Published:Updated:

சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்!

ஆரம்பத்தில் துன்பம்; இறுதியில் இன்பம்!

சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்!

ஆரம்பத்தில் துன்பம்; இறுதியில் இன்பம்!

Published:Updated:
##~##

ராகவன் குடும்பத்தை நான் சந்தித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அன்றைய நிலையில் அவருடைய பொருளாதார வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்து வந்தார். என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தபோது அவருக்கு 45 வயது. மனைவி ரேவதி மற்றும் 13 வயதில் ஸ்ரேயா, 8 வயதில் காவ்யா என இரண்டு மகள்கள் சொந்தமாக தொழில் செய்து வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் மாலையில் இருவரும் என்னை வந்து சந்தித்தார்கள். முதலில் ரேவதி, தன் கணவர் சரியாகத் தூங்குவதில்லை; சாப்பிடுவதில்லை; குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலைமையை நினைத்து புலம்பித் தள்ளுகிறார் என்று என்னிடம் சொன்னார். பொருளாதார நிலைமை மோசமானதற்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொறுப்பற்ற தன்மை!

முதலில் ராகவனிடம், நீங்கள் செய்யும் தொழிலில் மாதம் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறீர்கள். அதில் குடும்பத்திற்கு என்று எவ்வளவு தொகையை ஒதுக்குவீர்கள் என்று கேட்டேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக மட்டுமே இருந்தார். என்ன காரணம் என்று கேட்டேன். அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு எனக்கு கோபம்தான் வந்தது.

குடும்பத்திற்கு ஆகும் மாதச் செலவு, சேமிப்புகளையும், தொழில் சம்பந்தப்பட்ட செலவுகளையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளாமல், சம்பாதிக்கும் வருமானத்தில் இருந்து எடுத்து பொத்தாம்பொதுவாகச் செலவழித்து வந்திருக்கிறார். இது ஒருகட்டத்தில் கடனாக மாறி கழுத்தை நெருக்கி இருக்கிறது.

சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்!

அடுத்து, ராகவனின் முதலீட்டு விவரங்களை ஆராய்ந்தேன். இஷ்டத்துக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தார். தவிர, 5 லட்சம் ரூபாயை ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருந்தார். இதற்கென்று தனியாக ஐந்து டீமேட் கணக்குகளை வெவ்வேறு புரோக்கிங் நிறுவனத்தில் தொடங்கி அதை பராமரித்தும் வந்திருக்கிறார்.

இது மட்டுமில்லாமல், தன் பெயரிலும், தனது பிள்ளைகள் பெயரிலும், மனைவி பெயரிலும் மொத்தம் 16 இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஏன் எடுத்தார் என எனக்கு புரியவில்லை. இதற்கான க்ளைம் தொகை எவ்வளவு என்று பார்த்தால் மிக மிக குறைவுதான்.

ஆனால், ராகவன் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளவில்லை. சரி, அவசரத் தேவைக்காவது பணத்தைச் சேமித்து வைத்திருக் கிறீர்களா என்று கேட்டேன். 'அவசர தேவைகள் வரும்போது பயன்படுத்தத்தான் கிரெடிட் கார்டு இருக்கிறதே!’ என்றார்.  பணப் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் அதைச் சமாளிக்க ஆறு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், அந்தக் கடன்களுக்கான பணத்தை சரியான தேதிக்குள் திருப்பிக் கட்டவில்லை.  அதற்காக அவர் கட்டும் வட்டியைப் பற்றி   கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.  

இத்தனை தவறுகளை செய்த ராகவன், தெரிந்தோ, தெரியாமலோ ஒரு நல்ல காரியம் செய்திருந்தார். அது, அவர் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியிருந்ததுதான்.

நிதிச் சிக்கல் காரணமாக பல்வேறு மனப் பிரச்னையில் சிக்கித் தவித்த ராகவனை முதலில் ஒரு முப்பது நாளைக்கு அமைதியாக இருந்துவிட்டு வரும்படி சொன்னேன். யோகா செய்வதன் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தச் சொன்னேன். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் கழித்து ராகவனும் ரேவதியும் என்னை சந்தித்தார்கள். அப்போது ராகவன் ஓரளவுக்கு அமைதி ஆகியிருந்தார். அந்தக் குடும்பத்துக்கான நிதித் திட்டமிடலை ஆரம்பிக்க இதுவே சரியான சமயம் என்று நினைத்து அந்த காரியத்தில் இறங்கினேன்.

மூன்று சேமிப்பு கணக்கு!

வெவ்வேறு வங்கியில் மூன்று சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி, வருகிற மாத வருமானத்திலிருந்து குடும்பச் செலவுகளுக்காக, தொழில் செலவுகளுக்காக, சேமிப்பு, முதலீடு, வரி கட்டுதல் மற்றும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் என தனித்தனியாக தொடங்கச் சொன்னேன். இதனால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை யும் தொழிலுக்குத் தேவையான பணத்தையும் கலக்காமல் தனித்தனியாக வைத்து நிர்வாகம் செய்ய முடியும் என்று புரியவைத்தேன். சொந்தத் தொழில் செய்கிற பலரும் இந்த தவறுகளை செய்பவர்கள்தான். அதையேதான் ராகவனும் செய்திருந்தார்.

பங்கு நிர்வாகமும் சரியில்லை!

சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்!

ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை 50 நிறுவன பங்குகளுக்கும் மேலானவற்றில் முதலீடு செய்திருந்தார். ஆனால், அதை சரிவர ஃபாலோ செய்யாமல் விட்டதால் பல நிறுவனங்களில் போட்ட முதலீடு மைனஸில் இருந்தது. அவருக்கு பிசினஸ் செய்யவே நேரம் சரியாக இருந்ததால், அவர் வைத்திருந்த அத்தனை பங்குகளையும் விற்கச் சொன்னதோடு, டீமேட் கணக்குகளையும் குளோஸ் செய்ய சொன்னேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை அவசர தேவைக்காக வங்கியில் சேமிக்கச் சொல்லி அதற்கென தனியாக வங்கிக் கணக்கையும் ஆரம்பித்து தந்தேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாய் வீதம் ஆர்.டி. சேமிப்பை ஆரம்பிக்கச் சொல்லி அதை பெரிய மருத்துவச் செலவுக்காக வைத்திருக்க சொன்னேன். மருத்துவச் செலவுகள் வராதபட்சத்தில் அதை குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் புரியவைத்தேன்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு!

தனது தேவை என்னவென்று தெரியாமலேயே பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தார் ராகவன். தனது குழந்தையின் திருமணத்திற்கு, கல்யாணத்திற்கு, ஓய்வுக்காலத்திற்கு என அவருக்குத் தேவை என்னவோ வெறும் ஆறு ஃபண்டுகள்தான். அதனால் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கென்று ஆரம்பித்து, வங்கி சேமிப்பு கணக்கில் சேமித்து பின்னர் அதைப் பிரித்து தேவைக்கு தக்கபடி ஈக்விட்டி டைவர்சிஃபைட், பேலன்ஸ்டு ஃபண்ட் என முதலீட்டை ஆரம்பித்து தந்தேன்.

ஏற்கெனவே இருந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை மாற்றி அமைத்துக்கொடுத்து அதிலேயே எதிர்கால தேவைகளுக்கான முதலீடு தொடரும்படியாக அமைத்துத் தந்தேன். இந்த முதலீடு எந்த காரணத்தினாலும் நின்றுவிடக் கூடாது என்பதை ராகவனுக்கு உணர்த்தியதைவிட ரேவதிக்கு தெளிவாகப் புரியும்படி எடுத்துச் சொன்னேன். ஏனெனில் கணவன் முதலீட்டிலிருந்து தவறும்போது மனைவிதான் பொறுப்பெடுத்துக் கொண்டு குடும்ப சிக்கலை தீர்ப்பார்.

தேவையில்லாத இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

16 பாலிசிகள் எடுத்து வைத்திருந்தார் ராகவன். முதலீட்டுக் கண்ணோட்டத்தில் அவர் பாலிசி எடுத்திருந்ததாலும், அவரது பாலிசிகளுக்கு பிரீமியம் அதிகமாகவும் முதிர்வுத் தொகை குறைவாகவும் இருந்த காரணத்தினால், பாலிசிகள் அத்தனையையும் சரண்டர் செய்யச் சொல்லிவிட்டு, உடனே ஒரு கோடி ரூபாய்க்கு ஆன்லைனில் டேர்ம் இன்ஷூரன்ஸ் ஒன்றை எடுத்துத் தந்தேன். முன்பு கட்டிவந்த பிரீமியத் தொகையில் வருடத்திற்கு 25 சதவிகித தொகையை மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸிற்கு கட்டும்படியாக இருந்ததைப் பார்த்து ராகவன் திகைத்து நின்றார். மீதி பணத்தை அப்படியே முதலீட்டிற்கு ஒதுக்கிவைக்கச் சொல்லி விட்டேன்.

பிறகு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொடுக்கவேண்டிய கடமை இருக்கிறதல்லவா? அதனால் குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை எடுத்துத் தந்தேன். இதையும் ஆன்லைனில் எடுத்துத் தந்ததால் பிரீமியம் குறைவாகவே கட்டவேண்டி இருந்தது.

கிரெடிட் கார்டு!

ராகவன் வைத்திருந்த ஆறு கிரெடிட் கார்டுகளில் ஒரே ஒரு கார்டை மட்டும் மிக முக்கியமான பயனுள்ள தேவைகளுக்காகப் பயன்படுத்த வைத்துக்கொண்டு மீதமுள்ள கார்டுகளை குளோஸ் செய்யச் சொன்னேன். நிலுவையில் இருந்த கடன் தொகையை இன்ஷூரன்ஸ் சரண்டர் செய்ததால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி முழுவதுமாக அடைத்ததினால், அந்த பிரச்னையும் தீர்ந்தது.

இந்த நிதித் திட்டமிடலை முழுவதுமாகச் செய்துமுடிக்க நான் எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட நான் சொன்ன யோசனைகளைச் செயல்படுத்த ராகவன் குடும்பத்தார் எடுத்துக்கொண்ட முயற்சியும், கால அளவும் பாராட்டுதலுக்குரியது. ராகவன் தனது நிலைமையை சீராக்கிக்கொள்ள ஆறு மாதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார். என் வாடிக்கையாளர்களில், பல சவால்களில் இருந்து இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்தது அவர் ஒருவர் மட்டுமே.

ஆரம்பத்தில் துன்பமாக இருந்தாலும் இன்றைக்கு இன்பமாக மாறியிருக்கிறது அவர் வாழ்க்கை. 'இப்பவெல்லாம் அவர் நல்லா தூங்குறாரு!’ - ஒரு மாதத்துக்கு முன்பு ராகவனின் மனைவி ரேவதியைச் சந்தித்தபோது இப்படி சொன்னார். அவர் சொன்னதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பணம் சம்பாதிப்பதே நிம்மதியாக இருக்கத்தானே!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப
நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.