Published:Updated:

எடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க !

எடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க !

எடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க !

எடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க !

Published:Updated:
##~##

'கந்தசாமி, கந்தசாமி’ன்னு டிவியைப் பார்த்துகிட்டு இருந்த என் தம்பி பையன் கத்தினான். காய்ச்சலுன்னு ஸ்கூலுக்குப் போகாம வீட்டுல தூங்கிட்டு இருந்தவன் என்னடா இப்படி கத்துறானேன்னு டிவியைப் பார்த்தா, ஆர்.பி.ஐ.யோட புது கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி குடுத்துகிட்டு இருந்தாரு. அட, அசப்புல மனுஷன் 'கந்தசாமி’ படத்துல வர்ற விக்ரம் மாதிரியில்ல இருக்காருன்னு நெனைச்சுகிட்டேன்.

அடுத்த நாள் பேப்பரைத் திறந்தா, வந்துட்டாருய்யா வந்துட்டாரு. நாட்டை செல்வச் செழிப்புல கொண்டு போறதுக்கு ரகுராம் ராஜன் வந்துட்டாருன்னு ஒரே புகழ்ச்சி! இவரு என்னதான் புதுசா சொல்லறாருன்னு நானும் ரெண்டு நாளா தொடர்ந்து வாட்ச் பண்ணிப் பார்த்தேங்க. அடடா, என்னா ஒரு நம்பிக்கைப் பேச்சு. இதுவரைக்கும் இருந்த ரிசர்வ் பேங்க் கவர்னருங்க யாரும் இந்த அளவுக்குப் நம்பிக்கையாப் பேசி நான் பார்த்ததில்லீங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதவி ஏத்தவுடனேயே அரசியல்வாதி ஸ்டைலில பழைய கவர்னர் கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளை விலக்கினாரு. அதனால மேலேயே போய்க்கிட்டிருந்த டாலர் மதிப்பு கீழ் நோக்கி வர ஆரம்பிச்சுச்சு.

கொஞ்ச நாளா டிம்மா முகத்த வச்சிக்கிட்டிருந்த ஷேர் மார்க்கெட்டுல வியாபாரம் பண்ற என் பக்கத்து வீட்டுக்காரரு பிரைட்டான முகத்தோட இருக்காரு. அட!ன்னு ஆச்சர்யப்பட்டு போனேங்க. 2008-ல அமெரிக்கப் பொருளாதாரம் மாட்டப்போகுதுன்னு முன்னாடியே சொன்ன தெறமைசாலியாச்சே இவரு!

எடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க !

என்ன ஏகாம்பரம், எல்லாரையும் எடக்கு மடக்கா பேசுவியே. இப்ப இவருக்கு மட்டும் சப்போர்ட் பண்றியேன்னு  நீங்க கேக்குறது புரியுது. பொறுங்க,  நான் இன்னும் மெயின் பிக்ஸருக்கே வரலீங்களே!

எனக்கு தெரிஞ்ச ஒரு பொருளாதார நிபுணர்கிட்டே, ''ஏங்கண்ணா! ஆர்.பி.ஐ. கவர்னரு மட்டும் நினைச்சா பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திட முடியுமாங்கண்ணா? அப்ப ஏற்கெனவே இருந்த கவர்னருங்க எல்லாம் ஏனுங்கண்ணா அந்த வேலையைச் சரியா செய்யலை?''ன்னு கேட்டேன்.

அவரு கடுப்பாயி அடிக்க வந்துட்டாருங்க. ''மக்கு ஏகாம்பரம், வரலாறு தெரியாமப் பேசுறியே! 2008-ல பிரச்னை வர்றதுக்கு முன்னாடி ரெட்டின்னு ஒரு மகான் கவர்னரா இருந்தாரு. அவரு மட்டும் தெளிவா இல்லேன்னா, 2008-ல அடிச்ச உலக சுனாமியிலேயே நாமெல்லாம் காணாமப் போயிருப்போம். ஒரு கடுமையான கன்ஸர்வேட்டிவ் அப்ரோச்சால 2008-ல கொஞ்சநஞ்ச சிராய்ப்போட நாம தப்பிச்சோம்''னு சொன்னாரு.

''அப்ப ஏங்கண்ணா, இப்ப நம்ம பொருளாதாரம் கஷ்டத்துல இருக்குது?''ன்னு கேட்டேன். ''அதுக்கு காரணம் அரசியல்வாதிங்க.  அஞ்சு வருஷமா முடிவேதும் எடுக்காம தயங்கித் தயங்கி பதவியைத் தக்க வச்சுக்கிறதுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஊழல் வழக்குல பதில் சொல்றதுக் குமே அரசாங்கத்துக்கு நேரம் சரியா போயிடுச்சே!''ன்னாரு.

அவரு சொன்னதிலேயும் நியாயம் இருக்கு. பரீட்சை நேரத்துல படிக்கிற பையன் மாதிரி அஞ்சு வருஷமாத் தூங்கீட்டு இருந்துட்டு கடைசி நேரத்துல கம்பெனி சட்டம், லேண்ட் சட்டம், உணவுப் பாதுகாப்புன்னு தினம் ஒரு சட்டமா இயற்றிக்கிட்டு இருக்கி றாங்கங்கிறது கண்கூடாத் தெரியுது. இதையெல்லாம் செய்யவேண்டிய நேரத்துல செஞ்சிருந்தா, எங்கேயோ போயிருக்கும் நம்ம பொருளாதாரமுங்கிறது என் மரமண்டைக்கே புரியுது. அப்புறம் எப்படி கவர்னர் பதவி ஏத்தவுடனே சந்தையும் ஏறிடுச்சு, ரூபாய் மதிப்பும் உயர்ந்திடுச்சுன்னு எல்லாரும் வியக்குறாங்கன்னு தெரியலை.

தம்பி மகனுக்கு காய்ச்சல் குறைஞ்சபாடில்லை. மருந்து தந்தா குறையுது. மறுபடியும் ஆறு மணிநேரம் கழிச்சு வந்துடுது. அவனை ஒரு டாக்டர்கிட்ட அழைச்சுகிட்டு போனேன். ஆஸ்பத்திரியில, 'காய்ச்சல் ஒரு வியாதியில்லை - வியாதியின் அறிகுறி - உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் டாக்டரை உடனடியாகப் பாருங்கள்’னு எழுதிப்போட்டிருந்துச்சு.  

டாக்டரைப் பார்த்தா, ''மூணு நாளா காய்ச்சல் குறையலேன்னு சொல்றீங்க. பிறகு ஏன் டாக்டரை பார்க்கலே?''னு கேட்டார். 'இல்ல டாக்டர், பாரசிட்டமால் தந்தோம். காய்ச்சல் நின்னுச்சு’னு நான் சொன்னவுடனே என்னை கடிச்சு கொதறிட்டாரு.  ''உடனே ப்ளட் டெஸ்ட் எடுங்க''ன்னாரு.  

ப்ளட் டெஸ்ட்டுக்கு தந்துட்டு வெயிட் பண்ணும் போதுதான் பட்டுன்னு எனக்கு ஒண்ணு

புரிஞ்சிது. ரூபாய் மதிப்பிழந்தது காய்ச்சல் மாதிரி. பொருளாதாரம் சரியில்லை. அரசியல்வாதி சரியில்லை. நாட்டை நடத்துற விதம் சரியில்லை. இதெல்லாம் சேர்ந்து ப்ளட்டுல இருக்கிற வைரஸ் மாதிரி வேலை செஞ்சு ரூபாய் மதிப்பைக் குறைச்சிடுச்சு.

இப்ப ரகுராம் ராஜன் பண்ணுனது பாரசிட்டமால் தந்ததைப்போல. டக்குன்னு காய்ச்சல் குறைஞ்சிடுச்சி. மறுபடியும் ஆறுமணி நேரம் கழிச்சு வரக்கூடச் செய்யலாம்.

நம்ம பொருளாதாரம் சீரடைந்து எல்லோரும் சுபிட்சமா வாழறது அரசியல்வாதிங்க கையில இருக்குது! புது கவர்னர் உருப்படியா ஏதாவது செய்ய நினைச்சாலும் அரசியல்வாதிங்க விடுவாங்களா?  

தவிர, ஆர்.பி.ஐ.யோ, அரசாங்கமோ எல்லாமே அதிகார வர்க்கத்தினாலேயும் சட்டதிட்டங்களோட பழைமையிலேயும் ஊறிப் போனது. அதுல மாற்றங்கள் கொண்டு வரணுமுன்னா ரொம்ப நாசூக்கா செயல்பட ணும். இல்லாட்டி  சுலபமா பலிகடாவாக்கி தூக்கி எறிஞ்சிடுவாங்க.  

தம்பி பையனை கூட்டிட்டு திரும்பறப்ப  வால்போஸ்டருல இருந்த ரகுராம் படத்தைப் பார்த்திட்டு மறுபடியும் 'கந்தசாமி’ன்னான். ஏழை-பணக்கார இடைவெளி குறைக்க நினைச்சவன் சினிமா கந்தசாமி. ராஜன்சாமி செய்ற பல விஷயங்களைப் பார்த்தா, அது நடக்குமான்னு சந்தேகமா இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism