நடப்பு
Published:Updated:

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

கேள்வி-பதில்

##~##

?எனது மகளின் பெயரில் கேஸ் இணைப்பு வாங்கி இருந்தோம். இப்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த இணைப்பை என் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்?

- ஹரிகிருஷ்ணன், ஈரோடு. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பதில்.

''கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றுவது மிகவும் எளிது. இதற்கான விண்ணப்பம் உங்களின் கேஸ் விநியோகஸ்தரிடம் இருக்கும். இதற்கு உங்கள் மகளின் கணவரிடமிருந்து ஆட்சேபனை இல்லை என கடிதம் வாங்கித் தரவேண்டும். அதேபோல, உங்கள் மகளும் 'என் பெயரில் உள்ள கேஸ் இணைப்பை என்னுடைய தந்தை பெயருக்கு மாற்றிக்கொடுக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என ஒரு கடிதம் தரவேண்டும்.

இந்த இரண்டையும் உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும். அதன்பிறகு விநியோகஸ்தர் அலுவலகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது  கேஸ் இணைப்பு உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வார்கள். இதில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித் தருவார்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு கேஸ் விநியோகம் செய்ய மாட்டார்கள்.''

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

?என் பூர்வீக விவசாய நிலத்தை நண்பர் ஒருவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறேன். வரி, வாய்தா ஆகியவற்றை என் பெயருக்குச் செலுத்தி வருகிறார். அவருடன் எழுத்துப்பூர்வமாக எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. இதனால் ஏதாவது பிரச்னை வருமா?

- ஜெயராமன், கள்ளக்குறிச்சி. என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''பிரச்னை வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, குத்தகைக்கான ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்வது நல்லது. நிலத்தின் சர்வே எண், அளவு, குத்தகைக் காலம், அவரிடம் வாங்கியத் தொகை என அனைத்தையும் அந்த ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடுவது அவசியம். இந்த ஒப்பந்தம் செய்துகொண்ட 15 நாட்களுக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அவர்கள் அதைப் பதிவு செய்துவிடுவார்கள். தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955, பிரிவு 4தீ(2) இதற்கு முத்திரைக் கட்டணம் கிடையாது.  இந்த ஒப்பந்தத்தில் குத்தகைக்கு விடுபவர், குத்தகைக்கு எடுப்பர் என இருவரும் கட்டாயம் கையெழுத்திட வேண்டும்.''

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

?என் மாதச் சம்பளம் 2 லட்சம் ரூபாய். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்கால தேவைகளான திருமணம், உயர்கல்வி மற்றும் என் ஓய்வுக்காலத் தேவைக்கென மூன்று ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வருகிறேன். இதில் குழந்தையின் உயர்கல்விக்காக ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் குரோத்தில் 20 ஆயிரம் ரூபாய், திருமணத்திற்காக யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் குரோத்தில் 10 ஆயிரம் ரூபாய், ஓய்வுக்காலத்திற்காக ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் குரோத்தில் 20 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். 7-ம் தேதியை எஸ்.ஐ.பி. தேதியாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். இது சரியான தேதியா?, நான் தேர்வு செய்த ஃபண்ட் சரியானவைதானா? ஆலோசனை வழங்கவும்.

@- நரேந்திரன், துபாய். சொக்கலிங்கம் பழனியப்பன், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்.

''நீங்கள் தேர்வு செய்துள்ள ஃபண்ட் அனைத்துமே கடந்த காலத்தில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இனிவரும் காலங்களிலும் இதுபோலவே இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இதில் எந்தவிதமான மாற்றமும் செய்ய தேவையில்லை. 7-ம் தேதி உங்களால் தொடர்ந்து பணம் கட்ட முடியும் என்றால் தேதியை மாற்றத் தேவையில்லை.''  

?ஹவுஸ் ஹோல்டர் பாலிசிக்குச் செலுத்தும் பிரீமியத்துக்கு வரி விலக்குப் பெற முடியுமா?

- கிஷோர் குமார், சென்னை. இளங்குமரன், ஆடிட்டர்.

''நீங்கள் வசிக்கும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்குச் செலுத்தும் தொகைக்கு எந்தவிதமான வரி விலக்கும் பெற முடியாது. ஆனால், அதே வீட்டை பிசினஸ் தேவைக்காகப் பயன்படுத்தி அதில் உள்ள பொருட்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருந்தால் அந்த பிரீமியத்துக்கு வரி விலக்கு பெறலாம்.''  

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

?வீடு வாங்குவதற்கு என் பெற்றோருக்கு நான் பணம் தந்துள்ளேன். அந்த வீட்டின் மேல்பகுதியை வாடகைக்குவிட திட்டமிட்டுள்ளோம். வீடு என் தந்தையின் பெயரில் உள்ள நிலையில், இந்த வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரிச் செலுத்த வேண்டுமா?

- திலக் குமார், சென்னை. சுப்ரமணியன், ஆடிட்டர்.

''வீடு உங்களின் தந்தையின் பெயரில் உள்ளதால் வாடகை வருமானத்திற்கு அவர்தான் வரிச் செலுத்த வேண்டும். நீங்கள் தந்த பணத்தை வீட்டுக் கடனாக கணக்கில் காண்பித்து அதற்கு வட்டி வேண்டுமானாலும் உங்கள் தந்தை உங்களுக்குத் தரலாம். இந்த வட்டியைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு உங்கள் தந்தை வரிச் செலுத்தினால் போதும். ஆனால், நீங்கள் கடன் தந்தது, அதற்கு உங்கள் தந்தை தரும் வட்டி, வாடகை வருமானம் என அனைத்தும் வங்கியின் மூலமாகவே நடைபெற வேண்டும். அதாவது, காசோலை பரிமாற்றமாக இருக்கவேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் வட்டியை உங்கள் வருமானத்தோடு சேர்த்து வருமான வரி வரம்பிற்கேற்ப வரிச் செலுத்த வேண்டும்.''

?என் மனைவியின் பெயரில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளது. இந்த பாலிசிக்குச் செலுத்தும் தொகைக்கு நான் வரி விலக்குப் பெற முடியுமா?

- பாலன், தாம்பரம். கோபால கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்.

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி?

''கட்டாயம் வரி விலக்கு பெற முடியும். அதாவது, 80சி வருமான வரி பிரிவின் கீழ் லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியத்திற்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை விலக்கு பெறலாம். எனவே, உங்கள் மனைவியின் இன்ஷூரன்ஸிற்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்களோ, அந்தத் தொகைக்கு விலக்குப் பெறலாம்.''

?சந்தை தற்போது உள்ள நிலையில் லார்ஜ் கேப் வகை ஃபண்டுகள் சரியான வருமானம் தரவில்லை. இந்தச் சமயத்தில் மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

- ரமேஷ், கரூர். ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணைத் தலைவர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

''லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கு மாற்றாக மிட் கேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது, தவறான முடிவு. ஏனெனில், லார்ஜ் கேப் ஃபண்டுகளைவிட அதிக நஷ்டத்தைத் தரக்கூடியவை மிட் கேப் வகை ஃபண்டுகள். லாபம் எனப் பார்க்கும்போது லார்ஜ் கேப் ஃபண்டுகள் 4 அல்லது 5 சதவிகித வருமானம் தந்திருக்கும்போது, மிட் கேப் ஃபண்டுகள் 7 முதல் 8 சதவிகிதம் வரை வருமானம் தரும். இதேபோலத்தான் நஷ்டத்தின் சதவிகிதமும் இருக்கும். லார்ஜ் கேப் ஃபண்டுகள் வருமானம் தரவில்லையெனில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது பேலன்ஸ்டு ஃபண்டு வகைகள்தான்.''