி இனியாவது நாம் வீடுகளைக் கட்டலாமே!

- நீரை.மகேந்திரன்,
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்.