
தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் ஹீரோ பணக்காரர் ஆகிவிடுவதைப்போல், கடந்த ஒரே ஆண்டில் 100 சதவிகிதத்துக்குமேல் லாபம் கொடுத்து திணறடித்தது வெள்ளி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு வெள்ளிக்கு இல்லை என்றாலும், தங்கம் ஒரு மடங்கு லாபம் கொடுத்தபோது வெள்ளி மூன்று மடங்கு லாபம் கொடுத்தது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்யாதவர்கள்கூட கடந்த
ஓராண்டு காலத்தில் வெள்ளி வாங்கி நிறையவே லாபம் பார்த்தனர்.
அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் அடுத்த ஓராண்டு காலத்தில் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும் என்ப தாகவே இருந்தது. ஆனால், அதற்கு மாறாக வெள்ளி விலை கிலோ ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாயைத் தொட்ட நிலையில், திடீரென சரிய ஆரம்பித்தது. விலை உயர்ந்தபோது காட்டிய வேகத்தைவிட இறங்கிய போது காட்டிய வேகம் மலைக்க வைத்தது. ஒரேவாரத்தில் 75 ஆயிரத்திலிருந்து 58 ஆயிரம் ரூபாய்க்கு சரிந்தது.
இந்த நிலையில் அதிக விலைக்கு வாங்கிய வெள்ளியை தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதா, அல்லது நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று விற்று விடுவதா? விலை குறைந்திருப்பதால் புதிதாக வெள்ளியில் முதலீடு செய்யலாமா? - முதலீட்டாளர்கள் மனதில் இப்படி பல நூறு கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு பதில் காணும் முன் வெள்ளி விலை குறைந்ததற்கான காரணங்கள் என்ன என்பதைப் பார்த்து விடலாம்.
டாலரால் வந்தவினை!
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றதும் அரபு நாடுகளில் கச்சா எண்ணெய்யின் விலை இறங்கியது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரிக்கத் துவங்கியது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி யில் செய்திருந்த முதலீட்டை திரும்பப் பெற்று, அதை டாலரில் போட்டனர் முதலீட்டாளர்கள். இதனால் கடந்த மே 8-ம் தேதி காலையிலேயே தங்கம் 2 சதவிகி தமும், வெள்ளி 10 சதவிகிதமும் விலை இறக்கம் கண்டது. இந்த நிலைமை அன்றுடன் சரியாகிவிடும் என நினைத்திருந்த நிலையில், தொடர்ந்து வெள்ளியின் விலை இறங்கியபடி இருக்கிறது.
வெறுத்து ஓடிய முதலீட்டாளர்கள்!
##~## |
உலக அளவில் வெள்ளி விலை இறங்குவதற்கு இப்படி பல காரணங்கள் இருக்கும்போது, அட்சய திருதியைக்குப் பிறகு குறையலாம் என கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி வெளியான நாணயம் விகடன் இதழில் சொல்லி இருந்தார் மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன். வெள்ளி விலை நன்கு இறங்கியிருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் அதை வாங்கலாமா?தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது விற்று விடலாமா? என்று அவரிடமே கேட்டோம்.
''உலோகத்தில் அதிக ஏற்ற இறக்கம் கொண்ட கமாடிட்டி வெள்ளி. அதனால் இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று நினைக்கின்றனர் மக்கள். வெள்ளி முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதித்து விடலாம் என நினைப்பது தவறு. நீண்டகால முதலீட்டில் வெள்ளி சிறந்த முதலீடு என்பதில் சந்தேகமே இல்லை.
அந்த நோக்கில் கட்டிகளாக வெள்ளியை வாங்கி வைத்திருப் பவர்கள் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் விலை மீண்டும் உயர வாய்ப்பிருக்கிறது.
பணவீக்கத்தைப் பற்றிய பயம், அதிகரித்து வரும் தொழிற்சாலைத் தேவைகள் போன்ற காரணங்களால் விலை அதிகரிக்க நிறையவே வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலையில் ஒரு கிலோ 45,000 ரூபாயில் வெள்ளிக்கு சப்போர்ட் இருக்கிறது. விலை ஏறும் என்பதால் முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை. இந்த சமயத்தில் வாங்க நினைப்பவர்கள் நீண்ட கால நோக்கில் வாங்கலாம்'' என்றார்.
-பானுமதி அருணாசலம்.