Published:Updated:

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

நம் நாட்டில் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டுக் குடும்பங்கள் மிகவும் பிரசித்தம். கூட்டுக் குடும்பங்கள் இருந்தவரை ஆத்திர அவசரத்திற்கு நிதி உதவி செய்ய பலரும் இருந்தனர். ஆனால், இன்றோ மகனே/மகளே உன் சமத்து என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

மேலும், நகரங்களில் வசிக்கும் பலருக்கும், அடுத்த ஃப்ளாட்டில் யார் இருக்கிறார் என்றுகூட தெரியாது. யார் என்றே தெரியாதபோது, ஆத்திர அவசரத்திற்கு அவரிடம் எப்படி நிதி உதவி கேட்க முடியும்?  

இளைஞராக இருக்கும்போது கூச்சப்படாமல் நண்பர்களிடம் கடன் கேட்க முடியும். அதுவே, ஓரளவு பதவி உயர்வு பெற்றபிறகு, நம்மைவிட குறைந்த பதவியில் இருப்பவர்களிடம் கை நீட்டி கடன் வாங்க முடியாது. நிறுவனங்கள் மாறிவிட்டால் அல்லது ஊர் மாறிவிட்டால், எல்லாருமே புதுமுகமாக இருப்பார்கள். தவிர, எல்லாருடனும் புரொஃபஷனல் ரீதியாகப் பழகும்போது, அவசரத்திற்கு நிதி உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியாது.  

அவசரச் செலவைச் சமாளிக்க சிறந்தவழி, சரியாகத் திட்டமிடுவதுதான். இதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை விளைக்கமாகவே சொல்கிறேன்.

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

மருத்துவச் செலவைச் சமாளிக்க!

முதலில், எப்போ தெல்லாம் நமக்கு அவசரமாக நிதி தேவைப்படுகிறது என்று பார்ப்போம். பெரும்பாலானோருக்கு மருத்துவமனையில் நோயாளியைச் சேர்த்தவுடன், முன்பணம் கட்டுவதற்கு அவசர நிதித் தேவைப்படும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் வைத்துள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. எனவே, நாம் அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் மூலம், இந்த அவசர நிதிப் பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

பள்ளி, கல்லூரிக் கட்டணம்!

குழந்தைகளின் பள்ளி, கல்லூரி செலவுகளுக்கு அவசரமாக நிதித் திரட்டுவது தவறு. அது தெரிந்த செலவு! தெரிந்த செலவிற்கு திட்டமிடுவதே சரி. குழந்தைகளின் பள்ளிச் செலவிற்கு மாதாமாதம் லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாகச் சேமியுங்கள். அது தெரியாது என்கிறவர்கள் வங்கி, அஞ்சலகச் சேமிப்பு மூலமாக பணம் சேர்க்கலாம், சேமிக்கலாம்.  

அதேபோல், குழந்தையின் கல்லூரிப் படிப்பிற்காக, அவர்களின் சிறு வயதிலிருந்தே ஒரு தொகையை மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெப்பாசிட், பிராவிடெண்ட் ஃபண்ட் அல்லது பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் போன்றவற்றின் மூலமாகச் சேமித்து வருவதுதான் சிறந்தது. அவ்வாறு சேமிக்க முடியாதபட்சத்தில் இருக்கவே இருக்கிறது வங்கிகள் வழங்கும் கல்விக் கடன். அரசாங்க கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டால், செலவு வெகுவாகக் குறைந்துவிடும். ஆகவே, இந்தச் செலவைப் பொறுத்தவரை முழுக்க முழுக்கத் திட்டமிடுவதில்தான் உங்கள் கைங்கரியம் உள்ளது!

திடீரென வேலை போனால்..!

நாம் பார்த்துவரும் வேலை திடீரென இல்லாமல் போனால், என்ன செய்வது? அதுபோன்ற சமயங்களில் புதிய வேலை கிடைப்பதற்கு மூன்றிலிருந்து ஆறு மாத காலம் ஆகலாம். அந்தக் காலகட்டத்தை நடத்திச் செல்வதற்கு போதிய பணம் நமது கையிருப்பாக இருக்க வேண்டும். ஆகவே, மூன்றிலிருந்து ஆறுமாத காலத்திற்கு தேவைப்படும் பணத்தை அவசரகால நிதியாக ஒதுக்கி வைத்துவிடுவதே சிறந்தது. இதை எப்படி செய்வது என்று சொல்கிறேன்.

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

உங்களின் ஒருவருட மொத்தச் செலவை (வீட்டுச் செலவு, பள்ளி/ கல்லூரிக் கட்டணம், இன்ஷூரன்ஸ், இ.எம்.ஐ., பெட்ரோல், வாகனச் செலவு, மற்றும் பிற செலவுகள்) தோராயமாக கணக்கிட்டு, வரும் தொகையை 12-ஆல் வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒருமாதச் செலவு தெரிந்துவிடும். அதை 6-ஆல் பெருக்கிக் கொண்டீர்கள் என்றால், அதுதான் நீங்கள் தயார் செய்யவேண்டிய அவசரகால நிதி.

இந்தத் தொகையை வங்கி டெபாசிட்டிலோ அல்லது லிக்விட்/ அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டு களிலோ முதலீடு செய்துகொள்ளுங்கள். அவசரத்திற்கு கைகொடுக்கும்! சிறு தொழில் செய்பவர்கள் தங்களின் ஓராண்டுச் செலவை, அவசர நிதிக்காக ஒதுக்கீடு செய்யலாம்.

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

இதுதவிர, எதிர்பாராமல் வரும் செலவுகளான அவுட்பேஷன்ட் செலவு, வீட்டு ரிப்பேர் செலவு, உபகரணங்கள்/ வாகனம் பழுதடைவது, அவசர பிரயாணச் செலவு போன்றவற்றுக்காக ஒரு தனி சேமிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இவையெல்லாம் சேர்த்து வருடத்திற்கு ரூ.36,000 தோராயமாக வரும் என்று வைத்துக்கொள்வோம். அப்படியெனில், மாதத்திற்கு ரூ.3,000

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

நீங்கள் சேமிக்க வேண்டும்.

இத்தொகையை உங்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே கொண்டு வந்துவிடுங்கள். இந்தச் சேமிப்பிற்காக தனியாக ஒரு சேமிப்புக் கணக்கை வங்கியில் துவக்கிக்கொள்ளுங்கள் அல்லது ஒரு லிக்விட் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் சேமித்து வாருங்கள்.

பிசினஸ் தோல்வி அடைந்தால்..!

எதிர்பாராதவிதமாக நாம் செய்து வரும் பிசினஸ் மூடும் நிலைமைக்கு வந்தால் என்ன செய்வது? முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது, அகலக்கால் வைப்பது ஆபத்தைக் கொண்டுவரும் என்பதைத்தான். நம் சக்திக்கு மீறிய செயல்களைச் செய்யும்போது, அவசர நிதித் தேவையும் அதிகரிக்கிறது. அதனால் மன உளைச்சல், சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் மனச்சங்கடம், மேலும் வீட்டிலும் பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, வரவிற்குமேல் செலவு செய்யாதீர்கள். அதற்குமேல் ஒருபடி சென்று, உங்களின் வருமானத்தில் 20 - 40 சதவிகிதம் சேமிக்க/ முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஓ.டி. என்னும் ஆபத்பாந்தவன்!

'நான் முடிந்தவரை திட்டமிட்டுவிட்டேன். அதையெல்லாம் மீறி எனக்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

இருக்கவே இருக்கிறது ஓ.டி. (OD – Over Draft) அக்கவுன்ட். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இவ்வகையான கணக்குகளை உங்களுக்கு திறந்துதர ரெடியாக காத்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஃபிக்ஸட் டெபாசிட் அக்கவுன்டை திறந்துகொள்ளுங்கள். ஓ.டி. அக்கவுன்டிற்கு குறைந்தபட்ச டெபாசிட் தொகை வங்கியைப் பொறுத்து மாறுபடும். ஆனால், பல வங்கிகள் ரூ.50,000 டெபாசிட்டுக்கு எல்லாம் ஓ.டி. அக்கவுன்டை திறந்து தருகின்றன. அதைவிட குறைவான டெபாசிட் தொகை கேட்கும் வங்கியில் நீங்கள் கணக்கு தொடங்கலாம். நீங்கள் டெபாசிட் செய்த தொகையில் 90% உங்களின் லோன் லிமிட்டாக இருக்கும்.  உதாரணமாக,  ரூ.50,000 டெபாசிட் செய்தால், ரூ.45,000 கடன் பெறலாம்.  

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

ஓ.டி. அக்கவுன்டிற்கென்று தனி செக்புக் தரப்படும். தேவைப்படும்போது  உங்களின் லிமிட்டிற்குள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பிறகு பணம் கிடைத்தவுடன் அந்த அக்கவுன்டில் போட்டுவிடலாம். நீங்கள் உபயோகித்த நாட்களுக்கு மட்டும் உங்களின் டெபாசிட்டைவிட 1% வட்டி கூடுதலாக வசூலிக்கப்படும். சரியாக பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமே!

இதுதவிர, பல நிறுவனங்களில் ஊழியர் களுக்காக, வட்டியில்லா அட்வான்ஸ் தருவது வழக்கம். ஊழியர்கள் அதைத் தங்களது சம்பளம் மூலமாக ஆறு மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம் என்பதால் அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சொஸைட்டி லோன்!

பெரிய நிறுவனங்கள் பலவற்றில் த்ரிஃப்ட் சொஸைட்டி இருக்கும். இவை ஊழியர்களுக்காகவே செயல்படக்கூடியவை. இவை மூலமும் அவசரத் தேவைகளுக்கு லோன் எடுத்து, பிறகு மாதத் தவணைகளில் செலுத்திவிடலாம். அதேபோல்தான், பி.எஃப் மற்றும் பி.பி.எஃப். திட்டங்களில் இருந்து கடன் பெறுவதும். எண்டோவ்மென்ட் பாலிசி வைத்திருப்பவர்கள், அந்த பாலிசியை அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதியும் உள்ளது. இவையெல்லாம் எளிதாக, குறைந்த வட்டியில் பறிக்கக் கூடிய கனிகள்!

கைதரும் தங்க நகைகள்!

வங்கிகளில் சென்று அவசரத்திற்கு கடன் பெற பெரிதும் உதவுவது தங்க நகைகள். சொந்தபந்தங்கள் நடத்தும் சீட்டில் சேர்ந்து ஓரிரு மாத காலத்தில் கடன் பெறும் வசதியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. உங்களது பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் போன்ற வற்றை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் பெறும் வசதியும் உள்ளது. இவை தவிர, பெர்சனல் லோன் இருக்கவே இருக்கிறது!

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

இவையெல்லாம் குறுகிய கால கடன்கள் என்பதையும், வட்டி அதிகம் செலுத்த வேண்டியதிருக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

உங்களுக்குத் தேவைப்படும் அவசரகால நிதி குறுகிய காலத்திற்கா அல்லது நீண்ட காலத்திற்கா என்பதைப் பொறுத்து, உங்கள் கடன் வாங்கும் கருவியைத் தேர்வு செய்யுங்கள். நீண்ட கால கடன் தேவைப்படும்போது வீட்டை அடமானம் வைத்து, வங்கிகளில் மார்ட்கேஜ் லோன் பெறும் வசதியும் உள்ளது.

திடீர் செலவைச் சமாளிக்க ப்ரீ ப்ளான் கைடுலைன் !

உறவினர்கள், நண்பர்களிடம் உங்களுக்கு நல்ல உறவு இருந்தால், வட்டியே இல்லாமல் கடன் பெற்றுக்கொள்ளலாம்!

முடிந்தவரை நீங்கள் எதிர்பார்க்கும் செலவுகளுக்கும் மற்றும் எதிர்பார்க்காதச் செலவுகளுக்கும் சரியாகத் திட்டமிட்டால் யாரிடமும் நீங்கள் கை நீட்டவேண்டிய அவசியமே இருக்காது! அவசரத்திற்கு உதவி செய்கிறவராகவே நீங்கள் இருப்பீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு