Published:Updated:

பொருளாதார நெருக்கடி...

நஷ்டம் தவிர்க்கும் முதலீட்டுச் சூத்திரம் !

பொருளாதார நெருக்கடி...

நஷ்டம் தவிர்க்கும் முதலீட்டுச் சூத்திரம் !

Published:Updated:
##~##

சமீபத்தில் முதலீடு குறித்த ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அதில் என்.எஸ்.இ.எல். சந்தை குறித்த பேச்சும் வந்தது. அப்போது அந்த நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட ஒருவர் ஒரு கேள்வி கேட்டார்.

''கடந்த சில காலமாக நான் வாங்கிய மனைகளை விற்க முடியவில்லை. வாங்கிய விலையில் இருந்து குறைத்து வாங்கக்கூட ஆட்கள் இல்லை. அங்குதான் ஏற்றமில்லை என்று பங்குச் சந்தைக்கு வந்தேன். கடந்த சில மாதங்களாக அதுவும் சரியில்லை. போட்ட முதலீடு 15% நஷ்டத்தில் இருக்கிறது. சரி என்று வங்கிக்கு போனால், அங்கு கிடைக்கும் வட்டியோ பணவீக்கத்தைவிட குறைவாகவே இருக்கிறது. இவையெல்லாம் பிரச்னை என்று இ-கோல்டு வாங்கினேன். அங்கோ சந்தையையே மூடிவிட்டார்கள்! நான் என்னதான் செய்வது? எப்படிதான் முதலிடுவது?'' என்று வேதனையோடு கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை. ரூபாயின் மதிப்பு ஒருபக்கம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. வெளிநாட்டிற்கு குழந்தைகளைப் படிக்க அனுப்பியவர்களின் பட்ஜெட்டில் பெரிய துண்டு! வெளிநாட்டில் கடன்கள் வாங்கியிருந்த நிறுவனங்கள் திருப்பிச் செலுத்துவதற்கு படாதபாடுபடுகின்றன. வங்கிகளின் வாராக்கடன் வளர்ந்துகொண்டே செல்கிறது. உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசலில் இருந்து அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கின்றன.

ஜூலை மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி செய்த மாற்றங்களினால், பாண்ட் மார்க்கெட்டில் ஏற்ற, இறக்கம். நாம் மிகவும் நிலையானதாகக் கருதும் தங்கத்தின் விலையில்கூட அதீதமான ஏற்ற, இறக்கம் சமீப காலத்தில். பங்குச் சந்தை வழக்கத்தைவிட அதிகமான ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடி...

இந்த நிலையில் எல்லா நிறுவனங்களும் 'காஸ்ட் கட்டிங்’ என்று சொல்லக்கூடிய செலவினக் குறைப்பை ஆரம்பித்துவிட்டன. இதனால் பலருக்கும் வருமானம் குறைய ஆரம்பித்திருக்கிறது. தனிமனிதர்களை விடுங்கள், எல்லாம் வல்ல திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் சராசரி உண்டியல் வருமானம் தினசரி ரூ.2.35 கோடியாகும். இது தற்போது பல்வேறு காரணங்களால் 36% குறைந்து தினசரி ரூ.1.50 கோடிதான் வருமானம் கிடைப்பதாக செய்தி வந்துள்ளது.

ஆக, இந்தப் பொருளாதாரப் பிரச்னை நம்மை மட்டுமல்லாமல், ஆண்டவனையும் பாதிக்கிறதுபோல் தோன்றுகிறதே! இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தனிமனிதராகிய நாம் எப்படி சமாளிக்கலாம்? மேலும், நமது முதலீட்டை அசலுக்கு பாதிப்பு வராமல் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

இதுபோன்ற பொருளாதார நெருக்கடி நிகழும்போது அரசாங்கமோ, பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களோ அல்லது தனிமனிதர்களோ ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்படுவது உண்மைதான். பொருளாதாரம் சில சமயங்களில் உச்சத்திற்கு செல்வதும், சில சமயங்களில் அதலபாதாளத்திற்கு செல்வதென்பதும் சகஜம். அதை தனிமனிதராகிய நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பொருளாதார நெருக்கடி...

இதுபோன்ற நெருக்கடி நிலைமை ஏற்படும்போது நாம் செய்யும் தொழிலில் மந்தநிலை, நஷ்டம் ஏற்படுவது, சிக்கல் பெரிதானால் தொழிலை மூடவேண்டிய நிலைகூட ஏற்படலாம். அதுபோல் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறையலாம் அல்லது வேலையே பறிபோய்விடலாம். எது எப்படி என்றாலும் நமது கைக்கு வரும் பணவரத்து குறைந்துபோய்விடும் அல்லது நின்றுவிடும். பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது நமது சொத்து மதிப்பும் வெகுவாக குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எனவே, இந்த சமயத்தில் பெரிய அளவில் சொத்துக்கள் வாங்குவதை சற்று யோசித்தே செய்யவேண்டும். வேலையில் நிச்சயமின்மை காணப்படும்போது பெரிய அளவில் கடன் வாங்கி, வீடு வாங்குவதைத் தள்ளிப்போடலாம். பெரிய முதலீடு சார்ந்த எல்லா செலவினங்களையும் ஒத்திப்போடலாம்.

கடன்!

மேலும், பொருளாதாரம் நெருக்கடி நிலைமையில் இருக்கும்போது உங்கள் இ.எம்.ஐ-யைத் தொடர்ந்து கட்டி வாருங்கள். ஆனால், கடன்களை முன்கூட்டி செலுத்தா தீர்கள். கையில் உபரியாக இருக்கும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வையுங்கள். அந்தப் பணம் அவசரத்திற்கு உதவும் அல்லது பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள உதவும். பொருளாதாரம் மேலெழும்பி வரும்போது முன்கூட்டி கடனை அடைத்துக்கொள்ளலாம்.

இதுமாதிரியான இக்கட்டான நேரத்தில், பெர்சனல் லோனிற்கு உறுதியாக 'நோ’ சொல்லி விடுங்கள். பெர்சனல் லோன் என்பது குறுகிய கால கடன். உங்கள் கையில் உள்ள பண ஓட்டத்தை அது உறிஞ்சிவிடும். அதுபோல்தான் கார் லோனும். இந்த கடன் இப்போது வேண்டாம்!

சமீபத்தில் யூடியூப் வெப்சைட்டில் ஒரு வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அசெட்  மற்றும் லயபிலிட்டிக்கு சற்று சுவாரஸ்யமான அர்த்தத்தைத் தந்திருந்தார்கள். அசெட் (சொத்து) என்றால் அது பணத்தைக் கொண்டுவர வேண்டும். அதேசமயம், லயபிலிட்டி (கடனுக்கு) என்றால் அது பணத்தை வெளியே கொண்டு செல்லும். உதாரணமாக, நமது பேலன்ஸ்ஷீட்டில் ஒரு கார் வைத்திருந்தால் அதை சொத்துக் கணக்கில் சேர்ப்போம்; ஆனால், அது உண்மையில் ஒரு லயபிலிட்டிதான். கார் இருக்கும் வரை பணம் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும். அதேசமயத்தில் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருந்தால் அது ஒரு சொத்தாகும்; ஏனென்றால், ஒவ்வொரு காலாண்டிற்கும் அது நமக்கு பணத்தைக் கொண்டுவரும். சுருக்கமாக, இதுபோன்ற சமயங்களில் சொத்தை (பணவரத்தை)  அதிகரித்து, லயபிலிட்டியை (பணவிரயத்தை) குறைத்துக்கொள்ள வேண்டும்.

சிக்கனம்!

வளர்ந்த நாடுகளில், பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்போது விலைவாசி அவ்வளவாக ஏறாது. மாறாக இறங்கும். ஆனால், நாம் வளரும் பொருளாதாரம் என்பதால், பொருளாதாரம் நெருக்கடியாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் விலைவாசி ஏறிக்கொண்டுதான் செல்கிறது. நெருக்கடியான  பட்ஜெட்டில் குடும்பம் நடத்துபவர்களுக்கு இது இருபக்க இடியாகும். இக்குடும்பங்கள் தங்கள் வருமானம் உயரும் வரை சிக்கனத்தை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும். பொது வாகனங்களை உபயோகித்தல், ஓட்டல்/ தியேட்டர் போன்றவற்றிற்கு அடிக்கடி போவது குறைத்தல், புதிய எலெக்ட்ரானிக் பொருட்கள் (செல்போன்/ ஸ்மார்ட்போன், லேப்டாப்) வாங்குவதை ஒத்திப்போடுதல், அநாவசியமாக ஷாப்பிங்/ மால் செல்வதைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் செலவை குறைக்கலாம்.

பொருளாதார நெருக்கடி...

ரொக்கக் கையிருப்பு!

இந்த நெருக்கடியைச் சமாளிக்க என்னதான் வழி? ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் - கேஷை காப்பாற்றிக்கொள்வதுதான். இந்த கேஷில், வங்கி டெபாசிட், லிக்விட் ஃபண்ட் போன்ற உடன் எடுத்துக்கொள்ளக்கூடிய அனைத்து உபகரணங்களும் அடக்கம். உதாரணத்திற்கு, திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில், வங்கி டெபாசிட்டாக வைத்துள்ளது ரூ.10,000 கோடி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்துள்ள கேஷ் ரூ.50,000 கோடிக்கு மேல். இன்போஃசிஸ் வைத்துள்ள கேஷ் ரூ.20,000 கோடிக்கு மேல். ஆகவே, நாம் குறைந்தது ஒரு ஆறு மாதச் செலவுக்கு உண்டான பணத்தையாவது கேஷாக வைத்துக்கொள்வது அவசியம். கொஞ்சம் உஷாராகவே இருக்க நினைப்பவர்கள், ஒரு வருட செலவிற்கான பணத்தை கேஷாக வைத்துக்கொள்ளலாம். இது நெருக்கடியான சூழலில் நிச்சயம் உதவும்.  

பாண்டு முதலீடு!

பொருளாதார நெருக்கடி நாடு முழுவதும் ஏற்பட்டாலும், என்னை அது எவ்வகையிலும் பாதிக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றாற்போல ஒரு பெரிய தொகையை அரசாங்கம் அல்லது அது சார்ந்த பாண்டுகளில் ரூ.5/ 10/ 25/ 50 லட்சம் அல்லது ஒரு கோடி தொகையை முதலீடு செய்து வைத்துவிட்டால் அவர்களின் ஆயுளிற்கும் கவலையில்லை. வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி வந்துகொண்டே இருக்கும். தற்போது சந்தையில், அரசாங்கம் சார்ந்த ஆர்.இ.சி. போன்ற நிறுவனங்களின் வரியில்லா பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இதேபோல், வேறு பல அரசு நிறுவனங்கள் சந்தையில் பாண்டுகளை இனிவரும் மாதங்களில் கொண்டு வரலாம்.

வருமான வரி வரம்பிற்குள் வராதவர்கள் வங்கி அல்லது நல்ல ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் டெபாசிட்களை நாடலாம். பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பொதுவாக டெபாசிட்களுக்கு வட்டி அதிகமாக கிடைக்கும். ஆகவே, இதுபோன்ற தருணங்களை, நீண்ட கால டெபாசிட்களில்/ பாண்டுகளில் கிடைக்கும் அதிக வட்டியை லாக்-இன் செய்துகொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம்!

தங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்போதெல்லாம் அதன் விலை உயரும். மேலும், பணவீக்கத்தை சரிக்கட்ட தங்கம் ஒரு நல்ல உபகரணம். நமது ரூபாயின் வீழ்ச்சியால், தங்கத்தின் விலை சமீபகாலத்தில் உயர்ந்துள்ளதை அனைவரும் காணலாம். ஆகவே, தாங்கள் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு குறையக்கூடாது என நினைப்பவர்களும், உள்நாட்டிலோ அல்லது உலகத்திலோ பொருளாதார நெருக்கடி நிகழ்ந் தால் எனது செல்வத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்களும் தங்கத்தை தங்களது போர்ட்ஃபோலியோவில் அதிகமாக வைத்துக்கொள்ளலாம்.

பொருளாதார நெருக்கடி...

இன்றைய தேதியில் இந்தியாவில் நஷ்டத்தைத் தவிர்க்கும் முதலீட்டுச் சூத்திரம் என்று பார்த்தால் அரசாங்க பாண்டுகள், அரசாங்கம் சார்ந்த நிறுவனங்கள் வழங்கும் பாண்டுகள், கமர்ஷியல் வங்கிகள் மற்றும் உயர்தரமான கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்கள்/ பாண்டுகள்தான். இவற்றையும் மெச்சூரிட்டி வரை வைத்திருக்கும் பட்சத்தில்தான் நஷ்டம் ஏதும் ஏற்படாது.

இப்போது உருவாகியுள்ள நெருக்கடியைத் தீர்க்க மத்திய அரசாங்கம் எந்தவிதமான செயல்பாட்டிலும் இறங்காவிட்டால், மிகவும் சீரியஸாகிவிடும். நிலைமை அந்த அளவு மோசமாக இல்லை. மேலும், ரூபாய் வீழ்ச்சியினால் நமது ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறையும் - அது நம் நாட்டுக்கு நல்லதே.

அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் நம் நாடு இந்த நெருக்கடி நிலையில் இருந்து எழுந்து வந்துவிடும். அச்சமயத்தில் பங்கு சார்ந்த மற்றும் ரிஸ்க்கான முதலீடுகள் நல்ல வருவாயைத் தரும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. ஆகவே, இன்றைய நிலைமையில் உங்களின் முதலீட்டை எப்படி அமைத்துக்கொள்வது என்பற்கான ஃபார்முலா இதோ.

இந்த ஃபார்முலாவை முதலீட்டாளர்களைப் பொறுத்து மூன்று வகையாகப் பிரித்துத் தந்துள்ளேன். அந்த வகைகள் இதோ:  

1. பாசிட்டிவ் கண்ணோட்டம் உள்ளவர்கள் (அக்ரெஸிவ் முதலீட்டாளர்கள் அல்லது இளம்வயதினர்).

2. நியூட்ரல் கண்ணோட்டம் உள்ளவர்கள் (மாடரேட் முதலீட்டாளர்கள் அல்லது நடுத்தர வயதினர்).

3. நெகட்டிவ் கண்ணோட்டம் உள்ளவர்கள் (கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் அல்லது மூத்தக் குடிமக்கள்).

இம்மூன்று வகையினரில் நீங்கள் எந்த வகை என்பதை அறிந்து, அதற்கேற்ப உங்கள் முதலீட்டை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான போர்ட்ஃபோலியோ இதோ கீழே:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism