Published:Updated:

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!

பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!
 

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’

தூத்துக்குடி குஷி!

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!

‘‘எ ங்கள் ஊருக்கு எப்போது வருவீர்கள்... என்று காத்திருக்கமுடியாது. அதனால் தான் நானும் என் நண்பர்களும் இங்கு ஓடோடி வந்தோம்’’ என உத்வேகத்தோடு வந்து கலந்து கொண்டனர், திண்டுக்கல்லில் இருந்து வந்திருந்த இளம் வாசகர்கள் நால்வர். இந்த மாதம் 9-ம் தேதி, நாகப்பன் - புகழேந்தியை வைத்து தூத்துக்குடியில் நாணயம் விகடன் சார்பாக நாம் நடத்திய, ‘சேமிப்பு, முதலீடு... வளமான வாழ்க்கை’ நிகழ்ச்சியில்தான் இந்த உற்சாகம்.

கோவை, திருச்சி, கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து தூத்துக்குடிக்கு விசிட் அடித்தனர் இரட்டையர் நாகப்பன் - புகழேந்தி. வருகையைப் பதிவு செய்வதில் காட்டிய ஆர்வம், வேகம் மிரள வைத்தது தூத்துக்குடி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம் என அருகிலுள்ள மாவட்ட வாசகர்கள் பலரும்கூட துடிப்புடன் வந்திருந்தனர்.

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!

விழா நடந்த வ.உ.சி கல்லூரியின் பிஸினஸ் மேனேஜ் மென்ட் மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது, பொருளாதாரம், தனிப்பட்ட வாழ்க்கையில் அடையவேண்டிய முன்னேற்றத்தில் அவர்கள் காட்டிய ஆர்வமாகவே பட்டது. இளைஞர்கள், நடுத்தர வயதினர், குடும்பத்தலைவிகள் என அனைத்துத் தரப்பினரோடும் கலகலப்பாக ஆரம்பித்தது வாசகர் சந்திப்பு.

‘‘குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் என யோசிக்கும் நீங்கள் உங்கள் ஓய்வுக்காலத்தை யோசித்திருக்கிறீர்களா!’’ என்று இரட்டையரின் கேள்வி அத்தனை பேரையும் சிந்திக்க வைத்தது.

‘‘குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் சொத்து சேர்த்து வைத்து, அவர்களை சோம்பேறியாக்கி விடாதீர்கள். மாறாக அவர்களுக்கு பணத்தைச் சம்பாதிப்பது பற்றி கற்றுக்கொடுங்கள். 20 வயதில் ஒரு கோடி சம்பாதிக்கவும், 25 வயதில் அதை பத்துகோடியாக்கவும் வழி சொல்லிக்கொடுங்கள்’’ என்றபோது அத்தனை பேரின் கண்களுமே நன்றி சொல்லின.

செலவைக் கட்டுப்படுத்துவது, அதைத் தெளிவாகச் சேமிப்பது, சரியான சமயத்தில் அதை எப்படி முதலீடு செய்து ஓய்வுக்காலத்தில் கோடீஸ்வரர்களாக வாழ்வது என்று விரிவான உரையைக் கேட்டபிறகு, சில சந்தேகங்களைக் கேட்டார்கள் வாசகர்கள். அவற்றுக்கு இருவரும் மாறிமாறி பதிலளிக்க, கேட்டது கிடைத்ததில் மனம் குளிர்ந்தனர். அதில் சில கேள்விகள் இங்கே...

‘‘தங்க விலை ஏற்ற இறக்கத்துக்கும், பங்கு விலை ஏற்ற இறக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா?’’ என்றார் நிஸ்டார் எனும் வாசகர்.

‘‘இரண்டுக்கும் மறைமுகத் தொடர்புதான் இருக்கிறது! தற்போது இரண்டின் விலைகளும் அதிகரித்தே காணப்படுவதால், நேரடியான தொடர்பு அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் பார்க்கும்போது, தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் இந்த மூன்றுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது. அதாவது, தங்கம் விற்று வீட்டை அல்லது பங்கு வாங்குவார்கள். இதனால் ஏதாவது ஒன்று ஏறினால் மற்றவை இறங்கும்.

‘‘நாணயம் விகடனில் குறிப்பிட்டு இருந்தபடி 5,000 ரூபாய்க்கு சில கம்பெனி ஷேர்களை குறைந்த எண்ணிக்கையில் வாங்கினேன். அப்போது என் தரகர், ‘சிறிய அளவில் பங்கு வாங்கி இருப்பதால் பங்குவிலை இரட்டிப்பு ஆகும்போது விற்றால்தான் லாபம் கிடைக்கும்’ என்றார். நான் முதன் முதலில் ஷேர் வாங்கியிருக்கிறேன். விளக்கம் கூறவும்’’ எனக் கேட்டார் வாசகர் சுப்பிரமணியன்.

‘‘நாணயம் விகடனில் ரூபாய் 2,000 ரூபாய் முதலீட்டில் பங்குகள் வாங்கச் சொன்னோம். அது லாபம் பார்த்து அப்படியே இரட்டிப்பாக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல. இது ஒரு கற்றுக்கொள்ளும் அனுபவம்தான். பயிற்சிக்காலத்தில், அதிக பணம் போடக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி விற்கும்போது, சந்தை நிலவரங்களை முழுதாகக் கற்றுக்கொள்ள முடியும். இன்னொரு விஷயம், நாங்கள் சொன்ன பங்குகளை மட்டுமே வாங்கவேண்டும் என்பதில்லை. உங்களது கணிப்புக்கு ஏற்றவாறும் பங்குகளை வாங்கி விற்கலாம்.’’

‘‘ஷேர் வாங்கினால் வருமான வரி கணக்குக் காட்ட வேண்டுமா?’’ என எம். ஷேக் என்ற வாசகர் கேள்வி எழுப்ப...

‘‘பங்குகள் வாங்கினால் வருமான வரிதாக்கல் செய்யவேண்டும். அதற்கு பான் கார்ட் அவசியம்தான். உங்களுடைய வருமானத்தைக் காண்பித்து அதற்கேற்ப வரி செலுத்தவேண்டும். ஒருவேளை வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்கும்பட்சத்தில் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், வருமான வரிக் கணக்கை காட்டித்தான் ஆகவேண்டும்.’’

‘‘எங்க ஏரியா, எப்ப வருவீங்க..?’’ - தூத்துக்குடி குஷி!

‘‘நான் ஒரு மாணவன். எனக்கு தனியான வருமானம் கிடையாது. என் தந்தையின் வருமானத்திலிருந்து பணம் பெற்று, பங்குச் சந்தையில் இறங்கமுடியுமா? என் பெயரில் டீமேட் கணக்குத் துவங்கமுடியுமா?’’ \ இது முஹமது பிலால்.

‘‘உங்கள் தந்தையின் வருமானத்திலிருந்து கடனாகவோ, அன்பளிப்பாகவோ பணத்தைப் பெற்று பங்குகள் வாங்கலாம், விற்கலாம். அதற்கு டீமேட் அக்கவுன்ட், பான் நம்பர் இரண்டும் தேவை. முதலீட்டாளர் மைனராக இருந்தால் மட்டுமே டீமேட் அக்கவுன்ட் தேவை இருக்காது.’’

‘‘மாத வருமானம் உள்ளவர்கள் எத்தனை சதவிகிதம் சேமிக்கவேண்டும். அதில் ஷேர்கள், வீடு, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும்.?’’ என்ற பியோலா பயஸின் சந்தேகம் அனைவருக்குமானது என்பதால், அவையினரின் கவனம் உன்னிப்பானது.

‘‘மாத வருமானம் உள்ளவர்கள் இளைஞர்களாக இருந்தால், பிடித்தம் போக வீட்டுக்குக் கொண்டு செல்லும் வருமானத்தில் 10% சேமிக்கவேண்டும். இதுவே நடுத்தர மற்றும் அந்த வயதைத் தாண்டியவர்கள் 15% முதல் 20% வரை சேமிக்கலாம்.

வயது ஏற... ஏற சேமிப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். சேமிப்பதில் இந்த முதலீட்டில் இவ்வளவு தான் என்று பொதுவாகப் பிரித்துச் சொல்ல முடியாது. வருமானமும், தேவைகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.’’

கூட்டம் முடிந்தும் முடியாத அளவளாவல்கள், விசாரிப்புகள், தனிப்பட்ட சந்தேகங்கள்... என உயரே எழும்பி அடங்கும் கடல் அலையாக ஆர்ப்பரிப்போடு விடைகொடுத்தார்கள் தூத்துக்குடி வாசகர்கள்.

‘‘எங்க ஏரியாவுக்கு எப்ப வருவீங்க..?’’ என்று ஜாலியாக கேரோ செய்து குஷியாகக் கேட்டது வெளியூரைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம் ஒன்று!

விவரம் அடுத்த இதழில்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு