Published:Updated:

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 28

பிரீமியம் ஸ்டோரி
அவுட்லயர்ஸ்
அவுட்லயர்ஸ்

லூயிஸ் - ரெஜினா தம்பதி அமெரிக்காவுக்குப் பிழைக்க வந்து, 'ஏப்ரான்' தயாரிக்கும் ஐடியா மூலம் உயர்வுபெற ஆரம்பித்த இடத்தில், கடந்த அத்தியாயத்தை நிறுத்தினோம். 'ஏப்ரான்'களை சிறுவர் - சிறுமியருக்கு மட்டுமேதான் தயாரிக்க வேண்டுமா? 'ஏப்ரான்'கள் மட்டும்தான் தயாரிக்க வேண்டுமா? கேள்விகள் அந்த தம்பதியை அரித்தன.

##~##
தற்கு கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெரியவர்களும் அணியக் கூடிய 'ஏப்ரான்’கள் மற்றும் பெட்டிக்கோட் தயாரிப்பில் இறங்கினர். சிறிது காலத்திலேயே பெண்கள் அணியும் மற்ற ரெடிமேட் உடைகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர். 1892 ஜனவரியின்போது அவர்களிடம் இருபது பேர் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அவர்களைப்போலவே யூத குடியேறிகள்.

தம்பதிக்குச் சொந்தமான ரெடிமேட் தொழிற்சாலை ஒன்று மன்ஹாட்டனில் லோயர் ஈஸ்ட் பகுதியில் உருவாகி இருந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இத்தனை வளர்ச்சியும் எத்தனை காலத்தில்..? அமெரிக்காவுக்கு பிழைப்புதேடி வந்த மூன்று வருடங்களில். இவர்கள் அரிதாகத்தான் ஆங்கிலம் பேசினார்கள். இன்னும் பணக்காரர்கள் ஆகவில்லை. எவ்வளவு லாபம் வந்தாலும் அதை மீண்டும் தங்கள் வியாபாரத்திலேயே முதலீடு செய்தார்கள்.

இவர்கள் பிறந்து வந்த நாட்டில், இளமையிலேயே கற்று வைத்திருந்த தொழில் அவர்களுக்குக் கைகொடுக்கக்கூடிய வாய்ப்பு அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்தது. ரெடிமேட் துணிகள் என்பவை ஒரே தொழிற்சாலையில் மொத்தமும் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக நன்கு அனுபவமுள்ள சிறு தொழிற்சாலைகளில் டிசைன்களை வடிவமைத்து, துணி தயாரித்து... அவைகளைத் தைப்பதற்கும், பட்டன்கள் வைப்பதற்கும், அயர்ன் செய்வதற்கும் சிறிய, சிறிய கான்ட்ராக்டர்களிடம் கொடுக்கும் விதமாக அந்தத் தொழில் இருந்தது. அந்த கான்ட்ராக்டர்கள் நாளடைவில் பெரிதாக வளரும்போது அவர்களே துணிகளுக்கு டிசைன்களை வடிவமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

1913-ல் நியூயார்க் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 16,000 கார்மென்ட் நிறுவனங்கள் இயங்கி வந்தன. இதில் பெரும்பாலானவை லூயிஸ் - ரெஜினாவின் ஷெரீப் ரோடு கடை போலவே இருந்தன, இயங்கின.

'இந்த வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு அதிக முதலீடு ஒன்றும் ஆவதில்லை. இந்த தொழில் தையல் மெஷினை மையமாக வைத்து உருவாவதுதான்' என்று கார்மென்ட் தொழில் பற்றி எழுதக்கூடிய சரித்திரவியலாளர் டேனியல் சோயர் கூறினார். '20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு தையல் மெஷின்கள் வாங்குவதற்கு ஐம்பது டாலர்கள் போதுமானதாக இருந்தது. உங்களுக்கு வேண்டியதெல்லாம் இரண்டு தையல் மெஷின்கள், சில அயர்ன் பாக்ஸ்கள், சில வேலையாட்கள். இதில் லாபம் அதிகம் இல்லாவிட்டாலும் வேண்டிய அளவு பணம் சம்பாதிக்க முடியும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். ஆக, திறமையோடு சேர்த்து, அந்த தொழிலின் தன்மையும், அந்த காலகட்டமும் அவர்களுக்குக் கை கொடுத்து வளர்த்தது.

அவுட்லயர்ஸ்

லூயிஸ் பிறகு சொன்னது இது -

''ரெடிமேடுக்கு ஏக டிமாண்ட் இருந்தாலும், 1890-ல் நான் மார்க்கெட்டை அலசி ஆராய்ந்து பார்த்ததிலிருந்து மூன்று பேர்கள் மட்டுந்தான் குழந்தைகளுக்கான உடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. ஒருவர் ஈஸ்ட் சைட்டில் எனக்கு அருகிலேயே இருந்த டெய்லர். இவர் ஆர்டர்களின்பேரில் துணி தைத்துக் கொடுப்பவர். மற்ற இருவர்களும் மிகவும் அதிக விலையில் தங்களது தயாரிப்புகளை விற்பவர்கள். எனக்கு அவர்களுடன் போட்டிபோட விருப்பமில்லை. நான் 'பாப்புலர்’ (நடுத்தரமான) விலையில் எனது தயாரிப்புகளை வாஷ் டிரஸ், சில்க்ஸ், உல்லன்ஸ் தயாரிக்க விரும்பினேன். எனது குறிக்கோள் என்னவெனில், எல்லோராலும் வாங்கக்கூடிய விலையில், எல்லாக் கடைகளிலும் (பெரியது, சிறியது), எல்லா இடங்களிலும் (சிறிய, பெரிய நகரங்கள்) கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அவுட்லயர்ஸ்

ரெஜினாவுக்கு சிறந்த ரசனை மட்டுமல்ல... சரியாக முடிவு எடுக்கும் ஆற்றலும் இருந்தது. நான் சில சாம்பிள்களைத் தயாரித்தேன். அவைகளையெல்லாம் எனது பழைய வாடிக்கையாளர் களிடமும், நண்பர்களிடமும் காண்பித்தேன். நான் தயாரித்த உடைகள் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடை விஷயத்தில் செய்யக்கூடிய வேலையைக் குறைக்கும் என்பதையும், அவை மற்றெங்கும் தயாரிக்கப்படும் உடைகளைவிட தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், விலையும் அதிகமில்லை என்பதையும் அனைவரின் மனதில் பதியும் வகையில் கூறிவந்தேன்'' என்றார்.

இந்த தம்பதி ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த வியாபாரிகளை அணுகி, ரெடிமேட் உடைகளுக்கான மூலப் பொருட்களைத் தங்களுக்கே நேரடியாக விற்கும்படி கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் அவர்கள் பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, தரகர்களைத் தவிர்க்கும் நிலையில், குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதை உணர்ந்தனர். இதற்காக அவர் லாரன்ஸ் அண்ட் கம்பெனியைச் சேர்ந்த பிங்ஹாமைச் சந்திக்கச் சென்றார். அவர் நல்ல ஆஜானுபாகுவாக, வெள்ளைத்தாடியும், நீல நிறக் கண்களையும் கொண்ட ஒரு அமெரிக்கர். இவர் போலந்தின் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர். தட்டுத்தடுமாறி கொஞ்சம் ஆங்கிலம் பேசக்கூடியவராக இருந்தார்.

லூயிஸ் தனக்கு நாற்பது பெட்டிகள் உல்லன் துணி வேண்டு மென்றார். பிங்ஹாம் இதற்கு முன் தனிப்பட்ட நபர்களுக்கு துணி எதுவும் விற்றதில்லை. அதிலும் குறிப்பாக, ஷெரிஃப் தெருவில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்றதேயில்லை. எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்களுக்குத்தான்.

இதனால், 'உனக்கு என்ன தைரியம் இருந்தால் என்னிடம் வந்து இப்படி கேட்பாய்!' என்ற ரேஞ்சுக்கு ஏதோ பாவகாரியம் செய்துவிட்ட மாதிரி லூயிஸை நோக்கி முழங்கினார். ஆனால், இறுதியில் கேட்ட துணியை விற்பதற்கு ஒப்புக் கொண்டார்.

தினம் பதினெட்டு மணி நேர உழைப்பில், லூயிஸ் நவீன பொருளாதாரம், மார்க்கெட் ரிசர்ச், உற்பத்தி செய்வது எப்படி, அமெரிக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர்களிடம் எப்படி வியாபாரம் பேசுவது என பலவற்றைக் கற்றுக் கொண்டார். இது தவிர, புதிய ஃபேஷன் டிரெண்டுகள் பற்றி எப்படி தெரிந்து கொள்வது என்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அயர்லாந்திலிருந்தும், இத்தாலி யிலிருந்தும் நியூயார்க்கில் குடியேறியவர்களுக்கு இந்த மாதிரி யான வாய்ப்பு அமையவில்லை. அவர்களிடம் நகரம் சார்ந்த பொருளாதாரத்திற்குத் தேவையான தனிப்பட்ட திறமைகள் இல்லை. அவர்கள் வீடுகள் மற்றும் கட்டடம் சம்பந்தப்பட்ட வேலைகளில் தொழிலாளிகளாகச் சேர்ந்தனர். இதனால் அவர்கள் என்னதான் முப்பது வருடம் வேலை பார்த்தாலும் மார்க்கெட் ரிசர்ச் பற்றியோ, உற்பத்தி பற்றியோ, எப்படி அமெரிக்கர்களுடன் வியாபாரம் செய்வது என்பது பற்றியோ எதுவும் அறியாதவர் களாக இருந்தார்கள்.

ஐரோப்பாவில் தனது உறவினர்கள், நாஜி படையினரின் கையில் சிக்கித் தவிக்க விட்டுவிட்டு அமெரிக்காவிற்குக் குடியேறிய யூதக் குடியேறிகளைப் பற்றி நினைக்கும்போது எனக்குள் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. லூயிஸ் போர்ஜெனிஸ்ட் இதை 1942-ல் வெளியிடப்பட்ட நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதற்கு 'தி ஹாப்பியஸ்ட் மேன்’ என பெயரிட்டார். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் பல அத்தியாயங்களில் நம்பிக்கையும், உற்சாகமும் இருந்தாலும் இறுதியில் நாஜிகள் பெரும்பான்மையாக இருந்த ஐரோப்பா பற்றிய உண்மைகளை உருக்கமாகக் கூறுவதுடன் முடிந்தது.

எப்படியிருந்தாலும்... சுதந்திரம், சிக்கல், முயற்சி மற்றும் வெகுமானத்திற்கு இடையில் உள்ள தொடர்பு எந்தவொரு வேலையிலும் திருப்திகரமாக இருப்பது முக்கியம். அப்படி இருந்தால், வெற்றியை நோக்கி வெறி யோடு முன்னேறக்கூடிய உந்துதல் கூடுதலாகக் காணப்படும்.

நாம் சந்தோஷமாக இருப்பதற்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல; அதை எந்த வேலை மூலம், எவ்வளவு உழைத்து சம்பாதிக்கிறோம் என்பதும்கூட அடுத்தபட்சம்தான், மாறாக நாம் பார்க்கும் வேலை நமக்கு திருப்தியளிக்கிறதா என்பதில்தான் நாம் அடையக்கூடிய இறுதி வெற்றி அடங்கி இருக்கிறது. 75,000 டாலர் சம்பளத்தில் ஆர்க்கிடெக் வேலையும், 1,00,000 டாலர் சம்பளத்தில் டோல்கேட்டில் வேலையும் தந்தால்... இரண்டில் நீங்கள் எதை விரும்புவீர்கள்? சம்பளம் குறைவாக இருந்தாலும் புதிய சாதனை வாய்ப்புகள் கொண்ட முதல் வேலையைத்தானே விரும்புவீர்கள்? சிக்கல் கொண்ட, சுதந்திரமாக செயல்படக்கூடிய, சிந்தனா சக்திக்கு சவாலான வேலை. இந்த மூன்றின் அளவுக்கும் உங்களுக்குக் கிடைக்கும் வெகுமானத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இது பணம் மட்டுமே தரக்கூடிய சந்தோஷத்தைவிட அதிகமானது.

அதுவேதான் கார்மென்ட் தொழிலில் கடும் போட்டி வந்தபோதும் லூயிஸ் - ரெஜினா தம்பதியை உற்சாகத்தோடு ஈடுபட வைத்தது.

அவுட்லயர்ஸ்

1890-ல் நடத்தப்பட்ட ஒரு சர்வேயின்படி, கார்மென்ட் தொழிலில் இருப்பவர்கள் சராசரியாக வாரத்திற்குக் கிட்டத்தட்ட 84 மணி நேரங்கள் வேலை செய்தார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 12 மணி நேரம். ஒரு பத்திரிகையில் 'தி ஃபயர் தட் சேஞ்ச்டு அமெரிக்கா’ என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில், 'தொழிலாளர்கள் உடைந்த சேர் அல்லது நாற்காலிகளில் உட்கார்ந்து... தங்களது தலையை தையல் இயந்திரம் அல்லது அயர்ன் பாக்ஸை நோக்கி காலை 5 மணிக்கு சாய்த்தால்... இடையில் சொற்பமான மதிய உணவுபோக... இரவு 9 மணி வரை தொங்கவிட்டுக் கொண்டே வேலை செய்தனர்' என்று கூறப்பட்டுள்ளது. சில நேரங்களில் வாரத்திற்கு நூறு மணிகளுக்கும் மேலாக அவர்கள் இப்படி வேலை செய்தனர் என்றும்... சீசன் நேரங்களில் எந்தவித இடைவெளியுமின்றி லோயர் ஈஸ்ட்சைட்டில் தையல் இயந்திரங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தன என்றும் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.  

லூயிஸ் போர்ஜெனிஸ்ட் முதன்முதலில் குழந்தையினுடைய 'ஏப்ரானை’ப் பார்த்ததற்குப் பிறகு வீட்டிற்கு வந்து சந்தோசஷத் துடன் ஒரு ஆட்டம் போட்டார். அந்த நேரத்தில் அவர் எதை யும் விற்கவில்லை. அவரிடம் பணம் இல்லாமல் இருந்தாலும் அவருடைய யோசனையை செயல்படுத்த பல ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டி யிருக்கும் என்று அவருக்குத் தெரியும். ஆனால், அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார். பல காலம் உழைக்க வேண்டியதை அவர் ஒரு சுமையாகக் கருதவில்லை. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் நாம் பார்த்தபடி, பில்கேட்ஸும் முதலில் லேக்சைடில் கீ போர்டுக்கு முன்னால் உட்கார்ந்தபோதும் இதேமாதிரிதான் நினைத்தார். அதுபோலதான் பீட்டில்ஸ் இசைக்குழுவினரும் தினமும் எட்டு மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்களும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று கூறியபோதும் அதை சுமையாகக் கருதவில்லை. இதைக் கேட்டவுடன் அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முடிவெடுத்தனர்.

ஒரு வேலை அர்த்தமற்றது என்கிறபோதுதான் கடின வேலை ஒரு சிறைவாசம்போல தெரியும். அப்படி இல்லாதிருக்கும் பட்சத்தில், வாய்ப்பு கிடைத்ததுமே உங்கள் மனைவியை தலைக்குமேல் தூக்கி சந்தோஷமாக ஒரு சுற்று சுற்றத்தான் தோன்றும்.

இந்த கார்மென்ட் தொழில் என்கிற அற்புதமான தொழிலின் முக்கியமான விளைவு என்னவெனில் அர்த்தமுள்ள ஒரு தொழில் நடந்து கொண்டிருக்கும் அந்த வீட்டில் உள்ள குழந்தை களுக்கு என்ன நடக்கும்? லூயிஸ் மற்றும் ரெஜினாவின் வளர்ச்சி அவர்கள் வீட்டில் வளர்ந்து வரும் அவர்களுடைய குழந்தைகளிடையே எந்த மாதிரி விளைவை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் கற்றுக்கொண்ட அதே பாடத்தை அலெக்ஸ் வில்லியம்ஸ் நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது கற்றுக் கொண்டார். சட்டம் அல்லது மருத்துவம் சார்ந்த தொழில்களில் மேன்மையான நிலையை அடைய வேண்டுமெனில் இந்த மாதிரி கடினமாக உழைக்க வேண்டும். அத்தோடு தங்களின் சிந்தனையையும், கற்பனையையும் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்யும் நேரத்தில் நீங்கள் விரும்பியபடி உலகை உங்கள் வசமாக்கலாம் என்பதுதான் கிடைக்கின்ற பாடம்.

அசாத்திய வெற்றியாளர் ஆவதற்கான மந்திரங்கள் இதோடு முடிந்துவிடுமா என்ன... பார்க்கத்தானே போகிறீர்கள் அடுத்த அத்தியாயங்களில்!

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு