Published:Updated:

கல்விக் கடன்...

கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்குத் தொடரலாமா?

கல்விக் கடன்...

கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்குத் தொடரலாமா?

Published:Updated:
##~##

மகனுக்கு கல்விக் கடன் வாங்கி இருந்தேன். வங்கி அதிகாரிகள், மானியம் கிடைத்துவிட்டால், வட்டி கட்டத் தேவையில்லை என்று கூறி இருந்தார்கள். ஆனால், இரண்டு வருடத்திற்கு பிறகு அசலுடன் கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அவர்கள் மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியுமா?

- பி.கணேசன், பெருங்களத்தூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரமேஷ், வழக்கறிஞர்.

''கல்விக் கடனுக்கு வட்டி மானியம் என்பது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த வட்டி மானியம் என்பது படிக்கும் காலத்திற்கு மட்டும்தான் கிடைக்கும். இதில் வட்டித் தொகை முழுவதும் மானியமாக கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர் இந்த சலுகையைப் பெறலாம். இதற்கு அரசு நிர்ணயித்துள்ள வருமான வரம்பின்கீழ் வருபவர்கள்தான் மானியம் பெற முடியும். இதைப் பெற உங்களின் ஆண்டு வருமான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்திருக்கவேண்டும். படிப்பு காலத்தின்போதே நீங்கள் மானியம் பெற தகுதியானவரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். மேற்கண்ட தகுதிகளோடு நீங்கள் இருந்தால் கல்விக் கடனுக்கு வட்டி மானியம் கிடைக்கும். தற்போது மானியம் வழங்க வங்கி மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் வங்கி ஆம்புட்ஸ்மேனிடம் முறையிடலாம் அல்லது  நீதிமன்றத்தை அணுகலாம்''.

கல்விக் கடன்...

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து கிடைக்கும் லாபத்தை, மீண்டும் முதலீடு செய்தால் குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்டவேண்டுமா?

- கே.ராஜீவ்குமார். திருப்பத்தூர்.

எஸ்.கிருஷ்ணன், ஆடிட்டர்.

''உங்களின் முதலீட்டை 12 மாதங்களுக்குள் விற்று அதில் லாபம் கிடைத்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவிகிதம் கட்டவேண்டும். அதே நீண்ட கால முதலீடாக இருந்தால் வரி கட்டத் தேவையில்லை. ஆனால், தொடர்ந்து பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்தால், அது பிசினஸாக கருதப்படும். அப்போது உங்களின் அடிப்படை வருமான வரி விகிதத்துக்கு ஏற்ப வரிச் செலுத்த வேண்டியிருக்கும்.''

ஒரு நிறுவனத்தில் லாபத்தை ராயல்டியாக எடுத்துக்கொள்வதற்கும், டிவிடெண்டாக எடுத்துக்கொள்வதற்கும் என்ன வேறுபாடு?

- மணி, ஈரோடு.

சுப்ரமணியன், ஆடிட்டர்.

''ராயல்டி, டிவிடெண்ட் இரண்டும் வேறு வேறு. ஒரு நிறுவனத்திற்கு கிடைக்கும் நிகர லாபத்தில் வரி போக மீதமிருக்கும் தொகையில் ஒரு பகுதியை நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பிரித்துத் தருவதுதான் டிவிடெண்ட். மேலும், இது நிறுவனத்திற்கு லாபம் வந்தாலும் நிறுவனம் விரும்பினால் மட்டுமே தரப்படும்.  

கல்விக் கடன்...

ராயல்டி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து காப்புரிமை (பேட்டன்), தொழில்நுட்பம், வடிவமைப்பு ஏதாவது ஒன்றை வாங்கி அதை பயன்படுத்தி, நிறுவனம் பொருட்களை உற்பத்தி செய்தால் அவருக்கு அல்லது அந்த நிறுவனத்துக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை ராயல்டியாகத் தரவேண்டும். நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும், இந்த ராயல்டி தொகையைத் தந்தாகவேண்டும்.''

ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்ட் (குரோத்), ஹெச்.டி.எஃப்.சி. டாக்ஸ் சேவர் (குரோத்), ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் (ரீடெயில் ப்ளான்), ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்காக முதலீடு செய்து வருகிறோம். இந்த ஃபண்டுகள் சரியான தேர்வா? இதில் எத்தனை வருடம் முதலீட்டை தொடரலாம்?

- டி.மாலதி, கோவை.

ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.

''நீங்கள் தேர்வு செய்த ஃபண்டில் சில மாற்றங் களைச் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன்.  ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்டை (குரோத்) இன்னும் சிறிது காலம் தொடரலாம். அந்த சமயத்தில் இந்த ஃபண்டின் வளர்ச்சியைத் தொடர்ந்து கவனித்து அதில் சரியான வளர்ச்சி இல்லை யெனில் வேறு ஃபண்டிற்கு மாறிக்கொள்வது அவசியம். ஹெச்.டி.எஃப்.சி. டாக்ஸ் சேவர் ஃபண்டை கைவிடுவது நல்லது. ஏனெனில், மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இதனுடைய செயல்பாடு சுமார்தான். இதற்கு பதில் ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் டாக்ஸ் சேவர் ஷீல்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். ரிலையன்ஸ் குரோத் ஃபண்டுக்குப் பதிலாக ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம். ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஸ்கீம் ஃபண்டை, ரிலையன்ஸ் கோல்டு இ.டி.எஃப். ஃபண்டாக மாற்றிக்கொள்ளலாம்.''

கல்விக் கடன்...

அசோக் லேலாண்டு பங்குகள் வேகமாக விலை குறைய என்ன காரணம்? ஆறு மாதங்களுக்குப் பிறகாவது உயர சாத்தியம் உண்டா? அல்லது இப்போது விற்றுவிடலாமா?

@- மெயில் மூலமாக,

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

''கடந்த ஒரு வருடமாக வாகனத் துறையே மோசமான நிலையில் உள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி என்பது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. எனவே, இந்தப் பங்கின் விலை உயர நீண்ட காலம் பிடிக்கலாம். எனவே, உங்களால் நஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியுமெனில் முடிந்தவரை விற்று வெளியேறிவிடுவது நல்லது.''

சொந்தமாக வீடு கட்டி அதில் ஒரு பகுதியில் நானும், ஒரு பகுதியை வாடகைக்கும் விட்டு இருக்கிறேன். என்ன வரி கட்ட வேண்டும்? ஏதாவது வரிச் சலுகை உண்டா?

- வைத்தியநாதன், பம்மல்.

வி.டி.மணவாளன், ஆடிட்டர்.

கல்விக் கடன்...

''வீட்டை கட்டிமுடித்தபின் சொத்து வரி, தண்ணீர் வரிச் செலுத்தவேண்டும். நீங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். எனவே, வருமான வரித் தாக்கலின்போது வாடகையை வருமானமாக காண்பிக்க வேண்டும். வாடகை வருமானத்தில் சொத்து வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை கழித்துக்கொள்ளலாம். இதற்கு அந்தந்த வரிகளைச் செலுத்தியதற்கான ரசீது வைத்திருப்பது அவசியம். இதன்பின்பு மீதமுள்ள வாடகை வருமானத் தொகையில் 30 சதவிகித தொகைக்கு நிரந்தர கழிவாக வீட்டு சீரமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுக்காக கழித்துக்கொள்ளலாம். மீதியுள்ள வாடகை வருமானத்திற்கு மட்டும் வருமான வரிச் செலுத்தினால் போதும்.''

கல்விக் கடன்...

நான் பங்கு டிரேடிங் செய்வதற்காக புரோக்கருக்கு பவர் ஆஃப் அட்டர்னி தந்திருந்தேன். அடுத்த சில மாதங்களில் வெளியூர் சென்றுவிட்டதால் என்னுடைய டிரேடிங்-ஐ ஆன்லைனுக்கு மாற்றிக்கொண்டேன். இப்போது பவர் ஆஃப் அட்டர்னியை கேன்சல் செய்வதற்கு என்ன செய்யவேண்டும்?

-  குரல் பதிவு மூலமாக.

லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''பவர் ஆஃப் அட்டர்னியை செபி விதிமுறையின் படி, எப்போதுவேண்டுமானாலும் கேன்சல் செய்து கொள்ளலாம். இது மிகவும் எளிது. உங்களின் டிரேடிங் அனைத்தையும் ஆன்லைனில் முழுவதுமாக மாற்றிக்கொண்ட பிறகு, நீங்கள் பவர் ஆஃப் அட்டர்னி தந்திருக்கும் புரோக்கருக்கு உங்களின் நிலைமையை விளக்கி ஒரு கடிதம் எழுதுவது அவசியம். அதில் உங்களின் பவர் ஆஃப் அட்டர்னியை உடனடியாக ரத்து செய்து தருமாறு கேட்கவேண்டும். இதை பதிவு தபால் அல்லது நேரடியாக தந்து அதற்கு ஒப்புகை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.''

படங்கள்: வீ.நாகமணி