Published:Updated:

என்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி?

என்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி
##~##

நேஷனல் ஸ்பாட் 

எக்ஸ்சேஞ்ச் - 'மாறும் காலத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்' (பி எ ஸ்மார்ட் சேஞ்ச் வித் சேஞ்சிங் டைம்ஸ்) என்று முதலீட்டாளர்களை உசுப்பேற்றிவிடும் இந்த

எக்ஸ்சேஞ்சின் 'மோட்டோ’ வாசகம் அதன் வெப்சைட்டில் பளிச்சென ஒளிர்ந்தாலும், மாறவே மாறாத பழங்கால டெக்னிக்குகள் பலவற்றை கடைப்பிடித்ததால்தான் தோற்றுப் போயிருக்கிறது.  

ஒரு எக்ஸ்சேஞ்சில் இருக்கும் தரகர்களுக்கு பிரச்னை வரலாம், முதலீட்டாளர்களுக்கு வரலாம். அது எப்படி ஒரு எக்ஸ்சேஞ்சுக்கே பிரச்னை வரும் என்று பல அப்பாவிகள் ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இந்தக் கேள்வியைக் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்த அனுபவஸ்தர் ஒருவரிடம் கேட்டோம்.

என்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி?

''முன்பு பங்குச் சந்தையில் இதுபோன்ற பிரச்னைகள் (பேமன்ட் மற்றும் டெலிவரி கிரைஸிஸ் என்பார்கள்) அவ்வப்போது வந்து போகும். அந்த காலகட்டத்தில் பங்குத் தரகர்களே சந்தையின் உரிமையாளராக இருந்து (செல்ஃப் ரெகுலேஷன்) எக்ஸ்சேஞ்சை நடத்தியதால் இதுபோன்ற நெருக்கடிகள் வந்தன. ஆனால், பங்குச் சந்தை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த செபி என்னும் ஒரு அமைப்பை அரசாங்கம் தொடங்குவதற்கு முன்பு, 1980-90-களில் இன்னுமொரு பிரச்னை முதலீட்டாளர்களுக்கு இருந்தது'' என்றார். அது என்னவென்று அவரிடமே கேட்டோம்.

''ஷேர் டிரேடிங் ஹவுஸ் என்று அழைக்கப் படும் நிறுவனங்கள் ஸ்பாட் முறையில் வியாபாரம் செய்வதற்காக ஒவ்வொரு புல் மார்க்கெட்டின்போதும் ஒவ்வொரு ஊரிலும் புற்றீசல்போல் தோன்றும். ஊரில் இருக்கும் சில முக்கிய புள்ளிகள்(!) சேர்ந்து ஷேர் டிரேடிங் ஹவுஸை நடத்துவார்கள். ஸ்பாட் முறையில் வியாபாரம் செய்ய அரசின் அனுமதி தேவையில்லை என்கிற விதியைப் பயன்படுத்தி அந்த வியாபாரம் கனஜோராக நடக்கும்.

சந்தை மிகுந்த ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும்போது இந்த ஷேர் டிரேடிங் ஹவுஸ்கள் திவாலாகிவிடும். பணம் தரவேண்டியவர்கள் தரமாட்டார்கள். ஷேர் தரவேண்டியவர்கள்  தரமாட்டார்கள். முதலீட்டாளர்களுக்கு பணமும், ஷேரும் வராது (அதாவது, செட்டில்மென்ட் நடக்காது). செட்டில்மென்ட் நிறுத்தப்பட்டவுடன் விஷயம் காரசாரமாக மாறி கைகலப்பெல்லாம் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பணம் தருகிறோம் என்று முதலில் சொல்வார்கள். பிறகு மறைந்தே போவார்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு ஷேர் வாங்கியவர்களும் இதைப் பற்றி மறந்துவிடுவார்கள்.

ஆனால், செபி வந்தபிறகு, இந்த ஷேர் டிரேடிங் ஹவுஸ்கள் மெள்ள மெள்ள மறைந்து நாளடைவில் காணாமலே போய்விட்டன.

சந்தையின் ஏற்ற இறக்கத்தால் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் சில தரகர்கள் அவ்வப்போது திவாலானபோதும் முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் வரவேயில்லை. ஏனென்றால், பங்குச் சந்தையில் தரகர்கள் வெறும் வியாபார ரீதியான அனுமதியை மட்டுமே பெற்றுள்ளார்கள். சந்தையை நடத்தும் உரிமம் தனிப்பட்ட மேலாண்மைக் குழுவிடம் இருக்கிறது. அதிலும் கிளியரிங் கார்ப்பரேஷன் என்ற தனி நிறுவனம் ரிஸ்க் மேனேஜ்மென்டை கவனிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்தச் சிக்கல் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம்.

நிதி நிறுவனங்களும் வங்கிகளும் செய்த கூட்டு முதலீட்டின் மூலமே ஸ்டாக்

எக்ஸ்சேஞ்சுகள் செயல்படுகிறது. அதனால் வியாபாரம் செய்பவர்கள் மீது சரியான கட்டுப்பாடுகளை விதிக்க முடிகிறது. ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்பது சரியாக நடைபெறுகிறது. இதற்கு மேலாக, எக்ஸ்சேஞ்ச் மற்றும் தரகர்களை கேள்வி கேட்க செபி என்ற அரசு இயந்திரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. செபியின் செயல்பாடுகளில் கூடுதல் குறைவுகள் சிலபல இருந்தாலும் கேள்வி கேட்க ஓர் அரசு நிறுவனம் இருக்கிறது என்பதனாலும், அபராதம், நீக்கம் என பல்வேறு நடவடிக்கைகள் சட்டரீதியாக எடுக்க வழிகள் இருப்பதால் சிறுசிறு தவறுகள் மட்டுமே நிகழ்ந்தன'' என்று விளக்கம் தந்தார் அந்த அனுபவஸ்தர்.

'பங்குச் சந்தைக்கு செபியும், கமாடிட்டி சந்தைக்கு எஃப்.எம்.சி.யும் நேரடிக் கண்காணிப்பு இருக்கிற மாதிரி, என்.எஸ்.இ.எல். யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையா?’ என்று கமாடிட்டி சந்தை நிபுணர் ஒருவரிடம் கேட்டோம்.

என்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி?

''ஸ்பாட் வியாபாரம் செய்ய அனுமதி தேவையில்லை என்றாலும், அந்த கால ஷேர் டிரேடிங் ஹவுஸிற்கும், நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சிற்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்லும் அளவுக்கே அதன் நடைமுறைகள் இருந்துள்ளது என்பது அரசுக்கு இப்போது தெரிய வந்துள்ளது.

ஷேர் டிரேடிங் ஹவுஸ் ஆகட்டும், ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் ஆகட்டும், ஸ்பாட்டில் நடக்கும் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்களை கடக்கும். அதாவது, பணமில்லாமல் வாங்கி விற்று லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கும், வாங்கிய பொருட்கள் விலை இறங்கினால் கொஞ்சநாள் வைத்திருந்து விற்க நினைப்பவர்களுக்கும் ஒரு வழி தேவைப்படுகிறது. பி.எஸ்.இ-ல் பத்லா, என்.எஸ்.இ-ல் ஏ.எல்.பி.எம். என்ற பெயரில் இவையெல்லாம் செயல்பட்டு அதனால் பற்பல நடைமுறைச் சிக்கல்கள் வந்து செபி தலையிட்டு சட்டதிட்டங்களை மாற்றி கடைசியாக செட்டில்மென்டை தள்ளிப்போடும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி, அதற்கென்று தனியாக எஃப் அண்ட் ஓ என ஒரு செக்மென்டை கொண்டுவந்தார்கள்.

ஆனால், என்.எஸ்.இ.எல்.-லிலோ ஒரு டிரேடர் டி 2-ல் (டிரேடிங் நாள் தவிர்த்து கூடுதலாக இரண்டு நாட்கள்) ஒரு கமாடிட்டியை வாங்கி டி 25 அல்லது டி 30-ல் விற்கலாம் என்ற நடைமுறை இருந்துள்ளது. டி 2 என்பது ஸ்பாட், டி 25 அல்லது 30 என்பது எதிர்கால வியாபாரம். ஆனால், ஸ்பாட்டில் வாங்கி எதிர்காலத்தில் விற்பதால் சரக்கு வேர்ஹவுஸில் இருக்கிறது என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட ஸ்பாட் சந்தையைப் போன்ற சூழலையே கணக்குக் காட்டியுள்ளார்கள்.

பிரச்னை எப்போது எழுந்தது என்றால் டி 25/30-ல் வாங்கியவர்கள் கமாடிட்டியின் விலை வேகமாக இறங்கியதால் டெலிவரி எடுக்க சுணக்கம் காட்டியதால் வந்திருக்கும். அல்லது டி 20/25-ல் விற்றுவிட்டு டி 2-ல் வாங்கித் தந்துவிடலாம் என்று நினைத்து வியாபாரம் செய்யும்போது கமாடிட்டி விலை ஏறியதால் வந்திருக்கலாம்.

இதுபோன்ற வியாபார வாய்ப்பு இருக்கும் இடத்தை நோக்கி பணம் வேகமாகப் பாயும். அப்படி பாயும்போது சந்தையில் விலை மாற்றங்கள் வேகமாக வரும். சுழலும் பணத்தின் அளவு அதிகமாக அதிகமாக சிறு சிக்கல் வந்தாலும், அது பெரியதாக விஸ்வரூபம் எடுக்கும். அப்படி சிக்கல் ஏதும் உருவாகாமல் இருக்க அது செபி போன்ற ஒரு ரெகுலேட்டரின் கீழ் வரவேண்டும்'' என்றார் அவர்.

'எதுவாக இருந்தாலும் சரி எக்ஸ்சேஞ்ச் என்ற பெயரை பயன்படுத்தி டெபாசிட்டரிகளின் துணையோடு வியாபாரம் நடந்தால் பொதுமக்களை ஏமாற்ற ஏதுவாகுமே? இதை ஆரம்பத்திலேயே அரசாங்கம் கண்டு கொள்ளாமல்விட்டதால்தானே இவ்வளவு சிக்கல்?’ என்று சட்ட நிபுணர் ஒருவரிடம் கேட்டோம்.

''எம்.எம்.டி.சி., பி.இ.சி. போன்ற அரசு நிறுவனங்களின் பணமும் என்.எஸ்.இ.எல்.-லில் சிக்கியிருக்கிறது என்ற செய்தி வந்துள்ளது. அரசின்  வேகமான நடவடிக்கைகள் அதனாலேயேகூட எடுக்கப்பட்டிருக்கலாம். சட்டத்தால் ஒழுங்குபடுத்தப்படாத ஒரு வியாபாரம் இந்திய அளவில் நடந்து அதில் பொதுமக்களின் பணமும் பொதுத் துறை நிறுவனங்களின் பணமும் புழங்குகிறது என்கிறபட்சத்தில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

இதில் பிரச்னையே, யார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில்தான். ஏற்கெனவே செபி, ஆர்.பி.ஐ. போன்ற பழம்பெரும் ரெகுலேட்டர்களேகூட நீங்கள்தானே கண்காணித்திருக்கவேண்டும் என்று ஒருவரை ஒருவர் பழிசொல்லிய நிகழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. சட்டம் இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களின் பணம் வியாபார ரீதியாக அதிக அளவில் புழங்குகிற இடத்தின் மீதெல்லாம் அரசாங்கத்தின் கண் இருக்க வழிவகை செய்யும் வரையில் ஓர் அரசாங்கத் துறையை (இன்டெலிஜென்ஸ் போன்றது) தனியாக உருவாக்கவேண்டும்'' என்கிற யோசனையையும் தந்தார் அவர்.

அரசின் கண்காணிப்புக்குள் வராத ஒரு தொழிலை இந்த அளவிற்கு பெரிதாக இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களை உள்ளேயிழுத்துப் போட்டு நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகக் கவனத்துடன் செய்யவேண்டிய விஷயங்களை வியாபாரத்தை மட்டுமே மனதில்கொண்டு நடத்தியதால் பிரச்னை இந்த அளவுக்கு பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது எனலாம்.

தனி நபர்களோ, பிசினஸ் குழுமங்களோ மக்கள் பணம் வந்துசேரும் சந்தைகளை நடத்தும் போது பிரச்னைகள் வந்துவிடக்கூடும் என்பதை என்.எஸ்.இ.எல். மீண்டும் உறுதி செய்கிறது. சந்தை முதலீடுகளே ரிஸ்க் உள்ள ஒரு விஷயம். ஆனால், சந்தையே ரிஸ்க்காக மாறினால் முதலீட்டாளர்கள் மனம் உடைந்துபோவார்கள் என்பதே நிஜம்!

- நமது நிருபர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு