Published:Updated:

எடக்கு மடக்கு!

எக்ஸ்சேஞ்சே வியாபாரம் பண்ணலாமா ?

எடக்கு மடக்கு!

எக்ஸ்சேஞ்சே வியாபாரம் பண்ணலாமா ?

Published:Updated:
##~##

என்ன ஏகாம்பரம், உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஒரு வாரமா ஆளே காணாமப் போயிட்டியே!'' என்று என்னை பார்த்தவுடன் கேட்டார் முதலீடு முத்தையா. ''சொந்த வேலையா ஊருக்குப் போயிருந்தேன். நல்லா தொழில் பண்ணுவோம்னு என்னோட சொந்தபந்தங்ககிட்ட எக்கச்சக்கமா பணத்தை வாங்கி ஏப்பம்விட பார்த்துச்சு ஒரு குரூப்பு! அவங்களை அப்படியே அமுக்கி பணத்தை வாங்கித் தர்றதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு! அது கிடக்கட்டும், நீங்க ஏன் என்னைத் தேடுனீங்க!'' - குறுந்தாடியைத் தடவியபடி கேட்டேன் நான்.

''என்ன ஏகாம்பரம், இப்படி அசால்ட்டா கேக்குறே! என்.எஸ்.இ.எல்.-ல பலரோட பணம் போயிடுச்சுன்னு சொல்றாங்க. என்.எஸ்.இ.எல்.-ல ஏன் இப்பிடி நடந்துச்சு? எங்க பணம் திரும்பக் கிடைக்குமா? ஒண்ணும் புரியலை ஏகாம்பரம்'' என்று அழாத குறையாக புலம்பித் தீர்த்தார் முத்தையா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முத்தையா, ஆரம்பத்துல பிரச்னைன்னு செய்தி வந்தப்ப, ஸ்மால் ப்ராப்ளம், சரி பண்ணிடுவாங்கன்னுதான் நெனைச்சேன். ஆனா, நாள் போகப்போக பிரச்னை பெருசாகி இன்னைக்கு பார்லிமென்டுலேயே பேசுற அளவுக்குப் பெருசாயிடுச்சு!

எடக்கு மடக்கு!

சட்டத்துல சிக்காத ஸ்பாட்ல (இடத்துல) போய் உட்கார்ந்துக்கிட்டு வியாபாரத்துக்கு வாங்கன்னு முதலீட்டாளர்களைக் கூப்பிட்டு, ஓஹோன்னு வியாபாரம் பண்ணி கடைசியில கிரேட்  டிராஜிடியா முடிஞ்சிரும் போலருக்கு என்.எஸ்.இ.எல். கதை.

ஸ்பாட்டுன்னு ஆரம்பிச்சு, அப்புறமா வட்டிக் கடை ரேஞ்சுக்கு வியாபாரம் நடந்துருக்கும் போலிருக்கு. ஒண்ணுக்கு பத்து ரெகுலேட்டர் இருந்தப்பயும் யாருக்குமே இவங்க என்ன செய்யறாங்கன்னு புரியலை. புரிஞ்சுக்கவும் நெனைக்கலை. காரணம், அவங்களைக் கண்காணிக்கிறதுக்கோ அல்லது நடவடிக்கை எடுக்குறதுக்கோ யாருக்கும் அதிகாரம் இல்லைங்கிறப்ப, இதுல ஏன் மூக்கை நுழைக்கணும்னு ரெகுலேட்டருங்க  நெனைச்சுட்டாங்கபோல!  

அப்படின்னா செபி, எஃப்.எம்.சி., ஆர்.பி.ஐ. எல்லாம் எதுக்கு இருக்குன்னு என்னை கேட்டு முறைக்காதீங்க! 'ஸ்பாட்’ தொழிலைச் செய்றவங்களைக் கட்டுப்படுத்த அவங்களுக்கு எந்த அதிகாரமும் கெடையாதுன்னு ஏற்கெனவே சொன்னேனே!

அப்ப எப்படி பேங்குங்க மாதிரியான டெபாசிட்டரிங்க எல்லாம் இதுக்குள்ள வந்துச்சுன்னு கேக்குறீங்களா? அவங்க நோக்கம் சட்டத்துக்கு உட்பட்டு லாபம் சம்பாதிக்குறது தான். அவங்ககிட்ட போயி, இந்த எக்ஸ்சேஞ்சு அரசாங்கத்தோட கண்காணிப்பிலயே வரலை யேன்னு சொன்னா, அதைப் பத்தி நாம ஏன் கவலைப்படணும்? பிசினஸ் நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்குனு சொல்லி இருப்பாங்க.  

பனை மரத்துக்கு அடியில உட்கார்ந்து பால் குடிக்கிற விஷயமில்லீங்க இது. பால் பூத்து ஸ்டூல்ல உட்கார்ந்துகிட்டு கள்ளு குடிக்கிற விஷயம். ஜனங்க இது நல்ல விஷயம்தான்னு நம்புறதுக்கு டெபாசிட்டரிகள் வேற கோல்டு டீமேட்னு இறங்கினது ரொம்ப தோதாப் போச்சு.  

பேங்குங்க ரிசர்வ் பேங்க் கீழே வருது! டெபாசிட்டரி செபி கீழே வருது! இந்த இரண்டு பேரும் நினைச்சிருந்தா, முதலீட்டாளரைக் காப்பாத்தியிருக்கலாம்தான். ஆனா, ஆல் இந்தியா ரீதியில வங்கிகளே முதலீடு பண்ணின எக்ஸ்சேஞ்சுகளோட ஆசீர்வாதத்தோட இப்படி ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆரம்பிச்சா ஏகாம்பரம்கூட நம்பிடுவானே!  

முத்தையா நீ மட்டுமில்ல, உன்னை மாதிரி பலரும் என்.எஸ்.இ.எல். பத்தி எங்கிட்ட மனம் கொதிச்சுப் பேசினாங்க. இனிமே, எக்ஸ்சேஞ்ச் என்கிற பெயரை யாரும் பயன்படுத்தக்கூடவே அனுமதிக்கக் கூடாதுன்னு ஒரு சட்டம் கொண்டுவரணுமுன்னு சொன்னாரு நண்பர் ஒருத்தரு. செட்டில்மென்ட் கேரன்டின்னு சொன்னாங்களே, அது என்னாச்சுன்னு ஒருத்தரு தையாத்தக்கான்னு குதிக்கிறாரு. எல்லா எக்ஸ்சேஞ்சோட கேரன்டியும் இப்படித் தான் இருக்குமான்னுகூட சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாரு.

தங்கம் வாங்காதேன்னு ஒருபக்கம் அரசாங்கம் சொல்லுது. எக்ஸ்சேஞ்ச் பக்கம் போனா பிரச்னைன்னு ஜனங்க முடிவு பண்ணினா கடைசியில என்னவாகும்? இவ்ளோ பெரிய நாட்டுல சேமிப்பு, முதலீட்டுக்கு வந்தே ஆகணும். இல்லாட்டி பானையில போட்டு புதைச்சு வைக்கிற மாதிரியாயிடும். எனக்கென்ன போச்சுன்னு எல்லா ரெகுலேட்டரும் வருஷக்கணக்கா இருந்துட் டாங்க. பொதுமக்கள் பணம் எக்கச்சக்கமா புரளுர இடத்துல அரசாங்கத்தோட கண்ணு எப்பவுமே இருக்கணுமா வேணாமா?

பிரச்னை ஆரம்பிச்சப்ப எல்லாம் சரியாயிடு முன்னாங்க. அப்புறம் கொஞ்ச நாளில தர்றோமுன்னாங்க. அப்புறம் எஃப்.எம்.சி. முன்னிலையில் செட்டில்மென்டுன்னாங்க. இப்ப மார்ச் 2014-ங்கிறாங்க. எஃப்.எம்.சி.யோ அது அவங்களோட ஸ்டேட்மென்ட்ங்குது. ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி கொஞ்சம் உள்ள வந்தா பரவாயில்லைங்குது.

இந்த விஷயத்துல லேட்டஸ்ட்டா ஓர் அதிர்ச்சி நியூஸ். அகில இந்திய தங்க வியாபார பாதுகாப்பு கழகம் மாதிரி ஒண்ணை ஆரம்பிச்சு அதில மெம்பர்களைச் சேர்த்து அந்த மெம்பர்களும் இந்த எக்ஸ்சேஞ்சுல புகுந்து விளையாடிருக்காங்கன்னு ஒரு தகவல்.  ஒரு எக்ஸ்சேஞ்சுல பலரும் வியாபாரம் பண்ணலாம். ஆனா, அந்த எக்ஸ்சேஞ்சே வியாபாரம் பண்ணலாமா? அப்படி செஞ்சா அந்த வியாபாரம் எப்படி நடக்கும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணமான்னு நறுக்கு தெறிச்ச மாதிரி சிலபேரு கேக்கத்தான் செய்றாங்க.  

எஃப்.எம்.சி., எஃப்.ஐ.ஆர்., கோர்ட், கேஸுன்னு பல வாய்ப்புகளைப் பத்தி பேசறாங்கன்னு தகவல் வருது. எங்கே போனாலும் சட்டம் கடமையைச் செய்யும். சட்டம் கடமையைச் செய்யறப்ப சட்டச் ஷரத்துக்களே கேஸை வழிநடத்தும். அப்ப  என்ன ஆகும்? எக்ஸ்சேஞ்சோட பைலாபடி எல்லாம் நடக்குமுன்னு முடிவாகத்தான் அதிக வாய்ப்பிருக்கு. அப்புறமென்ன எவ்வளவு பணம் குறையுதோ, அந்த அளவு பணம் பணால்தான்.

ஃபைனான்ஷியல் சர்வீஸ் தொழிலில இப்படி ஒரு குரூப் நடத்துற நிறுவனம் டீபால்ட் ஆனா, அந்த குரூப்போட மத்த நிறுவனங்களை எல்லாம் அரசாங்கம் உடனடியா முடக்கிடும். ஆனா, நம்ம அரசாங்கமும் இந்த நிமிஷம் வரை இந்தக் கோணத்துல யோசிச்ச மாதிரியே தெரியலை. நாலையும் பத்தி யோசிச்சு நாமதான் உஷாரா இருக்கணும்போல.

தனியார் சிலபேரு கூட்டா ஒரு எக்ஸ்சேஞ்ச் நடத்தினா, என்னென்ன தகிடுதத்த மெல்லாம் நடக்கும்னு 5,500 கோடி ரூபா செலவழிச்சு பாடம் கத்துக்கிட்டோம். அதையும்விட முக்கிய பாடம் மக்களோட சேமிப்பைக் கையாளுர ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், டெபாசிட்டரி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கில்லாம செயல்படணுமுங்கிறதையும் புரிஞ்சுக்கவேண்டிய காலமிது.

இன்னும் ஒண்ணும் கெட்டுப்போயிடல. சாதாரண ஜனங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை யாரோ ஈஸியா எடுத்துட்டுப் போக நாம அனுமதிக்கவே கூடாதுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism