Published:Updated:

‘ஊர்’வலம் - கும்பகோணம்

‘ஊர்’வலம் - கும்பகோணம்

பிரீமியம் ஸ்டோரி
நடப்பு
‘ஊர்’வலம் - கும்பகோணம்
 

 

வருமானம் கொழிக்க வகையான வழிகள்!

‘ஊர்’வலம் - கும்பகோணம்
‘ஊர்’வலம் - கும்பகோணம்

தி ரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள். மனித வாழ்வின் அத்தனை தேவைகளுக்கும் கோயில்கள் இருக்கின்றன. வயிற்றுவலி, தலைவலி என ஒவ்வொரு நோய் தீரவும் ஸ்பெஷலிஸ்ட் கோயில்கள் இருப்பது இந்த ஊரின் சிறப்பு. அதனால், இங்கு வருமான வழியும் தொழில்களும் ஆன்மிக வாடையோடே இருக்கின்றன. கும்பகோணத்தில் இந்த இதழ் ‘ஊர்’வலம்!

கும்பகோணம் சுவாமிமலை பஞ்சலோக சிலைகளுக்கு உலகப்புகழ் பெற்றது. சிலைகளை வடிவமைப்பதில் நிபுணரான தேவஸ்ரீகண்ட ஸ்தபதி, ‘‘இப்பகுதியில் காவிரி ஆற்றுப்படுகையில் கிடைக்கிற வண்டல் மண் பதமாகவும் நெருப்பில் இட்டால் பிளவு படாதததாகவும், பஞ்சலோக சிலைகள் செய்ய ஏதுவானதாகவும் இருந்ததால் ராஜராஜ சோழன் காலத்திலேயே சிற்பிகள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். இப்போதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் சேர்த்து சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் அளவுக்கு பஞ்சலோக சிற்பங்களை வடிவமைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்’’ என்றார். இவர் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர்.

செய்யவேண்டிய சிலையைப் போல் முதலில் மெழுகில் வடிவமைக்கிறார்கள். பிறகு அதனைச் சுற்றி வணடல் மண் மற்றும் கம்பிகளைக் கட்டி களிமண் பூசிக் காயவைக்கிறார்கள். காய்ந்தவுடன் அதனை நெருப்பில் இட... மெழுகு உருகிவிடுகிறது. மண் சிலைக்குள் 82% செம்பு, 15% பித்தளை, 3% ஈயம் கலந்த காய்ச்சிய உலோகக் கலவையை ஊற்றுகிறார்கள். அதன்பிறகு மண் வார்ப்படத்தை உடைத்து எடுத்தால் உலோகச் சிலை உருவாகியிருக்கும். அதைத் திருத்தி முழுமையடையச் செய்கிறார்கள். கொஞ்சம் கலையார்வம் உள்ளவர்கள் சிற்பம் செதுக்கும் கலையைக் கற்றுக்கொண்டு தொழில் செய்கிறார்கள். மற்றவர்கள் மண் பூசுவது, அதைச் சுடுவது போன்ற வேலைகளில் வருமானம் பார்க்கிறார்கள்.

‘ஊர்’வலம் - கும்பகோணம்
‘ஊர்’வலம் - கும்பகோணம்

‘பூம்புகார்’ அரசு நிறுவனமும் தங்களின் கலைஞர்களின் மூலம் சிலைகளைத் தயாரித்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்கிறது. சிலை செய்பவர்களின் கூட்டுறவு சொசைட்டியும் விற்பனை நிலையம் வைத்திருக்கிறது.

‘‘பஞ்சலோக சிலைகளுக்கு சுவாமிமலை; குத்து விளக்குக்கு நாச்சியார் கோயில். நாச்சியார்கோயில் குத்து விளக்கு என்றாலே அதற்கான மதிப்பும் மரியாதையும் தனிதான்’’ என்று பேச்சைத் தொடங்கினார் தட்சிணாமூர்த்தி. இவர் ‘யோகவித் கைவினைஞர்கள் குழு’ என்ற ஆடவர் சுய உதவி குழுவின் தலைவர். இவர்கள் தொழிலுக்கும் வண்டல் மண்ணின் சிறப்பம்சமே காரணம்.

‘‘சுவாமிமலையில் மட்டும் மொத்தம் 180 குத்துவிளக்கு பட்டறைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளாக நடந்துவரும் இத்தொழிலில் 1,500 பேர்களுக்கு மேல் தினமும் பிழைக்கின்றனர். அரை அடி முதல், ஆறு அடி விளக்குகள் வரை இங்கே தயாராகின்றன. இவை ஏற்றுமதியும் ஆகின்றன. விளக்குகளின் மொத்த டர்ன் ஓவரே வருடத்துக்கு 5 கோடிக்கு மேல் இருக்கிறது.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

பெரும்பாலான பட்டறைகள் சொந்த முதலீடு இன்றி வியாபாரிகளிடம் ஆர்டர் வாங்கி அவர்கள் தரும் கூலிக்குச் செய்துகொடுக்கின்றனர். ஒரு கிலோ உலோகத்தை உருக்கி, விளக்குகள் செய்தால் 50 ரூபாய் கூலி கிடைக்கும். பித்தளை, பஞ்சலோகத்திலும் விளக்குகளைச் செய்துகொடுக்கிறோம். ஆர்டர்கள் வந்தால் கோயில் மணிகளையும் செய்துகொடுப்போம். இதற்கு அரசின் உதவியோ வங்கிக் கடனோ கிடைப்பதில்லை’’ என்றார் வருத்ததுடன்.

பாத்திரங்கள் தயாரிப்பிலும், கோயில்களுக்குத் தேவையான கலசங்கள், கொடிமரங்கள் செய்வதிலும் கும்பகோணத்தில் உள்ள தாராசுரம் பகுதி பிரசித்தி பெற்றது. எவர்சில்வர், செம்பு, பித்தளைப் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழில் இங்கு காலம் காலமாக நடந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த சேட்டு சங்கர், ‘‘இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதர்களால் தயாரிக்கப்படுகிற பாத்திரங்கள் இவை. தமிழ்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் நிறைய ஏற்றுமதியாகிறது. இத்தொழிலின் வருட டன் ஓவர் 60 லட்சங்களுக்கு மேல். சொந்தமாகப் பணம்போட்டு தொடங்குபவர்களும் உண்டு அல்லது வியாபாரிகளுக்குச் செய்து கொடுப்பவர்களும் உண்டு’’ என்றார்.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

‘‘உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என 2,000 குடும்பங்கள் பாத்திர உற்பத்தி தொழிலைச் சார்ந்துதான் வாழ்கின்றன’’ என்றார் கும்பகோணம் அனைத்து வணிகர் சங்கத் தலைவர் அடியன் செட்டியார். ‘‘வருடத்துக்கு பல கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானாலும், மூலப்பொருள் விலை ஏற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்’’ என்றார்.

காஞ்சிப் பட்டு போலவே பாரம்பரியமான பட்டு, இங்குள்ள திருபுவனம் பட்டு. திருபுவனம் கூட்டுறவு பட்டு சொசைட்டி அரசின் உதவியுடன் 1955-ல் இருந்து செயல்படுகிறது. தற்போது அதில் 1,836 நெசவாளர்கள் உறுப்பினராக உள்ளனர். பட்டுச்சேலை நெய்வதற்கான ஜரிகை, பட்டு நூல் முதலியவற்றை நெசவாளரிடம் கொடுத்து நெய்து வாங்கி, தமிழ்நாடு முழுவதுமுள்ள தங்களது 35 பிரத்யேக ஷோரூம்களில் வைத்து விற்பனை செய்கிறார்கள். நெசவாளர்களுக்கு நெய்வதற்கான கூலியும் லாபத்தில் ஒரு பங்கும் கொடுக்கிறார்கள். கடந்த வருடம் 27 கோடி ரூபாய்க்கு இவர்களின் பட்டுச் சேலைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகி இருக்கின்றன. திருபுவனத்தில் உள்ள ஷோரூமில் மட்டுமே 18 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

‘ஊர்’வலம் - கும்பகோணம்
‘ஊர்’வலம் - கும்பகோணம்

ரூபாய் 35,000 வரை சேலைகள் ரகம் வாரியாக விற்பனையாகின்றன. ‘‘மாதம் 4,000 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்’’ என்று உற்சாகத்துடன் சொல்கிறார் இந்த சொசைட்டியின் சீனியர் உறுப்பினர் ராமமூர்த்தி.

‘திகோ சில்க்ஸ்’ என்ற பெயரில் இந்தப் பட்டுச் சேலைகளை விற்பனை செய்கிறார்கள். ஏற்றுமதி செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். திருபுவனத்தில் மட்டும் 50 தனியார் பட்டுச்சேலை கடைகள் உள்ளன. இங்குள்ள நெசவாளர்கள் எண்ணிக்கை 5,000.

கும்பகோணம் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கச்செயளாளர் கும்பா கோவிந்தசாமி, ‘‘வருடத்துக்கு 10 லட்சம் சேலைகளுக்கு மேல் உற்பத்தியாகின்றன. இந்தத் தொழிலின் வருட டர்ன் ஓவர் 250 கோடிக்கும் மேல். எங்கள் மார்க்கெட் முழுவதும் தமிழ்நாட்டில்தான். அரசு முயற்சி செய்தால் ஏற்றுமதியும் செய்யலாம். ‘கிளஸ்டர் டெவலப்மென்ட்’ என்று பட்டு உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே தொழிற்பேட்டையின் கீழ் கொண்டுவர, அரசு திட்டம் வைத்திருந்தாலும் அதற்கான நடவடிக்கைகள் எதிலும் இன்னும் இறங்கவில்லை’’ என்றவர், ‘‘விவசாயிகளுக்கு 7% குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் அளிப்பதுபோல எங்களுக்கும் அளித்தால் இத்தொழில் செழிக்கும்’’ என்ற தன் ஆர்வத்தையும் சொன்னார்.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வரும் இன்னொரு விஷயம், வெற்றிலை. இங்குள்ள ராஜகிரி வெற்றிலை புகழ் பெற்றது. இந்த மண்ணில் விளைகிற வெற்றிலையின் சுவைக்கு ஈடாக வேறு இல்லையென்று சொல்கிறார்கள். ‘‘500 வருடங்களாகப் பாரம்பரியமாக நடக்கும் தொழில் இது’’ என்றார் வெற்றிலை பயிரிட்டிருக்கும் முல்லா ஃபாருக். ‘‘தினமும் 15,000 கவுளி (ஒரு கவுளி-நூறு வெற்றிலை) வெற்றிலை இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறது. ஒரு கவுளி அதிகபட்சம் 20 ரூபாய்வரை விலை போகும். தினமும் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்து மொத்தம் 60 ஏக்கர் அளவில் வெற்றிலை பயிரிட்டிருக்கிறோம். சுழற்சி முறையில் வருடத்துக்கு 15 ஏக்கரில் மட்டும் வெற்றிலை பறிக்கும்படியாகத் திட்டமிட்டு சாகுபடி செய்கிறோம். ஏழைகளும் பொருளாதார வசதி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் மூன்று வருடத்துக்கு ஒரு ஏக்கருக்கான ஏலத்தொகையை 14,500 ரூபாயாக நிர்ணயித்திருக்கிறோம். தினமும் 200 பேர்களுக்கு மேல் வேலை இருந்துகொண்டே இருக்கும். இதை மட்டும் நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்றன’’ என்றார் ஃபாருக்.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

காவிரி மற்றும் அரசலாற்றின் பாசனத்தால் கும்பகோணம் பசுமையான நகரமாக இருக்கிறது. ‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற வார்த்தைக்கு ஏற்ப நெல்தான் இங்கே பிரதான பயிர். ‘‘இப்பகுதியின் விவசாய முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே இருக்கிறது’’ என்றார் விவசாய துணை இயக்குநர் பன்னீர்செல்வம்.

‘‘முன்பு நெல்லை மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகள், பலரும் கரும்பு, வாழை, தென்னை போன்ற பணப்பயிர்களில் இறங்கிவிட்டார்கள். கடந்த இரண்டு வருடமாக எங்களின் முயற்சியால் 25 ஹெக்டேர் பரப்பளவில் ‘பாமாயில்’ பயிரிடப்படுகிறது. கும்பகோணம் அருகில் இரண்டு தனியார் கரும்பு ஆலைகளும், ஒரு எண்ணெய் தொழிற்சாலையும் இருக்கின்றன. காவிரியின் கருணையால் விவசாயம் நன்றாகவே இருக்கிறது’’ என்றார் பன்னீர்.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

கும்பகோணத்தின் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் படு பிஸி. இங்குள்ள வெங்காய மொத்த வியாபாரி இளங்குமரன், ‘‘வெண்டைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் போன்றவை இப்பகுதியிலேயே விளைவதால் மிகக்குறைந்த விலையிலேயே கிடைக்கின்றன. தக்காளி போன்ற மற்ற காய்கறிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன. 5,000 பேர்களுக்கு மேல் இந்த மார்க்கெட்டை நம்பி வாழ்கிறார்கள். மார்க்கெட்டின் ஒரு நாள் விற்பனை 5 கோடிக்கு மேல்’’ என்று கூறி ஆச்சர்யமூட்டினார். ‘‘லோடு ஏற்ற இறக்க, மொத்த விற்பனை, சில்லறை விற்பனைக் கடைகள் என வேலை வாய்ப்புப் பெருகிக்கிடக்கும் இடம் இது. உடல் உழைப்பு இருந்தாலே தினமும் 200 ரூபாய்வரை சம்பாதிக்கலாம்’’ என்றார். இதுதவிர உழவர் சந்தையன்றும் நகரத்தில் செயல்பட்டு வருகிறது.

‘‘சுற்றுலா சார்ந்த தொழில்கள் சுமாராகத்தான் உள்ளன’’ என்றார் ஆதித்யா ஓட்டல்ஸின் உரிமையாளர் சுபாஷ். சைவ, வைணவக் கோயில்கள் அதிகம் இருக்கின்றன. சுற்றுலாவே நவகிரக கோயில்களை நம்பித்தான். அங்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பக்தர்களால்தான், வருமான வாய்ப்பு’’ என்றார். வார ஆரம்பத்தில் டல்லடிக்கும் ரெஸ்டாரென்ட்களில் வாரக் கடைசியில் அமோக விற்பனை இருக்கிறது. அதனால் நம்பிக்கையுடன் புதிதாக உணவு விடுதிகள் தொடங்கிய பலர் இன்று அத்தொழிலில் இல்லை’’ என்றார் சுபாஷ். ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் இங்கு அவ்வளவு வரவேற்பும் இல்லை. தங்கும் வசதிகொண்ட ஓட்டல்கள் ஓரளவுக்கு இயங்கிக்கொண்டிருந்தாலும் உணவு விடுதிகள் தடுமாறிக்கொண்டுதான் இருக்கின்றன.

‘ஊர்’வலம் - கும்பகோணம்

‘‘ஒரு பாலம், ஒரு ரயில் பாதை இரண்டும் புதிதாக வந்தால் போதும்... கும்பகோணம் பலமடங்கு தொழில் வளர்ச்சியைப் பெறும்’’ என்றார் கும்பகோணம் அனைத்து தொழில், வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன். கொள்ளிடம் ஆறு இடையில் இருப்பதால் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் செல்வதற்கு 45 கி.மீ ஆகிறது. நீலத்தநல்லூர், மதனத்தூர் ஆகிய ஊர்களுக்கு இடையே பாலம் கட்டினால் இது 27 கி.மீ ஆக குறைந்துவிடும். இதனால் பயணச்செலவு, தூரம், எரிபொருள் அனைத்தும் மிச்சமாகும். அதேபோல சென்னை - கும்பகோணம் மார்க்கத்தில் ஒரே ஒரு ரயில் மட்டுமே விடப்படுகிறது. இதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்து ஏற்பாடுகள் செய்தால் மக்களுக்கும் வணிகர்களுக்கும் பலன் கிடைக்கும்’’ என்றார்.

வாய்ப்புகளும் திறமைகளுக்கும் பஞ்சமில்லாத ஊராகவே இருக்கிறது கும்பகோணம்.

பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாத்து புதிய வாய்ப்புகளை வளர்த்தெடுத்தால் கும்பகோணம், குபேர நகரமாகிவிடும்.

கா ரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், சிதம்பரம் போன்ற தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியின் முக்கியமான வியாபார மையம் கும்பகோணம்தான். ஜவுளி, நகைகள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் கும்பகோணத்தில் இருந்துதான் வாங்கிச் செல்கிறார்கள்.

ப்போது 5 பெரிய தனியார் மருத்துவமனைகளும், ஓர் அரசு மாவட்ட மருத்துவமனையும் இயங்கி வருகின்றன. மருத்துவத்துறை நன்றாக வளர்ந்து வருவதால், இத்துறையில் புதிதாக வருபவர்களுக்கும் மெடிக்கல்வாசிகளுக்கும் தாராளமாக இடம் இருக்கிறது.

ரி யல் எஸ்டேட் அதிக வளர்ச்சி பெறாமலே உள்ளது. நிலங்களின் விலையேற்றமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. முக்கியமான கடைவீதிகளில் மட்டும் விலையேற்றம் இருக்கிறது. இவ்வளவு முக்கியமான நகரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஒன்றிரண்டுதான் இருக்கின்றன. வீடுகள் கட்டப்படும் ஏரியாவும் குறைவு. காம்ப்ளெக்ஸ்களும் ஒன்றிரண்டுதான் உள்ளன. வரும் காலத்தில் நகரம் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கால் பதிக்க சரியான தருணம் இது!

ல்வி நிறுவனங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும், இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றும் புதியதாக தொடங்கப்படடுள்ளன. மூன்று கலை அறிவியல் கல்லூரிகள் புதிதாக வர இருக்கின்றன. அதனால், அது சார்ந்த ஸ்டேஷனரி, ஜெராக்ஸ் கடைகளுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

12 -ம் வகுப்புவரை படிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிகவும் குறைவு. 25 கிலோமீட்டர் தூரத்திலிருந்து படிப்புதேடி கும்பகோணம் வருகிறார்கள். புதிய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வந்தால் மக்கள் மிக வரவேற்பார்கள்.

ஷ்டங்கள், நோய்கள் தீர பிரார்த்திக்கவும், பிரார்த்தனை நிறைவேறிய பிறகு நேர்த்திக்கடன் கொடுக்கவும் மக்கள் வருடம் முழுக்க வந்துகொண்டே இருக்கிறார்கள்.

600-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில்கள் இருக்கும் கும்பகோணத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தாலும், பயிற்சி பெற்ற சரியான கைடுகள் இல்லை. புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்புள்ள தொழில் இது.

கோயில்கள் அதிகம் இருந்தாலும் கோயிலைச் சார்ந்த விபூதி, சூடம், சாம்பிராணி போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் என்று கும்பகோணத்தில் பெரிதாக ஏதும் இல்லை.

இவ்வளவு பெரிய சுற்றுலா நகரத்தில் அரசின் தகவல் மையம்கூட இல்லை. அரசு தமிழ்நாடு ஓட்டலை கொஞ்சநாள் நடத்திவிட்டு மூடிவிட்டது. அரசின் பங்களிப்பு இருந்தால், சுற்றுலா தொழில் வளர வாய்ப்புள்ளது.

மூ லிகை பயிரிடுதலுக்கான பயிற்சிகள் கும்பகோணம் அருகில் உள்ள ஆடுதுறை வேளாண் பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்டாலும், விவசாயிகள் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை. மூலிகை விவசாய வாய்ப்புகள் சிறப்பாகவே இருப்பதால் விவசாயிகள் மூலிகைகளின் பக்கம் கொஞ்சம் பார்வையைத் திருப்பினால் வருமானம் கொழிக்கும்.

நி றைய காய்கறிகள், பழங்கள் விளைந்தாலும் அதனைப் பாதுகாப்பாக சேமித்துவைக்க ‘கோல்டு ஸ்டோரேஜ்’ அமைப்பு இங்கு இல்லை. அதனால் கெட்டுப் போவதற்கு முன்பே வந்தவிலைக்கு விற்க வேண்டிய அவசர நிலையில் விவசாயிகள் உள்ளனர். ‘கோல்டு ஸ்டோரேஜ்’ ஒன்றை அரசோ, தனியாரோ தொடங்கினால் லடசங்களைச் சம்பாதிக்கலாம். விவசாயிகளும் தங்கள் பொருளை நல்லவிலைக்கு விற்று லாபம் ஈட்டலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு