Published:Updated:

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

Published:Updated:
##~##

வருடம் முழுவதும் ஏதாவது ஒரு பண்டிகை வந்துகொண்டேதான் இருக்கிறது. பண்டிகை என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். பண்டிகைக் காலங்களில் தங்கள் விற்பனையைக் கூட்டுவதற்கு வர்த்தக நிறுவனங்கள் பலவிதமான கவர்ச்சிகரமான யுக்திகளைக் கையாள்கின்றன. ஜீரோ பெர்சன்ட் வட்டி, கேஷ்பேக் ஆஃபர் பரிசீலனைக் கட்டணம் எதுவும் இல்லை என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைச் சுண்டி இழுக்கின்றன.

இவை  எப்படிப்பட்ட சலுகை, இதனால் யாருக்கு லாபம் என்பது குறித்து விசாரிக்க வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரடியாக விசிட் அடித்தோம். பல கடைகளின் முன்பும் ஜீரோ பெர்சன்டேஜ் ஆஃபர் என்கிற அறிவிப்பு கொட்டை எழுத்தில் இருந்தது. அதாவது, எந்த வட்டியும் இல்லாமல் கடன் தருகிறார்களாம்! அது எப்படி சாத்தியம் என்று நமக்கு பழக்கமான கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டோம். அவர் உள்ளது உள்ளபடி சில ரகசிய உண்மைகளை நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஜீரோ பெர்சன்டேஜ் வட்டிக் கடன் என்பது எல்லா கடையிலும் கிடைக்காது. தவிர, எல்லாப் பொருட்களுக்கும் தருவோம் என்றும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட சில பிராண்டுகளில் உள்ள ஒருசில மாடல்களுக்கு மட்டும்தான் தருவோம்.

உற்பத்தி நிறுவனம், கடன் வழங்கும் நிறுவனம், பொருட்களை விற்பனை செய்யும் கடை ஆகிய மூன்றும் சேர்ந்து முதலில் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும். அதாவது, வட்டி இல்லாத கடன் சலுகை அளிக்கும் பொருட்களுக்கு மட்டும் விலையில் கூடுதல் கழிவு தரவேண்டும் என பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். பொருட்களை விற்பனை செய்யும் பெரிய கடைகள், பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் எம்.ஆர்.பி. விலையிலிருந்து 20-30 சதவிகிதம் குறைந்த விலைக்குதான் பொருட்களை வாங்கும். அந்த விலையிலிருந்து 10 அல்லது 15 சதவிகிதம் கூடுதலாக விலை வைத்து லாபத்தில் விற்போம். இந்த விலை கடைக்கு கடை 100-லிருந்து 500 ரூபாய் வரை வித்தியாசப்படும். கடைக்கும் லாபம்; வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும்'' என்றவர் கூடுதலாக வேறு சில விஷயங்களையும் சொன்னார்.

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

''இதில் மொத்தமாக பணம் தந்து வாங்கும் போதுதான் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளன. தவணை முறையில் பொருட்களை வாங்கும் போது கடைகளுக்குத்தான் லாபம் கிடைக்கும். ஜீரோ பெர்சன்டேஜ் வட்டி என்னும்போது, கூடுதல் லாபம் பார்ப்பதற்காகச் செயல்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்போம்.  மேலும், பொருளின் மொத்த தொகையை இ.எம்.ஐ.யாக மாற்றும்போது, நிதி நிறுவனங்கள் தங்களின் புத்திசாலித்தனத்தை இங்கு காண்பித்துவிடும்.

எப்படி எனில் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருளை 36 ஆயிரம் என விலை நிர்ணயிப் போம். அந்த விலையில் 'கேஷ்பேக் ஆஃபர்’ என சொல்லி 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி தருவோம். மீதமுள்ள 34 ஆயிரம் ரூபாயை 12 மாதங்களுக்கு இ.எம்.ஐ. முறையில் திரும்ப செலுத்தும்போது, மாதம் 2,833 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

இதில் எப்படி லாபம் கிடைக்கும் என யோசிக்கலாம். பொதுவாக, ஒரு கடையில் மாதத்திற்கு பத்து பொருட்கள்தான் விற்கிறது என வைத்துக்கொள்வோம். இதில் பொருளை விற்கும் கடைக்கு 20 சதவிகிதம் லாபம் கிடைக்கும். ஆனால், மாதத்திற்கு பத்து பொருள் எனும்போது லாபம் குறைவாக இருக்கும். அத்துடன் மின்சாரம், தொலைபேசி கட்டணம், சம்பளம், விளம்பரம், பராமரிப்பு என நிரந்தர செலவுகள் எப்போதும் இருக்கும். இதற்காக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் ஒதுக்கவேண்டும்.

உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது பத்து பொருட்கள் விற்கும் இடத்தில் மாதத்திற்கு 50 பொருட் களுக்கு மேல் விற்கும். அந்த சமயத்தில் லாபம் என்பது அதிகமாக இருக்கும். இதில் வாடிக்கையாளர்களுக்கு கடன் தரும் நிதி நிறுவனங்களுக்கு 10 சதவிகித லாபத்தை தர வேண்டும். அதுபோக மீதமுள்ள 10 சதவிகித லாபம் கடைகளுக்குதான்'' என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அடுத்து, ஜீரோ பெர்சன்டேஜ் வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது என்று கேட்டோம். Òஜீரோ பெர்சன்டேஜ் வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் விழா காலங்களில் மட்டுமே கிடைக்கும். மற்ற சமயங்களில் வட்டியுடன் கூடிய இ.எம்.ஐ. முறையே கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை இ.எம்.ஐ. முறையில் வாங்கும்போது நிதி நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கவே வாய்ப்புள்ளனÓ என்று சொன்னவர், அது எப்படி என்று விளக்கினார்.  

நுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..?

''பொதுவான நாட்களில் கேஷ்பேக் ஆஃபர் எல்லாம் தரமாட்டோம். ஒரு பொருளை 36 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவீர்கள். அதற்கான பரிசீலனைக் கட்டணம் 1,000 ரூபாய் இருக்கும். ஆக, நீங்கள் மொத்தமாக தரப்போவது 37 ஆயிரம் ரூபாய். முதல்கட்டமாக மூன்றில் ஒரு பங்கு தொகையை, அதாவது 12 ஆயிரம் ரூபாயைச் செலுத்துவீர்கள். மீதமுள்ள 24 ஆயிரம் ரூபாயை 12 மாதங்களுக்கு இ.எம்.ஐ. யாக மாற்றுவார்கள்.

ஆனால், நிதி நிறுவனங்கள் வட்டி கணக்கிடும்போது மொத்த தொகையான 36,000-க்கும் ப்ளாட் வட்டி கணக்கிடுவார்கள். இந்த வட்டி விகிதம் என்பது 12 லிருந்து 13 சதவிகிதம் வரை இருக்கும். இதில் வட்டி தொகை மட்டும் 4,320 ரூபாய் ஆகும். அதே சமயம் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்ட 24,000 ரூபாய்க்கு கணக்கிடும்போது வட்டி 18 சதவிகிதமாகும். ஆக மீதமுள்ள அசலையும், வட்டியையும் சேர்த்து வரும் 28,320 ரூபாயை (24,000 4,320) 12 மாதத்திற்கு இ.எம்.ஐ.யாக பிரிப்பார்கள். நீங்கள் மாதம் 2,360 ரூபாய் இ.எம்.ஐ. செலுத்துவீர்கள். ஏற்கெனவே பரிசீலனைக் கட்டணம் ஆயிரம் ரூபாயை வசூலித்து இருப்பார்கள். ஆக மொத்தம் 5,320 ரூபாய்  வருமானம் கடன் தரும் நிதி நிறுவனத் துக்கு கிடைக்கும்'' என்றவர், மேலும் சில உண்மைகளையும்  சொன்னார்.

''இப்படி தவணை முறையில் பொருட்களை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள், இ.எம்.ஐ.யை சில நேரங்களில் கட்டத் தவறி விடுவார்கள். அப்படி கட்டத் தவறினால் குறைந்தபட்ச அபராதமாக 500 ரூபாய் வசூலிப்பார்கள். அத்துடன் இ.எம்.ஐ. தொகைக்கு தனியாக ஒரு வட்டி கணக்கிட்டு வாங்குவார்கள். இதன்மூலம் அதிக லாபம் பார்க்க வாய்ப்புண்டு'' என்று முடித்தார்.

பொதுத் துறை வங்கிகள் எதுவுமே குறுகிய கால நுகர்வோர் கடன் தருவதில்லை. தனியார் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள்தான் இந்தக் கடனை வழங்குகின்றன. வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 - 9 சதவிகிதம் வரை வட்டி தருகின்றன. ஆக, 8 சதவிகித வட்டியில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதைவிட கூடுதலாகவே வட்டி நிர்ணயிப்பார்கள். ஜீரோ பெர்சன்ட் வட்டியில் கடன் தரும்போது எம்.ஆர்.பி. விலை, அபராதம் என ஏதாவது ஒன்றில் லாபம் கிடைத்துவிடும். இதில் சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களின் கார்டை அதிகமானவர்களை வாங்க வைப்பதற் காகவும் இதுபோல பல ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. மேலும், லாபத்தில் வியாபாரம் செய்யவே அனைவரும் விரும்புவார்கள். யாரும் நஷ்டத்தில் தொழிலை செய்யமாட்டார்கள் என்பதை மட்டும் மறக்காதீர்கள்.

ஆக, ஜீரோ பெர்சன்ட் வட்டி, பரிசீலனைக் கட்டணம் இல்லை என்பதெல்லாம் பொருள் வாங்க வைக்கும் ஒரு முயற்சிதான்!  

- இரா.ரூபாவதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism