Election bannerElection banner
Published:Updated:

ரிட்டையர்மென்ட் ஹோம்ஸ்!

பாதுகாப்பு + மகிழ்ச்சி

##~##

வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் நம் நண்பர் ஒருவர். வயதான தனது பெற்றோர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்றால் அதற்கு சாத்தியம் இல்லை. குளிர்தேசத்தின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு பொருந்தி வருமா என்கிற சந்தேகம் நண்பருக்கு. சிறிய ஊரில், அதிக பரபரப்பு இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்ட பெற்றோர்களும் வெளிநாட்டில் நீண்ட காலம் தங்குவதற்கு பிரியப்படவில்லை. 

ஆனால், வயதான காலத்தில் அவர்களை அருகில் இருந்து பார்த்துக்கொள்வது யார்? அவர்கள் சிரமம் இன்றி நிம்மதியாக வாழ அவர்களை எங்கே தங்கவைக்கலாம் என்று யோசித்துப் பார்த்தார். சில ஊர்களில் வயதானவர்களைப் பராமரிப்பதற்கு என்றே முதியோர் இல்லங்கள் இருக்கிறது. ஆனால், தரமான வாழ்க்கை வசதி அங்கு இல்லை. தவிர, தனிமையில் இருக்க முடியாமல், எப்போதும் நான்கு பேர் சுற்றி இருந்தனர்.

ரிட்டையர்மென்ட் ஹோம்ஸ்!

முதியோர் இல்லங்களைவிட இன்னும் சிறப்பான வசதி எங்கு கிடைக்கும் என்று நண்பர் தேடிப்பார்க்க, கடைசியில் அவருக்கு கிடைத்ததுதான் மூத்தக் குடிமக்களுக்கென அமைக்கப்பட்டு வரும் டவுன்ஷிப்

ரிட்டையர்மென்ட் ஹோம்ஸ்!

வீடுகள்.  தனி வீடு, மருத்துவ வசதி, பார்க், நீச்சல் குளம் என பல சௌகரியங்களுடன் கூடிய இந்தக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி அதில் தனது பெற்றோரை தங்க வைத்துவிட்டார் நண்பர்.  

பொருளாதார வசதிகள் இருந்தும், பாதுகாப்பு மற்றும் பிரைவஸியோடு தங்க வாய்ப்பில்லாமல் இருக்கும் பல மூத்தக் குடிமக்களுக்கு இந்த டவுன்ஷிப் வீடுகள் ஒரு நல்ல செய்தியாகவே இருக்கிறது. இதுதொடர்பாக சென்னையில் இதுபோன்ற குடியிருப்புகளை அமைத்து தரும் தி சென்னை ஹோம்ஸ் இயக்குநர் ஜெயஸ்ரீ மேனனைச் சந்தித்தோம்.

''வயதானவர்களைக் கவனிக்க என்று இப்போது இருக்கும் இல்லங்கள் அவர்களது தனிப்பட்ட நலன்களை கவனிப்பதுபோல இல்லை. எனவேதான், இப்போது பலரும் டவுன்ஷிப் வீடுகளைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், அங்கும் அவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுவதால், தற்போது வயதானவர்களுக்கு என்றே டவுன்ஷிப் முறையிலான வீடுகள்  வளர்ந்து வருகின்றன.

மும்பையில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இந்த வகை டவுன்ஷிப்கள் தற்போதுதான் நமது நகரங்களுக்கும் பரவி வருகிறது. நமக்கான சொந்த வீடு என்கிற நிறைவோடு, பாதுகாப்பு, பராமரிப்பும் கிடைப்பதால் இந்த வகை இல்லங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, இது என்.ஆர்.ஐ.களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.

இந்தவகை வீடுகளில் கிடைக்கும் வசதிகள் என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு ரவுண்டு அடித்தோம். அதிலிருந்து கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

பாதுகாப்பு!

மூத்தக் குடிமக்களைப் பொறுத்தவரை, பாதுகாப்புதான் முக்கியம். தனியாக வீடுகளில் தங்குகிறபோது இவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. வெளிநபர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் தொந்தரவுகள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பு இருந்தாலும், எந்நேரமும் இந்தப் பாதுகாப்பு கிடைக்காது. ஆனால், ஓய்வுக்கால டவுன்ஷிப் வீடுகளில் அனுமதி பெற்றால்தான் பார்வையாளர்கள் மூத்தக் குடிமக்களைச் சந்திக்க முடியும். எனவே, தேவையில்லாத தொந்தரவுகள் இருக்காது.

உணவு!

மூத்தக் குடிமக்கள் இல்லங்களில் உணவு முக்கிய பிரச்னையாகலாம். ஆனால், ஓய்வுக்கால டவுன்ஷிப்களில் தனியாக வீடு எடுத்து தங்கும்போது தேவைகேற்ப அல்லது பிடித்த உணவு வகைகளை சமைத்துக்கொள்ள முடியும்.

பராமரிப்பு!

தனி வீடுகளின் பராமரிப்பு முழுவதும் மூத்தக் குடிமக்களையே சார்ந்தது. வீடு சுத்தம் செய்வது, துணி துவைத்தல், குடிநீர், மின் கட்டணம் போன்ற வீட்டு வேலைகளை தாங்களே செய்துகொள்ளவேண்டும். ஆனால், டவுன்ஷிப் வீடுகளில் அனைத்து பராமரிப்பு வேலைகளையும் நிறுவனமே செய்வதால் மூத்தக் குடிமக்களுக்கு பிரச்னை இருக்காது.  

புதிய உறவுகள்!

தங்கள் வயதை ஒட்டிய பிற மூத்தக் குடிமக்களோடு பழகும் வாய்ப்பு உள்ளதால் சமூக ஒருங்கிணைவு இந்தவகை இல்லங்களில் கிடைக்கிறது. இதனால், ஓய்வுக்காலங்களில் மனவருத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வகை செய்கிறது. ஒருவரோடு ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்கும், பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தனிமையிலிருந்து எளிதில் தப்பிக்க முடிகிறது.  

மருத்துவம்!

ஓய்வுக்கால டவுன்ஷிப் வீடுகளில், பொது மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள் என ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. இதனால் தேவைக்கேற்ப மருத்துவ வசதி கிடைக்கும். ஆனால், சில டவுன்ஷிப்கள் நகரத்தைவிட்டு வெளியே இருப்பதால் அவசரத்திற்கு என்று சிறப்பு மருத்துவ வசதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

கட்டணங்கள்!

வீடு மட்டும்தான் சொந்தமாக வாங்க வேண்டும். இதர அனைத்து வசதிகளும் கட்டண முறைதான். மருத்துவம், பராமரிப்பு, உணவுகள், நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம், பொது அரங்கு என அனைத்து வசதிகளும் கட்டணம்தான் (பார்க்க பெட்டிச் செய்தி).

இதுபோன்ற பல சிறப்பு விஷயங்களால் இந்தவகை டவுன்ஷிப் இல்லங்களை இப்போது பலரும் தேடிச் செல்கின்றனர். இந்தவகை வீடுகளைத் தேர்வு செய்யும்முன், நாம் என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

கவனிக்கவேண்டியவை..!

இந்த வீடுகள் மூத்தக் குடிமக்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். வழுக்குகிற மாதிரி டைல்ஸ்கள் இதில் இருக்கக்கூடாது. வழுக்காத தரைகள், கைப்பிடி வசதிகொண்ட பாத்ரூம், முதியோர் பயன்படுத்தும்படியான டாய்லெட் வசதிகள், சற்று உயரம் குறைந்த படுக்கைகள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பொதுவாக வயதானவர்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் இருப்பதால் அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் இருக்கவேண்டும். மேலும், சாய்வுதள வாசல், எல்லா இடங்களிலும் அவசர கால அழைப்பு மணிகள், அவசர கால வழி என சிறப்பான அம்சங்களும் இந்தவகை வீடுகளில் உள்ளதா என்பதைப் பார்க்கவேண்டும்.

கையில் ஓரளவுக்கு பணமிருப்பவர்கள் தங்கள் பெற்றோர்களை இதுபோன்ற இல்லங்களில் தங்க வைக்க யோசிக்கலாம்!

- நீரை. மகேந்திரன்

 மும்பையில் என்ன வழக்கம்?

 மும்பையில் இந்தவகையிலான மூத்தக் குடிமக்கள் டவுன்ஷிப் பரவலாக புழக்கத்தில் வந்துவிட்டன. ஆனால், இங்கே வீடுகள் விற்கப்படுவதில்லை. டெபாசிட் முறையில் ஒரு தொகையை கட்டிவிட்டால் ஒரு வீட்டை ஒதுக்கித் தந்துவிடுகிறார்கள். அதில் தங்கிக்கொள்ளவேண்டியதுதான். மூத்தக் குடிமக்களின் இறப்புக்குப் பிறகு அல்லது அவர்கள் விரும்பி வெளியேறும் காலத்திற்கு பிறகு அவருக்கோ அல்லது அவரது நாமினிக்கோ டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்படும்.

ஆனால், சென்னையில் இந்த வழக்கமில்லை. வாங்குபவர் பெயரில் வீட்டை பத்திரப்பதிவு செய்து தந்து விடுகின்றனர். இது கிட்டத்தட்ட வீடு வாங்குவதுபோலத்தான். ஆனால், மூத்தக் குடிமக்கள் தங்குவதுபோல ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. அவர்கள் காலத்திற்கு பிறகு அந்த வீடு அவர்களது நாமினி வசம் ஒப்படைக்கப்படும். நாமினி அந்த வீட்டில் குடியேற விரும்பினால், பிற்காலத்தில் இதர வீடுகளின் மூத்தக் குடிமக்களுக்கு தனிமைப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 கட்டணம் எவ்வளவு?

 பராமரிப்பு தொகை ஒரு சதுர அடிக்கு 7 ரூபாய்.

உணவுக் கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 130 ரூபாய். விருந்தினர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

நீச்சல் குளம், பார்க் போன்றவைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை.

பொதுவான மருத்துவ ஆலோசனைகளுக்கு கட்டணம் இல்லை. மருந்துகள், கூடுதல் மருத்துவ வசதிகளுக்கு தனி கட்டணம் இருக்கும்.

சலவைக் கட்டணம் கிடையாது.

ஆம்புலன்ஸ் பயன்படுத்த குறைந்தபட்சம் 400 ரூபாய். இது தூரத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும்.

வீட்டின் விலை ஒரு சதுர அடிக்கு 4,000 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. இது அந்தந்தப் பகுதி ரியல் எஸ்டேட் நிலவரங்களைப் பொறுத்து மாறுபடக்கூடும்.

இதெல்லாம் பொதுவான விவரங்கள்தான். இந்தக் கட்டணங்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு