Published:Updated:

சின்ன சொர்க்கம்! - சிக்கிம்!

சின்ன சொர்க்கம்! - சிக்கிம்!


எழில் கொஞ்சும் 28 மலைச் சிகரங்கள், 80 வெந்நீர் ஊற்றுகள், 200-க்கும் மேற்பட்ட ஏரிகள், 8 மலைக் கணவாய்கள், நீர்ச்சுனைகள், ஓடைகள் என்று எங்கு திரும்பினாலும் சொக்கவைக்கும் சொர்க்கம்தான் சிக்கிம்.

##~##
தெற்கில் மேற்கு வங்காளமும், மேற்கில் நேபாளமும், வடக்கு மற்றும் கிழக்கில் திபெத் பகுதிகளும், தென் கிழக்கில் பூடானும் இருக்க நடுவில் சிக்கியிருக்கும் சின்ன மாநிலம்தான் இந்த சிக்கிம். கி.பி. எட்டு- ஒன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்தே இங்கு புத்த மதம் பரவத்தொடங்கிவிட்டதால் மாநிலம் முழுவதும் பற்பல புத்த மடாலயங்களைக் காண முடிகிறது.

இம்மாநிலத்தில்தான் மிக உயரமான சிகரம் கஞ்ஜன்ஜுங்கா உள்ளது.  புர்சாச்சு, யும்தாங், போராங், ரலாங், டராம்சு, யுமே சாம்டாங்  ஆகிய இடங்களில் உள்ள வெந்நீர்ச் சுனைகள் மருத்துவக் குணம் கொண்டதாகவும், பலவித உடல் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணமளிப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். பைன் மரங்கள், ஓக் மரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான மரங்கள், அடர்ந்த காடுகள் கண்ணுக்கு விருந்தாகும். ஆர்க்கிட் மலர்கள், கிறிஸ்துமஸ் மலர்கள் எனப்படும் 'பாய்ன்ஸெட்டா’ மலர்கள் எல்லா இடங்களிலும் பூத்துக் குலுங்குவது கண்ணையும், மனதையும் கவரச் செய்கிறது. சிக்கிமில் பார்த்தே ஆக வேண்டிய இன்னும் சில இடங்கள்...

சின்ன சொர்க்கம்! - சிக்கிம்!


சோமோ ஏரி:

தலைநகர் காங்டாக்கிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1 கி.மீ நீளத்திற்கு கண்ணாடி போல தெளிந்து காட்சிதரும் இந்த ஏரிக்கு அருகில் உள்ள சிவாலயமும் புகழ்பெற்ற கோயிலாகும்.

டாஷிவியூ பாயின்ட்:

காங்டாக்கில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து பார்த்தால் பள்ளத்தாக்கு பகுதிகளின் அழகான நிலப்பரப்பைக் காணலாம்.

லாப்ராங் மற்றும் ஃபோடாங் மடாலயங்கள்:

சிக்கிம் மக்களின் பிரிக்கமுடியாத பாரம்பரிய அடையாளமாக உள்ளன இவ்விரு புத்த மடாலயங்களும்.

ஃபாம்பாங் சரணாலயம்:

காங்டாக்கிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த சரணாலயம். இங்கே பூத்துக் குலுங்கும் சில வகை மலர்களை வேறு எங்கேயும் காணவே முடியாதாம்!  

-பா.முருகானந்தம்