Published:Updated:

கேள்வி பதில்

புதிய கார்... நோ - க்ளைம் போனஸ் கிடைக்குமா?

பிரீமியம் ஸ்டோரி

? நான் புதிதாக கார் வாங்கத் திட்ட மிட்டுள்ளேன். அதோடு, ஏற்கெனவே நான் வைத்திருக்கும் கார் இன்ஷூரன்ஸில் எந்தவிதமான க்ளைமும் செய்யவில்லை. இந்த நிலையில் புதிய காருக்கு நோ - க்ளைம் போனஸ் கிடைக்குமா?

கேள்வி பதில்

- தருண், கன்னியாகுமரி

பி.மனோகரன், துணை மேலாளர், நேஷனல் இன்ஷூரன்ஸ், அஹமதாபாத்.

''உங்களின் பழைய காரை விற்பனை செய்துவிட்டு, புதிய கார் வாங்கும்போதுதான் நோ-க்ளைம் போனஸை மாற்றிக்கொள்ள முடியும். பழைய காரை நீங்களே வைத்துக்கொண்டு புதிய கார் வாங்கினால், நோ-க்ளைம் போனஸை மாற்ற முடியாது.

? சிறிய அளவில் ஏலச் சீட்டு நடத்தி வருகிறேன். இதை முறைப்படி பதிவு செய்ய என்ன செய்யவேண்டும்?

@- மெயில் மூலமாக

பத்திரப் பதிவு அதிகாரிகள்.

''யார் வேண்டுமானாலும் சீட்டு நடத்தலாம். ஆனால், அதை முறைப்படி பதிவு செய்வது அவசியம். தனிநபரின் பெயரில் சீட்டு நிறுவனம் நடத்த முடியாது. எனவே, நிறுவனமாக பதிவு செய்வது அவசியம். சீட்டு நிறுவனம் பதிவு செய்வதற்கென தனியாக விண்ணப்பங்கள் உள்ளன. அந்த விண்ணப்பத்தில் எந்த இடத்தில் சீட்டு நிறுவனம் நடத்துகிறீர்கள், நிறுவனத்தை யார் யார் நடத்துகிறீர்கள், எத்தனை குழுக்களாக நடத்துகிறீர்கள், மாதாமாதம் எந்த தேதியில் ஏலம் நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அத்தனையும் விண்ணப்பத்தில் கேட்டு இருப்பார்கள். இது அத்தனையும் பூர்த்தி செய்து அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும். இதன் பிறகு நீங்கள் எவ்வளவு தொகைக்கு சீட்டு நடத்துகிறீர்களோ அந்தத் தொகை அளவிற்கு  பத்திர பதிவு அலுவலகப் பெயர் மற்றும் சீட்டு நடத்தும் நிறுவனத்தின் பெயரிலும் இணைந்து ஃபிக்ஸட் டெபாசிட் எடுத்து பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்.

கேள்வி பதில்

டெபாசிட்டின் கால அளவானது 20 மாத சீட்டு எனில், 21 மாதத்திற்கு இருக்க வேண்டும்.  அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஏலம் நடத்தி அந்த மாதம் யார் சீட்டு எடுத்தார் என்பதை ஏலம்விட்ட 21 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துவிடவேண்டும். இல்லையெனில், அதற்கு அபராதம் இருக்கும். அதேபோல சீட்டு எடுத்தவருக்கு பணத்தைக் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிப்பது அவசியம். மாதாமாதம் பதிவு செய்யப்படும் விவரங்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் தனியாக ரசீது வழங்குவார்கள். இதற்கும் கட்டணங்கள் உண்டு. இது அத்தனையும் உங்களால் தனியாக செய்ய முடியாது என்றால் ஆடிட்டர் உதவியை நாடலாம்.''

? கமாடிட்டி சந்தை மூலம் தங்கத்தில் வர்த்தகம் செய்து வருகிறேன். அதை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியுமா?

@- மெயில் மூலமாக...

ஏ.கிருஷ்ணன், கிளை மேலாளர், பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்னை.

''கமாடிட்டி சந்தை என்பது ரிஸ்க் நிறைந்தது. அதில் எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது என்பதால், இந்த தங்கத்திற்கு அடமான கடன் கிடைக்காது.''  

? எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ஃபிளெக்ஸி எஸ்.ஐ.பி. வசதி உள்ளதா?

- மணி, திருச்சி.

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர்.

''எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் இந்த வசதி இல்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மேலும், இது அதிக சம்பளம் வாங்கக்கூடியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

கேள்வி பதில்

இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்வார்கள். உதாரணமாக, 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வைத்திருக்கச் சொல்வார்கள். இதை அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்தத் தொகையை உங்களின் வங்கிக் கணக்கில் வைத்திருக்கவேண்டும். சந்தை இறங்கும் சமயத்தில் 5,500 ரூபாய் வரைகூட முதலீட்டிற்காக எடுத்துக்கொள்வார்கள். சந்தை இறங்கும் சமயத்தில் அதிகமான தொகையையும் எடுத்துக்கொள்வார்கள். சந்தையின் போக்கைப் பொறுத்துதான் உங்களின் எஸ்.ஐ.பி. தொகை நிர்ணயிக்கப்படும். எனவே, எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை உங்களின் எஸ்.ஐ.பி. தொகைக்காக வங்கிக் கணக்கில் வைத்திருப்பது அவசியம்.''

? கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதனால் என் வீட்டில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுவிட்டது. சில மின்சார பொருட்களும் வீணாகிவிட்டன. என்னிடம் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி இல்லை. என்னால் க்ளைம் பெற முடியுமா?

- ராஜன், சென்னை.

இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், சென்னை.

'' கேஸ் சிலிண்டரைப் பொறுத்தவரை நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அனைத்து சிலிண்டர்களும், நாங்களே இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்போம். இதில் க்ளைம் பெற சில நடைமுறைகள் உள்ளன. அதாவது, கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டவுடனே அருகில் உள்ள உங்கள் கேஸ் சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அதோடு காவல் துறையில் இது சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தவேண்டும். எதனால் விபத்து ஏற்பட்டது என்பது தெரிந்தபிறகு கேஸ் ஏஜென்சி அலுவலகம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும். அதன்பிறகு நாங்கள் நேரில் ஆய்வு செய்வோம். உண்மையிலேயே கேஸ் சிலிண்டர் கசிவினால்தான் விபத்து ஏற்பட்டதா என்பதை உறுதி செய்தபிறகு நாங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கும் நிறுவனத்திற்கு பரிந்துரைப்போம். அதன் பிறகு எங்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து க்ளைம் கிடைக்கும். அதை நாங்கள் உங்களுக்கு தருவோம்.''

?  என் குழந்தை முதல் பிறந்தநாள் விழாவை மண்டபத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். இதற்கு ஈவன்ட் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

- அருள் இளங்கோ, கும்பகோணம்.

ஆர்.ரவி, துணை தலைவர், பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் லிமிடெட்

''பிறந்தநாள் விழாவிற்கு இன்ஷூரன்ஸ் கிடைக்கும். ஆனால், அதற்குமுன் விழாவிற்கு யார் யார் வரப் போகிறார்கள், எத்தனை மணி நேரம் விழா நடக்கும் என அனைத்து விவரங்களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கவேண்டும். இதன் அடிப்படையில்தான் உங்களுக்கு பிரீமியமும், கவரேஜும் கிடைக்கும். இதில் தவிர்க்க முடியாத காரணங்களால் விழா ரத்தானால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். அதாவது, நெருங்கிய உறவினர்கள் மரணம், விபத்து போன்ற சமயங்களில் மட்டும்தான்.  

? பதினைந்து ஆண்டு பழைய வீட்டை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு வீட்டுக் கடன் கிடைக்குமா? வீடு வாங்கத் தேவைப்படும் முழுத் தொகையும் கிடைக்குமா?

- முருகன், அண்ணாநகர்.

எஸ்.சுப்புராமன், முதன்மை மேலாளர்(வீட்டுக் கடன் பிரிவு), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை அலுவலகம் சென்னை.

''நீங்கள் வாங்கப் போகும் வீட்டை வங்கியின் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அதை மதிப்பீடு செய்வார்கள். அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உங்களுக்கு கடன் கிடைக்கும். வீட்டின் மதிப்பில் 80 சதவிகிதம் வரை கடனாகப் பெறமுடியும். பழைய வீட்டை பொறுத்தவரை, அதிகபட்சம் 25 வருட பழைய வீட்டிற்கு  கடன் கிடைக்கும். நீங்கள் வாங்கப் போகும் வீடு 15 வருடம்தான் பழைமையானது. எனவே, உங்களுக்கு மிக எளிதாக கடன் கிடைக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு