Published:Updated:

இரும்பு மனிதர் இந்திய மிட்டல்... ஜெயித்தது எப்படி..?

Vikatan Correspondent
நடப்பு
இரும்பு மனிதர் இந்திய மிட்டல்... ஜெயித்தது எப்படி..?
 

இரும்பு மனிதர் இந்திய மிட்டல்...

ஜெயித்தது எப்படி..?

லகமே கவனிக்கும் ‘இரும்பு மனிதர்’ என்ற பெயர் வாங்கி இருக்கிறார் இந்தியரான லட்சுமி மிட்டல். உலகின் மிகப்பெரிய இரும்பு ஆலை, ‘ஆர்ஸ்லர்-மிட்டல்’ உருவாகக் காரணமாகி இருப்பதால்தான் இத்தனை கவனிப்பு!

இரும்பு மனிதர் இந்திய மிட்டல்... ஜெயித்தது எப்படி..?

இதைச் சாதிப்பதில் அவர் சந்தித்த சவால்கள், இந்தப் போராட்டத்தின்போது இந்தியர் என்பதால் அவர்மீதும், அதனால் பொதுவாக இந்தியர்கள் மீதும் வீசப்பட்ட துவேஷ வார்த்தைகள்... இதையெல்லாம் தாண்டி, எடுத்த காரியத்தில் ஜெயித்து, இந்தியர்களின் கவுரவம் காத்திருக்கிறார் கோடீஸ்வரர் மிட்டல்.

மிட்டலின் வாழ்க்கை ஆரம்பமே இப்படியான ஒரு திருப்பத்தில்தான் தொடங்கியது. 1970-களின் மத்தியில் இவருடைய தந்தை இந்தோனேஷியாவில் நடத்திவந்த ஓர் இரும்பு ஆலையை மூடச் சொல்லித்தான் அவரை அங்கே அனுப்பினார். தந்தை இட்ட கட்டளையை நிறைவேற்ற அங்கே சென்ற மிட்டல், அந்த கம்பெனியை லாபப் பாதைக்கு திருப்பினார். இது ஏதோ அதிர்ஷ்டத் தால் நடந்ததல்ல.

அதன்பிறகு மிட்டல் தொடர்ந்து, அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். நாளன்றுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களை விழுங்கிக்கொண்டிருந்த, ‘ட்ரினிடாட் அண்ட் டுபாகோ’ என்ற தீவில் இருந்த ‘இஸ்காட்’ என்ற இரும்பு நிறுவனம், இவர் கண்பட்டு சாப விமோசனம் அடைந்தது. அதை விலைக்கு வாங்கி, லாபப் பாதைக்குத் திரும்பினார் மிட்டல்.

குறுகியகாலத்தில் வெற்றி மேல் வெற்றி குவிக்கத் தொடங்கிய மிட்டலை, எல்லாரும் கவனிக்கத் தொடங்க... 1992-ல் மெக்ஸிகோ அரசு இவரை அழைத்து, அவர்களது நாட்டின் நலிந்த இரும்பு ஆலைகளை ஒப்படைத்தது. அது ஒன்றும் அவ்வளவு லேசுபட்ட காரியமாக இல்லை. ஆனாலும் சமாளித்தார் மிட்டல்.

இதற்கிடையில் மிட்டலின் குடும்பத்துக்குள் குடைச்சல். அவருடைய சகோதரர், தந்தை என ஓர் அணியில் நின்று இவரது வேகத்துக்கு பிரேக் போட, அவர்களுக்கு ‘பை’ சொல்லிவிட்டு, தனது பயணத்தைத் தனியாகத் தொடங்கிவிட்டார்.

மெள்ள மெள்ள ஐரோப்பியச் சந்தைக்கும் சிறகு விரித்தார் மிட்டல். 2000-மாவது ஆண்டுவாக்கில் ‘நஷ்டத்தில் இயங்கும் இரும்பு ஆலைகளுக்கு ஒரே வைத்தியர் மிட்டல்தான்’ என்றானது. அந்தந்த அரசுகளிடமிருந்து அதை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிய மிட்டல், அவற்றில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தத் தயங்கவில்லை. அதன் பலன் அவர் காட்டில் பணமழை கொட்டியது. இதனால் தொடர்வேட்டை நடத்துவதும் இவருக்கு எளிதாக இருந்தது.

இதற்கிடையில் ‘இஸ்காட் இன்டர்நேஷனல் நிறுவன’ பங்குகள் நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் போன்ற பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட, மிட்டல் முத்திரை இரும்பு ஆலைக்கான அடையாளமாக உருவெடுக்கத் தொடங்கியது. எல்லா இரும்பு ஆலைகளையும் ‘மிட்டல் ஸ்டீல்’ என்ற ஒரே பெயரில் ஒருங்கு இணைத்தார்.

மிட்டலின் சாம்ராஜ்யம் இன்றைக்கு ‘ஆர்ஸ்லர்- மிட்டல்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமாக மாறிவிட்டாலும் இதன் ஆரம்ப கட்டங்கள் படு சுவாரஸ்யமான டிராமாக்கள் கொண்டது. 2005 அக்டோபரில் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்துடன் இதை தனதாக்கிக்கொள்ள மிட்டல் முயன்றார். இரண்டாவது இடத்தில் இருந்த ஆர்ஸ்லர் நிறுவனமும் கோதாவில் இறங்கியது.

தமிழ் சினிமாக்களில் ஹீரோவும் வில்லனும் ஏலத்தில் மோதும் கதை போல அது முடிந்துபோனது. சின்னதிரையில் வெளிப்படையாக நடந்த அந்த ஏலத்தில் - 2.4 பில்லியன் மதிப்புகொண்டது என்று கருதப்பட்ட அந்த ஆலைக்கு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்தார் மிட்டல்.

அப்போது மிட்டல் ஸ்டீலின் முதன்மை நிதி அதிகாரியாக இருந்த மிட்டலின் மகன் ஆதித்யா தந்தைக்கு ஓர் ஆலோசனை சொன்னாராம். அதாவது, இவ்வளவு பெரிய விலை கொடுக்க வைத்த ஆர்ஸ்லர் ஸ்டீலை இனியும் சும்மாவே வெளியில் விட்டு வைத்தால் அடுத்தடுத்த முயற்சிகளின்போது இது தீராத தலைவலியைத் தரும் என்பதுதான் அது. இந்த மந்திராலோசனைக்குப் பிறகு, சம்பவம் நடந்த 3 மாதங்களில் அதாவது 2006 ஜனவரியிலேயே மிட்டல் ஸ்டீல் தன் அஸ்திரத்தை வீசியது.

அதன்படி ஆர்ஸ்லர் பங்கு ஒன்றுக்கு மிட்டல் ஸ்டீல் 28.21 யூரோக்களை வழங்கி பெருமளவு பங்குகளை வாங்கிக் குவிக்கத் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த அறிவிப்பால் ஆர்ஸ்லர் நிர்வாகம் கொஞ்சம் ஆடித்தான் போனது. அதன் சி.இ.ஓ பொறுப்பில் இருந்த கைடோல் அப்போது கொஞ்சம் அதிகமாகவே ரியாக்ட் செய்தார். மிட்டலை அப்போது கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, இன துவேஷ வார்த்தைகளையும் சரளமாக அள்ளி வீசினார்.

இது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியதோடு, இந்திய அரசு முதல், பரவலாக இந்தியர்களிடையும், மற்ற நடுநிலையாளர்களிடையேயும் மிட்டலுக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிக் கொடுத்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்திருந்தபோது தனிப்பட்ட முறையில் மிட்டல் விவகாரம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. இப்படியாக, உலகின் மூன்றாவது பணக்காரரான மிட்டல் இந்தியர்களின் மனதில் ஒரு ஒடுக்கப்படும் வர்க்கப் பிரதிநிதியாக இடம் பிடித்தார்.

இன்னொருபக்கம், மிட்டல் தனது வழக்கமான காய்களை நகர்த்தத் தவறவில்லை. அதாவது, இதற்கு முன் அவர் பல இரும்பு ஆலைகளை வாங்கி, லாபப் பாதைக்கு திருப்பியபோதெல்லாம் அதில் ஆட்குறைப்பு உட்பட்ட பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் இருக்காது என இப்போது ஆர்ஸ்லர் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி தந்தார். ஆனால், ஆர்ஸ்லர் நிர்வாகம் சரிப்பட்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் மீண்டும் இது கௌரவப் பிரச்னையாக உருவெடுக்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என கைடோலுடனான மோதலைத் துவங்கினார். இதனால், ‘ஏற்கெனவே சொன்ன விலையை அதிகரித்து ஒரு பங்குக்கு 35.74 யூரோக்கள் வழங்கப்படும்’ என்றார்.

எதிரணி தளபதி கைடோல், மிட்டலின் இந்த திட்டத்தை எப்படியும் உடைத்து விடவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். மிட்டல் ஸ்டீலுக்கு இன்னும் போட்டியை அதிகரிக்க முயன்றார். ரஷ்யாவின் செவர்ஸ்டால் என்ற நிறுவனத்தை அவர் மிட்டலுக்கு எதிராக களத்துக்கு அழைத்துவந்தார். இந்த ரஷ்ய நிறுவனம் தன் பங்குக்கு ஒரு படி மேலேயே போய் ஆர்ஸ்லரை வாங்கிக்கொள்ளும் ஒப்பந்தமே போட்டது. ஒருவேளை அந்த ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படாமல் போனால் ஆர்ஸ்லர் இதற்கு 162 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று முடிவானது. ஆனால், ஆர்ஸ்லர் பங்குதாரர்கள் பலரும் செவர் ஸ்டாலுடனான இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பெருமளவு பங்குதாரர்கள் மிட்டல் ஸ்டீலுடன் இணைவதை ஆதரித்தனர்.

இப்படி பல கட்டங்களைத் தாண்டி ஜூலை 25-ல் நடைபெற்ற ஆர்ஸ்லர் நிர்வாகக்குழு கூட்டத்தில் மிட்டல் ஸ்டீல் தர முன்வந்த ஒரு பங்குக்கு 40.37 யூரோக்கள் என்ற விலைக்கு பங்குகளை மிட்டலுக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் லட்சுமி மிட்டல் இன்று உலகின் இரும்பு மனிதராக உருவாகி நிற்கிறார். உலக இரும்பு உற்பத்தியில் இனி 10 சதவிகிதம் ஒரே ஒரு இந்தியர் கையில் என்ற நிலை வந்துள்ளது.

உலகம் கவனிக்கும் பிஸினஸ் புலியாக உருவெடுத்தாலும், இங்கிலாந்து நாட்டில் வாழ்பவர் என்று சொல்லப்பட்டாலும், மிட்டல் இன்னும் தனது இந்திய பாஸ்போர்டை விட்டுத் தராதவர். ஏற்கெனவே இந்தியாவில் ஓர் இரும்பு ஆலை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்ட இவர், அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய இரும்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

பிஸினஸில் ஜெயிக்க முக்கியத் தேவை போராட்ட குணம் என்பதை இன்னும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மிட்டல்.