##~## |
இருபத்தைந்து வயதில் செய்யவேண்டிய வேலையை தனது நாற்பத்தைந்தாவது வயதில் செய்தார் சரவணன். ஆமாம், அந்த வயதில்தான் நிதி ஆலோசனை கேட்டு வந்தார். அப்போது அவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை இருந்தது. அவர் மனைவி சாரதா பொறுப்பாக வீட்டை கவனித்து வந்தார். ஆனால், தனியார் நிறுவனத்தில் நிதித் துறையில் மேலாளராக இருந்த சரவணன், தன் குடும்ப நிதி நிர்வாகத்தை சரியாகச் செய்யத் தவறிவிட்டார்.
காரணம், பகட்டாக வாழவேண்டும் என்று சரவணன் நினைத்ததுதான். நிகழ்கால செலவுகளை அவரால் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. மனைவிக்கு, குழந்தைக்கு என செலவு செய்ததோடு, தன்னை தேடி உதவிகேட்டு வருகிறவர்களுக்கும் பணத்தை வாரி இறைத்தார். தந்த பணத்தைத் திரும்ப வாங்கினாரா என்றால் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரவணன் தாராளமாக செலவு செய்வார் என்பதால் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பண விஷயத்தில் அவர் அடிக்கடி வலியப் போய் ஏமாறுவார். அதுபற்றி அவர் மனைவியோ, நானோ கேட்டால், தன் நடவடிக்கைகளை பெரிதாக நியாயப்படுத்துவார்.
அவருக்கு மாத வருமானம் 40,000 என்றால், செலவு 50,000 ரூபாயாக இருந்தது. அலுவலகத்தில் ஓய்வுக்காலத்திற்காக சேமித்துவந்த பி.எஃப். மூலம் எவ்வளவு கடன் வாங்க முடியுமோ, அதையும் வாங்கி செலவு செய்வது, அதிகமாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது மற்றும் குறைந்த வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி செலவு செய்வது என்று இருந்தார்.

மூன்று கிரெடிட் கார்டுகளை வாங்கி இஷ்டத்துக்கு செலவு செய்து வந்ததால், கிரெடிட் கார்டு கடன் ஒருகட்டத்தில் 5 லட்சத்தைத் தாண்ட, முழிபிதுங்கிய நிலையில் என்னிடம் யோசனை கேட்டு வந்தார். மனிதர் திருந்தி இருப்பார் என்று நினைத்து, சில யோசனைகளை நான் சொன்னேன். ஆனால், நான் சொன்ன யோசனைகளின்படி அவர் சில மாதம்கூட நடக்கவில்லை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
என்னிடம் ஆலோசனைக் கேட்கவரும் முன், வங்கியில் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியிருந்தார். இதற்கான இ.எம்.ஐ. வேலை செய்யும் நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்பட்டதால் பிரச்னை இல்லாமல் போனது. இல்லை எனில், அந்தத் தொகையையும் செலவு செய்துவிட்டு, தவித்திருப்பார்.
இத்தனைக்கும் அவரிடம் எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும் இல்லை. இன்ஷூரன்ஸ் பற்றி அவரிடம் நிறைய எடுத்துச் சொல்லி, அவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் அவர் குடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுத்துத் தந்தேன்.
கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டிதான் அவர் சம்பாதிக்கும் பணத்தைப் பெரிய அளவில் சாப்பிட்டு ஏப்பம் விட்டது. எனவே, அதை முதலில் முடிக்க திட்டம் தந்தேன். குறைவான

வட்டியில் அவர் உறவினர்கள் கடன் தரத் தயாராக இருந்ததால், அந்த பணத்தை வாங்கி முதலில் கிரெடிட் கார்டு கடனை அடைக்கச் சொன்னேன். மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சீட்டில் சேமிக்கச் சொல்லி அந்தப் பணத்தை அவ்வப்போது உறவினர்களுக்கு தரச் சொன்னேன். இந்த கடனை முழுமையாக முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது.
குழந்தையின் எதிர்காலம்!
அவர் ஊதாரித்தனமாக செலவு செய்வதைத் தொடர்ந்தால், எதிர்காலத்தில் அவர் குடும்பம் எந்த அளவுக்கு பாதிப்படையும் என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொன்னபிறகு, குழந்தையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க ஆரம்பித்தார். அந்த சமயம் அவருக்கு சம்பளமும் உயர்ந்திருந்தது. குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு என மாதம் 20,000 ரூபாயைப் பிரித்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யச் சொன்னேன். இந்த முதலீட்டை ஆரம்பிக்கும்போது அவருக்கு வயது 50. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வீணாக்கிவிட்டு ஓய்வுபெறும் காலம் நெருங்கும் வேலையில்தான் மகளுக்காக முதலீடு செய்யவேண்டும் என்கிற ஞானம் அவருக்குப் பிறந்தது. இன்றைய இளைஞர்கள் சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே தங்கள் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். முப்பது வயதானவுடனேயே தங்கள் சம்பாத்தியத்தில் 30 சதவிகிதத் தொகையை முதலீடு செய்ய ஆரம்பிப்பதே சரி.
2000-மாவது ஆண்டிலிருந்தே சரவணன் பென்ஷன் திட்டத்தில் மாதம் 4,000 ரூபாயை முதலீடு செய்து வந்திருக்கிறார். இதுவும் மனைவியின் வற்புறுத்தலால். சரவணனுக்கு 60-வயதுக்குப் பிறகு இந்த பென்ஷன் திட்டத்தில் இருந்து மாதம் 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏற்கெனவே பி.எஃப். மூலம் அதிகபட்ச கடனை வாங்கிவிட்டதால் ஓய்வுபெறும்போது 20 லட்சம் ரூபாய்தான் அவருக்குக் கிடைக்கும். இந்த இரண்டு வருமானத்தில் இருந்தும் ஓய்வுக்காலத்திற்கு பிறகு மாதம் 36,000 ரூபாய் கிடைக்கும் என்று கணக்கிட்டுச் சொன்னேன்.
இந்தப் பணம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து போதாது என்பதால் ஓய்வுக்காலத்திற்கு பிறகும் சம்பாதிக்கவேண்டும். அல்லது மகளை நம்பி காலத்தை ஓட்டவேண்டும். ஓய்வுக்காலத்தில் சுயமாக வாழ விரும்பியதால், தற்போது தனது ஓய்வுக்காலத்திற்காகவும் முதலீடு செய்து வருகிறார் சரவணன்.
கற்றுக்கொள்ள வேண்டியது!
சரவணன் செய்த தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய:
* தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேமித்துவிட்டு, பிறகு பிறருக்கு உதவலாம்.
* சரியான வயதில் நிதித் திட்டமிடலை ஆரம்பிக்கவேண்டும்.
* கிரெடிட் கார்டு வாங்குபவர்கள், அதை கடனுக்காகப் பயன்படுத்தாமல், தேவை அறிந்து பயன்படுத்தவேண்டும்.
* ஓய்வுக்காலத்திற்கென்று சேமித்துவரும் பி.எஃப். தொகையில் எக்காரணத்தைக் கொண்டும் கைவைக்கக்கூடாது.
தொகுப்பு: செ.கார்த்திகேயன், படம்: வீ.நாகமணி.
குறிப்பு : இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.